எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எனக்கு தெரிந்த வேலை ஆப்செட் பிரிண்டிங் வேலைகள் செய்வது, பத்து வருட அனுபவம். பல பெரிய பிரிண்டிங் கம்பெனிகளில் வேலை பார்த்து விட்டேன், கூடுதல் சம்பளம் வேண்டி. இப்போது நான் வேலை செய்வதும் பெரிய அளவிலான பிரிண்டிங் பிரஸ்ஸில் தான்.
இன்னிக்கு சூப்பர்வைசரை பார்த்து இனிமேல் நைட் ஷிப்டு வேலையை மாசம் பூரா செய்வதாக சொல்லிடப் போறேன், சம்பளமும் அதிகமா வருது, கூடவே இரவு பத்து மணிக்கு டீ, டிபன் வேற தர்றாங்க. பகல் ஷிப்ட்ல வேலை செஞ்சா, டீ மட்டும் தான் தர்றாங்க, சம்பளமும் குறைவாக தான் வருது.
சூப்பர்வைசர் சார், “நான் இனிமேல் தினமும், மாசம் முழுவதும் இரவு ஷிப்ட்லேயே வேலை செய்யறேன், பகல் ஷிப்ட் வேண்டாம்” என்று கூறினேன்.
“என்ன முருகா தீடீர் மாற்றம்?. போன வாரம் நைட் ஷிப்டு போட்டதுக்கு, நைட் ஷிப்டு வேலை செய்ய முடியாதுன்னு கோபமா சொன்னே..!, இன்னிக்கு வந்து மாசம் முழுவதும் நைட் ஷிப்டு வேலை பார்ப்பதாக சொல்றியே, ஆச்சரியமாக இருக்கே..!” என்று சூப்பர்வைசர் கேட்க,
“அதை அப்புறம் சொல்றேன் சார் , இனிமேல் மாசம் முழுவதும் நைட் ஷிப்டு வேலையை எனக்கு போட்டு கொடுங்கள்” என்று கூறினேன்.
“முதலாளிகிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று சூப்பர்வைசர் கூறினார்.
மறுநாள், “முருகா உனக்கு ஒரு நல்ல செய்தி , முதலாளி உன்னை மாசம் முழுவதும் நைட் ஷிப்டு பார்க்க ஒப்புக் கொண்டார். அது மட்டுமல்ல உனக்கு ஆயிரம் ருபாய் சம்பளத்தில் சேர்த்து கொடுக்க சொல்லியிருக்காரு” என்று சூப்பர்வைசர் கூறினார்.
எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. நாளையிலிருந்து எனக்கு நைட் ஷிப்டு மட்டுமே. ஏற்கனவே நைட் ஷிப்டு பார்த்தா ரூ.1000/- அதிகம் கிடைக்கும் . இப்ப மீண்டும் ரூ.1000/- சம்பளம் கூடுதலாக ஆக ரூ.2000/- கிடைக்க போகிறது.
இதை இன்னிக்கே, வீட்டுக்கு போனவுடனே என் மனைவி மஞ்சுளாவிடம் கூறி விட வேண்டும் என்று பகல் ஷிப்ட் முடிந்து, வேகமாக சைக்கிளை மிதித்தேன். வீட்டிற்கு வந்தவுடன் மஞ்சுளாவிடம் கூறினேன். சந்தோஷப்பட்டாள்.
மறுநாள் நைட் ஷிப்ட்டுக்காக இரவு 7.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன். கம்பெனிக்கு 8.00 மணிக்கு வந்து சேர்ந்தேன். இதே போல் ஒரு வாரம் ஓடி விட்டது. அன்று இரவும் வழக்கம் போல வேலையை ஆரம்பித்தேன்.
10.00 மணியளவில் முதலாளி என்னை கூப்பிடுவதாக கூறி வேலையாள் ஒருவன் கூற, அவனுடன் சென்று, முதலாளிக்கு வணக்கம் கூறினேன்.
“வா முருகா, என்ன தீடிரென்று நைட் ஷிப்டு வேலையை கேட்டு வாங்கி செய்யறே, என்ன காரணம்?, அதுவும் வேலையை சுறுசுறுப்பாக செய்வதாக கேள்விப்பட்டேன்” என்று புன்னகையுடன் கேட்டார்.
அய்யா, ” பகல் ஷிப்டு வேலைக்கு நீங்க கொடுக்கிற சம்பளம் போதல, நைட் ஷிப்டு வேலைன்னா சம்பளம் கூட கிடைக்குது. அதனால் தான்… நைட் ஷிப்டு வேலையை கேட்டு வாங்கினேன்” என்று கூறினேன்.
“அப்படியா? அப்ப ஒன்னு செய்றீயா? நான் சொல்ற வேலையை செஞ்சின்னா இப்ப வாங்கற சம்பளம் போல இரண்டு மடங்கு தர்றேன்” என்று முதலாளி கூறினார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “அய்யா நீங்க சொல்றது ஒன்னும் புரியலையே” என்றேன்.
முருகா, “நீ போய் சூப்பர்வைசரை பாரு, நீ என்ன வேலையை செய்யணும்னு அவர் சொல்லுவார்” என்று கூறினார்.
“சரிங்க அய்யா” என்று கூறி விட்டு சூப்பர்வைசரை பார்த்து முதலாளி கூறியதை கூறினேன்.
சூப்பர்வைசர் என்னைப் பார்த்து “உன்னை பத்தி எனக்கு தெரியும், ஆனால் முதலாளிக்கு தெரியாது. முதலாளியை பத்தி எனக்கு தெரியும், ஆனா உனக்கு தெரியாது. நீ அந்த வேலைக்கு சரி பட்டு வர மாட்டே, உனக்கும் அந்த வேலை சரிபட்டு வராது. பேராசை பெரும் நஷ்டம். போய் இப்ப செய்யற வேலையை பாருங்க, அதான் உங்களுக்கு நல்லது” என்று கூறினார்.
நான் பிடிவாதமாக பணத்தாசையால், புதிய வேலையை பற்றி கேட்கவே, சூப்பர்வைசர் என்னைப் பார்த்து “சரி வா உன் தலையெழுத்து, நான் என்ன செய்ய முடியும்?” என்று கூறி என்னை கம்பெனியின் வேறு ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
செல்லும் வழி ஒரே இருட்டாக இருந்தது. ஒரு வழியாக பத்து நிமிடத்தில் அந்த இடம் வந்தது. தன் கட்டை விரலை அங்கிருந்த கதவில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அளவிலான கருவி ஒன்றில் வைக்க, ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கதவுகளை திறந்து உள்ளே சென்றோம்.
அங்கே ஏற்கனவே நான்கு நபர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர். சத்தமே இல்லாமல் பிரிண்டிங் மிஷின்கள் ஓடிக் கொண்டிருந்தது. அங்கே பிரிண்டிங் செய்து வைத்திருந்தவைகளையும், மேலும் பிரிண்டிங் நடந்து கொண்டிருந்த வைகளை பார்த்ததும் என் கை, கால்கள் உதற ஆரம்பித்தது. மனம் படபடத்தது. நான் சூப்பர்வைசரை பார்க்க, அவர் என்னைப் பார்க்க, பதில் ஏதும் கூறாமல் நான் வேக, வேகமாக வெளியே வந்தேன்.
என்னை தொடர்ந்து வந்த சூப்பர்வைசர், “முருகா நாளை காலையில் வந்து உன் கணக்கை முடித்துக் கொள், உனக்கு இனிமேல் இங்கு வேலையில்லை, தவிர இங்கு பார்த்ததை பற்றி யாரிடமும் எதுவும் கூறாதே, அப்படி கூறினால்.. உன் உயிர் உன்னிடம் இருக்காது” என்றார்.
“பேராசை பெரும் நஷ்டம்” என்று சூப்பர்வைசர் கூறியதன் அர்த்தம் எனக்கு அப்போது தான் புரிந்தது.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings