in ,

வரம் தர வந்தவள் (சிறுகதை) – மைதிலி ராமையா, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

ன்னுடைய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கு பெற்று வந்த சந்தோஷத்தில் இருந்தே இன்னும் விடுபட முடியாமல் மிதந்து கொண்டிருந்த எழிலரசிக்கு, இன்று அகல்யா சொன்ன விஷயத்தை கேட்டதில் இருந்து பூமியோடு சேர்ந்து தானும் சுற்றுவது போல் பிரமிப்பாக இருந்தது.

அவளது நூலில் உள்ள பாடல் ஒன்று பாடப்புத்தகத்தில் பதிவிட ஏற்றதாக அரசு தேர்வு செய்திருப்பதாக சொன்ன தகவல்தான்.

இதெல்லாம் என் வாழ்வில் நடக்கும் நிஜங்களா அல்லது கனவா. கனவுதான் என்றால் நான் உறக்கத்திலேயே இருந்து விடுகிறேன். விழிக்கவே வேண்டாம் என்றெல்லாம் அவள் மனதின் சிந்தனைகள் தறிகெட்டு ஓடிய வண்ணம் இருந்தன.

இத்தனை சந்தோஷமும், பேரும் புகழும் அகல்யாவால்தான் அவளுக்கு சாத்தியமாயிற்று. அகல்யா, எழிலின் கணவன் ஸ்ரீநிவாசின் முதல் மனைவி. உடன்பிறவா சகோதரி என்பது கூட பொருந்தாது, உயிரில் கலந்த ஒப்பற்ற சகோதரி என்றுதான் எழிலரசி அவளை உணர்ந்திருந்தாள்.

கொஞ்சமும் வளர்ச்சியுறாத சேலக்காடு கிராமத்தில் தாய் தந்தையை இழந்து, சித்தப்பா சித்தியின் தயவில் வளர்ந்து வந்த எழிலரசி, சந்தோஷமான கனவு காணக் கூட அருகதை அற்றவளாக வாழ்ந்து கொண்டிருந்த போதுதான், “அகல்யாவின் கணவருக்கு இரண்டாந்தாரமாக கட்டித் தருகிறீர்களா?” என ஒரு உறவுக்காரர் வந்து கேட்டார்.

“வசதியான இடம், எதுவும் எதிர்பார்ப்பு இல்லை, அவர்களே கல்யாண செலவெல்லாம் ஏத்துக்கிறாங்க”. இந்த வார்த்தைகள் போதாதா பெருஞ்சுமையாக இருந்த பெண்ணைத் தள்ளிவிட.

“மூத்தத் தாரத்துக்கு குழந்தை இல்லையாம், அவளே மனமுவந்து புருஷனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறாளாம். அவளும் பெரிய இடத்து பொண்ணாம், அதுமட்டுமில்லை பையனுக்கு மாமன் மகளும் கூடவாம்”

இதெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது எழிலரசிக்கு காதில் விழுந்த விஷயங்கள்.

“வாடகைத்தாய்தான் ஏற்பாடு பண்ணலாம்னு நினைச்சு இருந்தாங்களாம். அதில அகல்யாவுக்கு அவ்வளவா உடன்பாடு இல்லையாம். பத்து மாசம் சுமந்து பெத்துக் கொடுக்கிறவளை, குழந்தையைக்கூட  பாக்க விடாம விரட்டறதும், குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாம, அதோட உரிமையைப் பறிக்கறதும் சுத்தமா அவளுக்கு பிடிக்கலையாம். அதனால்தான் இன்னொரு கல்யாண ஏற்பாடாம்.  வாடகைத்தாயா கேட்டிருந்தாக்கூட இவங்க ஒண்ணும் மறுத்திருக்கப் போறதில்லை”

கல்யாணம் ஆகி வந்தபோது அகல்யா அங்கே இல்லை. அவள் இருந்தால், ஸ்ரீநிவாஸ் எழிலரசியுடன் இயைந்து வாழ மாட்டான் என்பதாலேயே விலகி இருந்தாள் என்று பின்னர்தான் தெரிந்து கொண்டாள் எழில்.

கணவன் ஒன்றும் பெரிதாக அன்பைக் கொட்டவில்லை, சரிவர பேசுவதுகூட இல்லை. குழந்தை பெற்றுக் கொடுக்க வந்தவள் என்ற ரீதியில்தான் நடந்து கொள்வதாகப்பட்டது. இதையெல்லாம் பெரிது படுத்தி வருந்தும் நிலையில் அவளும் இல்லை.

ஏதோ வாடகைத்தாய் என்றெல்லாம் ஆகாமல் நிரந்தரத் தாயாகத்தானே வாழப்போகிறோம் என தேற்றிக் கொண்டாள். ஆனால் மாமியாரின் வேண்டா வெறுப்பான பார்வையைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.

என்ன கோபம் என்றே தெரியாமல் எப்படி இவங்களை சரிகட்டுவது என்று பெரிதும் குழம்பினாள். யாரிடம் இதைப் பற்றிப் பேச முடியும். கணவனிடமா? அவனே அளவோடு பழகும்போது இதெல்லாம் சாத்தியமா?

சித்தப்பா வீட்டில் ஒருமாதிரியான உழைப்பு, சித்தி இட்ட வேலைகளையும்,  இடாத வேலைகளையும் கூட, பார்த்துப் பார்த்து செய்து கொண்டு, அதிலும் அவளுக்கு ஏதாவது குறை தெரியும் போது இறந்து போன இவள் பெற்றோரையும் சேர்த்து வச்சு வாங்கு வாங்கென்று வாங்கி விடுவாள்.

“எந்தலையில இதைக் கட்டிட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்துட்டுதுங்க. எந்தலையெழுத்து இதைக் கட்டிகிட்டு போராட வேண்டியதா இருக்கு” என்று காலையில் பேச ஆரம்பித்தாள் என்றால், எழிலரசி இரவு அடுக்களை வேலைகளை முடித்துவிட்டு  ஆடு மாடுகளை அதனதன் இடத்தில் கட்டி வைக்கோல் புல் என எடுத்துப் போட்டுவிட்டு, கோழிக்கூடாரங்களை சரி பார்த்து விட்டு படுக்க வரும் வரை பேசிக்கொண்டே இருப்பாள்.

அங்கிருந்ததற்கு இது எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றியது எழிலுக்கு. வீட்டு வேலையோடு சரி. வயல்வெளிக்கு போய் புல் அறுப்பது, மாட்டுக் கொட்டடியை சுத்தம் செய்வது, வரட்டி தட்டுவது, இப்படிபட்ட வேலைகள் இல்லை என்பதால் மட்டும், இது பரவாயில்லை என்று தோன்றவில்லை அவளுக்கு.

“இன்னும் உனக்கு கல்யாணம் ஆவலியா” என்ற ஏளனப் பார்வைகளில் இருந்தும், “என் பொண்ணோட ஒத்தவ. இவளக்கட்டி குடுக்கறதுக்குள்ள, எம்மவ அவ பொண்ணையே கட்டிக் குடுத்துடுவா போலவே” என்ற குத்தல் பேச்சுக்களில் இருந்தும் தப்பிச்சாச்சு.

கல்யாணமே ஆகாதுன்னுதான் அவளே நினைச்சு இருந்திருக்கா. அதனால இந்த கல்யாணம் தந்திருக்கிற கவுரவம் போதும்னு மனசை தேத்தி வச்சுகிட்டு வாழப் பழகிட்டாள்.

எல்லாம் அகல்யா வரும் வரைதான். அந்த வீட்டில் அகல்யாவிற்கு நல்ல மரியாதையும், அன்பும் நிறையக் கிடைப்பதைப் பார்த்து அவளைப் பார்த்து கொஞ்சம் பயந்து ஒதுங்கவே செய்தாள் எழில்.

மாமியார், தம்பி பொண்ணுன்னு வேண்டி விரும்பி கட்டிகிட்ட   பொண்ணாச்சே. பாசத்தை மழையாய் பொழிஞ்சாங்க. படிச்ச, அழகான, எல்லாத்துக்கும் மேல அவனோட பிஸினஸ்ல உழைப்பு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பார்ட்னரா இருக்கிற, மனைவியை எந்தக் கணவன் தான் தாங்க மாட்டான்.

எல்லாம் இருந்தும் அகல்யாவிடம் துளிக்கூட ஆணவமோ அகம்பாவமோ இல்லை.  மனிதாபிமானம்தான் பொங்கி வழிந்தது.

எழிலரசியை அன்புடன் நடத்தியதோடு, “எதற்கெடுத்தாலும் ஏன் பயப்படற. இது உன் வீடு, உனக்கு சகல உரிமைகளும் இங்க உண்டு. நீ ஒண்ணும் விலை கொடுத்து வாங்கிட்டு வந்த அடிமையில்ல” என்று இவளது நிலமையை இவளுக்கே உணர்த்தினாள்.

அதுமட்டுமில்லாமல், ஸ்ரீநிவாஸிடமும், மாமியாரிடமும் இவளுக்காக பலமுறை பரிந்து பேசி, வீட்டின் பிரதான அங்கமாக எழிலரசியை எல்லோரும் நினைக்கும்படி செய்தாள்.

“அக்கா! இதெல்லாம் எனக்கு ரொம்ப அதிகம் என் நிலமைக்கு..” என்று ஒருமுறை இவள் கழிவிரக்கம் கொண்டு பேசிய போது

இவள் வாயைப் பொத்தி, “என்ன உன் நிலமை, நீ ஒண்ணும் எதிலும் குறைஞ்சு போகலை.  நான் என்ன ஒசத்தி தாய்மைப் பேறு அடைய முடியாத…” என்று உடைந்துபோய் பேச இவள் அவள் வாயை மூடி ஆறுதல்படுத்தும்படி ஆனது.

குழந்தை பிறந்த பிறகும், அதை அகல்யா கையில் கொடுத்து ஆனந்தப்படவே மாமியார் விரும்பினார். அகல்யாவை அம்மா என்றுதான் சொல்லிக் கொடுத்தார்.

அகல்யாதான் அதையும் மறுத்து விட்டாள். சுமந்தவள் அவதான், நிறைய கஷ்டங்களைப்பட்டு பெத்தவளுக்குத்தான் அந்த உரிமை. என் கையில அவ குழந்தையை மனப்பூர்வமா கொடுக்கறதே பெரிய மனசுன்னு சொல்லி மாமியாரின் நோக்கத்தை முதலிலேயே முறியடிச்சவளும் அகல்யாதான்.

இப்படி அகல்யாவால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி இனிக்கத் தொடங்கவே, எழிலின் பழைய தமிழ் ஆர்வமும், ஓவியம் வரையும் ஆர்வமும் தலை தூக்கின.

அப்போதுதான் ஒருமுறை எழில், ஓய்வு நேரத்தில் ஒரு படம் வரைந்து இரண்டு வரி ஏதோ எழுதி வைத்திருந்தாள். குழந்தை அழவே அதை அப்படியே வைத்துவிட்டு எழுந்து செல்லவே, அந்தக்காகிதம் பறந்து சென்று அகல்யாவின் கையில் சிக்கியது.

அதில் பாவாடை தாவணி போட்ட ஒரு பெண்ணின் படம் வரைந்து, கீழே

“கனவுகள் துயிலும் மஞ்சம்,

கன்னி ஒருத்தியின் நெஞ்சம்,

நிலை பெறத்தான் அவை அஞ்சும்.”

என்ற கவிதை வரிகளும் இருக்கக் கண்டு பிரமித்தாள் அகல்யா.

எழிலரசியை அழைத்து அவளைப்பற்றி அப்போதுதான் விசாரித்தாள். பள்ளி இறுதி வரை அரசுப் பள்ளியில் படித்தாள் என்ற அளவில் மட்டுமே தெரியும். அவளுக்குள் இருக்கும் தமிழ் ஆர்வமும், எழுதும் ஆற்றலும் இப்போதுதான் தெரிந்தது.

பட்டப்படிப்பு படிக்க வேண்டும், பாட்டெல்லாம் எழுத வேண்டும் என்றெல்லாம் கனவில்கூட நினைக்கத் தனக்கு தகுதி இல்லை என்பதால் தான் எல்லா ஆர்வத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டதாக அவள் கூறவே, கரைந்து உருகிய அகல்யா, அதன் பிறகு ஒரு நிமிடமும் வீணடிக்கவில்லை.

இன்று எழிலரசி எம்.ஏ தமிழ் லிட்டரேச்சர் படித்ததற்கும், அவளது கவிதைகளை நூல் வடிவம் பெறச் செய்வதற்கும் அகல்யாதான் முயன்று நின்றாள்.

வெற்றிகளையும், பெருமைகளையும் தேடித்தேடிக் கொண்டு வந்து எழிலரசியின் கைகளில் கொடுத்தாள்.

எல்லோரின் பார்வையிலும் இப்போது தெரியும் மாற்றத்தை எழிலரசியால் கிரகிக்கவே முடியவில்லை.

அந்த சின்ன வயதில் அப்பா அம்மாவை எடுத்துக்கொண்டு அதிகப்படியான துன்பத்துக்கு ஆளாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், கடவுள் கொடுத்த அகல்யாவை  என்னவென்று சொல்வது அம்மாவா, தோழியா, அல்லது கடவுளேவா புரியவில்லை எழிலுக்கு.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    மங்களம் உண்டாகட்டும் (சிறுகதை) – இரஜகை நிலவன்