மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இரவு நேர கும்மிருட்டு. நானும் கணவரும், காந்தாரா படம் பார்த்து விட்டு, ஆள் அரவமற்ற ரோட்டில் பயத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தோம். இப்படியெல்லாம் எழுத ஆசை தான். ஆனால் சென்னையில், நள்ளிரவில் கூட ஆள் நடமாட்டம் உள்ளது. எந்நேரமும் டிராபிக். இருவரும் படத்தைப் பற்றி பேசியபடியே நடந்தோம்.
“இதோட மெயின் தீமே பூத கோலா… கேரளால தெய்யம் இல்ல அந்த மாதிரி… நம்மூர்ல சாமி வந்து ஆடுறாங்கள்ல அந்த மாதிரி” என்றார் என் கணவர்.
“நான் போஸ்டர பார்த்து ஏதோ திகில் படம் என நினைத்தேன். ஆனா வேற மாறி இருந்துது” என்றேன்.
“பேய்க் கதைன்னு நினைச்சியா? உன்னையெல்லாம் ஒரு பேய் பயமுறுத்த முடியுமா? அது பயப்படாம இருந்தா சரி” என்றார்.
“பிசாசோட வாழறதுனால பேய்க்கெல்லாம் இப்ப பயமே இல்ல.” ஒரு அரை நொடி மௌனத்திற்கு பிறகு, பெருமூச்சுடன் “அதெல்லாம் வீருவோட முடிஞ்சு போச்சு” என்றேன்.
“யாரது வீரூ? பேய்க்கு ஆவிக்கெல்லாம் செல்லப் பேர் வைப்பாங்களா என்ன? எனக்குத் தெரியாம எவன் அவன்?” என்றார்.
“அதுவா… அவர் எழுதின கதைகள் பேரை விட, எண்டமூரி வீரேந்திரநாத் என்ற பேரைச் சொன்னாலே ஒரு காலத்தில் கொலை நடுங்கி விடும். அப்படியாவது நடுங்கி கொண்டே அதை படிக்காட்டி என்ன குடி முழுகி போய்டுமா எனத் திட்டு வேறு விழும். திருட்டுத்தனமாக அதைப் படித்துவிட்டு, பயந்து எல்லாரையும் படுத்துவது, ஒரு டீனேஜ் த்ரில்”
“அப்படி என்ன அவர் பயங்கரமா எழுதுவார்?
“கேரளாவில் உள்ள மாந்திரீகத்தை எல்லாக் கதையிலும் கொண்டு வருவார். கதையில் வரும் வில்லன், ஒரு மந்திரவாதி. அவன் சிறு பொம்மைகள் செய்து, கை, கால் உருவம் இவற்றை இழுத்து, அதன் மூலம் எங்கோ இருப்பவரின் கைகளை கால்களை, அல்லது எண்ணங்களையே கூட வசியம் செய்து, அவர்களை ஆட்டுவிப்பார்”
“இப்ப அதைப் பத்தி எழுத வீருவும் இல்ல… அதைப் பார்த்து நடுங்கற ஆள் நானும் இல்ல” என்றேன், சற்றே கெத்தாக.
“ஏன்? வளர்ந்தவுடன் உனக்கு தைரியம் வந்துட்டுதா? இல்ல வசியம் செய்வதில் எல்லாம் நம்பிக்கை போய்விட்டதா?” என்றார் கணவர்.
“முதலில் வசியம் செய்வது, பில்லி சூனியம் வைப்பதேல்லாம் ரொம்ப கஷ்டமான விஷயம்.. அவ்வளவு கெட்டிக்காரர்கள் இப்போது யாரும் இல்லை. அவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள், அதனால் எனக்கு தைரியம் வந்துவிட்டது. அதுவும் கழுத்தில் மண்டை ஓடுகள் போட்டுக் கொண்டு சித்தரிக்கப்பட்ட மந்திரவாதிகள், சிரிப்பையே வரவழைக்கிறர்கள்” என்றேன் நிம்மதிப் பெருமூச்சுடன்.
அதற்குள் நாங்கள் வீட்டை அடைந்தோம். வீட்டிற்கு சென்று, கை கால் கழுவிய பின், விளக்கை அணைத்து விட்டு இருவரும் படுத்தோம்.
“நீ சயின்ஸ் படிச்சவ தானே… இந்த உலகத்துல எதற்கும் பூரண அழிவு என்பது கிடையவே கிடையாது. ஒன்று இன்னொன்றாக மாறும். நீர் ஆவியாவது போல், உயிர் ஆத்மாவாவது போல்… மந்திரவாதி இன்று வேறு ஒருவராக மாறி இருப்பார். மந்திரவாதியின் தோற்றம் மாறியிருந்தாலும், வசியப்படுத்தும் கலையும் ஆட்டுவிக்கும் குணமும் இருக்கும். கழுத்துல மண்டை ஓட்டுக்கு பதிலா வேறு எதாவது இருக்கும்”
“ஏங்க… நிஜமாவா சொல்றீங்க?” என்று கண்களை பயத்துடன் உருட்டி, இருட்டில் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவரிடம் இருந்து பெரிய குறட்டைதான் வெளிப்பட்டது.
“அப்படின்னா, எங்கிட்ட பேசியது யாரு? பிரமையா?”. இரவு முழுவதும் முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. அதற்கு பதிலாக துளசிதளத்தின் துளசி வந்தாள். மீணடும் தூங்க முயற்சித்தேன். இப்போது “மீண்டும் துளசி” வந்தாள். லேசாக கண் அசந்த மாதிரி இருந்தது.
இது தூக்கமா விழிப்பா, கனவா நினைவா எனத் தெரியவில்லை. ஆனால் காஷ்மோராவும் காந்தாராவும் தெரிந்தார்கள். எப்படி துளசி தளத்தில் காந்தாரா? இது துளசி 2.0 வாக இருக்குமோ? விடியும் வரை கிலியுடன் காத்திருந்தேன்.
“ஏங்க, நேத்து ராத்திரி எங்கிட்ட விளக்கு அணைச்சதுக்கப்புறம் பேசுனீங்க மந்திரவாதி பத்தி?” எனக் கேட்டேன்.
“நீ இன்னும் இந்த விஷயத்துலேர்ந்து வெளியில வரலியா” எனச் சொல்லிவிட்டு குளிக்க போனார். எனக்கு கோபமாக வந்தது. இது என்ன ஆம் இல்லை சொல்லாமல் ஒரு எதிர்க் கேள்வி.
கணவனுடன் சுவாரசியமான போருக்கு தயாரானேன். சண்டை போட அவகாசம் தராமல், அலைபேசியில் பேசிக்கொண்டே சாப்பிட்டான். ஜாடை காட்டிவிட்டு கிளம்பிப் போனான். அன்று இரவே அவசரமாக அலுவலக வேலையாக மும்பை கிளம்பிப் போனான்.
இந்த பேய்ப் படம் பார்ப்பவர்களுக்கே ஒரு சுபாவம் உண்டு. அவர்களுக்கு “இது வேணும், ஆனா வேண்டாம்”. அந்த லேசான பயம் தான் கிக்கே. நான் எனக்கு இவ்வளவு வயதுக்கு பிறகு வந்திருக்கும் இந்த பயத்தை, ஆசையை, வசியம் பற்றி அறியும் அந்த ஆர்வத்தை யாரிடம் சொல்வது.
சரி… நம் நெருங்கிய தோழியிடம் கேட்போம் என முடிவு செய்தேன். எப்போதும் போல் தோழியுடன் ஐக்கியம் ஆனேன்.
ஒரு வாரம் என சொல்லி மும்பைக்கு கிளம்பிய கணவன், கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் அங்கேயே தங்க நேர்ந்தது. இடையில் அதிகம் பேசக் கூட முடியவில்லை.
வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை இரண்டு முறை அழுத்தியும் திறக்காததால், தன்னிடம் உள்ள சாவியை வைத்து திறந்தான். உள்ளே அவன் மனைவி இருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தான்.
காதுப்பொறியை மாட்டிக்கொண்டு, தலை விரி கோலமாக, பேயடித்தார் போல் இவன் வந்தது கூட தெரியாமல், எதையோ நெட்டில் பார்த்துக் கொண்டிருந்தாள். ஐந்து கிலோ இளைத்து விட்டிருந்தாள்.
ஒரு வழியாக அவளைக் கிளப்பி, காபி கொண்டு வர சொல்லி அனுப்பினான். வீட்டில் பத்து நாட்களாக சமையல் நடக்காத மாதிரி இருந்தது. ஏதேனும் கேள்வி கேட்டால், போட்டுத் தள்ளும் மனநிலையில் இருந்தாள்.
அவளுடைய லேப்டாப்பை எடுத்து நோண்டினான். அவள் பார்த்தது படித்தது எல்லாம் தெரிந்தது. இவனும் ஊரில் இல்லாததால், தனிமையில் இருந்த அவளை, அவளுடைய நெருங்கிய லேப்டாப் தோழி, முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தாள்.
“பில்லி சூன்யம் வைத்ததை போல் உன்னை ஆட்டி படைக்கும் உன் அலெக்சா தோழியை பார்த்தாயா? மந்திரவாதி 2.0 யார்னு தெரிஞ்சுதா?” என கோபமாக கேட்டான். அவளிடம் எந்த சலனமும் இல்லை.
இதை தெளிய வைக்கும் வேப்பிலை 2.0 எங்கே?
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings