in ,

வாங்கி வந்த வரம் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எங்க உன் பையன் தண்டச்சோறு, வந்துட்டானா, சோத்தை வடிச்சு கொட்டு” என ஆங்காரத்துடன் கத்தினார் மாணிக்கம்.

“என்னங்க அவன் நம்ம பிள்ளைங்க, ஏன் அவனை இப்படி கரிச்சுக் கொட்டுறீங்க. அவனே வேண்டா வெறுப்பா தான் சாப்பிட வரான். எப்ப சாப்பிட உட்கார்ந்தாலும் இப்படி கத்தினீங்கன்னா அவன் என்ன தான் செய்வான் சொல்லுங்க” என்றாள் மாணிக்கத்தின் மனைவி தங்கம் ஆதங்கத்துடன்.

“ஒவ்வொரு வீட்டில போய் பாரு, புள்ளைங்கெல்லாம் படிச்சு மெடல் வாங்கி காலேஜ் முடிக்குங்குள்ள வேலையை வாங்கிட்டுத்தான் வெளிய வரானுங்க. நீ பெத்த ரத்தினம் படிப்பை முடிச்சு இரண்டு வருஷமாகியும் இன்னும் வீட்டில் தண்டச்சோத்தை தின்னுக்கிட்டு இருக்கான்” திரும்பவும் எகிறினார் மாணிக்கம்.

இத்தனை திட்டுகளையும் வாங்கிக் கொண்டு அவர் மகன் முரளி சாப்பாட்டு தட்டின் முன் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தான். தங்கத்தின் பெற்ற வயிறு அள்ளிப் பிடிங்கியது.

“உங்க ஃபிரண்ட் கோபால்சாமி மகனைத் தானே சொல்றீங்க, காலேஜ் முடிக்குங்குள்ள வேலை வாங்கிட்டான்னு, நம்ம பையனுக்கும் நல்ல வேலை கிடைக்குங்க. அவனும் முயற்சி செஞ்சுட்டு தான் இருக்கான், நீங்க போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க” என்ற தங்கத்திடம்

“ஆமா கொஞ்சு உன் பையனை நல்லா வருவாண்டி” என்று கோபத்துடன் கூறிய படி ஹால் சோபாவில் வந்து அமர்ந்தார் மாணிக்கம். 

அவர் மனம் நண்பர் கோபால்சாமி தன் மகனைக் குறித்து பெருமையடித்துக் கொண்டதை நினைத்தது. “ம்… அது புள்ளை இவனை கடன் வாங்கி பி. இ. படிக்க வைச்சா அறுபது பிரசன்ட் மார்க் கூட வாங்கலை எவன் வேலை தருவான்” மனம் கோபத்தில் கனன்றது.

“தம்பி, சாப்பிடய்யா அப்பா உன் நல்லதுக்குத்தானே சொல்றாரு, நீ சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்க சின்ன வேலை பெரிய வேலைன்னு பார்க்காத” மகனை சமாதானப் படுத்தினாள் தங்கம். 

முரளியோ “ஏம்மா நான் எதுவும் முயற்சி செய்யலைன்னா நினைக்கிற நாளைக்கு கூட என் ஃபிரண்டோட அண்ணா பேங்க்ல மேனேஜரா இருக்காரு என்னை வந்து பார்க்க சொல்லியிருக்காரு” என வருத்தத்துடன் கூறியவன் “பெரிய வேலை சின்ன வேலைன்னெல்லாம் நான் பார்க்கலம்மா. ஆனா சின்ன வேலைக்கு இவ்வளவு படிப்பு வேண்டாங்கறாங்க. நானா அப்பாவை கடன் வாங்கி என்னை பி.இ. படிக்க வைக்க சொன்னேன். நான்தான் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு படிக்கறேன்னு சொன்னேன் இவர் கேட்கலை அப்புறம் மார்க் வாங்கலைன்னு என்னை குறை சொன்னா நான் என்ன செய்யறது” என சற்று உரக்கவே பேசினான்.

மகன் தன் அம்மாவிடம் அங்கலாய்ப்பதைக் கேட்டு, “நம்மால தான் படிக்க முடியலை இவனாவது படிச்சு நல்ல வேலைக்கு வந்து கை நிறைய சம்பாதிக்கணும்னு ஆசை பட்டேன். இது தப்பா” என வாய் விட்டு புலம்பிய மாணிக்கத்தின் மனதில் “என் மகனுக்கு கூடிய சீக்கிரம் விசா வந்துடும். அவன் அமெரிக்கா போயிடுவான்ப்பா” நண்பர் கோபால்சாமியின் குரல் கேட்டது. மனம் புழுங்கியது. 

மாலை வீட்டினுள் ஸ்வீட் பாக்ஸுடன் நுழைந்த முரளி “அம்மா எனக்கு வேலை கிடைச்சுடுச்சும்மா” என தங்கத்திடம் ஸ்வீட்டைக் கொடுத்து அவளை வணங்கினான்.

“நல்லாயிருய்யா” என மகனை வாழ்த்தியவள் “தங்கச்சி அப்பாவுக்கெல்லாம் ஸ்வீட் கொடுப்பா” என பாக்ஸை அவனிடமே கொடுத்தாள். தன் தங்கைக்கு ஸ்வீட் கொடுத்தவன் உள் அறையில் அமர்ந்திருந்த மாணிக்கத்திடமும் ஸ்வீட் பாக்ஸை நீட்டினான்.

“என்ன வேலை எங்கே என்ன சம்பளம்” என்ற மாணிக்கத்திடம் அந்த பிரைவேட் பேங்க்கின் பெயரைச் சொல்லி “தெரிஞ்சவங்ககிட்ட டெபாசிட் வாங்கணும் ஆபீஸில் ஹையர் ஆபீஸர்களுக்கு உதவணும்” என்றான் முரளி.

“மொத்தத்தில் பியூன் வேலைன்னு சொல்லு. இதுக்கு என்ன சம்பளம் கொடுக்கப் போறாங்க ஐயாயிரமா பத்தாயிரமா” என்றார் மாணிக்கம் இளக்காரமாக.

முரளியோ “சம்பளம் பத்தியெல்லாம் ஒண்ணும் சொல்லலைப்பா” என்றான் மெல்லிய குரலில்.

“ஓ அப்ப நீ அங்கே எடுபிடியா” என்று மேலும் பேச வந்த மாணிக்கத்தை தடுத்து “பேங்க்ல ஏதோ ஒரு வேலை உள்ள நுழைஞ்சுட்டான் இனி எப்படியோ தன்னை ஸ்திரம் பண்ணிக்குவான். நீங்க அவனை டிஸ்கரேஜ் பண்ணாதீங்க” என்றாள் தங்கம் சற்று கடுமையாக. 

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு திறந்த பேங்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஸர்வர் பிராப்ளம் வேறு ஆனதால் வேலைகள் அனைத்தும் முடங்கி ஸ்தம்பித்தது. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஆபீஸர்கள் என்னென்னவோ முயற்சித்தும் பிராப்ளம் சரியாகவில்லை.

முரளி மேனேஜரிடம் “அண்ணா நான் வேணா ட்ரை பண்ணி பார்க்க வா” என்று கேட்டான். மேனேஜரும் உனக்கு கம்ப்யூட்டரை ஹேண்டில் பண்ணத் தெரியுமா என ஆச்சரியமாக கேட்டு “சரி பாரு முரளி” என்றார். 

முரளியால் அரை மணி நேரத்தில் அந்த பிராப்ளம் சரி செய்யப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் அவனை பாராட்டினர். அன்று மாலை முரளியை அழைத்த மேனேஜர் கம்ப்யூட்டரில் அவனுக்கு இருந்த அறிவுத்திறனையும் அதை இயக்குவதில் அவனுக்கு இருந்த ஆர்வத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டார். 

காலச்சக்கரம் சுழன்றதில் அனைவர் வாழ்விலும் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்படுகிறது.

முரளி கட்டிய புது பங்களாவிற்கு குடி வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. மாணிக்கத்துக்கு மகனை நினைத்து வந்த பெருமையும் வியப்பும் மனதை குளிர வைத்தது. எப்படிப்பட்ட அருமையான பையன் இவனை நாம எப்படியெல்லாம் திட்டியிருக்கோம் என நினைத்ததில் மனம் இளகி கண்களில் நீர் கசிந்தது.

அதுவும் போன வாரம் நண்பர் கோபால்சாமியை பல வருடங்கள் கழித்து சந்தித்த பிறகு அது இன்னும் அதிகமாகியது. 

அன்று வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்ற மாணிக்கம் அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்த கோபால்சாமியைப் பார்த்ததும் ஆவலோடு அவரை நலம் விசாரிக்க அவர் அருகில் சென்று அமர்ந்தார்.

வயதுக்கு மீறிய அவரது கிழத் தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்தவர் “என்ன ஆச்சு கோபால் நல்லாயிருக்கயா ரொம்ப வயசான மாதிரி ஆகிட்டயே” என்றார் மாணிக்கம் மனம் தாங்காமல்.

“வயசாகலையா என்ன நமக்கு, நீ எப்படி இருக்கப்பா” என்றவர் “எல்லாம் கால சூழ்நிலை, நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது” விரக்தியாகப் பேசினார் கோபால்சாமி.

“மகன் அமெரிக்காவில் வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கிறான், இன்னும் எதுக்கு கவலைப்படறே” என்று கேட்ட மாணிக்கத்திடம்

“மகனை அமெரிக்காவுக்கே தாரை வார்த்துட்டேன்பா நான் அவன் இங்கு வந்து ஏழு வருஷமாயிடுச்சு. ஒரே மகனை கண்ணுல பார்க்க முடியலையேங்கற மனக்குறையே எனக்கும் என் மனைவிக்கும் பெரும் வேதனையாயிருக்கு” என்றார் கோபால்சாமி கண்களில் நீருடன்.

“ஏன் நீங்க இரண்டு பேரும் போய் பார்த்துட்டு வரவேண்டியது தானே இப்பதான் எல்லாரும் யூஎஸ் போறாங்களே” என்ற மாணிக்கத்திடம்

“அட நீ வேற அவன் அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டிலாகிட்டான்பா எங்க நினைப்பு கூட வருதில்ல அவனுக்கு” என்றார் கோபால்சாமி சலிப்புடன்.

“பணமாவது அனுப்பறானா” என்று கேட்டார் மாணிக்கம்.

“அனுப்பறான் அது எங்க மருத்துவ செலவுக்கு ஆகிற மாதிரி இருக்கு. அமெரிக்கா போன புதுசுல இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை இங்கு வந்தான். அது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்போ மாசம் ஒருக்க போனில் பேசறதோட சரி. நாங்க இருக்கோமா செத்துட்டோமான்னு தெரிஞ்சுக்க போல” வெறுப்புடன் வார்த்தைகளை அனலாக கொட்டினார் கோபால்சாமி.

நண்பரை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் அவர் கைகளைப் பிடித்த படி அமர்ந்திருந்தார் மாணிக்கம்.

அதன் பின் அவரிடம் “கோபால் என் வீடு பக்கம் தான் அங்கே வந்துட்டு போ, என் பேரன் பேத்திங்க இருக்காங்க உனக்கு ஆறுதலாயிருக்கும்” என்றவரிடம் “இன்னொரு நாள் நான் என் மனைவியோட உன் வீட்டுக்கு வரேன், நீ அட்ரஸ் கொடு” என வாங்கிக் கொண்டு கிளம்பினார் கோபால்சாமி. 

மாணிக்கம் கண்ணோர நீரை துடைத்துக் கொண்டார். என் மகன் முரளியின் எந்த புது முயற்சிக்கும் நான் அவனை உற்சாகப் படுத்தவேயில்லை. அவனுக்கு பிடிக்காததை படி படின்னு திணிச்சேன். நல்ல காலம் பேங்க் மேனேஜர் உதவியதால அவனும் கம்ப்யூட்டர்ல நிறைய படிச்சு ஓயாம உழைச்சு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி தொடங்கி எப்படியோ படிப்படியாக முன்னேறி இப்போ பெரிய தொழிலதிபர் ஆகிட்டான்.

அவனை நம்பி ஐம்பது குடும்பங்கள் இருக்கு.தங்கச்சிக்கு விமர்சையா திருமணம் செய்து வைச்சான். எங்க இரண்டு பேரையும் கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துக்கறான். இந்த ஒப்புமையில் அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது.

அவரிடம் ஏதோ கேட்க அங்கு வந்த தங்கம் அவர் முகத்தைப் பார்த்து, “என்ன ஒரே யோசனையா இருக்கீங்க” என்று கேட்டாள்.

“தங்கம், கோபால்சாமியை சந்திச்சுட்டு வந்ததுக்குப் பிறகு தான், நம்ப பையன் முரளி எவ்வளவு நல்லவன்னு எனக்கு தெரியுது.அவ்வளவு தூரம் செலவு செய்து மகனை படிக்க வைச்சு பெருமையா அமெரிக்கா அனுப்பி வைச்சதுக்கு அவன் அவரை ஏமாத்தி தவிக்க விட்டுட்டான். கோபால் படற வேதனையை என்னால பார்க்க முடியலை” என்றார் மாணிக்கம் வருத்தத்துடன். 

“இங்க பாருங்க இப்பவும் சொல்றேன் யாரையும் யார் கூடவும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாதுங்க ஏன்னா அவங்க நம்மை விட உயர்ந்தா நமக்கு கொஞ்சம் பொறாமையும் நம்மை விட தாழ்ந்து போனா நமக்கு ஒரு சின்ன சந்தோஷமும் வரும். அம்மா அப்பாவை கவனிக்காம தவிக்க விடறவங்க அமெரிக்கா தான் போகணுமா என்ன இங்கேயே எத்தனை பேரு பெத்தவங்க கிட்டேயிருந்து சொத்தெல்லாம் பிடிங்கிட்டு அவங்களை நடுத்தெருவில விடறாங்க. இவங்களுக்கு இதுதான்னு இருக்குது. இதெல்லாம் நாம் வாங்கி வந்த வரங்க” என்றாள் தங்கம் இயல்பாக.

இந்த பொம்பளைங்க தான் எல்லா விஷயத்தையும் எவ்வளவு சுலபமா ஏத்துக்குறாங்க என அவளை வியந்து நோக்கினார் மாணிக்கம். 

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீதும் நன்றும் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

    நேர்மை (சிறுகதை) – M.மனோஜ் குமார்