2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மணி காலை 8. வேலைகளை ஓரளவிற்கு முடித்துவிட்டு, கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
எனக்காகவே காத்திருந்தது போல், “காயத்ரி, இன்னிக்கு மதியம் லக்ஷ்மி வரா. உன்கிட்ட ஏதோ பேசணுமாம். ரகுவும் சாயங்காலம் சீக்கிரம் வரேன்னு சொல்லிட்டான். நீ சீக்கிரம் வந்தா நல்லாயிருக்கும்” என்று சற்றே தயக்கத்துடன் என் மாமியார் என்னிடம் சொன்னார்.
“பார்க்கலாம்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
பஸ் ஸ்டாப் வந்து, காத்திருந்து சற்று நேரத்தில் வந்த பஸ்ஸில் ஏறி கூட்டத்தில் நெருக்கியடித்து உள்ளே நுழைந்து, தலைக்கு மேலே இருந்த கம்பியைப் பிடித்துத் தொங்கியபடியே பயணம் தொடங்கியது. இன்னும் அரைமணி நேரம் இதே தொங்கல் தான்.
கூட்ட நெரிசலிலும் என் மாமியார் சொன்னது மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. லக்ஷ்மி என் நாத்தனார், கணவரின் தங்கை. ரகு என் கணவர். நாத்தனார் லக்ஷ்மி என்னிடம் ஏதோ பேச வேண்டுமாமே…. மாமியார் தயக்கத்துடன் சொன்னதில் இருந்தே காரணம் புரிந்துபோனது எனக்கு.
வேறு என்ன பேசப் போகிறார்கள்…. மூன்று பேரும் சேர்ந்து. என்னை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லப் போகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் நான் அசரப் போவதில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு வார்த்தைகளை விட்டுவிட்டு, இப்போது சிரமம் தெரிந்தவுடன் அப்படியே கதையை மாற்றப் பார்க்கிறார்கள்.
என் நினைவுகள் அப்படியே சற்று பின்னோக்கிப் பயணித்தன. ஆறு மாதங்களுக்கு முன்பு என் நாத்தனார் லஷ்மி, அவள் மகனுக்குப் பள்ளி விடுமுறை என்பதால் ஒரு வாரம் இங்கே வந்து தங்கியிருந்தாள். நான் திருமணம் முடிந்து வந்த இந்த ஐந்து வருடங்களில், சகஜமாக என்னுடன் பேசிக் கொண்டுதான் இருந்தாள்.
என் திருமணத்திற்கு முன்பே அவள் திருமணம் முடிந்து விட்டது. நான் திருமணம் முடிந்து வரும்போது அவளுக்கு இரண்டு வயதுக் குழந்தை இருந்தான். அப்போதும், இப்போதும் அவளிடம் நான் சகஜமாகத்தான் பேசுவேன். அவளும் நார்மலாகத் தான் பேசுவாள். அவ்வப்போது ஏதாவது சுருக் என்று சொல்வதுண்டு. ஆனாலும் நான் அதைப் பெரிதுபடுத்துவதில்லை.
ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தபோது, அவள் மகன் அடம்பிடிக்கிறான் என்பதற்காக தினமும் ஏதாவது ஒரு உணவுப் பதார்த்தம் வெளியிலிருந்து ஆர்டர் செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள். வளரும் பையனுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டுமே தவிர, தினமும் இப்படி வெளியே வாங்கிய உணவு வேண்டாம் என்று ஒரு முறை சொன்னேன். ஆனாலும் லஷ்மி கேட்கவில்லை.
“அவனுக்கு அதுதான் பிடிக்கும் அண்ணி. அதையாவது ஒழுங்கா சாப்பிடறானே…. விடுங்க,” என்று சொன்னாள்.
நானும் விட்டுவிட்டேன். தினமும் இதே போல் ஆர்டர் செய்யும் உணவுகளை, கணக்கு வழக்கில்லாமல் ஆர்டர் செய்துவிட்டு, அதையும் அவன் ஒழுங்காக சாப்பிடாமல் வீணாகக் குப்பையில் போட்டுக் கொண்டிருந்தாள். என் மாமியாரும், கணவரும் இதைக் கண்டிக்கவில்லை.
உணவை இப்படிக் குப்பையில் போடுவதைப் பார்த்துக் கொண்டு அதற்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை எனக்கு.
“லக்ஷ்மி, அவன்தான் சின்னப் பையன். அவன் வயித்துக்கு எவ்வளவு வேணும்னு அவனுக்குத் தெரியாது. அவன் கேட்கறதெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு, தினமும் குப்பைல போடறியே. அளவா ஆர்டர் பண்ணலாம் இல்லையா. சாப்பிடற பொருள் யாருக்கும் உபயோகமில்லாம குப்பைத் தொட்டிக்கு போகுதே. அதை யாருக்காவுது சாப்பிடக் கொடுக்கலாமே…..”
பொத்துக் கொண்டு வந்தது லக்ஷ்மிக்கு.
“என்ன நெனச்சுட்டு இருக்கீங்க அண்ணி மனசுல? நானும் வந்ததுல இருந்தே பார்த்துட்டு இருக்கேன். குழந்தை சாப்பிடறதுல போய் கணக்கு பார்த்துட்டிருக்கீங்க. அன்னிக்கு வெளில தினமும் வேண்டாம்னு சொன்னீங்க. சரி, ஏதோ நல்ல எண்ணத்துல சொல்றீங்கன்னு நினைச்சுட்டு நானும் பெரிசா எடுத்துக்கல. இப்ப என்னடான்னா சாப்பிடற பொருள் வேஸ்டாகுது, குப்பைல போடாதேன்னு சொல்றீங்க. அவன் சின்னப் பையன், ஒரு நேரம் சாப்பிடுவான், ஒரு நேரம் ஒழுங்கா சாப்பிட மாட்டான். ஏழு வயசுப் பையனுக்கு எப்படித் தெரியும்?
அவன் சாப்பிடறதெல்லாம் கண் வைக்கறீங்க. அப்படியே காசு செலவானாலும், பொருள் வேஸ்ட் ஆனாலும் இதுல உங்களுக்கு என்ன நஷ்டம்? இந்த வீட்ல நீங்களா சம்பாதிக்கறீங்க? இது என் வீடு, என் அண்ணன் சம்பாதிக்கறான். அதுல நான் என்ன வேணா பண்ணுவேன். நியாயமா நீங்க சாப்பிடறதுக்குத் தான் நான் கணக்கு பாக்கணும். இந்த வீட்ல வெறுமனே உட்கார்ந்து தானே சாப்பிட்டுட்டு இருக்கீங்க. எந்த வருமானமும் இல்லாத உங்களுக்கும் சேர்த்து தானே எங்க அண்ணன் உழைச்சுட்டிருக்காரு. அதனால என்னை சொல்றதுக்கு உங்களுக்கு உரிமையே கிடையாது அண்ணி. நான் என்ன வேணா பண்ணலாம். பொருளைக் கொட்டுவேன், உடைப்பேன், தூக்கிப் போடுவேன். அதைக் கேட்க நீங்க யாரு?”
இப்படி படபடவென்று பொரிந்து தள்ளி விட்டாள்.
அவள் கத்துவதைக் கேட்டு அங்கே வந்த என் மாமியாரும், லக்ஷ்மி பேசுவதை அரைகுறையாகக் காதில் வாங்கிக் கொண்டு என்னை வசை பாட ஆரம்பித்தார்.
“என்ன லக்ஷ்மி, நீ வந்து தங்கியிருக்கறதுல அவ கணக்கு பாக்கறாளா? காயத்ரி, நீ யார் கேக்கறதுக்கு? நீ என்ன கொடுத்தா வச்சிருக்கே? இல்ல சம்பாதிச்சுக் கொடுக்கறியா? வீட்லதானே இருக்கே. இதுல எல்லாம் தலையிடறதுக்கு உனக்கு அதிகாரம் கிடையாது காயத்ரி. உன்னோட லிமிட் எதுவோ அதோட இருந்துக்கோ. என் பொண்ணுக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு. அவளுக்கு அப்புறம்தான் நீ. ஏதோ உன் சம்பாதியத்துல உட்கார்ந்து சாப்பிடற மாதிரி இஷ்டத்துக்குப் பேசாதே. அவ இந்த வீட்டுப் பொண்ணு. அவ மனசை நோகடிக்கக் கூடாது.”
இருவரிடமும் நான் பதில் பேசவே இல்லை. வாக்குவாதம் செய்து என் தரப்பு நியாயத்தையும், லக்ஷ்மி செய்த தவறையும் புரியவைக்க இஷ்டமில்லை. ஏனென்றால் இப்போது நான் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன்.
நான் இந்த வீட்டுல சும்மாதான் இருக்கேன் என்று என் மாமியாரும், நாத்தனாரும் சொல்லி விட்டார்கள். இதற்கு என் கணவரின் பதில் என்னவாக இருக்கும். கொஞ்சம் குழப்பத்துடன் அவர் வரும்வரை அமைதியாக இருந்தேன். அவர் உள்ளே நுழையும் போதே லக்ஷ்மி ஆரம்பித்து விட்டாள்.
“அண்ணா, என்னை இந்த நிமிஷம் கொண்டு போய் எங்க வீட்டுல விட்டுடு. இந்த வீட்டுல இனிமேல் எனக்கு உரிமை இல்லை போல. நான்தான் உரிமையா எங்க அண்ணன் வீடு, எங்க அம்மா இருக்காங்க அப்படின்னு ரொம்ப நம்பிக்கையா இருந்துட்டேன். இது இனிமேல் அண்ணி வீடு. என் குழந்தை சாப்பிடறதுக்கெல்லாம் கணக்கு பார்க்கறாங்க இந்த வீட்டுல. என் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சா இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே அனுப்ப மாட்டாரு…..”
இப்படி வண்டி வண்டியாக வார்த்தைகளைக் கொட்டி அழுது தீர்த்தாள். என்ன நடந்தது என்று என் தரப்பு நியாயத்தைக் கேட்க என் கணவராவது இருப்பார் என்ற என் நம்பிக்கையை அவர் நொறுக்கி விட்டார்.
“என்ன காயத்ரி, எதுல கணக்கு பார்க்கறதுன்னு இல்லையா உனக்கு? லக்ஷ்மியும், குழந்தையும் என்ன வேணா செய்யலாம், எப்படி வேணா இருக்கலாம். இந்த வீட்டுல அவங்களுக்குத் தான் முன்னுரிமை. சம்பாதிக்கற நானே எதுவும் சொல்றதில்ல. உனக்கு என்ன இதுல கஷ்டம்? குடும்பச் செலவுக்கு நீயும் சம்பாதிச்சுக் கொடுக்கறியா என்ன? இல்லையில்ல…. மனுசன் வேலைக்குப் போய்ட்டு ஓய்ஞ்சுபோய் வந்தா நிம்மதியா இருக்க முடியுதா…. ச்சே…..”
“நல்லா சொன்னடா ரகு. பாவம், நீ டயர்டா இருப்பே…. வா காஃபி குடி வா. ஒரு குழந்தையைப் பெத்து வளர்த்திருந்தா தானே, குழந்தை சாப்பிடறதை எல்லாம் கணக்கு பார்க்கக் கூடாதுன்னு புரியும்.”
அமிலமாய் வார்த்தைகளைக் கொட்டி விட்டார்கள். பதில் சொல்லவோ, விளக்கம் சொல்லவோ நான் விரும்பவில்லை. தேவையுமில்லை.
என் மாமியாரோ, நாத்தனாரோ நான் சம்பாதிக்கவில்லை என்று சொன்னது கூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. கணவரும் அதைச் சொன்னதும் மனதில் அழுத்த ஆரம்பித்தது.
யாரிடமும் எதுவும் சொல்லாமல் அக்கம்பக்கம் விசாரித்து, சற்று தள்ளியிருந்த ஒரு ஸ்கூலில் வரலாற்று ஆசிரியர் வேலை கிடைத்தது. பின்னே…. வேலைக்குப் போகக் கூடத் தகுதியில்லாமல் என்னை வளர்த்து அனுப்பவில்லை என் பெற்றோர். எம்.ஏ வரலாறு படித்துள்ளேன். வேலைக்குப் போக வேண்டிய அவசியமில்லை என்பதால் போகவில்லை….. அவ்வளவுதான்.
பேச்சு கேட்ட ஒரே வாரத்தில் வேலைக்குக் கிளம்பினேன். முந்தைய நாள் என் கணவரிடமும், மாமியாரிடமும் விஷயத்தைச் சொன்னேன். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் முகமே காட்டிக் கொடுத்தது.
பரவாயில்லை…. நான் வருத்தப்பட்டதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையே. நான் மட்டும் ஏன் கவலைப்பட வேண்டும்? அன்று ஆரம்பித்தது இந்தப் பயணம். தினமும் காலையிலும், மாலையிலும் பஸ் கூட்டத்தில் கம்பியைப் பிடித்தபடியே பயணம். மாணவ, மாணவிகளுக்குப் பயிற்றுவித்தல் என கடந்த ஆறு மாதங்களாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் வீட்டில் நிறைய மாற்றங்கள். எல்லா வேலைகளையும் ஒற்றை ஆளாக நான் செய்து கொண்டிருந்தேன். மாமியாருக்கு சுடச்சுட கிடைத்துக் கொண்டிருந்த சாப்பாடு இப்போது இல்லை. பார்த்துப் பார்த்து விதவிதமாகக் கணவருக்குச் செய்து கொடுத்துக் கொண்டிருந்த பதார்த்தங்கள் இப்போது இல்லை.
வீட்டு வேலைகளுக்கு ஆள் வைக்க வேண்டிய கட்டாயம். வீடு பெருக்க, பாத்திரம் கழுவ என்று நான் செய்த வேலைகளுக்கு இப்போது சம்பளத்திற்கு ஆள் வைத்தாயிற்று. கணவரின் உடைகளை இஸ்திரி போட இப்போது எனக்கு நேரமில்லை. எனவே வெளியே இஸ்திரி போட வேண்டிய சூழல்.
வீட்டைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள நான் இருந்த போது, கோவில், குளம் என்று சுற்றிக் கொண்டிருந்த மாமியாருக்கு இப்போது நினைத்த நேரத்தில் வெளியே போக முடியவில்லை.
எப்போது வீட்டிற்கு வந்தாலும் உட்கார வைத்து சாப்பாடு போட்டு, எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த லக்ஷ்மி, இப்போது அப்படி சொகுசாக இருக்க முடியவில்லை.
நான் சம்பாதிக்கவில்லை என்றாலும் எவ்வளவு செலவுகளைக் கட்டுப்படுத்தி, வீட்டில் என்னென்ன வேலைகள் செய்து எவ்வளவு மிச்சம் பிடித்துக் கொடுத்திருக்கிறேன் என்பதை மூன்று பேரும் புரிந்து கொண்டார்கள். என் கணவர் என்னிடம் இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தார்.
“காயத்ரி, இப்ப எதுக்கு இவ்வளவு சிரமப்பட்டு வேலைக்குப் போறே? நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சாலும் இப்போ வீடு வீடா இல்லை. அன்னிக்கு ஏதோ கோவத்துல தெரியாம பேசிட்டேன். அதுக்காக இப்படி வீம்பு பிடிச்சா எப்படி?”
“உங்க அம்மாவும், தங்கச்சியும் வேணா கோவத்துல பேசலாம். என்னைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த நீங்களே ஏதோ என்னை தண்டசோறு மாதிரி சொல்றீங்க. வீட்டுல இவ்ளோ வேலைகள் நான் பண்ணிட்டு இருந்தேன்….. சம்பளம் இல்லாத வேலைக்காரி மாதிரி. அந்த அருமை உங்களுக்குத் தெரியணும் இல்ல. ஏன்…. என்னை மாதிரியே தானே உங்க தங்கச்சியும் வேலைக்குப் போகல, உங்க அம்மாவும் வேலைக்குப் போகல. அது எப்படி என்னை மட்டும் சொல்லிக் காட்ட உங்களுக்கெல்லாம் மனசு வந்தது.
என்னை சொன்ன மாதிரியே உங்க தங்கச்சியை அவ வாழப் போன வீட்ல சொன்னா, உங்களுக்கு மனசு வலிக்குமா, வலிக்காதா? அதைக் கேட்டுட்டு உங்களுக்குக் கோவம் வராதா? உங்க அம்மா வருத்தப்பட மாட்டாங்களா? வார்த்தைகளை அமிலம் மாதிரி கொட்டின பிறகு அள்ள முடியாது. அதே மாதிரி அந்த அமிலம் நம்ம மனசுல ஏற்படுத்தின காயமும், தழும்பும் ஆறவே ஆறாது. இப்போ நான் சம்பாதிக்கறதைவிட அதிக வேலைகளை வீட்டுல செஞ்சுட்டிருந்தேன். இப்போ அந்த வேலைகள் எல்லாம் சம்பளம் கொடுத்து மத்தவங்களை செய்ய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். இப்பவாவது உங்களுக்குப் புரிஞ்சுதே. ஆனா என் மனசுல ஆன காயம் காயம் தான். அவ்வளவு சீக்கிரம் ஆறாது.”
என் மாமியாரும் என்னிடம் அரசல்புரசலாகச் சொன்னார். நான் பிடிகொடுத்துப் பேசவே இல்லை. இப்போது மீண்டும் இதைப் பற்றி பேசத்தான் என்று மாலை சீக்கிரம் வரச் சொல்லியிருக்கிறார் என் மாமியார்.
நான் வேலையை விடுவதாக இல்லை. இவ்வளவெல்லாம் சொன்னபிறகு வெறுமனே அந்த வீட்டில் சாப்பிட எனக்கே உறுத்தலாகத்தான் இருக்கிறது. வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் ஆறும் வரையாவது நான் இந்த வேலையைத் தொடரத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
உண்மை தான் மா! நிறைய வீடுகளில் வீட்டுக்கு வாழ வந்த மருமகளை மனம் புண்படும்படித் தான் பேசுகிறார்கள். மகளுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயம் என்று தான் பேசுகிறார்கள். இந்த நிலை மாறினால் தான் குடும்பம் நன்றாக இருக்கும். அருமையான கதை மா! பாராட்டுக்கள்!!
மனம் நிறைந்த நன்றிங்க மா
அருமையான நல்ல பதிவு சகோதரி
மனமார்ந்த நன்றிங்க சகோதரி
தீயினாற் சுட்ட புண்..
மிக்க நன்றி
அருமையான கதை. எதார்த்தத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
மகிழ்வான நன்றி