கடந்த சில தினங்களாக செய்தித்தாள்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தின் பெயர் “உத்தம வில்லன்”. இந்தத் தலைப்பை மேலோட்டமாகப் பார்க்கும் யாவர்க்கும் இப்படியொரு சந்தேகம் துளிர்க்கும். “அதெப்படி? வில்லன்கள் என்றாலே அவர்கள் தீமை புரிபவர்களாகவும், எதிர்மறைக் குணம் கொண்டவர்களாகவும் தானே இருப்பார்கள், அப்படியிருக்கும் போது “உத்தம வில்லன்” என்று எப்படி சொல்ல முடியும்? “உத்தம” என்றால் அது நல்லவர்களையல்ல குறிக்கும்? முரண்பாடாய் இருக்கின்றதே!” என்று.
ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் பல உத்தம வில்லன்களை, சில நேரங்களில் உத்தம வில்லிகளையும், சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம், சகித்துக் கொண்டுதான் வாழ்கின்றோம், என்கிற யதார்த்த உண்மை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் மட்டுமே புரியும்.
உத்தம வில்லத்தனம் என்பது எல்லோராலும் எளிதாகச் செய்ய முடிந்த விஷயமல்ல. அதற்கென்று தனி சாதூர்யம் வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், தமிழில் “வஞ்சப் புகழ்ச்சி அணி” என்று ஒன்று உண்டு. அது, இந்த உத்தம வில்லத்தனத்துடன் ஓரளவிற்கு ஒத்துப் போகும் விஷயமாகும். அதாவது, மேல் பார்வைக்கு ஒரு வரைப் பாராட்டுவது போலிருக்கும், ஆனால் அந்தப் பாராட்டிற்குள்ளேயே ஒரு எள்ளல், ஒரு வசை, ஒரு சாடல், ஒரு சதி, இழைந்திருக்கும். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் பாராட்டின் பின்புலத்தில் ஒரு குழி ஆழமாக வெட்டப்பட்டிருக்கும்.
நம்முடன் நேருக்கு நேர் வந்து மோதும் எதிரியுடன் நம்மால் மோத முடியும், குறைந்த பட்சம் தற்காத்துக் கொள்ள வேணும் முடியும். அதே போல், நமது முதுகிற்குப் பின்னாலிருந்து தாக்குபவர்களைக் கூட, ஓரிரு நிகழ்வுகளுக்குப் பின் புரிந்து கொண்டு விலக முடியும், தவிர்க்க முடியும், சுதாரித்துக் கொள்ள முடியும். ஆனால், நம்முடனேயே இருந்து கொண்டு, சிரித்துக் கொண்டு, பேசிக் கொண்டு, பழகிக் கொண்டு, நமக்கெதிராக நாமே அறியாத வண்ணம், வாழைப் பழத்தில் ஊசியினை ஏற்றுவது போல், சதி செய்பவர்களை என்ன செய்ய முடியும்?.
ஆம்!.. இன்றைய சமூகச் சூழலில் இது போன்ற உத்தம வில்லன்களே ஏராளமாய்ப் பெருகி விட்டமையால், நம்மை நாமே செறிவு படுத்திக் கொண்டு, ஒவ்வொரு விஷயத்திலும் தீர்க்கமாக கவனத்தைக் குவித்தாலன்றி, இது போன்ற உத்தம வில்லன்களை உணரவே முடியாது. ஒரு திரைப் படத்தில் சொல்லுவது போல் அவர்களெல்லாம் “ஸ்லீப்பர் செல்ஸ்”.
இந்த உத்தம வில்லன்களின் பேச்சு மிகவும் யதார்த்தமாக, மனதிற்கு மிகவும் சந்தோஷம் தருவதாகவே இருக்கும். அவர்கள் சென்ற பின், அப்பேச்சின் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளி வரத் துவங்கும் போதுதான், அந்த உத்தம வில்லத்தனத்தின் வீரியம் நமக்குப் புரியும்.
உதாரணத்திற்கு ஒரு நிகழ்வு. அண்டை வீட்டில் ஒரு நாள் கணவன்-மனைவி சண்டை. விசாரித்த போது கணவன் சொன்னான், “என் மனைவி என்னோட அம்மாவை அவமானப்படுத்தி விட்டாள்!”என்று.
மறுநாள் அந்த மனைவியிடம் பேசிய போதுதான் தெரிந்தது, அது ஒரு உத்தம வில்லியின் கைங்கர்யம் என்று. அந்த மனைவியானவள் தன் மாமியாருக்கு உணவு பரிமாற வேண்டி பிளேட்டை வைத்த போது, அந்த உத்தம வில்லி இடையில் புகுந்து, “என்னது… மாமியாருக்கு பிளேட்டை வைக்கிறாய்?… இலையைப் போடு!” என்று சொல்லியபடி, தானே வந்து அந்தப் பிளேட்டை எடுத்து விட்டு இலையைப் போட, அங்குதான் ஆரம்பித்தது சனி. இதற்கு முன்பெல்லாம் பல முறை அந்த மாமியார் அங்கு வந்து பிளேட்டில் சாப்பிட்டிருக்கிறார், அப்போதெல்லாம் அதைக் கண்டு கொள்ளாத அவர், இப்போது உத்தம வில்லியால் உசுப்பப்பட்டு, ஒரு ருத்ர தாண்டவமே ஆடி விட்டார். உத்தம வில்லியின் எண்னம் போல் அங்கு பிரிவும்… பிளவும்… நிரந்தரமாகிப் போயின.
“அந்தப் பெண் யாரோ?… அவள் கூட என்னை மதிக்கிறாள்… உன் மனைவிதாண்டா என்னைக் கேவலப்படுத்தறா!” என்று அந்த மாமியார் வாயால் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு உத்தம வில்லி தன் வழியே போய் விட்டார், குடும்பத்திற்குள் ஒரு கலவரத்தை உண்டாக்கி விட்டு.
இன்னொரு உதாரணம், ஒரு பெண், தன் தம்பி வீட்டிற்குப் போகும் போதெல்லாம் அவன் மனைவியின் அழகைப் பற்றி மிகவும் புகழ்ந்து கொண்டேயிருப்பாள், இடையிடையே “டேய் உன்னை மாதிரி ஒரு குரங்கு மூஞ்சிக்கு இப்படியொரு தேவதை கிடைச்சது அதிர்ஷ்டம்டா!” என்பாள். ஆரம்பத்தில் இது தம்பி மனைவிக்கு சந்தோஷத்தையே தந்தது. ஏன்? அந்தத் தம்பிக்கும் கூட “ஆஹா… என் மனைவி அவ்வளவு அழகியா?” என்று பெருமிதமாயிருந்தது. ஒரு நாள், பேச்சு வாக்கில் தம்பி மனைவி கணவனை எதிர்த்துப் பேசி விட, “ஓஹோ..என்னை விட அழகு என்கிற திமிராடி?” என்று கேட்கிறான். அன்றிலிருந்து அக்காக்காரி வந்து மனைவியைப் பாராட்டி விட்டுப் போகும் போதெல்லாம், அவள் சென்ற பிறகு இங்கே கணவன்… மனைவியும் இந்தியாவும், பாகிஸ்தானும்தான்.
இங்கே, அந்த அக்காக்காரிதான் உத்தம வில்லி. கூர்ந்து கவனித்தால் அவள் பேச்சு முழுவதுமே, ஆரம்பத்திலிருந்தே நல்ல விதமாகவும், பாராட்டு பேச்சாகவும்தான் இருந்து வந்தது, ஆனாலும் அதன் விளைவு கணவன் மனைவிக்குள் தேவையில்லாத மன விரோதம்.
ஆக, உத்தம வில்லன்களாகட்டும், உத்தம வில்லிகளாகட்டும், எல்லோருமே டீஸண்ட் கிரிமினல்ஸ்தான். இதில் ஒரு சில “இன்னஸண்ட் கிரிமினல்ஸ்!”களும் (INNOCENT CRIMINALS) உண்டு. அவர்கள் அப்பாவியாய் இருப்பது போலவே காட்டிக் கொண்டு பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்து பெரிய கலவரத்தையே உண்டாக்கிவிடுவர்.
மொத்தத்தில் வில்லன்களைக் கூட ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம், இந்த உத்தம வில்லன்களையும், உத்தம வில்லிகளையும் எவ்வகையிலும் சேர்த்துக் கொள்ளவே முடியாது. அவர்கள் நடமாடும் வைரஸ்கள். கிரிமினல் கிருமிகள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings