in

வட்டியும் முதலும் (குறுநாவல் – பகுதி 2) – வைஷ்ணவி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

சீமா- இந்த பேரைக் கேட்டதும்தான் எத்தனை சந்தோஷம்!எத்தனை துக்கம்!எத்தனை வலி! எத்தனை வேதனை! எத்தனை ஏக்கம்! உலகில் உள்ள அனைத்து உணர்ச்சிகளும் இந்த பேரைக் கேட்டதும் ஒரு சேர ஒரே நேரத்தில் எழுகின்றன. ரங்காவின் அப்பா சௌரிராஜனும் சீமாவின் அப்பா ஸ்ரீனிவாசனும் பால்ய சினேகிதர்கள். இரு குடும்பத்தினர்களும் நட்பாகத்தான் இன்றும் இருக்கின்றனர்.

ரங்காவை விட ஏழு வயது மூத்தவன் ஸ்ரீராம், செல்லமாக சீமாச்சு. இருவரும் ஒன்றாக வளர்ந்தனர். சீமாச்சு, ரங்காவிற்கு நிறைய தின்பண்டங்கள் வாங்கித் தருவான். ஒன்றாக பட்டம் விடுவார்கள். அவன் சென்று வந்த கராத்தே வகுப்பில் கற்றதை அவளிடம் செய்து காட்டி கைத்தட்டல் வாங்குவான். அவன் கற்ற புது புது விளையாட்டுகள், புது ஆங்கில வார்த்தைகள் என அனைத்தும் சொல்லித் தருவான்.

அவன் அப்பாவின் பழைய டிவிஎஸ் பிப்ட்டியில் அவனின் நண்பர்கள் வீட்டிற்கும் உறவினர் வீட்டிற்கும் ரங்காவை அழைத்து செல்வான். அவன் எந்தரோ மஹானுபாவரு பாடினால், இன்றைக்கெல்லாம் உடகார்ந்து கேட்கலாம். மொத்தத்தில் அவளது உலகில் சீமாச்சு தான் முடிசூடா மன்னன் இன்றுவரை. அவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.

எந்நேரமும் சீமாச்சு வீட்டில்தான் இருப்பாள். சிலசமயம் சாப்பிடுவதும் தூங்குவதும் சீமா வீட்டிலேயே. அவனை விட்டு ஒரு நொடி பிரிய மாட்டாள். அவனை நினைக்காமல் ஒரு நொடி இருக்க முடியாது. சிறுவயதிலிருந்தே ஒன்றாக இருந்ததாலோ என்னவோ அவன் மேல் அப்படி ஒரு பிரியம்.

நாளாக நாளாகத்தான் அது காதல் என்று உணர்ந்தாள். ஒரு கோடை விடுமுறையில்  இரு குடும்பத்தினரும் சேர்த்து பண்ணாரி போகலாம் என முடிவெடுத்தனர். எப்போதோ சீமாச்சுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனின் அம்மா மாரியம்மனுக்கு முடி இறக்குவதாக நேர்ந்து கொண்டிருந்தாள். அதை செலுத்தவே எல்லாரும் கோவிலுக்கு செல்ல ஏற்பாடாகியிருந்தது.

அதனால் இவன் தான் இக்கதையின் நாயகன் என நீங்கள் கருதினால் மன்னிக்கவும். இக்கதையின் நாயகன் இக்கதையின் இயக்குனரே. அவர் யாரென தெரிய வேண்டுமென்றால், நீங்கள் ஒரு பத்து வருடம் முன்னோக்கி பயணிக்க வேண்டும். இதோ வீட்டிலிலுள்ளவர்கள் அனைவரும் கிளம்பி விட்டனர். வெளியில் பொலிரோவும் தயாராக உள்ளது. ம்… சீக்கிரம் நீங்களும் கிளம்புங்கள்.

அதுவுமில்லாமல் இந்த விடுமுறை முடிந்தவுடன் சீமாச்சு உயர்படிப்பிற்காக தஞ்சையில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர வேண்டும். நான்கு வருட ஹாஸ்டல் வாசம். அதற்காகவே அவசர அவசரமாக வேண்டுதலை நிறைவேற்ற புறப்பட்டனர். எலுமிச்சை தயிர் சாதம் சகிதமாக இரு வீட்டாரும் கிளம்பினர்.

வாசலில் மஹேந்திரா பொலிரோ வந்து நின்றது. ரங்கா ஓடி போய் முதலில் காரின் முன் சீட்டில் உட்கார்ந்தாள். ஏனென்றால் எப்போ காரில் சென்றாலும் சீமா டிரைவருக்கு அருகில் தான் உட்கார்வான். அவன் அருகில் உட்கார வேண்டுமென அவசர அவசரமாக முதலில் வண்டி ஏறினாள்.

அவள் நினைத்தபடியே சீமா முன் சீட்டில் தான் அமர்ந்தான். அவனுடன் லொட லொடவென்று பேசிக் கொண்டே வந்தாள். இவளுக்கு செம குஷி. அது சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. பொலிரோ ஒரு முட்டு சந்துக்குள் சென்று நின்றது.

சீமாவின் சித்தப்பா சித்தியும் அவர் மகள் திவ்யாவும் ஏறிக் கொண்டனர். திவ்யாவும் சீமாவும் ரொம்ப க்ளோஸ். முன் சீட்டில் அமர்ந்திருந்த ரங்காவை பின்னே போக சொல்லி விட்டு சீமாவின் சித்தப்பா ஸ்ரீதர் முன்னே உட்கார வண்டி கிளம்பியது.

எல்லாம் ஒரு வழியாக கோவிலுக்கு சென்று முடி இறக்கி விட்டு சாமி தரிசனம் செய்தனர். ரங்காவின் அம்மா ரங்காவிடம் “நல்லா அம்பாள சேவிச்சுக்கோடி” என்றார். இல்லாவிட்டாலும் அவளுக்கு அம்பாளிடம் கேட்க ஒரு முக்கிய விஷயம் உள்ளது.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எந்த சுவாமியா இருந்தாலும் அவளுக்கு இரண்டே பிரார்த்தனைதான். ‘ஒன்னு நான் பர்ஸ்ட் ரேங்க் எடுக்கனும். இரண்டாவது சீமாவ கல்யாணம் பண்ணிக்கனும்’.

தீபாராதனை முடிந்தவுடன் பெரியவர்கள் எல்லாரும் பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள். சிறுசுகள் மூன்றும் கோவிலை சுற்றி பார்க்க சென்றனர்.

வழக்கம் போல சீமா விடும் ரீல்களை உண்மையெனவும், இவனுக்குதான் எவ்வளவு அறிவு என்னும் பெருமிதத்தோடும் நடந்தாள். ஆனால் திவ்யா இவன் சொல்வதில் முக்காவாசி பொய் என்றாலும் ரங்கா நம்ப மாட்டாள்.

பாவம் திருவிழாக் காலத்தில் பலூன் விற்கும் ஏதோ ஒரு வியாபாரியைக் காட்டி இவன் தான் போலீஸ் தேடற மாரப்பன். மாறுவேஷத்துல சாமி கும்பிட வந்திருக்கான். சைடில் பலூனுக்கு காற்றடிக்க வைத்துள்ள பம்பைக் காட்டி அதுதான் நாட்டு துப்பாக்கி என்று விட்ட ரீலை ரங்கா நிஜமென்று நம்பி விட்டாள்.

கொண்டு வந்த சாதத்தை சாப்பிட்டு முடித்ததும், சீமாவின் அப்பா “இன்னும் நேரமிருக்கு பக்கத்துல டேம் மற்றும் பார்க் பார்க்கலா”மென்று அங்கே சென்றனர்.

பார்க்கில் விளையாடி விட்டு எல்லாரும் டேம் பார்க்க சென்றனர். மேலே ஏறி செல்ல வேண்டுமென்பதால் யாரும் வரவில்லை. சீமாவின் அப்பா, அம்மா, சீமா, திவ்யா மற்றும் ரங்கா மட்டும் சென்றனர். அங்கே ஒரு இடத்தில் நீரிலிருந்து எப்படி மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர் என்பதை சீமா திவ்யாவிற்கும் ரங்காவிற்கும் விளக்கி கொண்டிருந்தான்.

கத்திரி வெயில் சுட்டெரிக்கவே, “சரி சரி கீழே இறங்குங்கள் வண்டிக்கு போகலாம்” என்றார் ஸ்ரீனிவாசன்.

வண்டி கிளம்பியதும் சீமாவின் சித்தி, ஏண்ணா! போறச்ச அப்படியே மொண்டிபாளையம் கோவிலுக்கு போய்ட்டு போலாம் இவ்ளோ தூரம் வந்துட்டோமே” என்றார்.

அதன்படி அனைரும் மொண்டிபாளையம் கோவிலுக்கு சென்றனர். சித்தி தான் சொல்லிக் கொண்டே வந்தார். “இந்த சுவாமிக்கு ரொம்ப சக்தி. எது வேண்டின்டாலும் அப்படியே நடக்கும். கேட்டத கொடுக்கும் வரப்ரசாதி, மூலவர் சுயம்பு மூர்த்தி” என்றார்.

அடர் காடு நுழைந்தவுடன் கொடிமரம், அதற்கு முன்னே பெரிய திருவடி. உள் பிரகாரத்தின் இடது ஓரத்தில் இரு பிரம்மாண்ட வெண்கல மணிகள். ரங்கா ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். காது மட்டும் சித்தியிடம் இருந்தது.

அடுத்து அர்த்த மண்டபத்தினுள் எல்லாரும் நுழைந்தனர். அவள் ஓடிப்போய் சீமா அருகில் நின்று கொண்டாள். சித்தியின் குரல் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

வழக்கம் போல் வெங்கட் ரமணரிடம் தனது கோரிக்கையை வைத்தாள். எவ்வளவு நேரம் கண்மூடி வெங்கட்ரமணரிடம் பேசிக் கொண்டிருந்தாளோ, அனைவரும் சன்னதி விட்டு வெளியேறும் போது, “ரங்கா! ரங்கா !” என மாமியார் உலுக்கவும் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாலணா பரதன் (சிறுகதை) – செல்வம்

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 16) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை