எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஒரு மனுஷனுக்குக் கெட்ட நேரம்னு ஆரம்பிச்சிடுச்சுன்னா அது அவனை எப்படி சீரழிக்கும் என்பதை இப்பத்தான் அனுபவிச்சு புரிஞ்சுகிட்டேன். எனக்கு கெட்ட நேரம் என்னோட நண்பன் ராஜேந்திரன் ரூபத்துல வந்தது.
அன்னைக்கு சாயந்திரம் வழக்கம் போல பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பத்த வச்சுட்டுத் திரும்பிய போது ராஜேந்திரன் வந்தான்.
“டேய் தீனா…இப்படி பெட்டிக்கடைல நின்னு தம்மடிக்கறதை விட்டுட்டு… நீ ஏன் உன்னோட ஈவினிங் டைமை யூஸ்ஃபுல்லா செலவு பண்ண கூடாது?” கேட்டான்.
“யூஸ் ஃபுல்லா…ன்னா எப்படி?”.
“இப்ப நான் எங்க போயிட்டு வர்றேன் தெரியுமா?… கராத்தே கிளாஸுக்கு!… இன்னும் மூணே மாசத்துல பிளாக் பெல்ட் வாங்கப் போறேன்!” என்றான்.
எனக்கு கொஞ்சம் பொறாமையாய்த்தான் இருந்தது.
“நான் உன்னை விடக் குள்ளம்… நானே இவ்வளவு சீக்கிரத்துல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன்னா… நீ என்னைய விட உயரமானவன்…. “கிக்”கெல்லாம் சூப்பரா வரும் உனக்கு!… என்னைய விடச் சீக்கிரமாகவே பிளாக் பெல்ட் வாங்கிடலாம்!… ஆனா நீதான் இன்ட்ரஸ்ட் எடுத்துக்க மாட்டேங்கறியே?”. என்னைத் தூண்டினான்.
மேலும் அவன் கராத்தேயின் சிறப்புகளை பற்றியும், என்னுடைய தேக ஆகிருதியைப் பற்றியும் பேசப் பேச எனக்குள்ளே கராத்தே கிளாஸ்ல சேரணும்கிற ஆசை பிறந்தது. ஆனாலும் ஒரு நெருடல். “மாசமாசம் பீஸ் கட்டணுமே எப்படிக் கட்டறது?” யோசித்தேன்.
“என்னடா… பயமாயிருக்கா?” அவன் கேட்டது என் ஆண்மையைத் தூண்டி விட எப்படியாவது பாக்கெட் மணியை மிச்சம் பண்ணியாவது பீஸ் கட்டிட வேண்டியதுதான். வீட்ல பணம் கட்டி கராத்தா கிளாசுக்கு போறேன்னு சொன்னா வேண்டாம்பாங்க… அதனல அவங்ககிட்ட “ஃப்ரீயாத்தான் சொல்லித் தர்றாங்க!”ன்னு பொய் சொல்லிடணும்!” தீர்மானித்தேன்.
“ஓகே… நாளைக்கே சேர்ந்திடலாம்!”… சேரும் போதே ஃபீஸ் கட்டணுமா?” கேட்டேன்.
“இல்லை ரெண்டு மூணு நாள் கழிச்சுக் கூடக் கட்டலாம்!.. கவலைப்படாதே நான் கடன் தர்றேன்! நீ அப்புறமா திருப்பிக் கொடு போதும்!” என்றான்.
சந்தோஷமாய்ச் சம்மதித்தேன். அப்போதிருந்தே மனசுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத கர்வம் புகுந்து கொண்டது .
மறுநாள் மாலையே ராஜேந்திரனுடன் சென்று அவனிடம் கடன் வாங்கிய தொகையைக் கட்டினேன்.
கராத்தே மாஸ்டர் பார்ப்பதற்கே பயங்கரமாய் இருந்தார். தெறித்து விழும் சிவந்த விழிகளும், விடைத்த மூக்கும், தடிப்பான தொங்கு மீசையும், கரணை கரணையான கை, கால்களும், “யப்பா இவர்கிட்ட அடிகிடி வாங்கினோம் செத்தோம்” என நினைத்துக் கொண்டேன்.
முதல் நாளானதால் ஒரே ஒரு கராத்தே ஸ்டெப்பை சொல்லிக் கொடுத்து இதையே திருப்பித் திருப்பி இன்று முழுவதும் செய்யும்படி சொல்லி விட்டு ராஜேந்திரனை அழைத்து, “ராஜேந்திரா… நீதான் இவருக்கு மாஸ்டர்!… நல்லபடியாய் சொல்லிக் கொடு!… சீக்கிரம் உன்னைப் போல ஆக்கு!” என்று சொல்லி விட்டு, அங்கிருந்து நகரும் முன் அவனுக்கு எதற்கோ பணம் கொடுத்து விட்டுச் சென்றார். அது ஆள் பிடிப்புக் கமிஷன் என பின்னாளில் தெரிந்து கொண்டேன்.
முதல், இரண்டு நாள் வகுப்பிற்கு செல்வதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அடிமனதில் ராஜேந்திரன் கடன் உறுத்தினாலும் அது அவ்வளவாகத் தெரியவில்லை. மூன்றாம் நாள் தான் எனக்கு கெட்ட நேரம் துவங்கியது.
“ராஜேந்திரா அடுத்த வார டெஸ்ட்க்கு நீ பிராக்டிஸ் பண்ணிட்டியா?” மாஸ்டர் கேட்க, ராஜேந்திரன் “இல்லை” என்றான்.
“என்ன… இல்லை…ன்னு சாவகாசமா சொல்றே?” மாஸ்டர் கோபத்தில் கத்தினார்.
“மாஸ்டர் நான் தனியா பிராக்டிஸ் பண்ணிட்டேன் மாஸ்டர்… கூட ஒரு ஆள் இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லாவே பண்ணிக்குவேன்” என்றான் ராஜேந்திரன்.
“அப்ப இந்தப் பையனையே யூஸ் பண்ணிக்கோ!.. டிஃபன்ஸ் மட்டும் சொல்லிக் கொடுத்துட்டு… அட்டாக் பண்ணு” சொல்லி விட்டு மாஸ்டர் நகர்ந்தார்.
எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
அருகில் வந்த ராஜேந்திரன் அவன் எப்படியெல்லாம் என்னை அட்டாக் பண்ணுவான் என்பதையும், அதை நான் எப்படித் தடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தான்.
செய்து பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாய் இருந்தது.
நான்காம் நாள், “என்ன தீனதயாளன் கராத்தே டிரஸ் என்ன ஆச்சு?” மாஸ்டர் கேட்க விழித்தேன். இடையில் புகுந்த ராஜேந்திரன், “ஆர்டர் பண்ணியாச்சு மாஸ்டர் நாளைக்கே வந்துடும்!” என்று பொய் கூறினான். மாஸ்டர் சென்றதும், நான் அவனை சோகமாய்ப் பார்த்தேன்.
“கவலைப்படாதே!… இன்னைக்கு ராத்திரியே துணி எடுத்து தைக்க கொடுத்திடுவோம்!… நாளைக்கு வாங்கிக்கலாம்!”.
சர்வ சாதாரணமாய் சொல்லிட்டே… பணத்துக்கு எங்க போறது?” கேட்டேன். அவனே மறுபடியும் கடன் கொடுத்தான்.
ஒரு வழியாய் டைலரிடம் துணி தைக்க கொடுத்தாயிற்று.
“நாளைக்கு ஈவினிங் துணி வாங்கும்போது ஸ்டிச்சிங் சார்ஜ் கொடுக்கணுமே?”
“அதுக்கும் ஒரு வழி கிடைக்காமலா போயிடும்?” சொல்லி விட்டு அவன் போய் விட்டான்.
அடுத்த நாள் மாலை வகுப்புக்கு பெண்களும் வந்திருந்தனர்.
“மார்னிங் தான் லேடிஸ் டைம் இன்னைக்கு மார்னிங்…. மாஸ்டர் வெளியில் எங்கேயோ போயிட்டதாலே லேடீஸ் ஈவினிங் வந்திட்ருக்காங்க!” என்றான் ராஜேந்திரன்.
வழக்கம் போல் இன்றும் அவன் என்னை வைத்துப் ப்ராக்டிஸ் செய்தான். அவன் எங்கெல்லாம் தாக்குவான் என்பதை ஏற்கனவே எனக்கு சொல்லி இருந்ததால் நானும் லாவகமாக தடுத்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிராக்டிஸ் செய்வதை ஒன்றிரண்டு பெண்கள் வேடிக்கை பார்த்தனர்.
அவ்வளவுதான் ராஜேந்திரனுக்கு ஹீரோ நினைப்பு வந்து விட்டது. எனக்கு சொல்லிக் கொடுத்ததை விட்டு விட்டு, எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத சமயத்தில், கண்டபடி தாக்க ஆரம்பித்தான்.
நான் தடுக்க முடியாமல் இங்குமங்கும் எகிறி எகிறிப் போய் விழுந்தேன். பெண்கள் சிரிக்க ஆரம்பித்ததும் அவன் குஷியாகி என்னை ஏகமாய்த் தாக்கினான். துவண்டு போனேன் நான்.
அன்றிரவு கராத்தே டிரஸ் வாங்கக் கூடப் போகாமல் நேரே வீட்டுக்கு போய், சீக்கிரமே படுக்கைக்கு போனேன். உறங்கவே முடியவில்லை உடம்பெல்லாம் மரண வலி. “அடேய் ராஜேந்திரா… பொண்ணுக முன்னாடி உன் சாகசத்தைக் காட்ட நான்தான் கிடைச்சேனா?… பாவி… இப்படி நோகடிச்சுட்டியேடா!” புலம்பினேன்.
மறுநாளும் அதே கதை. அதே உதை. இனிமேல் வகுப்புக்கு போகப் போவதில்லை என்கின்ற தீர்மானமான முடிவோடு வீடு திரும்பினேன். பெரிய கராத்தே வீரனாக பரிசுகளை குவிப்பது போல் நான் கண்ட கனவுகளை நானே தகர்த்தெறிந்தேன்.
“ஏண்டா டெய்லர்கிட்ட ஏதோ துணி கொடுத்திருந்தியாமே?..தைச்சாச்சுன்னு சொல்லிக் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனான்!” என்றபடி அம்மா அந்தப் பார்சலை நீட்டினாள்.
“தையல் கூலி… கேட்டிருப்பானே?”.
“நானே கொடுத்துட்டேன்டா!” சொல்லி விட்டு அம்மா சமையல் அறைக்குள் செல்ல, “க்கும்… எனக்கு இந்த கராத்தே டிரஸ் ஒண்ணுதான் குறைச்சல்… இதை போட்டுட்டுப் போனா மட்டும் என்னவாம்?… அப்பவும் ராஜேந்திரன் கிட்டதான் உதை வாங்கணும்!” அந்தப் பார்சலை பிரித்து பார்க்க கூட தோணவில்லை.
இரவு ஒன்பது மணி வாக்கில் வாசலில், “அம்மா தாயே!… ஏதாச்சும் பிச்சை போடுங்கம்மா!” ராப்பிச்சைக்காரன் சுருதியோடு பாட, நானே எழுந்து வந்தேன்.
“அம்மா இல்லைப்பா!… நீ அடுத்த வீடு பாருப்பா!” துரத்தினேன்.
என்னை பார்த்ததும் அவன், “சாமி ஏதாவது பழைய துணி மணி இருந்தாக் குடுங்க சாமி!…புண்ணியமாப் போகும்” என்று கெஞ்சினான்.
சட்டென்று மூளைக்குள் அந்த யோசனை வர, உள்ளே சென்று அந்தப் பார்சலை எடுத்து வந்து, அவனிடம் கொடுத்தேன்.
“திரு…திரு”வென விழித்தான்.
“வெச்சுக்கப்பா… உனக்குத்தான்” என்றேன்.
“இது… புதுசு…. மாதிரியிருக்கே..” தயங்கியபடியே வாங்கிக் கொண்டான்.
“ஆமாம்… புதுசுதான்… எனக்குத் தைச்ச டிரஸ்தான்!… இப்ப வேண்டாம்னு தோணுது!… அதான் உனக்குக் கொடுக்கிறேன்!” சொல்லி விட்டு நான் வீட்டினுள் செல்லத் திரும்ப,.
“சாமி… நீ ரொம்ப நாளைக்கு மகராசனா இருக்கணும் சாமி!” என்று அவன் சொன்னது என் காதில் கேட்டது.
கராத்தே வீரனாகி, பரிசுகளைக் குவிக்கும் போது கிடைக்கும் பாராட்டுக்களை விட இது உயர்ந்த பாராட்டாக தெரிந்தது எனக்கு.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings