ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
எத்தனை வருடங்களானாலும் மனதில் ரீங்காரமிடும் சில பாட்டுக்களுக்கு அழிவே கிடையாது. அப்படி என் மனதில் நித்தம் தவழ்ந்து வரும் தென்றலை போல் வந்து செல்லும் நினைவலைகளின் தொகுப்பே இந்த கதை…
எங்கள் தகப்பனார் காவல் துறையில் உயர் அதிகாரியாய் பணியாற்றிய காலம். அப்போதெல்லாம் காவலர்கள் குடியிருப்பு, அவர்களின் பணிக்கு ஏற்றவாறு பகுதி பிரிக்கப்பட்டு இருந்தது
எங்கள் குடியிருப்பு பகுதியே மிக ரம்மியமாய் காட்சியளிக்கும். கூப்பிடும் தூரத்தில் ஒரு கிணறு, பக்கத்தில் ஓடும் கால்வாய், சுற்றிலும் மரங்கள், மரங்கள் வரிசையாக
சிப்பாய்கள் போல காட்சியளிக்கும். புங்க மரம், சாட்டைக்காய் மரம், அப்புறம் வேப்ப மரம்
எங்கள் வீட்டிற்கு முன்னால் ஆங்காங்கே தும்பைப் பூ செடிகள் டிசம்பர் பூக்கள் செடிகள், தாத்தா தலைவெட்டி, அப்புறம் சுடக்கு தக்காளி என பல தரப்பட்ட செடிகள் இருக்கும்.
இவை அனைத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது வயலட் கலர் பூ பூக்கும் தொட்டா சிணுங்கி மட்டுமே. அதில் முள் இருந்தாலும் தொட்டவுடன் வெட்கபட்டு மூடிக்கொள்ளும் அழகே தனி. அப்படி ஒரு கூச்ச சுபாவம் கொண்ட ஒருவன் தான் முரளி.
யாரிடமும் அவ்வளவு எளிதில் சேர மாட்டான். எப்போதும் தனித்தே இருப்பான். கண்ணனுக்கு புல்லாங்குழல் எப்படியோ அதைப் போல தான் முரளியின் காந்த குரல்
அனைவரையும் அவனுடைய பாட்டால் வசீகரித்து விடுவான். ஆயுதப்படை குடியிருப்பு முழுவதிலும் முரளியின் பாடல் பிரசித்தம். முரளிக்கு படிப்பு கொஞ்சம் மந்தம் தான். ஆனால் எவ்வளவு கஷ்டமான பாடலாக இருந்தாலும் சரி கண நேரத்தில் மனனம் செய்வதில் சமர்த்தன்.
அவனுடைய புத்தக பையில் பாட புத்தகம் தவறினாலும், பாட்டு புத்தகம் கட்டாயம் வைத்திருப்பான். வீட்டிற்கு வரும் உறவினர் கொடுக்கும் அன்பளிப்பை வைத்து அதை வாங்கிக் கொள்வான்.
அவனுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கி கொடுத்தால் போதும், ஸ்ருதி சுத்தமாக மிக அழகாய் பாடுவான். அது தமிழ் ஹிந்தி பாடலானாலும் சரி, பிசிறு தட்டாமல் பாடுவான்.
கோயில் திருவிழாக்களில் மைக் செட் போடும் இடம் அருகே இவன் அமர்ந்திருப்பான். ரெக்கார்ட் போடும் ஆசாமி இவனுக்கென்று ஒரு இருக்கையை தயார் செய்து வைத்திருப்பார். மைக் ஆன் பண்ணினால் போதும் மதுரை சோமு இவன் குரலில் மருதமலை மாமணியே பாடுவார்.
இவன் பாடலுக்கென்றே ஒரு கூட்டம் இருந்தது. காவலர்கள் பேண்ட் ட்ரூப்புகளில் முரளி தான் முக்கியமாய் இருப்பான்.
இவன் பாடும் ‘எங்கே நிம்மதியை’ சிவாஜி ஐயா கேட்டிருந்தால் நிச்சயம் இவனுக்கு சினிமாவில் பாட சிபாரிசு செய்திருப்பார்
இப்போது போல் அப்போது ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டி வைத்திருந்தால், நிச்சயம் முரளி ஒரு பிளாட்டுக்கு சொந்தகாரானாயிருப்பான். அவனுடைய திறமை அவனை சார்ந்தோர்க்கு தெரியாமல் போனதே அவனுடைய துர்திஷ்டம்.
என்ன செய்வது எல்லாமே நாம் நினைப்பது போல் நடந்தால், அப்புறம் என்ன சுவாரஸ்யம் இருந்திட போகிறது. எங்கே மேடை கச்சேரி நடந்தாலும், தவறாமல் அங்கே ஆஜராகி விடுவான்.
சமீபத்தில் வந்த படங்களின் பாடல்களை மனனம் செய்து வைத்திருப்பான். கொடுமை என்னவென்றால் அந்த கச்சேரி நடத்தும் பெருமாள்சாமிக்கு எருமையின் சாரீரம்
என்ன செய்வது… அவன் பாடுவதை கேட்டு ஏதாவது குறை சொன்னால், அதற்கப்புறம் முரளிக்கு பாடும் சான்ஸ் கிடைக்காது. கூட்டத்தில் ஒருவனாக தான் நடத்தபடுவான்.
ஒருமுறை பெருமாள்சாமிக்கு உடல் நல குறைவால் மேடை ஏறி பாடினான் முரளி . ‘முதல் முதல் ராக தீபத்தை’ பாட ஆரம்பித்தான், சொல்லி வைத்தாற் போல் மழை சோ’வென கொட்டியது. சினிமாவில் கொட்டியது போல் நிஜத்திலும் நடந்த அதிசயம்
ஆனால் மழை வலுக்க, அனைவரும் கலைந்தனர். முரளியின் கண்களில் வழிந்த கண்ணீர், மழை நீரோடு கரைந்து போனது.
இப்படி அவனுக்கு வந்த சோதனைகள் ஏராளம்.
ஒருமுறை இவன் பாடும் போது மின்சாரம் போனது. ஆனாலும் விடாமல் ஆறு கட்டையில் பாடினான். மொத்த ஜனமும் கைத் தட்ட, அன்று தான் அவன் நிம்மதியாகத் தூங்கினான்.
இன்று முன்னணியில் இருக்கும் சில இயக்குனர்கள் கூட அவனுடைய சிநேகிதர்களே. ஆனால் எவரிடமும் இதுவரையில் தனக்கு வாய்ப்பு கேட்டு அலைந்ததில்லை.
அந்த வகையில் முரளி கூச்ச சுபாவமாய் இருந்ததே அவனுக்கு எதிரியாக ஆனது. அவனுக்கு ஆறுதலாயிருந்தது இளையராஜா பாடல்கள் மட்டுமே.
ராஜாவின் ராஜாங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து, இவன் ராஜாவிற்கு அடிமையாகி போனான். இல்லையில்லை ராஜாவின் தாசனாகி போனான் என்றே கூற வேண்டும்.
எவ்வளவு கடினமான பாடலாய் இருந்தாலும், அதை மனனம் செய்து பாட்டு கச்சேரியில் பாட வேண்டும் என்ற பதைபதைப்புடன் இவன் அலைபாய்வதை பார்க்கும் போது, சில சமயம் எனக்கு வேடிக்கையாய் இருக்கும்.
அதை பற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் வளைய வருவான். அதிலும் குறிப்பாய் சில பாடல்கள் சொல்ல வேண்டுமெனில் ‘தாலாட்டுதே வானம்’, ‘ராசாத்தி உன்னை’, ‘அந்தியில வானம்’, ‘வெள்ளை புறா ஒன்று’
வருட பிறப்பிற்கென்று பாடும் பாடலான ‘இளமை இதோ இதோ’ பாட்டிற்கு ஈடு இணை இல்லை. ‘இளமையெனும் பூங்காற்றை’ இவன் பாடும் அழகில் இளமை வழிந்தோடும். வெண்ணையை வெட்டியது போல் பாடுவான்.
பல குரல் மன்னன். SPB என ஒருவிதம், KJJ என்றால் அதற்கென ஒருவிதம்,PBS என்றால அதற்கென மெனக்கெடுவான். அவனுக்கு மிகவும் பிடித்தமான குரல் என்றால் ஜெயசந்திரன் தான்.
மிகவும் கஷ்டமான குரல் என்றால் SPB என்பான். அந்தந்த குரலுக்கு ஏற்றவாறு தொண்டையை செருமிக் கொள்வான். நிஜத்தில் கேட்பதை போல் இருக்கும். அப்படி ஒரு லாவகம்.
TDK கேஸட் C90 Minutes வாங்கி, அதில் பாட்டுக்களை தேர்தெடுத்து சேகரித்து கொள்வான். வாக்மெனில் போட்டு கேட்டுக் கொண்டே இருப்பான். அது தான் அவனுடைய அன்றாட வேலையாய் இருக்கும்.
இப்படி பயணித்த அவனது வாழ்வில், கச்சேரி போகும் இடங்களில் நட்புக்காக குடிக்க ஆரம்பித்து, பின் அதற்கு அடிமையாகி போனான். அவன் நாவில் அதுவரை பயணித்த சரஸ்வதி அவனை விட்டுப் போனாள்.
குரலில் பிசிறு தட்ட ஆரம்பித்தது. மெல்ல அவனுக்குள் போதை வர வர, அவன் வேகமாய் வாழ்க்கையில் முன்னோக்கி ஓட ஆரம்பித்தான்
அனைவருக்கும் முன்னதாய் போய் சேர்ந்து விட்டான். இப்போதும் எங்கு ஒலிபெருக்கி வைத்து மைக் சரி செய்யும் சத்தம் கேட்டாலும், அவன் பாடிய பாடல் என் நெஞ்சில் ஒலிக்கும் ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ பாடல்
அவனுடன் பயணித்த நாட்கள் இன்றும் பசுமையாய் என் மனதில் நிழலாடி கொண்டிருக்கும். அவனுடைய இழப்பில் எனக்கு தெரிந்ததெல்லாம் அவன் மனதில் பாட்டு மட்டுமே எஞ்சி இருந்தது
இப்போது போலல்லாமல், அப்போது இத்தனை மென்பொருள் கட்டமைப்பு இல்லாத கால கட்டத்தில், அவனுடைய குரலை சேகரித்து வைக்காது போனது என் துர்திஷ்டமே
வாழ்க்கை சிலசமயம் சிலரின் திறமையை உலகிற்கு காட்டாமலேயே கொண்டு சென்று விடுகிறது. அவன் மனதில் எப்போதும் பாட்டு தான் முதலாய் இருந்தது. இன்று எத்தனையோ மென்பொருள் சுட்டிகள் வந்தாலும், அவை அனைத்திலும் இசைக்கு என இருப்பதென்னவோ அன்று மெட்டமைத்த பாடல்களே.
பல ஜாம்பவான்கள் பயணித்த பாதையில் அவனும் ஒரு ஜாம்பவானாக பயணித்திருக்க வேண்டும். சேகரித்த அனைத்தையும் அவனுக்கே சமர்ப்பிக்கிறேன்.
“உன் மனசுல பாட்டு தான் இருக்குது…”
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
மலரும் நினைவுகளை காட்சிப்படுத்தியது நிறைவாய் இருந்தது