2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
காலையில் எழுந்ததும் ஒருமுறை மாடிப்போர்ஷனை போய் பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை சாத்திவிட்டு மாடிக்கு கிளம்பிபோனாள் சுமதி. ‘ நேத்து வந்து பார்த்துட்டுப் போன ஃபேமிலியே வந்துட்டா ரொம்ப நல்லாயிருக்கும்… ‘ என்று நினைத்தபடியே நடந்தாள்.
முன்பு தங்கியிருந்தவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் புது வீடு கட்டிக்கொண்டு காலி செய்திருந்தார்கள். உடனே வீட்டை வெள்ளை அடித்து, கதவு ஜன்னல்களுக்கு பெயின்ட் அடித்து வீட்டை தயார் செய்துவிட்டிருந்தாள் சுமதி. வந்து பார்ப்பவர்களுக்கு வீடு பளிச் என்று இருந்தால்தானே பிடிக்கும்.
எல்லோருக்கும் தெரியும்படி, ‘ மேல் மாடி வாடகைக்கு விடப்படும் ‘ என்ற போர்டு ஒன்றையும் தொங்கவிட்டிருந்தாள் சுமதி..
கடைசியாக குடியிருந்தவர்கள் பதினைந்தாயிரம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அக்கம்பக்கத்தில் இரண்டு பெட்ரூம் வீடு இப்போதெல்லாம் பதினெட்டு அல்லது பத்தொன்பது வரை போகிறது. முதலில் இருந்தவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் வாடகையை குறைத்துக் கொடுத்துவிட்டு பிறகு ஏற்றமுடியாமல் தவித்தாள். அவர்கள் காலி செய்யும்போது பதினைந்தாயிரம்தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் இப்போது வாடகையை இருபதினாயிரம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள் சுமதி.
நாற்பத்தைந்து நாட்களில் இருபது பேராவது வந்து பார்த்துவிட்டு போய்விட்டிருப்பார்கள். ஆனால் யாரும் பதினேழுக்கு மேல் ஏறவேயில்ல்லை. சுமதியும் இருபதுக்கு கீழ் இறங்கவே இல்லை.
நேற்று வந்தவர்கள், ஒரு சிறு குடும்பம். கணவன், மனைவி, பிளஸ் டூ படிக்கும் மகன், எட்டாவது படிக்கும் மகள். வீட்டை சுற்றிப்பார்த்துவிட்டு, ‘ வீடு ரொம்ப அம்சமா இருக்குங்க… எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு… வாடகை இருபதினாயிரம் சொன்னீங்க இல்லே… எங்களுக்கு ஓ.கே.ங்க… ‘ என்றாள். ஏற்கனவே புரோக்கர் சொல்லியிருந்தான், அவர்கள் இருவருமே வேலைக்குப் போகிறவர்கள் என்று. அதனால்தானோ என்னவோ இருபதினாயிரம் என்றதுமே பேரம் பேசாமல் ஒப்புக் கொண்டார்கள் என்று நினைத்துக் கொண்டாள் சுமதி.
எத்தனையோ பேர் வந்து பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கிகொண்டு போயிருக்க, முதல் முதலாக இருபதினாயிரத்து இவர்கள் ஒப்புக் கொள்ளவும், சுமதிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
‘ வீட்டை இப்போ எப்படி பளபளான்னு கொடுக்கறேனோ, அதேமாதிரி நீங்க வீட்டை காலிபண்ணும்போது எனக்கு திருப்பித் தரனும்… ‘ என்று சொல்லி வைத்தாள் சுமதி, முதல் கண்டிஷனாக..
‘ ஏங்க… நாங்க குடிவந்துட்டா அது எங்கவீடுங்க… எங்க வீட்டை எப்படி நீட்டா வெச்சுக்கனும்னு எங்களுக்குத் தெரியாதா… அதெலாம் கவலைப் படாதீங்க… சுத்தமா வெச்சுக்குவோம்… ’ என்றாள் அந்தப் பெண் சிரித்தபடி. சுமதிக்கும் பெருத்த சந்தோஷம். பிறகு ‘ சரிங்க… அட்வான்ஸ் எவ்வளவு…. ‘ என்று அந்தப் பெண் கேட்டதும், ‘ நான் என்ன கேட்கப் போறேன்… ஊர்லே உள்ளதுதான்… பத்து மாசத்து வாடகையை அட்வான்ஸா கொடுத்துடுங்க… ‘ என்றுவிட்டு அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள் சுமதி. அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்ட பின், ‘ நோ பிராப்ளம்ங்க… கொடுத்துடலாம், நாங்களே வந்துடறோம்… ‘ என்றாள் அந்தப் பெண். சுமதிக்கு மேலும் சந்தோஷம். உடனே அவள், ‘ சரி வாங்க கீழே போகலாம்… டீ போடறேன், குடிச்சிக்கிட்டே பேசலாம்… ‘ என்று அவர்களை தங்களது போர்ஷனுக்கு விடாமல் இழுத்துக்கொண்டு போனாள்.
இந்தத் தடவை வாடகையும் ஐயாயிரம் கூடுதலாகக் கிடைக்கப் போகிறது. அத்தோடு அட்வான்ஸும் ஒன்றரை லட்சம் கூடுதலாகக் கிடைக்கப் போகிறது என்பதால், ஜனனியின் இன்ஜினீயரிங் அட்மிஷனுக்கு பிரச்சினை இல்லை என்று சந்தோபட்டுக்கொண்டே டீ போட்டாள் சுமதி..
ஒரு மணிநேரத்துக்கு முன்பே புரோக்கர் ஒரு குடும்பம் வீடு பார்க்க வருவார்கள் என்று சொல்லிவிட்டு தானும் பின்னால் வந்து சேர்ந்துக்கொள்வதாக சொல்லியிருந்தான். அவனுக்கும் சேர்த்து டீயை கலக்கினாள் சுமதி. அதற்குள் அவளது கணவன் சபேஷனும் வந்து சேர்ந்துவிட்டார்.
மிகவும் சந்தோசத்துடன் வீடு பார்க்க வந்தவர்களை அவரிடம் காட்டி, ‘ ஏங்க… இவங்க வீடு பார்க்க வந்திருக்காங்க… வீட்டைக் காட்டிட்டேன்… அவங்களுக்கு வீடு ரொம்பவே பிடிச்சுப் போச்சுங்க… ‘ என்றாள்.
அவர்களை கணவனுக்கும், அவர்களுக்கு கணவனையும் அறிமுகப் படுத்திவிட்டு எல்லோருக்கும் டீ கொடுத்தாள். அந்தப் பெண் தன் கணவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சுமதி ஆர்வத்துடன், ‘ வீடு பத்தியா… எதுவானாலும் என்கிட்டயே கேளுங்க சொல்றேன்… ‘ என்றாள்.
அவளும், ‘ இல்லே… முன்னே இருந்தவங்க… வீட்டை ஏன் காலி பண்ணினாங்கன்னு தெரியலைன்னு இவர் கேட்டார்… ‘ என்று இழுத்தாள்.
மீண்டும் முகம் மலர, ‘ அவங்க இங்கே வந்த யோகம், மூனே வருஷத்துல ஒரு இடம் வாங்கி வீட்டைக்கிட்டு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் வீடு காலிபண்ணிட்டு போனாங்க… எங்க வீட்டு ராசி அப்படி… ‘ என்ற சுமதி மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்து தயங்கினாள். பிறகு சொன்னாள். ‘ என்ன பிரச்சினைனா… வீட்டை நல்லா வச்சுக்கலை அவங்க… அதான் கஷ்டமா இருந்துச்சு. பாத்ரூமெல்லாம் ஆஸிட்டை ஊத்தி, பொரிய வச்சுட்டாங்க… ஒட்டடை அடிக்காமவிட்டு ஃபேன் எல்லாத்துலயும் பத்தை பத்தையாய் தூசி… கிச்சனை பிசுபிசுப்பாக்கிட்டாங்க… சேர் மேஜைகளை டர்டர்னு இழுத்து சுவரெல்லாம் டேமேஜ்… ரெண்டு வாலுப் புள்ளைங்க இருக்கும்… ஒரு சின்ன சைக்கிள் வச்சிக்கிட்டு மடேர் மடேர்னு சுவத்துல மோதும்ங்க… பயங்கர டேமேஜ் போங்க… மேல இருந்து பேப்பர்களை கிழிச்சு கீழே வீசும்ங்க… அவங்களாலேயே பெயின்ட் செலவு கொஞ்சம் இழுத்துடுச்சு… ‘
அவளது தோளை மறுபடியும் மெல்ல அழுத்தினார் சபேஷன். அந்த நேரம் பார்த்து புரோக்கர் உள்ளே நுழைய பேச்சை நிறுத்திவிட்டு புரோக்கருக்கு டீ கொண்டு வரப் போனாள் அவள்.
புரோக்கர் சுமதியின் நம்பரை வந்தவர்களிடம் சொல்லி, ‘ நோட் பண்ணிக்கங்க… கூகிள் பேல டோக்கன் அட்வான்ஸ் போட்டுடுங்க…. அஞ்சாயிரம் போட்டுடறீங்களா…‘ என்றுவிட்டு, சுமதி பக்கம் திரும்பி… ‘ அம்மா ஒரு ஐயாயிரம் போடச் சொல்றேம்மா… அக்ரிமெண்ட் போடறப்போ… முழு அட்வான்ஸும் கொடுத்துடுவாங்க… சரிங்களா….‘ என்றான்.
சுமதியோ தன் கணவனின் நம்பரைக் கொடுத்துவிட்டாள். அதை வாங்கிக்கொண்டதும் கிளம்பிவிட்டார்கள் அவர்கள். வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள் சுமதி. உடனேயே வெளியே தொங்க விட்டிருந்த வாடகை போர்டை கழற்றி வீசினாள்.
xxxxxxxx
அவர்களுடன் சேர்ந்து அப்போது கிளம்பிப் போன புரோக்கர்தான். இன்றைக்கு காலை வரை கூப்பிடவேயில்லை… கொஞ்சம் கவலையுடன் கதவை தாழ் போட்டுவிட்டு படிகளில் இறங்கியவள் அப்படியே கணவனுக்கு போன் போட்டாள். ‘ ஏங்க… ஐயாயிரம் டோக்கன் அட்வான்ஸ் வந்துடுச்சா, பாருங்க… ’ என்றாள். ‘ இன்னும் வரலை சுமி… ‘ என்றார். .
‘ ஏன் இவர்கள் இன்னும் டோக்கன் அட்வான்ஸ் போடலை… ‘ என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டு உடனே புரோக்கருக்கும் போன் போட்டாள். அதே நேரம் சபேஷனும் வந்துவிட்டார்.
‘ அம்மா… நேத்திக்கு சரின்னுதாம்மா சொல்லிட்டிருந்தாங்க… இன்னிக்கு காலையில கூப்பிட்டு வேற வீடு காட்டச் சொல்றாங்க… ’ என்றான் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல். ஆனால் சுமதிதான் திடுக்கிட்டுப்போனாள். உடனே, ‘ ஏம்பா… என்னாச்சு… ’ என்றாள்.
‘ நீங்க முன்னால குடியிருந்தவங்களைப் பத்தி சொல்லிட்டிருந்தீங்கல்லியா… அது அவங்களுக்குப் பிடிக்கலை போல… பின்னால நம்மளைப் பத்தியும் அப்படித்தானே சொல்லுவாங்க… நம்மக்கிட்டேயும் ரெண்டு பிள்ளைகள் இருக்கு… அந்த வீடு வேண்டாம்னுட்டாங்க… ‘ என்றான்.
உதட்டோரம் சிரித்தபடி சொன்னார் சபேஷன்… ‘ நீ முன்னாடி குடியிருந்தவங்களைப் பத்தி அப்படி அதுவும் அவங்க முன்னாடி சொல்லியிருக்கக்கூடாது சுமதி. அதான் உடனே உன் தோளை அழுத்தி நிறுத்திக்கோனு ஜாடை செஞ்சேன்… நீ கவனிக்கலை. பேசிக்கிட்டே போனே. உன் வாய்த்துடுக்கை முதல்ல குறை… ‘ என்றார்.
எழுந்து ‘ வாடகைக்கு விடப்படும் ‘ போர்டை தேடியவாறே, ‘ இருபதினாயிரத்துக்கு சம்மதிச்சிட்டா அவங்க பெரிய இவங்களா… இவங்க என்ன வீடு வேண்டாங்கறது… நான் சொல்றேன்… இருபத்தன்ஜாயிரமே கொடுத்தாலும் அவங்களுக்கு நான் வீடு தர்றதா இல்லை… இவங்க வரலைனா வீடு சும்மாவே கிடந்துடுமா… அப்படியே கிடந்தாலும் பரவாயில்லை… இவங்களுக்கு நான் வீடு தரமாட்டேன்… ‘ என்று முனுமுனுத்தாள். போர்டு கிடைத்ததும் அதை எடுத்து மாட்டியபடி, ‘ பாருங்க… கண்டிப்பா வேற ஆளுங்க கிடைப்பாங்க…’ என்றாள்.
‘ நீ திருந்தவே மாட்டே… ‘ என்று தலையிலடித்துக்கொண்டார் சபேஷன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அந்தம்மா பேசினது முழுக்கவே தப்புன்னு சொல்ல முடியாது..வாடகைக்கு வருபவர்களுக்கும் பொறுப்பு உண்டு..நாளை அவர்களே சொந்த வீடு கட்டி வாடகைக்கும் விடலாம்..அவரவர் தம் பொறுபௌபை உணர்ந்து செயல்படுவது நல்லது..அதே சமயம் இந்தக்குறைகளை அவர்கள் இருக்கும்போது நாசூக்காகச்சொல்லி மாற்ற முயற்சித்திருக்கலாம்..அவர்கள் காலி செய்து போனபிறகு அடுத்தவரிடம் சொல்வது அவ்வளவு நாகரிகமானதல்ல.
ஒரு முக்கியப்பிரசினையை கருவாக எடுத்துள்ளார் வேலு அவர்கள்..