in

வைராக்கியம் ❤ (பகுதி 1) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 1)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வாசலில் செங்காவி கரை கட்டி கோலம் போட்டிருக்க, வாசலிலிருந்து உள்ளே பார்த்தால் பின் பக்கம் துளசி மாடம். அதைத்தாண்டி இருந்த மண் இடத்தில் மருதாணிச் செடியும், மரமாகவே வளர்ந்து விட்ட கருவேப்பிலை மரங்களும், கீழே விழுந்த கருவேப்பிலை பழங்களால் அருகருகே முளைத்ததிருத்த கருவேப்பிலைச் செடிகளும், நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களும் அந்த வீட்டின் அழகைக் கூட்ட, ஹாலில் மரத்தாலான ஈஸி சேரும், கைப்பிடியில் ஈரழைத்துண்டும், கூடவே அருகில் இருந்த மர ஸ்டூலும் அதன் மீது எப்போதும் தட்டு போட்டு மூடி வைத்திருக்கும் தண்ணீர் நிறைந்த சொம்பும் இருப்பதே, ரகுவிற்கான அடையாளமாக இருந்தது.

ரகு, மேட்டூரில் உள்ள மிகப் பிரபலமான ஒரு கெமிக்கல் கம்பெனியில் டெக்னீஷியனாக இருந்தார். ரகுவின் மனைவி மைதிலி, பணக்கார வீட்டில் பிறந்திருந்தாலும், எந்தவித படாடோபமின்றி புகுந்தவீட்டு பாசத்தில் ஒன்றிப்போய் இனிதாக இல்லறத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

இவர்களுக்கு ஜானகி, லலிதா, காயத்ரி, கணேஷ், நந்தினி, புவனா என ஆறு குழந்தைகள். ரகு மேட்டூரில் கெமிக்கல் கம்பெனி குவார்ட்ஸில், மனைவி குழந்தைகளுடன் வசித்து வர, ரகுவின் பெற்றோர்கள் மேட்டூர் அருகிலுள்ள கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

ரகுவிற்கு ஒரு அண்ணா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என பெரிய குடும்பம். கிராமத்தில் இருந்த சிவன் கோவிலில் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வரும் குருக்கள் வம்சத்தில் வரும் குடும்பத்தில் பிறந்தவன் ரகு.

ரகுவின் அப்பா சிவன் கோவிலில் குருக்களாக இருக்க, அண்ணா சோமு அப்பாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணாவை தன்னுடைய கம்பெனியில் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் ரகு.

ஆனால் திடீரென அப்பாவின் உடல்நலம் குன்றிப் போக, இறக்கும் தருவாயில், “எனக்கப்பறம் சிவன் கோயில் பூஜையை நீதாண்டா சோமு பாத்துக்கணும்” என்று அப்பா தன்னுடைய கடைசி ஆசையைச் சொல்ல, மறுபேச்சில்லாமல் உடனே “சரி” என பதிலளித்தான் சோமு.

சோமுவும் சிவன் கோவிலைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள, அண்ணாவின் முடிவு ரகுவிற்கும் சரியாகவே பட்டது.

ஏதாவது விசேஷம், பூஜை என்றால் ஊர்மக்கள் அதிகம் வருவார்களே தவிர, மற்ற நாட்களில் அதிகம் யாரும் வராத அந்த கோவிலிலிருந்து சொற்ப வருமானமே வந்தது. நித்யபூஜையாவது செய்ய வேண்டும் என்று வீட்டிற்கு வாங்கும் பாலைக் குறைத்துக் கொண்டு கோவிலுக்கென்று தனியாக பால் வாங்கி அபிஷேகம் செய்வார் ரகுவின் அண்ணா சோமு.

அப்பா இறந்த பிறகு, அம்மாவை ரகு தன் வீட்டிற்கு அழைத்த போதும், அப்பா வாழ்ந்த வீட்டை விட்டு வர மனமில்லாமல் மறுத்தவள், அண்ணா சோமு குடும்பத்துடன் அதே வீட்டில் தங்கிக் கொண்டாள்.

வாரம் ஒருமுறை கிராமத்திற்குப் போய் எல்லோரையும் பார்த்து விட்டு வரும் ரகு, அம்மா வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கிப் போட்டு விட்டும் வருவார்.

ரகுவின் திருமணம் முடிந்து சரியாக ஒரு வருடத்தில் ரகுவின் தங்கை சௌந்திராவுக்கு பெங்களூரில் அரசு உத்யோகத்தில் நல்ல மாப்பிள்ளை வரன் அமைய, வீட்டின் நிலையைப் புரிந்து கொண்ட மைதிலி, “இந்தாங்கோண்ணா… இதுல இருபத்தஞ்சு சவரன் இருக்கு. எனக்கு போட்ட நகைகளில் பாதியை எடுத்து தந்திருக்கேன். இத வச்சுண்டு சௌந்திராவோட திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கோ” என்று ரகுவிடம் நகைகளைத் தந்தாள்.

ஒரு தம்பி தனியார் கம்பெனி ஒன்றில் கணக்குப்பிள்ளையாக பணிபுரிய, மற்றொரு தம்பி இன்னொரு கம்பெனியில் டெஸ்பேட்ச் க்ளார்க்காக பணிபுரிந்தான். இருவருக்கும் திருமணம் முடித்து சேலத்தில் குடி வைத்தார் அண்ணா சோமு.

குடும்பத்தில் எந்த விஷயமானாலும் அண்ணா சோமுவைக் கேட்காமல் யாரும் முடிவெடுக்க மாட்டார்கள். அண்ணன் தம்பிகள் நால்வரும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர்.

மைதிலிக்கு ரகுவும், குழந்தைகளுமே உலகமாய் இருந்தது. அப்பா ரகு பாசக்காரரானாலும் மிகவும் கண்டிப்பானவர். தன் குடும்பத்தை யாரும் எந்த குறையும் சொல்லி விடக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் இருந்தார்.

மைதிலியும், கௌரவமுடன் வாழ்ந்து குழந்தைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதையே தன் இலட்சியமாய்க் கொண்டிருந்தாள்.

தன் மனைவியை அதிகம் நேசிக்கும் ரகு, ஒரு பெண்ணே குடும்பத்தின் அச்சாரம் என்பதை நன்கு உணர்ந்திருந்தான். தன் குழந்தைகள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என நினைத்த ரகு, எல்லா பெண் குழந்தைகளையும் பி.யூ.சி வரை படிக்க வைத்து, டைம் ரைட்டிங்கும், ஷார்ட் ஹேண்ட்டும் முடிக்க வைத்தார்.

எப்போதும் வெற்றிலை போடும் பழக்கம் கொண்ட ரகு, சகோதரியைப் போல உரிமையுடன் ஓரியாடும் பண்டாரத்தம்மா கடையில் தான் வெற்றிலை பாக்கு வாங்குவார்.

கெமிக்கல் கம்பெனி குவார்ட்டர்ஸில், பணியாளர்களின் வேலைக்கேற்ப வீடுகளின் அளவும் மாறுபடும். கீழ்நிலை பணியாளர்கள், டெக்னிகல் பணியாளர்கள், ஆபீஸர்கள், மேனேஜர், மேல்நிலை அதிகாரிகள் என ‘ஏ’ முதல் ‘இ’ ப்ளாக் வரை கம்பெனி குவார்ட்ஸ் இருக்க, ‘ஏ’ ப்ளாக்கில் மட்டும் நாற்பது வீடுகள் இருக்கும். ரகு டெக்னிகல் பணியாளராக இருந்ததால் ‘பி’ ப்ளாக்கில் இருந்தார். ‘பி’ ப்ளாக்கிற்கு அருகிலேயே பெட்டிக்கடை நடத்தி வந்தாள் பண்டாரத்தம்மா.

“அஞ்சு குழந்தை பெத்தா அரசனும் ஆண்டியாவான்னு பழமொழியே இருக்கு. அதை ஏன் ஐய்யரே நீ புரிஞ்சுக்க‌ மாட்டேங்கற. பையனை படிக்க வக்கற சரி. பொண்ணுக எப்படியும் இன்னொரு வீட்டுக்குப் போற புள்ளங்க தான, பின்ன எதுக்கு பொண்ணுகளையும் இப்படி கடன் வாங்கி படிக்க வக்கற?” என்று வாயாடும் பண்டாரத்தம்மாவிடம்

“குழந்தைகளை நம்மால் முடிஞ்ச வரைக்கும் படிக்க வச்சுட்டோம்னா, அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க தைரியமா பாத்துப்பாங்க. கல்யாணத்துக்கப்பறம் ஒருத்தரோட வாழ்க்கை எப்படி வேணா அமையலாம். ஒருவேளை சூழ்நிலை சரியாயில்லாம போனாலும், யாரையும் எதிர்பார்க்காம அவங்கவங்க சொந்த கால்ல நிப்பாங்க. அப்போ நாம இருப்போமோ இல்லையோ, ஆனா அவங்க படிக்கற படிப்பு அவங்களுக்கு கடைசிவரை சோறு போடும். அதுக்கு தான் இப்ப கஷ்டப்பட்டு படிக்க வக்கறேன்” என்பார் ரகு.

“வாஸ்தவந்தான் ஐய்யரே நீ சொல்றது. ஆனாலும் உனக்கு பெரிய மனசுதாய்யா. உன்ன மாதிரி எல்லோரும் நெனச்சா எவ்வளவு நல்லா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டே, “எத்தனை ரூபாய்க்கு வெத்தலை வேணும். கற்பூரவல்லி வெத்தலையா, இல்ல அந்தியூர் கார வெத்தலையா?” என கடைக்கு வந்தவரிடம் கேட்க,

வெற்றிலை வாங்க வந்தவர், “வீட்டுல நடக்கற விசேஷத்துக்கு தான் வேணும், எது நல்ல வெத்தலையோ குடும்மா” என்றார்.

“வீட்டுல பூஜை விசேஷத்துக்கு தாம்பூலம் குடுக்கன்னா, கற்பபூரவல்லி வெத்தலை வாங்கிக்கங்க. சுர்ருன்னு நல்லா வெத்தலை போடனுமுன்னா அந்தியூர் கார வெத்தலை வாங்கிக்கோங்க. ரெண்டு வெத்தலைல அளவா சுண்ணாம்பு தடவி கொட்டை பாக்க சேர்த்து நாலா மடிச்சு வாயுள்ள போட்டீங்கன்னா, நாக்கும் நச்சுன்னு செவக்கும். வயித்துக்கு நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும்” என்று அழகாக வெற்றிலை போட வந்தவரிடம் ஒரு விளக்கமே கொடுத்தாள் பண்டாரத்தம்மா.

“இரண்டு கவுளி கற்பூரவல்லியும், ஒரு கவுளி கார வெத்தலையும் குடும்மா” என்று வெத்தலையை வாங்கிக் கொண்டு வந்தவர் கிளம்ப

“சரி சரி… நேரமாச்சு. நீ பேசினா பேசிகிட்டே இருப்ப, எனக்கு வெத்தலைய குடு” என்று ரகு காசை நீட்டவும்

“நீங்க வருவீங்கன்னே தனியா லேசான கொட்டைப் பாக்கா எடுத்து வச்சுருக்கேன் பாருங்க” என்றவள், தனியாக கட்டி வைத்திருந்த பாக்கு பொட்டலத்தையும், வெத்தலையையும் வாழைபட்டையில் அழகாக மடித்து கட்டிக் கொடுத்தாள்.

சிநேகச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டவர், “சரி வரேன். வீட்டுக்கு போய்ட்டு ஷிஃப்டுக்கு போகணும்” என்ற சொல்லிக்கொண்ட ரகு விடைபெற்று கிளம்பினார்.

“சரி சரி கிளம்புவீங்களாம், ஆனா ஒன்னு சொல்லியே ஆகணும் ஐய்யரே. உங்க அஞ்சு பொண்ணுகளும் ஒண்ணா சேர்ந்து கோவிலுக்கு வரும் போது பாக்குறதுக்கு அம்மனே நேரா நடந்துவர மாதிரி இருப்பாங்க. பொழுதன்னைக்கும் பாத்துக்கிட்டே இருக்கலாம்னு தோணும். எப்படியோ மூணு பொண்ணுங்க கல்யாணத்தை பண்ணீட்டங்க. மீதி பொண்ணுகளுக்கும் நல்லபடியா கட்டிக் கொடுத்து கரைசேத்தீட்டீங்கன்னா நிம்மதி போங்க” என்று மனசார வாழ்த்தினாள் பண்டாரத்தம்மா.

“என்னவோ, குழந்தைகள் எல்லோரும் நன்னா இருந்தா சரி” என ஒரு நிமிடம் ரகு கண் கலங்க

“உங்க மனசுக்கும், மாமி மனசுக்கும் எல்லா பசங்களும் நல்லாயிருப்பாங்க. கவலைப்படாதீங்க” என்ற பண்டாரத்தம்மா, ரகு சென்றதும் உப்பு போட்டு காயவைத்திருந்த மாங்காய்த் துண்டங்களை தராசில் அளந்து பாக்கெட் போட ஆரம்பித்தாள்.

பெரிய மளிகைக்கடை இல்லையென்றாலும், அவசரத்துக்கு வேண்டும் என்கிற வெற்றிலை, பாக்கு, காய்கறி, பால், தயிர், தின்பண்டம் என்று எல்லா பொருட்களையும் வைத்திருக்கும் பண்டாரத்தம்மா அந்த ஏரியாவுக்கே சிசிடிவி கேமரா தான்.

புதுசா யாராவது வந்தா, யார் வீட்டுக்கு வந்துருக்காங்கன்னு ஆரம்பிச்சு அ முதல் ஃ வரை கேட்டுவிட்டு தான், தன் கடை தாண்டி போக விடுவாள். ஆனால் நல்லவளுக்கு நல்லவள்.

ரகு ஆஃபீஸ் முடிந்து வீட்டிற்குள் வரும் போது எல்லோரும் இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக இருந்தது. ஒருநாள் ஷிஃப்ட் முடிந்து ரகு வீட்டுக்கு வரும் போது, கணேஷ் படித்துக் கொண்டிருந்தான்.

வீட்டுக்கு வந்து கால் கைகளை அலம்பிக் கொண்டு சாப்பிட வந்த ரகு, “எங்க நந்தினியையும், புவனாவையும் வீட்டுல காணல. ரெண்டு பேரும் எங்க போய்ட்டா?” என்று மைதிலியிடம் கேட்க

“இப்பதான் சித்த நேரம் வெளியே போய்ட்டு வரேன்னு போனா, வந்துடுவா. நீங்க சாப்பிட வாங்கோ” என்று சாப்பிட தட்டெடுத்து வைத்தாள் மைதிலி.

“இதென்ன புதுப்பழக்கம்? இரு வரேன்” என்று கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றவர், “நந்தினி, புவனா” என்று சத்தமாக நான்கு முறை அழைக்க

காது கேட்டவர்களாய் இரண்டு வீடு தள்ளி மதன் வீட்டிலிருந்து, “வந்துட்டோம்ப்பா…” என்று அங்கிருந்தே கத்தியவர்கள்

“சாரி மதன்… அப்பா வீட்டுக்கு வந்தாச்சு. மீதி படத்தை நாங்க அப்பறம் பார்க்க வரோம்” என்று மதனிடம் சொல்லிவிட்டு கிளம்ப

“இப்போதான் படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷமாச்சு, அதுக்குள்ள கெளம்பறீங்களே?” என்றான் மதன்.

“இருக்கட்டும். இப்ப மட்டும் நாங்க போகலன்னா, எங்கப்பா எங்கள கொன்னுடுவாரு” என்ற நந்தினி, தன் தங்கை புவனாவுடன் உடனே வீட்டுக்குச் சென்றாள்.

(தொடரும் – ஞாயிறு தோறும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இந்த வருட நிகழ்வுகள் – 2022 ஒரு பார்வை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை