டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வழக்கத்தை விடவும் அன்று சூரியனின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததோ என்னவோ, செல்வம் இன்னும் கனவு உலகத்தில் இருந்து மீளாதவனாகவே இருந்தான்.
செல்வத்தின் தாய் லட்சுமியோ பரபரப்புடன் அனல் பறக்கும் சூடான இட்லியையும் தேங்காய் சட்னியையும் செய்து கொண்டிருக்க, தந்தை ராஜாவோ, செய்திதாளை புரட்டி கொண்டிருந்தார்.
கடிகாரம் வழக்கத்தை விடவும் வேகமாக சுற்றுவதாக எண்ணி கொண்டே, செல்வத்தை எழுப்பினாள் லட்சுமி.
தந்தையும் மகனும் ஒன்றாக காலை உணவு உண்பது, லட்சுமிக்கு புதுமையாக தோன்றியது. காரணம், செல்வம் கல்லூரி முடித்த காலம் முதல், கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக ராஜா சீக்கிரமாக உண்டுவிட்டு செல்வதும், பின் உண்பதையே வழக்கமாக இருந்த செல்வம், இன்று நேர்முக தேர்வுக்கு செல்வதால் சீக்கிரமாக உணவு உண்பது, லட்சுமிக்கு ஒரு வித நிம்மதியை தந்தது
ராஜா செல்வத்திடம் அலுவலக விலாசத்தை கொடுத்து, “டேய்… ஏதோ நான் வேலை செய்யுற டாக்டர் நல்லவரா இருக்குறதால, உன்ன பத்தி தெரிஞ்சு உனக்காக கமல்நாத்கிட்ட வேலை வாங்கி தரனு சொல்லி இருக்காரு. ஒழுங்கா போய் கமல்நாத்த பாரு, சீக்கிரமா போடா” எனக் கூறியவாரே தன் வாகனத்தில் புறப்பட்டார் ராஜா
“இதோட நாலாவது இண்டர்வியூ, இதையாவது ஒழுங்கா பண்ணுடா” எனக் கூறியவாறே ஐந்நூறு ரூபாயை சட்டை பையில் போட்டுவிட்டு, செல்வத்தை வழி அனுப்பி வைத்தாள் லட்சுமி
செல்வத்தின் வீட்டில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த விலாசம். “கமல்நாத் டைக்னாஸ்டிக் லேபாரட்டரி” என பெயர் இருந்த அலுவலகத்திற்கு கீழ் தன் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்
அலுவலகம் முழுவதும் ஆழ்ந்த அமைதி நிலவியது. அவரவர் தங்களுடைய பணிகளை செவ்வனே செய்து கொண்டிருந்தனர். அலுவலக முகப்பில் வரவேற்பு அறை இருந்தது.
அதில் இருந்த பெண்ணிடம், “மிஸ்டர் கமல்நாத் இருக்கிறாரா?” எனக் கேட்க
அப்பெண், “கமல்நாத் சார் ஆஸ்பத்திரில பிசியா இருக்காரு, வர கொஞ்ச நேரம் ஆகும். நீங்க அங்க உக்காருங்க” எனக் கூறினாள்.
கிட்டத்தட்ட பத்து நிமிடமாக ஒரே இடத்தில் இருந்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. திடீரென செல்வத்தின் போன் கொக்கரிக்க, அதில் ராமு காலேஜ் என இருந்தது
அதை எடுத்து, “சொல்றா ராமு, இன்னிக்கு என்னடா பிளான்?” எனக் கேட்க
ராமு செல்வத்திடம், “மச்சி இன்னிக்கு படத்துக்கு போலாம்டா, டிக்கெட் கூட எடுத்தாச்சி, சீக்கிரமாக வாடா” என கூறி விட்டு வைத்தான்
அரைமணி நேரம் ஆகியும் கமல்நாத் வராததால், அலுவலகத்திற்கு அருகில் உள்ள டீ கடையை நோக்கி சென்றான் செல்வம்
‘டீ ஸ்டால்’ என்ற பலகையின் கீழ், காக்கி நிற பனியன் அணிந்து லுங்கியுடன் இளமை தோற்றத்தை கொண்ட இளைஞன் டீ போட்டு கொண்டிருந்தான்.
டீயை குடித்து விட்டு சிகரெட்டை பற்ற வைக்க, டீ மாஸ்டர் அருகில் இருந்த லைட்டரை நோக்கி சென்றான்.
அந்த இளைஞன் செல்வத்தின் கையில் இருந்த பையோ டேட்டாவை கண்டதும், “நண்பா இதுல இப்படி வரக் கூடாது, இந்த மாதிரி வரனும்” என எழுதிக் காட்டினான்.
அந்த பிழையை சரி செய்த செல்வம், “நன்றி நண்பா, பரவால்லயே டீ மாஸ்டருக்கு கூட இதெல்லாம் தெரியுதே. இந்திய வல்லரசு ஆகிரும் போலயே” எனவும்
அந்த இளைஞன் சிரித்தவாறே உள்ளே சென்று, கையில் எதையோ எடுத்து வந்து செல்வத்திடம் தந்தான். அதில் பெயர் சிவா, வயது 25, படிப்பு எம்.பி.ஏ என இருந்ததை கண்டதுமே, செல்வத்தின் கைகள் நடுங்கியது
சிகரெட் சுருள் செல்வத்தின் கையில் பட, இதுநாள் வரை அவன் அடித்த மொத்த சிகரெட்டின் எரிசலும் ஒரே நிமிடத்தில் அடைந்த மன உணர்வில் சிவாவிடம் கேட்டான்
“என்ன நண்பா எம்.பி.ஏ படிச்சிட்டு டீ கடைல இருக்கீங்க, உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“நானும் உங்கள மாதிரி படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை தான் பார்க்கனும்னு இருந்த ஆள் தான். ஆனா எங்க அப்பாவோட சிகரெட் பழக்கத்தால, ஆறு மாசத்துக்கு முன்னாடி புற்றுநோய்ல இறந்துட்டாரு. அதுல இருந்து குடும்பத்த பாத்துக்குற பொறுப்பை எடுத்துட்டு, கிடைச்ச வேலை செய்யணும்னு இதை செய்துட்டு இருக்கேன்” என கூறியவாறே அடுப்பை நோக்கி சென்றான்.
அந்த நிமிடத்தில் இருந்து, இதுநாள் வரை தான் இருந்த பொறுப்பற்ற நிலையை எண்ணி மிகவும் வெட்கப்பட்டான் செல்வம்.
பின் வேகமாக எழுந்து லேபாரட்டரியை நோக்கி விரைந்தான்
டீ கடை ரேடியோவில் எம். ஜி.ஆரின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” பாடல் ஒலிக்க ஆரம்பித்தது
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings