2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஏன்பா ஜனு மூணு நாளா சொல்றாளாமே, திருவான்மியூர் வரை போயிட்டு வரக் கூடாதா, நிக்காம கேட்டுண்டே பாத்ரூமுக்குள்ளே போனான் ஆனந்த்.
சமையலுள்ல இருந்து, நான் தேடி எடுத்த திருவாழி மோதிரம் என் மருமகள் ஜான்வி எனக்கு கேக்கணும்னே கொஞ்சம் சத்தமாவே முணுமுணுத்தாள். “அவருக்கு எங்கே டயம் பாவம் வயசு திரும்பியிருக்கு, தினம் பூரா ஆல்பம் புரட்டி புரட்டி அழகு பாத்தாறது பொண்டாட்டியை.”
என் கண்ணில் கண்ணீர் தழும்பியது, கையிலிருந்த அந்த ஆல்பத்தை மரஅலமாரிக்குள் வைக்கறதுக்கு முன்னால ஆல்பத்தில இருந்து சிரிச்ச பங்கஜாவோட முகத்தை ஒரு தடவை பாத்தேன்.
மேல் துண்டால கண்ணை துடைத்தவாறே பின்னால தோட்டம் பக்கம் போனேன். அவ வச்ச கருவேப்பிலை செடிதான் இது ஒரு 10, 12 வருஷம் இருக்குமா. திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலுக்கு போறதுன்னா என் பங்கஜாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் அந்த குளப் படில உக்காந்து கால்களை தண்ணீரில் விட்டு ஆட்டிட்டே குழந்தை போல விளையாடுவாள், மீன்கள் காலை வருடி ஓடும் போது சிலிர்த்து சிரிப்பாள்.
அப்படி ஒரு தடவை போயிட்டு வந்தப்ப பூந்தமல்லி பக்கம் ஒரு நர்சரில இந்த கருவேப்பிலை ஒரு அடி உயர கன்னை ஆசையா வாங்கி ஜாக்ரதையா அன்னிக்கு ராத்திரியே பின்னால குழி தோண்டச் சொல்லி நட்டு வச்சா. கருவேப்பிலை வரதே கஷ்டமாக்கும்னு, தினம் ஒரு தடவை சொல்லி சொல்லி தண்ணி ஊத்துவா. சாலுப் பாட்டி சொன்னான்னு புளிச்ச மோர் ஊத்துவா.
தோட்டத்துல எத்தனையோ செடி இருந்தாலும் இந்த கருவேப்பிலை செடி மேல ஒரு தனிப் பிரியம்.
பாருங்கப்பா காய்கறிக்காரன் போடற கருவேப்பிலை சக்கை மாதிரி இருக்கு நம்ம வீட்டு கருவேப்பிலை ஒண்ணு கிள்ளி போட்டா ஊரே மணக்கும்பா. இப்ப அந்த செடி தலை நிமிந்துபாக்கறாப்பல 8 அடிக்கு உசந்து கிடக்கு. இப்படி வீட்ல ஒவ்வொரு மூலையும் அவளை ஞாபகப் படுத்துதே..
அப்ப தெரியலை, ஆனா நானும் அவ்வளவு அனுசரணையா இருக்கலை அவளுக்கு. 7 மணிக்கு நான் குளிச்சு வீபூதி சாத்திட்டு, சோபால உக்காந்தா காபி மணக்க மணக்க சென்டர் டேபிள்ல இருக்கணும். நான் தினசரி பேப்பர் படிச்சு முடிச்சவுடனே 9 மணிக்கு டிபன். கொஞ்சம் லேட்டானா கெட்ட கோபம் வரும்.இப்படி சொல்லிட்டே போகலாம்.
பையனுக்கு எனக்குனு கவனிச்சு கவனிச்சு செய்வாளே ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை. 4 வருஷம் முன்னே ஆனந்துக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி பல மீடியால தேடி நான்தான் படிச்ச பொண்ணு அழகா இருக்கானு இந்த ஜான்வியை நிச்சயம் பண்ணினேன்.
பங்கஜாவைக் கூட ஒரு வார்த்தை கேக்கணும்னு தெரியலை. ஆனந்துக்கு என்கிட்ட அப்ப பயம் பேசாம சரினு ஒத்துட்டு கல்யாணம் பண்ணிண்டான்.
உடம்புல சக்தி இருக்கறப்பல்லாம் தெரியலை மத்தவங்களை மரியாதையா நடத்தணும்னு. என் மாமனார் பாவம் ஏழை வாத்தியார். பங்கஜம் மூணாவது பொண்ணு. பொண்ணு பாக்க அவங்க வீட்டுக்கு போனோம்.நான் முறுக்கா உக்காந்து யார்கிட்டயும் அதிகம் பேசலை. ஆனா ஸ்வர்ண விக்ரகமா ஆர்மோனியப் பெட்டியோட உக்காந்து “எந்தரோ மஹானுபாவலு” சுரம் தப்பாம பாடின பங்கஜாவை பாத்தவுடனே என்னை இழந்தேன்.
மடமடனு கல்யாணப் பேச்சு, பங்கஜாவோட தோப்பனார் என்னால அது முடியாது இது முடியாதுனு ஆரம்பிச்சார். நான் அம்மாகிட்டே கொஞ்சம் சுருக்னே சொன்னேன். “ஒண்ணும் வேண்டாம்மா பொண்ணை அனுப்ப சொல்லு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கறேன்”
உடனே அவர் பயந்து “அப்படி இல்லை மாப்பிள்ளை, என் சக்திக்கு தகுந்த மாதிரி செய்றேன்னு…..” இழுத்தார்.
நான் தயங்காம, “உங்க சக்திதான் தெரியறதே முத முத மாப்பிள்ளைக்கு ஸ்வீட் கடலை எண்ணைல செஞ்சிருக்கப்பவே”
“அப்படி இல்லை மாப்பிளை, பங்கஜா பண்ணினது அவளுக்கு நெய் ஜாடி கைல அகப்படலை போல இருக்கு, அதான்”
“ஓ அது வேறயா தன் வீட்டு சமையல் அறைல எது எங்கே இருக்கும்னு தெரியாதா உம்ம பொண்ணுக்கு”
ஆர்மோனியப் பெட்டிய விட்டு டப்னு எந்திரிச்சு உள்ளே ஓடினா அந்தப் பொண்ணு, கண்ணை புறங்கையால துடைச்சிண்டு. அம்மா என்னை தொடைல அமுக்கி சாந்தப் படுத்தினாள்.
அவரை பாத்து “நீங்க உங்க இஷ்டப்படி பண்ணுங்க எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு”
எனக்கு கூட முதல்ல பயம்தான், மரியாதை தெரியாத பையனுக்கு என் பொண்ணை கொடுக்கறதா இல்லைனு சொல்லிடுவாரோனு.
எப்படியோ கல்யாணம் ஆனது. எனக்கு பங்கஜாவை ரொம்ப பிடிக்கும், ஆனாலும் கெத்தா பேசறது, அவ பேரண்ட்ஸை நக்கல் பண்றது. அவா வந்தா வேணும்னே மேலே போய் படிக்கற மாதிரி பாவ்லா பண்றது. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும், சின்னவளா இருந்தாலும் பொண்டாட்டிக்கும் மரியாதை கொடுக்கணும்னு எனக்கு அப்ப தெரியலை.
என் பங்கஜா இருக்கற வரை என்னை இழுத்துக் கட்டிண்டு போவா யார்கிட்டயும் அதிகம் பேச விடாம ஏதாவது பேசிட்டாலும் சப்பைக் கட்டு கட்டி என்னை போத்தி பாதுகாத்த தெய்வம் அவள்.
இப்ப அவ இல்லை, என் தலைக்கனம் அமுங்கிப் போச்சு. நான் தேர்ந்தெடுத்த என் மருமகளே என்னை உதாசீனம் பண்றா. பையன் எனக்கு பயந்து இருப்பான், இப்ப பொண்டாட்டியோட கை பொம்மை.
மத்யானம் ஹால் ஊஞ்சல்ல தலைகாணி போட்டு படுத்திருந்தேன். என் குறட்டை சத்தம் எனக்கே கேட்டது. ஹால்ல இருந்த லேண்ட்லைன் ஃபோன் சத்தம். நான்தான் தூங்கறேனே, ஜான்வி மெதுவா நடந்து வந்து ஃபோன் எடுக்கறா.
“அம்மா நீயா, மொபைல்ல கூப்ட்றதுக்கு என்ன, அப்பா ஊஞ்சல்ல அசதியா தூங்கறார், மெதுவா பேசு.”
எதிர்முனை பேசுவதும் பலவீனமா கேட்டது, ”ஏண்டி ரேஷன் சக்கரை, ஆவக்கா, புதுசா வாங்கின லெதர் பர்ஸ் எல்லாம் கொடுத்து விடறேன்னயே, எப்ப வரது அந்த கிழம்”
“வாயை அளந்து பேசு என் மாமனாரை கிழம், பழம்னா மரியாதை கெட்டுப் போகும். அவர் மத்தவங்களுக்கும் சுய கொளரவம் இருக்கு, எல்லாரையும், பெரியவாளோ, சின்னவாளோ அவாளுக்கு தகுந்த மரியாதை கொடுக்கணும்னு புரிஞ்சிக்கதான் நான் கொஞ்சம் டிராமா பண்ணறேன். மத்தபடி என் மாமனார், என்னை தவிக்க விட்டு போன மாமியார் ரெண்டும் வைரம். நீயே யாரவது பையனை அனுப்பி சாமான்களை எடுத்துக்கோ. இந்த வெயில்ல என் மாமனாரை எங்கயும் அனுப்ப மாட்டேன் புரிஞ்சதா”
ஊஞ்சலில் படுத்தவாரே இவ்வளவையும் கேட்ட நான் மேல் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டேன். ஜானு ஜில்னு கேரட் ஜூஸ் கொண்டு வந்து டக்னு வச்சா.
நான், ”யம்மா ஜானு ரொம்ப சாரிம்மா கைகளை குவித்தேன்.”
பதறிப் போய் என் கைகளைப் பிடித்துக் கொண்ட ஜானு கண்கள் கலங்க “என்ன மாமா நீங்க இப்படி”
“முருகப் பெருமான் தந்தைக்கு நேரடியா உபதேசம் பண்ணினான். நீ மறைமுகமா “மனிதம்”னா என்னனு, ஒவ்வொரு ஜீவனுக்கும் சுயமரியாதை இருக்கும்னு அனுபவ பூர்வமா கத்துக் கொடுத்துட்டயே.”
“மாமா காஞ்சிப் பெரியவா ஒரு உபதேசத்துல சொன்னதா சின்ன வயசுல படிச்சது மனசுல நிக்கறது “வயசுக்கு மரியாதை” கொடுக்கணும். அர்த்தம் என்னன்னா பெரிய வயசுனு இல்லை சின்ன வயசுக்கும் தகுந்த மரியாதை கொடுக்கணும். அதுதான் மணுஷாளுக்கு தெரிய வேண்டிய முக்கிய பாடம்.”
குடிங்கோப்பானு ஜூஸ் கிளாசை கண்ல பாசம் வழிய கைல கொடுத்தாள்.
பங்கஜா ஃபோட்டோல இருந்து சிரிக்கறா
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings