இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிகரெட்டை வேகமாக உள்ளே இழுத்து வளையங்களாக புகைவிட்டுக் கொண்டிருந்தான் கேப்டன் ராஜ்.
வஸந்தும் சுகுமாரும் உள்ளே வர “இனி உங்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை. நான் அந்தக் கேஸட்டை கைப்பற்ற வேறு வழி தேடிக் கொண்டிருக்கிறேன். மிஸ்டர் வினோத்” என்று கை தட்டி அழைத்தான்.
அடுத்த அறையிலிருந்து வெளியே வந்த ஆறடி உயரமுள்ள குறுந்தாடி சகிதமான வினோத் “எஸ் கேப்டன்” என்றான்.
“நீ என்ன பண்ணுகிறாய். உன் வேசத்தை மாற்றிக் கொண்டு நேரே ஆர்ப்பியாரைப் போய் பார்க்கிறாய். உன்னுடைய திருமண கேஸட்டைக் காணவில்லை என்றும் அதில் வெளியே ‘விநோதினி’ என்று பெயரிட்டிருக்கும் என்றும் சொல்லி விட்டு நீ உன் வழிகளைத் தேடுகிறாய்?.”
“கவலையே படாதீர்கள் கேப்டன். சரியாக ஒரு வாரம் கொடுங்க. கேஸட்டை உங்கள் கையில் கொண்டு வந்து கொடுக்கிறேன்.” என்றான் வினோத்
“அது சரி வஸந்த், வழக்கமாக நம்பிக்கை துரோகம் செய்கிறவர்களுக்கு நம்முடைய கூட்டத்திலே தண்டனை என்ன தெரியுமா?”
“நன்றாகத் தெரியும் கேப்டன். மரணதண்டனை”
“அப்படீன்னா உடனே கொடுத்து விட வேண்டியது தானே சுகுமார்?”
“ஆமாம் கேப்டன். ஆனால் நான் ஒரு தவறும் செய்யவில்லையே” என்றான் சுகுமார்.
“எப்பா குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று சொல்வார்கள். பாரு நீ தான் தப்பு பண்ணினாய் என்றா நான் சொன்னேன்.” என்றவாறு பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை எடுத்தான் கேப்டன் ராஜ்.
“கேப்டன் என்ன செய்யப் போகிறீர்கள்” என்றான் சுகுமார்.
“சுடப் போகிறேன் ஒரு நம்பிக்கையைத் துரோகியை. வஸந்த் அந்த ஐந்து ரூபாய் நோட்டை கொஞ்சம் அய்யா கிட்ட நீட்டு” என்றான்.
வஸந்த் எடுத்துக் கொடுத்த ஐந்து ரூபாய் நோட்டில் சுகுமார் எழுதி கொடுத்த ‘வினிதா தப்பி விடு. நானும் வஸந்தும் மாறு வேடத்தில் வந்திருக்கிறோம்’ என்ற வார்த்தைகள்.
“ஆனாலும் எனக்குத் தெரியாமல் பக்கத்திலிருந்த ஆளிடம் கொடுத்து ரூபாயை வினிதாவிடம் சேர்த்து விட்டாய் இல்லையா சுகு. ஆனாலும் படு கில்லாடி தான்யா நீ” என்றான் வஸந்த்.
“இந்த மாதிரி கில்லாடியெல்லாம் நம் கூட்டத்தில் இருக்கிறது ஆபத்தில்லையா” என்றான் கேப்டன் ராஜ் வினோத்தைப் பார்த்து.
“கேப்டன் தெரியாமல் செய்து விட்டேன். இனிமேல் இப்படி நடக்கவே நடக்காது” என்றான் சுகுமார்.
“எப்படி?.. எனக்குத் தெரியும் படியாக நடக்காது என்கிறாயா? இடியட். என் தலையிலே மொளகாப் பழம் அரைக்கப் பார்க்கிறாயா?
நம்பிக்கைத் துரோகிகள் வாழவேக் கூடாதுப்பா உலகத்திலே” என்றவாறு பிஸ்டலை இயக்கினான்.
########################################
பட்டுக்கோட்டை பிரபாகரனின் நாவலை சுவாரஸியமாக க்ளைமாக்ஸில் முடித்துக் கொண்டிருந்த அருணை டெலிபோன் தட்டி எழுப்பியது.
புத்தகத்தை அடையாளம் வைத்து மூடி வைத்து விட்டு டெலிபோனை எடுத்தான் “ஹலோ நான் அருண் பேசுகிறேன்”
“நான் வினிதா”
“வினிதாவா யாருங்க”
“ஸார் காலையிலே…”
“எனக்குத் தெரிஞ்ச வினிதா யாரும் கிடையாதுங்க. ஸாரி ராங் நம்பர்”
“ஹலோ…. ஹலோ வச்சுடாதீங்க. காலையிலே வீடியோ கேஸட் கொடுத்துட்டுப் போனேனே அந்த வினிதா”
“ஓ! நீங்களா, ஸாரி. எங்கே நான் ரூபாயில் எழுதியிருந்த விலாசத்தையும் டெலிபோனையும் பார்க்கப் போகிறீர்களோ என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன். சரி, கேஸட்டை வந்து வாங்கிட்டுப் போகிறீர்களா?”
“என்னங்க, நீங்க இப்படி என் வீட்டுப் பக்கம் வந்து கேஸட்டைத் தந்து விட்டுப் போக முடியாதா?”
“ஓ! நீங்க… அதுவும் ஒரு அழகான இளம் பெண்… அசத்தலாக நாட்டியம் ஆடும் பெண்மணிக்கு இந்த உதவியைக் கூட செய்யவில்லை என்றால்….. விலாசம் சொல்லுங்கள்.”
“சயானில் இறங்கி பாந்திரா போகிற வழியிலே காமராஜர் நகர் வருதில்லே?”
“ஆமாம்”
“அதற்கு அடுத்தாற் போல கண்ணாடிச் சாலினருகிலுள்ள “தேவி அப்பார்ட் மென்ட்ஸ் இருக்கிறது சரி. அதிலே முதல் மாடி நூற்றியெட்டு ரூம் நம்பர்”
“இப்போது நேரம் ராத்திரி பன்னிரெண்டாகுதுங்க. இப்ப வரமுடியாது. நீங்கள் விரும்பினால் வர்றேன்” என்றான் அசடு வழிந்த அருண்.
“நோ.. நோ… நீங்கள் காலையிலே பத்து மணிக்குள்ளே வாங்க. நான் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பேன்.”
“ஓ.கே. குட் நைட்” என்று போனை வைத்தான் அருண்.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings