in ,

வழியா இல்லை, பூமியிலே?! (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

குன்னூர் அரசாங்க மருத்துவமனையின் ஒரு மூலையில் இரண்டு நாட்களுக்கு முன் வெட்டிப் போட்ட தேயிலைச் செடியாய் வாடிக்கிடந்தாள் மல்லிகா. கை, கால்கள் கட்டிலோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தன. ஒரு கையின் வழியே சலைன் (குளுக்கோஸ்) ஏறிக் கொண்டிருந்தது. மூக்கு துவாரத்தில் செருகப்பட்ட இரப்பர் குழாய் வழியே அதனுடன் இணைக்கப்பட்டு கட்டிலின் கீழே தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்டிக் உறையில் இளஞ்சிவப்பு நிற திரவம் வடிந்து கொண்டிருந்தது. ‘எழுபத்திரண்டு மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும்’  என்று டாக்டரம்மா சொன்ன நேரம் முடியப் போகிறது.

     அருகில் அவளது பதினைந்து வயது மகள் ரோஜா கன்னத்தில் வடிந்து காய்ந்திருந்த கண்ணீருடன் நின்றிருந்தாள். கருவண்டுக்கு மயில் தோகையில் இறகு வைத்தது போன்ற கண்கள், கூர்மையான  செதுக்கி வைத்தது போன்ற மூக்கு, பெயருக்கேற்றவாறு பனியில் நனைந்த பன்னீர் ரோஜா போன்ற இதழ்கள், இளமையின் செழிப்பு பூத்து பூரிக்க ஆரம்பித்திருந்த தேகம், கருத்து அடர்ந்து நீண்டிருந்த ஒற்றைப் பின்னல்.

     அருகில் அவளது ஆடையைப் பற்றியவாறு மிரண்ட விழிகளுடன் அவளின் சிறு தம்பி. எண்ணெய் காணாத பரட்டை தலை, பட்டனில்லாத சட்டை, மெல்லிய தேகம்.

வேகமாக உள்ளே நுழைந்த டாக்டரம்மா, பின்னாலேயே நடந்து வந்த நர்ஸைப் பார்த்து, “என்;.ஜி.எல். எத்தனை எம்எல். வந்திருக்கு? நேற்று எடுத்த ஃப்ளுயிட் லெவல் எவ்வளவு?” என்று கேட்டார்;.

“பத்து எம்.எல். தாம்மா இருக்கு. லெவல் ரொம்ப லோ தான்” என்றாள்.

“குட்” என புன்னகைத்த டாக்டரம்மா, மல்லிகாவின் கட்டுக்களை அவிழ்க்க சொல்லிவிட்டு, அவளது கன்னத்தை தட்டி, “மல்லிகா! மல்லிகா!” என்றார்;.

மிகுந்த சிரமத்தோடு இமைகளைப் பிரித்த மல்லிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடியது. பனிப் படர்ந்த கண்ணாடி வழியே பார்ப்பது போல் மங்கலான நிழலாக டாக்டரும், பிள்ளைகளும் தெரிந்தனர். கண்களை மூடித் திறந்தும், கைகளால் கண்களை கசக்கியும் பார்த்தாள்.

“ஐயோ! கண்ணு தெரியலியே!” என்றாள்” பதற்றமாய்.

“பயப்படாதே! ரெண்டு நாள்ல சரியாயிடும்” என்றார் டாக்டரம்மா.

பிள்ளைகளைப் பார்த்து கை நீட்டினாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடிக்க அருகில் வந்த ரோஜா, “ ஏம்மா இப்படி பண்ண? எங்கள நினச்சு பார்த்தியா? நீயில்லாம நாங்க எப்படிம்மா வாழ்றது? நானும் உங்கூடவே வந்திருவம்மா” என்றாள்;.

மல்லிகாவால் பதில் கூற முடியவில்லை. கண்ணீர் மட்டும் வழிந்தோடியது.

ஆறுதலாய் அவள் தோளைப் பற்றி அழுத்திய டாக்டரம்மா, “அதான் சரியாயிடுச்சே” என்று கூறி ரோஜாவின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, “கவலைப் படாதே! இந்தா… தம்பியக் கூட்டிட்டுப் போய் அவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்திட்டு நீயும் சாப்பிடு!” என்று சொல்லி நூறு ரூபாயை தன் கைப்பையிலிருந்து எடுத்து ரோஜாவின் கையில் திணித்தார்.

அவர்கள் அந்தப் பக்கம் நகர்ந்ததும், “ஏன் மல்லிகா இப்டி செஞ்ச? எவ்வளவு அழகான குழந்தைங்க! உன் பொண்ணப் பாரு! நீ பாட்டு கண்ண மூடிட்டு படுத்திருந்த. எத்தன பேரு கண்ணு அவ மேலன்னு தெரியுமா? அட்டெண்டர் கூட நைஸா பேசிப் பார்க்கிறான். நான் தனியா ஆள் போட்டு அவள வாட்ச் பண்ணிட்டே இருக்கேன். இந்தக் காலத்துல பெத்தவங்க கூட இருந்தாலே பிள்ளைகள கட்டிக் காக்கறது கஷ்டம். நீ பாட்டுக்கு பொறுப்பில்லாம போகப் பார்க்கிற?” என்றார்.

“இல்லம்மா. ஃபேக்டரில சூப்பர்வைஸர் அவனோட ஆசைக்கு இணங்கலண்ணு என் மேல திருட்டுப் பட்டம் கட்டிட்டான். அந்த வேதனைல வீட்டுக்கு வந்தா, என் புருஷன் குடிக்க காசு கேட்டு ரகள பண்றான். பத்தாக்குறைக்கு ‘நீ அவனப் பார்த்து பல்லக் காட்டிருப்ப, அதான் கூப்பிட்ருக்கான்’னு சொல்லி பழிய என் மேலயே போட்டு அடிச்சிட்டாம்மா. அதான் வெறுப்பு தாங்காம பண்ணிட்டேன்” என்றாள்.

“கஷ்டம்தான் மல்லிகா, நாம நியாயமா இருக்கப்ப பழி சொன்னா மனசு வெறுக்கத்தான் செய்யும். ஆனா, யாருக்கு கஷ்டம் இல்ல, சொல்லு!. உன் பொண்ணுக்காக என் கதைய உன்கிட்ட சொல்றேன். கேளு. என்னப் பார்த்தா உனக்கு என்ன தோணுது? பெரிய டாக்டர்! இவளுக்கு என்ன கஷ்டம் இருக்க போதுனுதான? நான் படிப்பில ஃபர்ஸ்ட். எந்த ஆணையும் நிமிர்ந்துகூட பார்க்கக் கூடாதுன்னு ஒழுக்கமா வளர்ந்தவ. ஆனா கொஞ்சம் பொஸஸிவ்னெஸ் ஜாஸ்தி.

குலம் கோத்ரம் பார்த்து, ஜாதகம் பார்த்து என்னைவிட அழகான ஒருத்தன கல்யாணம் பண்ணி வச்சாங்க. அன்பு பாசம்னா என்னன்னு தெரியாது. எப்பப் பார்த்தாலும் பணம், பணம், பணம்! அவன் சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்க போகுமோ தெரியல. நான் சம்பாதிக்கிறது, எங்க அப்பா சம்பாதிக்கறதுன்னு எல்லாத்தையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி பிடுங்கணும். பத்தாக்குறைக்கு பார்க்கிற பொம்பளைங்கள எல்லாம் அனுபவிக்கணும். ஒரு பொண்ணையும் வீட்ல வேலைக்கு வைக்க முடியாது. எந்த வயசுனாலும் பரவால்ல. என் கண்ணாலயே பல முறை நேர்ல பார்த்திருக்கேன்.

கேட்டா அடி, உதை. அவன் தப்ப மறைக்றதுக்கு கூட வேல பார்க்ற டாக்டர், கார் டிரைவர்னு எல்லார்கூடயும் சேர்த்து வச்சு அநியாயமா என் மேலயே பழி போட்டு அசிங்கப்படுத்துவான். எத்தனை நாள் எனக்கு செத்து போகணும்னு தோணிருக்கு தெரியுமா? நானும் பிள்ளைகளுக்காகத் தான் வாழறேன். உன்ன மாதிரி நாலு பேர காப்பாத்றதுல ஒரு ஆத்ம திருப்தி.

உன்ன மாதிரி சூசைட் அட்டெம்ட் கேஸஸ் நிறைய வருது. கடன் தொல்லை, பரிட்சையில ஃபெயில், லவ் ஃபெயிலியர்… அப்டி, இப்டினு. பரிட்சைல ஃபெயிலானவங்க வாழ்க்கைல ஜெயிக்கலயா? வைராக்கியமா திரும்பத் திரும்ப படிச்சு எழுதிப் பாக்கணும். முடியலையா? எத்தனையோ வழி இருக்கு, பிழைக்கறதுக்கு. பத்தாவது ஃபெயிலான சச்சின் உலகப் புகழ் பெறலையா? ரோடு பழுதாயிருச்சுன்னா அத குளோஸ் பண்றதுக்கு முன்ன, டேக் டைவர்ஷன்னு போர்டு வச்சு வேற வழி உண்டாக்கி தர்றாங்கள்ல, அதப்போல நம்மலோட ஒரு தோல்விக்கு முன்னமே வேற ஒரு வழிய திறந்து வச்சிருப்பாரு கடவுளும்! நாம கொஞ்சம் நிதானமா தேடணும்.

இதே ஊர்ல ஸ்கூல், ரிசார்ட்னு கட்டின பெரிய தொழிலதிபர் கடனுன்னு சுட்டு தற்கொலை பண்ணிட்டாரே, அவரை நம்பியிருந்த எத்தன பேர் வேதனையும், பிரச்னையும் சந்திச்சாங்க? அவர் செத்ததனால பிரச்னை முடிஞ்சு போச்சா ? பெருசா தான ஆச்சு சாண்டர்ஸ்ங்றவர், ஏழாவதுல படிப்ப விட்டு எத்தனையோ வேல செஞ்சும் தோற்றுப் போய் கடைசில கே.எஃப்.சி.ங்கற கடைய ஆரம்பிச்சு எவ்வளவு புகழ் அடைஞ்சார்னு கேள்விப்பட்ருக்கியா?.

நான் உங்கள உலகப் புகழ் பெறச் சொல்லல. அட்லீஸ்ட் வாழ்றதுக்கு அடுத்த வழிய தேடிக்கோங்க. இந்த உலகத்ல எத்தனயோ வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கு. நீ திருடலன்னு நிரூபி. சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் பார்க்கச் சொல்லு உன் முதலாளிய! இல்லண்ணா அந்த வேலைய விட்டு வெளிய வா. காய்கறி வியாபாரம், பெட்டிக் கடை… இப்படி உனக்கு என்ன தெரியுமோ அத இன்னும் தெளிவா கத்துக்கிட்டு நல்லா பண்ணு. பிள்ளைகள நல்லா படிக்க வை. புருஷன அன்பால திருத்தப் பாரு. பிள்ளைகள வச்சு புரிய வை. முடியவே முடியலையா, கண்டுக்காம விட்டுடு. தானா அடிபட்டு திருந்துவான். இன்னொரு தரம் தற்கொலைனு மட்டும் நினைச்சு பார்க்காத. வெறுப்பு வரும் போது பசங்க முகத்த பாரு. இவங்களுக்காக நிச்சயம் வாழணும்னு தோணும்”

மல்லிகாவின் மனம் தெளிவடைந்தது. அப்போது தான் அன்றலர்டந்த மலராய் கடைக்குப் போய் திரும்பிக் கொண்டிருந்த ரோஜாவைப் பார்த்தாள். நம் வாழ்க்கை மல்லிகையாய் மணக்கவில்லையென்றாலும், இந்த ரோஜாவின் வாழ்க்கை மணம் வீசுவதற்காகவாவது தான் வாழ்ந்துதான் ஆகவேண்டுமென்ற உறுதியுடன் எழுந்து அமர்ந்தாள்.

 “வாழ நினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்?” பாடல் வரிகள் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது!.

(முற்றும்)     

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. “Mallikaa udal nalam sariyaaga illathatha samayaththilaa ippadi oru chiRukathaiyai ezhuthuvathu? SariyillaiyE. PadikkumbOthE kaNGaLil irunthu kaNNeer varuGinRathu. Ithu kaRpanaik kathaiyaaga irukkinRa pOhilum !!! AnthO. En cheyya?”

    – “M.K.Subramanian.”

    • தங்கள் விமரிசனத்திற்கு நன்றி! மல்லிகாக்களும், அனிதாக்களும் தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுக்காமல், தன்னம்பிக்கைப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்காகத்தானே இந்த கதையே! கற்பனைப் பாதி, உண்மை மீதி!

வினை விதைத்தவன் (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி 

காலை எழுந்தவுடன் படிப்பு (சிறுகதை) – ரேவதி பாலாஜி