in ,

வீண் பகட்டு… வேண்டாம் விரட்டு (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

இரண்டு தினங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது, “கடன் வாங்கிக் காரில் போகின்றவனை விட, சொந்தக் காசில் சைக்கிளில் போகின்றவன் மேல்” என்று.  மேலோட்டமாய் படிக்கும் போது ஒரு மெல்லிய சிரிப்பை ஏற்படுத்திய இக்குறுஞ்செய்தியை ஊன்றிப் படித்து, ஆழ்ந்து யோசித்த பின் பல விஷயங்கள் பிடிபட்டன.

“ஆன முதலில் அதிகம் செலவானால்…மானம் அழிந்து மதி கெட்டுப் போன திசை…எல்லார்க்கும் கள்ளனாய்….ஏழ் பிறப்பும் தீயனாய்…நல்லார்க்கும் பொல்லனாம் நாடு என்று ஒளவைப் பிராட்டியார் அன்று பாடி வைத்ததன் மறுபதிப்புத்தான் இந்தக் குறுஞ்செய்தி போலிருந்தது.  நடப்புச் சமூகத்தில் மக்கள், தங்களுக்கான வாழ்வு முறைகளை தங்களது பொருளாதார நிலைப்பாட்டிற்கு உட்பட்டு செய்வதை விடுத்து, மற்றவர்களுடைய பாராட்டிற்காகவும், மற்றவர்களுடன் போட்டி போடுவதற்காக வேண்டியும், செய்யப் போகத்தான் மெல்லிய கடன்கள் (SOFT LOANS) ,  சுலப கடன்கள் (EASY LOANS), வாகன கடன்கள் (VEHICLE LOANS), நகைக் கடன்கள் (JEWEL LOANS), போன்றவற்றை சில வங்கிகளும், நிதி நிறுவனங்களும், அறிமுகப்படுத்தி லோன் மேளா கொண்டாடி வருகின்றனர். 

வியாபாரத்திற்காக கடன் வாங்கும் போது அது அபிவிருத்திக்கான திட்டம், ஆனால் வீண் பகட்டிற்காக கடன் வாங்கும் போது அது அழிவிற்கான திட்டம்.  போலி கௌரவத்தைப் பெற பணத்தைக் கடன் வாங்கிச் செலவு செய்து வீழ்ச்சியுற்ற குடும்பங்கள் எத்துனையோ உண்டு.   “பக்கத்து வீட்டுக்காரன் கார் வாங்கிட்டான்…நாம வாங்காம இருந்தா எப்படி?…” என்று எண்ணிக் கொண்டு கடனில் கார் வாங்கி, அதற்கான தவணைத் தொகையை உரிய நேரத்தில் செலுத்தச் சிரமப்பட்டு, அதற்காக வேறொரு இடத்தில் கடன் வாங்கிச் செலுத்தி, அந்த வேறொரு இடத்திற்கு மற்றொரு இடத்திலிருந்து வாங்கிக் கொடுத்து, இப்படியே கடன் மேல் கடன் ஏற்றிக் கொண்டு போய், கடைசியில் காரையும் பறி கொடுத்து, கௌரவத்தையும் பறி கொடுத்துக் கண்ணீர் விடுவோர் பலர். எதனால் இந்த நிலை?…வீண் பகட்டு…போலி கௌரவம்.

கடன் வாங்கும் போது எத்தகைய பெருந் தொல்லைகளை நாம் வலிய ஏற்றுக் கொள்கிறோம், என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.  சிலர், போலி மதிப்பைப் பெறுவதற்காகவே தங்கள் குழந்தைகளை உயர்ந்த கல்வி நிறுவனத்தில்…செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து விடுவர். அந்தப் பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கு ஈடாக தன் குழந்தையும் இருக்க வேண்டும் என்பதற்காக தாராளமாக செலவுகளைச் செய்வர். அதன் விளைவாய் அந்தந்தக் காலகட்டங்களில் பள்ளிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த முடியாமல் கடனில் விழுவர்.  குடும்பத்தில் வறுமை நிலையை வலிய வரவழைத்துக் கொள்வர். பிள்ளைகளின் கல்விக்காக கடன் பெறுவதும், வறுமையை ஏற்றுக் கொள்வதும் நியாயமே.  ஆனால், அவர்களது பொருளாதார நிலைக்குப் பொருந்தும் பள்ளிகள் பல இருந்தும் போலி மதிப்பிற்காக, மற்றவர்களிடம் தங்களை உயர்வாய்க் காட்டிக் கொள்ள வேண்டும், என்பதற்காகவே உயர் பள்ளிக்குச் சென்று, அல்லலுறுவது எல்லா நேரங்களிலும் சுமுகமாக இருக்கும் என்று சொல்லி விட இயலாது.  சில நேரங்களில் பாதியில் அந்தக் கல்வி தடைபட்டுப் போகக் கூட நேரலாம் அல்லவா?.  அவ்வாறு நேர்ந்த பின், பாதியில் அப்பள்ளியிலிருந்து வெளியேறி, பிள்ளையை வேறொரு பள்ளியில் கொண்டு போய்ச் சேர்க்க பெற்றவர்கள் சிரமப்படுவதும், அங்கு சேர்ந்த பின் அந்தக் கல்வி முறையை புரிந்து கொண்டு அதனுடன் இயைந்து போக பிள்ளைகள் சிரமப்படுவதும், தேவையில்லாத துயரங்கள் அல்லவா?

அடுத்து, கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு.  கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் கலர் கலரான திட்டங்கள் மூலம் பல நிதி நிறுவனங்கள் தங்களுடைய கடன் அட்டையை விற்பனை செய்து விடுகின்றன.  வாங்குபவர்களில் பலர் தங்களிடம் கிரெடிட் கார்டு இருப்பதையே ஒரு பெருமையாக எண்ணிக் கொண்டு,  அதைப் பயன்படுத்துவதை ஒரு கௌரவமாக நினைத்துக் கொண்டு, தேவையில்லாத பல பொருட்களை அதைப் பயன்படுத்தி வாங்குவர்.  அவ்வாறு அவர்கள் வாங்கும் பொருட்களின் தொகை மீது ஏற்றப்படும் வட்டி பற்றிய விபரம் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரிய வராது.  பின்னர் அது தெளிவாகத் தெரிய வரும் போதுதான் அந்த வலையின் சூட்சுமம் புரியும்.  அது புரியும் நேரத்தில் பெரும் கடன் சுமை அவர்களது தலை மீது ஏற்றப் பட்டிருக்கும்.  புலி வாலைப் பிடித்த கதையாக, அதை ஒரேயடியாகச் செலுத்தி கார்டை திருப்பி விடவும் முடியாமல், மாதா மாதம் தவணையில் செலுத்தும் போது, அதன் வட்டித் தொகை ஏறிக் கொண்டே போவதைத் தடுக்கவும் முடியாமல் திண்டாடும் பலர் பகட்டு நாடகத்தின் பலி கடாக்கள்.

ஒரு கால கட்டத்தில், படிப்பறிவில்லாத பாமர மக்களைத்தான் சில செல்வந்தர்கள் ஏமாற்றி, அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து, அவர்களை காலம் முழுவதும் தங்களுக்கு அடிமைகளாக வைத்திருப்பர்.  ஆனால் இன்றோ, பெரும் படிப்பு படித்தவர்களும், உயர் உத்தியோகத்தில் இருப்பவர்களும் கூட, வீண் பகட்டு, போலி கௌரவம், பொய் மதிப்பு போன்ற பேய்க் குணங்களுக்கு அடிமையாகி, தங்களைத் தாங்களே பிறருக்கு அடிமையாக்கிக் கொள்கின்றனர்.  இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ மறந்து வறுமைக்குள் தங்களைத் தாங்களே திணித்துக் கொள்கின்றனர்.

ஜெரால்டு என்ற வெளிநாட்டு அறிஞர், “கைப் பொருள் மதிப்பே மதிப்பு!…கடன் பொருள் மதிப்பு அவமதிப்பு” என்று இரண்டே வரிகளில் அற்புதமாகக் கூறியுள்ளார்.  உண்மைதானே?…போலிக் கௌரவத்திற்காக கடன் வாங்கியவன், அதைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் போது, முதலில் பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்.  அதன் பிறகு ஓடி ஒளியத் துவங்குகிறான்.  தனிமையில் கவலைக்குள்ளாகிறான்.  யாரைப் பார்த்தாலும் அஞ்சுகிறான்.  தன் உணர்வுகளுக்கு வடிகாலாய்த் தன்னைச் சார்ந்தவர்களைச் சாடி, கெட்டவனாகிறான்.  இறுதியில், எல்லோராலும் அவமதிக்கப் படுகிறான்.

தன்னிடம் உண்மையில் என்ன உள்ளதோ அதை ஒளிவு மறைவின்றிக் காட்டி, தன்னுடைய பொருளாதார நிலைக்கேற்ப, தன்னால் என்ன செய்ய முடியுமோ, அதை மட்டும் தயக்கமில்லாமல் செய்து, வேண்டாத போலி வேஷங்களையும், வறட்டு கௌரவங்களையும், தூர எறிந்து விட்டு, நிஜத்தை மட்டும் நிஜமாக்கி வாழ்ந்தால் வாழ்க்கை நதி வற்றாத ஜீவநதியாய் ஓடி வளம் பெறும்.

வீண் பகட்டு தற்காலிக இன்பம், அதை விரட்டினால் எக்காலமும் இன்பம்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீங்களும் வசீகரன்தான் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    கொஞ்சம் பெருந்தன்மையோட இருங்க பாஸ்! (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்