எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.. இங்கு உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்…”
மலர் பள்ளி இலக்கிய மன்றக் கூட்டத்தில் தன் பேச்சை முடிக்க.. அனைவரும் கைத்தட்டினர். ‘உழவின் பெருமையை, மேன்மையை, எடுத்துக்கூற இதைவிட அருமையான பேச்சு இருக்க முடியாது’ என்று அனைவரும் சிலாகித்தனர்.அவளுக்கு பரிசாக சான்றிதழும்..சட்டமிடப்பட்ட பாரதியார் படமும் மேடையில் கொடுத்தனர்…
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மலர்விழி படிப்பதோ பத்தாம் வகுப்பு ,ஆனால் அவளுடைய ஆழ்ந்த ஞானம் அவளுக்கு கடவுள் கொடுத்த வரம்.ஆசிரியர்களும் சக மாணவர்களும் பாராட்ட, எல்லோருக்கும் நன்றி கூறி விட்டு வெளியே வந்தாள்.பெற்ற பரிசுகளோடு ஆசையோடு அம்மாவிடம் காட்ட ஓடி வந்தாள்..
” அம்மா இன்னைக்கு என் பேச்சு ரொம்ப அருமையா இருந்துச்சுன்னு எல்லோரும் பள்ளிக்கூடத்துல பாராட்டினாங்க. இங்க பாரு.. மகாகவி பாரதியார் படம் கூட கொடுத்திருக்காங்க பரிசா..”
பரபரப்பாக இருந்த பூவாயி,
” சரிடி! பள்ளிக்கூட கதையே பேசிகிட்டு இருக்காத, வயக்காட்டுக்கு… கூட வர்றியா” என்றாள்.
“நீ போம்மா.. எனக்கு படிக்க வேண்டியது நிறைய இருக்கு” என்றாள் சலிப்போடு.
“பெரியவூட்டு தோட்டத்துக்குப் போய் அம்மா கிட்ட கேட்டுட்டு கொஞ்சம்காஞ்ச சுள்ளிகளா பார்த்து புறக்கிட்டு வா…விறகெல்லாம் ஈரமா இருக்கு.. அடுப்பெரிக்க சுள்ளி வேணும்.அப்பத்தான் ராவுக்கு கஞ்சினாச்சும் வைக்க முடியும்”.
மலர்விழி யோசித்தாள்… ‘ஊருக்கெல்லாம் உணவு தானியத்தை விளைவிக்கிற விவசாயி குடும்பத்தில் மட்டும் ஏன் இந்த கஷ்டம்,படிக்க ஆர்வமா இருந்தாலும், படிக்க வைக்கிறதுக்குள்ள அப்பாவும் அம்மாவும் படுறபாடு..
போன முறை ஸ்கூல் ஸ்கூல் பீஸ் கட்ட புள்ள மாதிரி ஆசையாய் வளர்த்த லஷ்மி பசுவை வித்துட்டாரு…விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு போகவும் அப்பா பிரிய படல .என்னால தான் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இவ்வளவு கஷ்டம்…’ மனச்சுமை அவளை அழுத்தியது.ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது.
இருள் மெல்ல கவிய… தங்கத் தகடாய் முழுநிலா வானில் எழுந்தது… குளிர்ந்த காற்று வீச… படித்துக்கொண்டிருந்த மலர் மனம் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தது…
வயக்காட்டிலிருந்து உள்ளே வந்த மாடசாமி கைகால்களை கழுவிக்கொண்டு, மகள் அருகில் வந்து உட்கார்ந்தார்.
“என்னடா கண்ணு! இன்னும் படிச்சு முடிக்கலை? சாப்பிட்டியாடா தங்கம்?”
“அம்மா கஞ்சி கொடுத்துச்சு…”
“ஏண்டா உனக்கு நெல்லுச் சோறாக்கி போட சொல்லி உங்க அம்மா கிட்ட காசு கொடுத்துட்டுப் போனேனே..”
“அது பால்காரன் பாக்கிக்கு சரியா போயிடுச்சு! அவன் கத்தினதால அந்த பணத்தை அவங்கிட்ட கொடுத்து புட்டேன் ” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் பூவாயி.
“அப்பா! ஏம்பா நமக்கு இந்த கஷ்டம்? நாம வேற ஏதாவது தொழில் பண்ணியிருந்தா இன்னும் சிறப்பா வாழ்ந்திருக்கலாம்ன்னு தோணுதுப்பா”.
‘மலர்.. நாம விவசாயம் செய்வதில பெருமைபடனும் .எப்பேர்பட்ட தொழில் செஞ்சாலும், பணம், காசு, வசதியத்தான் கொடுக்க முடியும் .அது இல்லாமலோ, இருக்கறத வச்சோ வாழ்ந்திடலாம் ஆனால் சாப்பிடாம ஒரு வேளை இருக்க முடியாது. அப்படிப்பட்ட சாப்பாட்ட நாமதான் உற்பத்தி பண்ணி மக்களுக்கு கொடுக்கிறோம்.
அதனால இந்த தொழில்ல இருக்கற பெருமையும், அந்தஸ்தும் ,வேறு எந்த தொழிலுக்கும் கிடையாது. என்ன…நாம உற்பத்தி பண்ற பொருளுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய விலை கிடைக்க மாட்டேங்குது.. இது தான் வருத்தம்”.
“உண்மைதான்ப்பா… நீங்க விவசாயத்தை எவ்வளவு நேசிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். ஏதோ ஒரு வருத்தத்துல நான் அப்படி சொல்லிட்டேன். எனக்கு ரொம்ப நாளா ஒரு யோசனை நான் சொல்கிறேன்… உங்களுக்கு சரின்னு பட்டா செய்வோம்”
“என்னம்மா சொல்லு! நீ படிக்கிற புள்ள! வேலை பார்க்கிறேன்… வயக்காட்டுக்கு வர்றேன்… அப்படின்னு சொல்றதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. எங்க கஷ்டம் எங்களோட போகட்டும். நீ படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.”
“அப்பா எனக்கு படிப்பே சரியா இருக்கு… நான் இப்ப வயக்காட்டுக்கெல்லாம் வர போறதில்ல… நீங்க விளைவிக்கிற பொருள்களை தரம் பிரிச்சு, நாமே பேக் பண்ணி, நமக்கு தெரிஞ்ச வீடுகளுக்கெல்லாம் விநியோகம் பண்ணுவோம். இயற்கை உரத்தை பயன்படுத்தி பண்ணுகிற விவசாயத்தைப் பத்தி எங்க பள்ளிக்கூடத்துல நிறைய பேசினாங்க… இயற்கையா விளைவிக்கும் காய்கறிகளுக்கு நல்ல மதிப்பு இருக்குப்பா… நாமே நேரடியாக விற்பனை பண்ணும் போது நமக்கு லாபமும் நல்ல கிடைக்கும்.”
மாடசாமி தன் மகளை பெருமையுடன் பார்த்தார். நீ சொல்றது ரொம்ப நல்ல யோசனைம்மா உன்னுடைய உதவி இருக்கறதால கண்டிப்பா நம்ம இதை வெற்றிகரமாக செய்ய முடியும்” என்றார் உற்சாகமாக.
“உங்களுக்கு உதவறது மட்டும் இல்லப்பா என்னுடைய குறிக்கோள். விவசாய கல்லூரில படிக்கனும். படிச்சவங்க நிறைய பேர விவசாயத்துக்கு வர வைக்கனும். அப்பத்தான் விவசாயத்தை நிறைய புது உத்திகளை பயன்படுத்தி, மேம்படுத்த முடியும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே என்னுடைய பேச்சால இயற்கை உர விவசாயத்தை பண்ணுமாறு வலியுறுத்துவேன். நிறைய பேர இயற்கை உர விவசாயத்திற்கு வரவழைப்பேன்.
என்னுடைய மேடைப் பேச்சுத் திறமை இதற்கு பயன்படும். ஒரு விவசாயியின் மகள் மற்ற எந்த தொழில் செய்பவர்களுக்கும் குறைந்தவளில்லை என்று நான் நிலைநிறுத்துவேன்” என்றாள் கண்களில் கனவுகளோடு… மனதில் உறுதியோடு…
மகளை பெருமையோடு அணைத்துக்கொண்டார் மாடசாமி.” நீ கண்டிப்பா சாதிப்ப மலர்” என்றார் பெருமையோடு.
மலர்விழியின் கண்கள் பரிசாக கிடைத்த பாரதியார் படத்தை நோக்கியது.’ சில வேடிக்கை மனிதரைப் போல், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..’ என்று கீழே எழுதியிருந்த வரிகள்.. அவளுக்கு புதிய தன்னம்பிக்கையை கொடுக்க… பாரதி கண்ட புது மைப் பெண்ணாய் புன்னகைத்தாள் மலர்.
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings