2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஒரு நாள்… ரெண்டு நாளல்ல… கிட்டத்தட்ட மூணு வருஷமா… தாலி கட்டின நாளிலிருந்து… நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்திட்டேன்!… இவ அடங்கற மாதிரித் தெரியல!… இதுக்கு மேலேயும் பொறுமையாய்ப் போக நான் என்ன காந்தி மகானா?… அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன்!… முடிச்சிடறேன்!… இன்னியோட எல்லாப் பிரச்சனைகளையும் முடிச்சிடறேன்!…” மனசுக்குள் கருவிக் கொண்டே வேகவேகமாய் நடந்தான் வீராசாமி.
கையில் இருந்த வெள்ளை நிற கேனில் பெட்ரோல் நிறைந்திருந்தது. வேக நாடையால் அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு குலுங்களில் அந்தக் கேனின் வாய்ப் பகுதி வழியாக வெளியேறும் பெட்ரோல் துளிகள் அவன் காலில் பட்டு ஜில்லிப்பை ஏற்படுத்தின.
“ஆச்சு… மணி பதினொன்றரை ஆச்சு.. அநேகமா இந்நேரம் அந்தச் சனியன் தூங்கியிருக்கும்!… நல்ல சான்ஸ்… போனதும் சத்தமில்லாம பெட்ரோலை அவ மேல ஊத்திட்டு… சட்டுன்னு தீக்குச்சிய உரசிப் போட்டுடணும்!… புருஷன் மேலே சந்தேகப்பட்டு அவனை நையி.. நையின்னு பேசியே கொல்ற பொண்டாட்டிகளுக்கெல்லாம் இது ஒரு பாடமா இருக்கணும்” அவன் கண்களில் கொலை வெறி மின்னியது.
சாலையோரம் நின்று கொண்டிருந்த கருப்பு அம்பாஸிடருக்கு வெளியே கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தா ஒரு மனிதர். அவர் முகத்தில் “யாராவது உதவி செய்யுங்களேன்… ப்ளீஸ்” என்று கெஞ்சுகிற பாவனை அப்பட்டமாய்த் தெரிந்தது.
வீராசாமியோ அவரைச் சிறிதும் சட்டை செய்யாமல் தன் போக்கில் கடந்து சென்றான்.
பத்தடிதான் சென்றிருப்பான், “தம்பி… தம்பி” என்ற குரல் முதுகிற்குப் பின்னாலிருந்து வரக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தான். அந்த மனிதர்தான் ஓடிவந்து கொண்டிருந்தார். வீராசாமியின் அருகில் வந்ததும், அவன் கையிலிருந்த கேனைப் பார்த்து ஆழமாய் மூச்சை இழுத்து மோப்பம் பிடித்தார்.
“யோவ்… யாரய்யா நீ?…என்ன ஆச்சு உனக்கு?” எரிச்சலாய்க் கேட்டான் வீராசாமி.
“தம்பி… நீ கைல வெச்சிருக்கற கேன்ல இருப்பது பெட்ரோல்தானே?” ஆவலாய்க் கேட்டார்.
“அது… வந்து… ஏன்… எதுக்குக் கேட்கறே?” மிரண்டான் வீராசாமி.
“தம்பி… வா… வந்து அந்த வண்டிக்குள்ளார பாரு!… என் ஒரே மகள் பிரசவ வேதனையில் துடிச்சிட்டு இருக்காப்பா!… இந்த ராத்திரி நேரத்துல திடீர்னு பிரசவ வலி வந்துடுச்சுப்பா!… வண்டியில் பெட்ரோல் போட்டு வைக்காம ஏமாந்திட்டேன்!… ப்ளீஸ்… கொஞ்சம் குடுத்து உதவுப்பா” கெஞ்சினார்.
“என்னது?… பெட்ரோல் வேணுமா?…” இட வலமாய்த் தலையசைத்தான் வீராசாமி.
“தம்பி… நீ நம்பறயோ… நம்பலையோ…. நான் நம்புறேன்!… நிச்சயமா அந்த தெய்வம் தான் உன்னைய இந்த நேரத்துல பெட்ரோலோட இங்க அனுப்பிச்சிருக்கு!… ப்ளீஸ் யோசிக்காதப்பா!… ரெண்டு உசுரு… இப்போ உன் கைலதான் இருக்கு!… என் மகளுக்கு இது தலைப்பிரசவம்ப்பா… உதவி செய்யப்பா ப்ளீஸ்”. பேசப் பேசவே அந்த மனிதரின் கண்களில் கண்ணீர் அருவி.
“அந்த வேலையே ஆகாது… கண்டிப்பா என்னால் பெட்ரோல் குடுக்க முடியாது… போ… போ..” என்று ஒரே வார்த்தையில் சொல்லிட்டுப் போய் விட நினைத்த வீராசாமி, “கார்ல வேற ஒரு பொண்ணு வலில துடிச்சிட்டிருக்கா… இந்த சமயத்துல நாம விட்டுட்டுப் போனா… ஒருவேளை… ரெண்டு உசுரும் போயிடுமோ?” தர்ம சங்கடத்தில் நெளிந்தான்.
“தம்பி… யோசிக்காதப்பா!… வாப்பா!… நீயே வந்து என் மகள் துடிக்கிறதைப் பாருப்பா”
மெல்ல அந்த கார் அருகே சென்று, உள்ளே எட்டிப் பார்த்த வீராசாமியின் இதயத்தில் அவனையுமறியாமல் இரக்கம் சுரந்தது. பட்டென்று கேனை நீட்டினான்.
கண்களில் நன்றி ததும்ப, அதைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதர் அவசர அவசரமாக அதை வண்டியில் நிரப்பி விட்டு பாக்கெட்டில் கையை விட்டு பர்சை எடுத்தார்.
“ம்ஹும்… பணமெல்லாம் வேண்டாம்… நீங்க கிளம்புங்க மொதல்ல” சொல்லி விட்டு நடந்தான் வீராசாமி.
“ஒரு நிமிஷம் இருப்பா!… நீ எங்க போகணும் சொல்லு… போற வழியிலே உன்னைய இறக்கி விட்டுட்டுப் போறேன்” என்றார் அவர்.
அரை மனதுடன் வண்டியின் முன் பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டான் வீராசாமி.
வண்டி ஓடிக் கொண்டிருக்க, “ஏங்க… உங்க கூட வேற யாருமே வரலையா?… நீங்க மட்டும்தான் வந்தீங்களா?… பொம்பளைங்க யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கக் கூடாதா?”
“யாருப்பா இருக்கா?… என் சம்சாரம்…. அதான் இவளோட அம்மா… எப்பவோ மேல போய்ச் சேர்ந்துட்டா!… இவ மாமியார்க்காரியா.. தலைப் பிரசவத்தைப் பொறந்த வூட்டுக்காரங்கதான் பார்த்துக்கணும்!னு சொல்லிட்டுத் திரும்பி கூட பார்க்க மாட்டேங்குறா!… அதான்… நானே கூட்டிட்டு வந்துட்டேன்” அந்த மனிதரைப் பார்க்கப் பாவமாய் இருந்தது வீராசாமிக்கு.
பத்து நிமிட அமைதிக்கு பின், “தம்பி நீங்க எங்கே இறங்குறேன்னு சொல்லவே இல்லையே?” என்று அந்த மனிதர் கேட்க
திரும்பி, துடிக்கும் அந்த பெண்ணைப் பார்த்த வீராசாமி, “நேரா ஆஸ்பத்திரிக்கே விடுங்க!… நானும் உங்க கூட வர்றேன்!… பாவம் நீங்க ஒத்தை ஆளு என்ன செய்வீங்க?… நானும் கூட இருந்து ஏதாச்சும் உதவி செய்கிறேன்!”.
வீராசாமியின் முகத்தை திரும்பி பார்த்த அந்த மனிதர் கண்ணீரில் நன்றி கூறினார்.
ஆஸ்பத்திரி.
ஒரு மணி நேரப் பரபரப்பிற்குப் பின், பிரசவ அறைக்குள்ளிருந்து “குவா …குவா” கேட்க அந்த மனிதரின் முகத்தில் இமாலய சந்தோசம். வீராசாமியின் கைகளை பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டு, “என் மகளுக்கு… என் மகளுக்கு… உயிர்ப்பிச்சை கொடுத்த தெய்வமப்பா நீ!… ஏழு ஜென்மத்துக்கும் என்னோட உடம்பை செருப்பாத் தெச்சு… உன் கால்களுக்கு போட்டாலும் என்னால நீ செஞ்ச உதவிக்கு ஈடு செய்ய முடியாதப்பா” உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
பிரசவ அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த நர்சின் கையில் புத்தம் புதிய ரோஜாவாய் அந்த மழலை.
“பெண் குழந்தை” என்றபடி அந்த நர்ஸ் குழந்தையை அந்த மனிதரிடம் காட்ட, “அவர் கிட்ட முதல்ல காட்டும்மா… அவரோட உதவியாலதான் இந்த ஜீவனே இந்த மண்ணுக்கு உயிரோட வந்திருக்கு” என்று சொல்லி வீராச்சாமியை காட்டினார்.
அந்தப் பிஞ்சு குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை தன் விரலால் தொட்டு பார்த்த வீராசாமிக்கு உடலெங்கும் ஒருவிதச் சிலிர்ப்பு தோன்றியது.
நர்ஸ் சென்றதும், “தம்பி!… நீ யாரு பெத்த புள்ளையோ?… தெரியல… ஆனா இன்னைக்கு இந்தப் பெண் சிசு… இந்த மண்ணுல கண் விழிக்கிறதுக்கு காரணமே நீதான்!… நீ குடுத்தியே அந்தப் பெட்ரோல்தான்” அந்த மனிதர் பேசப் பேச வீராசாமியின் சிந்தனை வேறு திசையில் சென்றது.
“ஆண்டவா!… இது என்ன விளையாட்டு?… ஒரு பொம்பளை உசுரை இந்த உலகத்திலிருந்து விரட்டுவதற்காக நான் வாங்கிட்டுப் போன பெட்ரோல்… ஒரு பொம்பள உசுர… இந்த உலகத்துக்கு வருவதற்கு காரணம் ஆயிடுச்சு!” மெய் சிலிர்த்தான்.
“அப்ப… நான் வரேன்ங்க” என்று அவசரமாய் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்த வீராசாமிக்கு, ஏனோ மனைவி மேல் இருந்த கோபம் மறைந்து, அவளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிருந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை