இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் வைத்து விட்டேனம்மா” என்றாள் அங்கு வந்த வேலம்மா.
நால்வரும் டைனிங் டேபிளில் உட்கார வேலம்மா பரிமாற வந்தாள். டேபிள் மேல் ஒரு ஏழெட்டு ஹாட்பாக்ஸ் மூடி வைக்கப்பட்டிருந்தது. டேபிள் மேல் சுத்தமாக கழுவி துடைத்து வைத்த பீங்கான் தட்டுகள்.
வேலம்மாவைத் தடுத்த கௌசல்யா, “இன்று மாதவியின் பிறந்த நாள், அவளுக்கு நானே என் கையால் இன்று பரிமாற வேண்டும்” என்றவள், நால்வருக்கும் நான்கு தட்டுகளை வைத்தாள்.
தட்டில் முதலில் ஸ்வீட் வைத்தாள். ஒரு தினுசு இல்லை. குலோப் ஜாமுன், ஜாங்கிரி, அல்வா, காஜுகத்திரி என்று நான்கு விதமான ஸ்வீட்டுகள். அதைப் பார்த்தவுடனே பிரமித்து நின்றாள் மாதவி.
“என்ன ஆன்ட்டி, இவ்வளவு ஸ்வீட்டா? எல்லோருக்கும் ஐம்பது அறுபது வயதில் வரும் சர்க்கரை வியாதி, இப்படி ஸ்வீட் சாப்பிட்டால் இருபதிலேயே வரும்” என்றாள் கண்களை அகல விரித்து.
“தினமுமா சாப்பிடப் போகிறாய்? இன்று ஒருநாள் மட்டும் தானே! எல்லா ஸ்வீட்டையும் முழுவதுமாக சாப்பிட வேண்டாம். ஒவ்வொரு ஸ்பூன் மட்டும் சாப்பிடு. இதில் எது பிடிக்கிறதோ அதை மட்டும் கொஞ்சம் நிறைய சாப்பிடம்மா” என்றார் ராகுலின் தந்தை.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த ராகுலோ, “எதெற்கெடுத்தாலும் கண்களை ஏன் அவ்வளவு அகலமாகத் திறக்கிறாய்? கண்களா அல்லது கடலா? நான் அப்படியே மூழ்கிவிடுவேன் போல் இருக்கிறது” என்றான் அவள் காதில் ரகசியமாக.
பிறகு வரிசையாக இட்லி, பொங்கல், சிக்கன் என்று பரிமாறப்பட்டது. ஒவ்வொன்றிலும் கொஞ்சமாக ருசித்து விட்டு “ஆன்ட்டி போதும், இதற்கு மேல் சாப்பிட்டால் கிளாஸில் உட்கார்ந்து கொண்டு தூங்க வேண்டியதுதான்” என எழுந்து கொண்டாள்.
“இன்று காலேஜிற்குப் போகப் போகிறாயா மாதவி? இன்று ஒரு நாள் லீவ் போட்டு விடேன்! ஜாலியாக எங்காவது ஒரு லாங் டிரைவ் போய் வரலாம்” என்றான் ராகுல்.
“நோ நோ, கிளாஸெல்லாம் கட் அடிக்க முடியாது. போனாலே சில சப்ஜெக்ட்ஸ் ஒன்றும் புரியாது. அங்கிள், ஆன்ட்டி நான் கிளம்பட்டுமா? ராகுல் நான் வருகிறேன்” என்றாள் தன் பேக் பேகைத் தூக்கிக் கொண்டு.
“ஏய் இரு, நான் கார் எடுத்துக் கொண்டு வந்து உன்னை டிராப் செய்கிறேன்” என்று எழுந்து கொண்டான் ராகுல்.
“நீ வீட்டில் இரு. காரெல்லாம் ஒன்றும் வேண்டாம், நான் ஆட்டோவில் போய் விடுவேன்” என்றாள் மாதவி.
“ஆட்டோவெல்லாம் ஒன்றும் வேண்டாம், ராகுல் கொண்டு வந்து விட்ட்டும் அம்மா” என்றார் அவன் தந்தை.
“நீ மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய் ராகுல்? வெளிநாட்டில் போய் படிக்கப் போகிறாயா? இல்லை ஐ.ஏ.எஸ் மாதிரி ஏதாவது சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதப் போகிறாயா? இல்லை ஏதாவது மல்டி நேஷனல் கம்பெனியில் போய் வேலை செய்யப் போகிறாயா?” காரில் போகும் போது மாதவி அவனிடம் கேட்டாள்.
“நீ சொன்ன எதுவும் இல்லை. நான் எங்கள் கம்பெனியில் இரண்டு மூன்று துறைகளில் அப்ரன்டிஸாக நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு பிறகு தனியாக ஒரு கம்பெனிக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டுமென்று என் டாடி அபிப்பிராயப்படுகிறார். எனக்கும் அதுதான் சரியென்று படுகிறது. நீ என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்டான் ராகுல்.
“ராகுல், இதெல்லாம் என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? அங்கிள் சொல்வதுதான் சரியாக இருக்கும். அவருடைய அனுபவ அறிவுதான் சரியான வழிகாட்டும்” என்றாள் மாதவி.
“ஆம், ஒரு சின்ன பில்டிங் புரமோட்டராக தாத்தா தொடங்கிய இந்த கம்பெனி இப்போது இவ்வளவு பெரிய கம்மெனியாக, வெளிநாடுகளில் எல்லாம் கூட தனி ஆபீஸ் வைத்து நடத்தும் ஒரு பெரிய கம்பெனியாக வளர்ந்து நிற்கிறது. இந்தக் கம்பெனியில் நான் சேர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டால், என் தந்தைக்கு அதிக வேலையினால் ஏற்படும் டென்ஷன் குறையும் என்று நினைக்கிறேன். மேலும் நானும், என்னைப் போன்ற புது இஞ்ஜினீயரிங் பட்டதாரிகள் பணியில் சேர்ந்தால் புதிய டெக்னிக்குகளை முயற்சிக்கலாம் இல்லையா?” என்று எங்கோ கனவில் மிதந்தபடி அவளிடம் கேட்டான் ராகுல்.
“நீ சொல்வதைப் பார்த்தால் உடனே வேலையில் சேர்ந்து விடுவாய் போலிருக்கிறதே” என்றாள் மாதவி.
“ஆம், ஒரு மாதம் நன்றாக என்ஜாய் பண்ணிவிட்டுப் பிறகு முழுமூச்சாகப் பணியில் சேரலாம் என்று நினைக்கிறேன்” கண்களை சிமிட்டியபடி அவளிடம் சிரித்துக் கொண்டே கூறினான்.
“அப்படியானால் ஒரு மாதத்திற்குப் பிறகு என்னிடம் கூட பேச மாட்டாயா ராகுல்?”
“ஹேய்… அப்படியெல்லாம் கிடையாது. கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம், ஆனால் உன்னோடு பேசாமல் மட்டும் இருக்க என்னால் முடியாது. உனக்கென்று தினம் சிலமணி நேரங்கள் ஒதுக்குவேன், கூடிய மட்டும் நேரில் வந்து சந்திப்பேன். முடியவில்லையென்றால் கட்டாயம் போனில். என் மகாராணிக்காக ஒதுக்கப்பட்ட அந்த நேரம் வேறு எதற்காகவும் யாருக்காகவும் செலவிட முடியாது. போதுமா டார்லிங்?” என்றான் அவள் கைகளை லேசாக அழுத்தியபடி.
இப்போதெல்லாம் ராகுல் தினமும் மாதவியை காலையில் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் அவளை வீட்டிற்கு அழைத்து வருவதும் தன்னுடைய முக்கியமான பணியாக வைத்திருந்தான்.
“இந்த வேலை உனக்கு தினம் வேண்டாம் ராகுல். இந்த ஒரு மாதம் மட்டும் தான். அதாவது நீ போய் உன் கம்பெனியில் சேரும் வரை தான், புரிந்ததா?” என்றாள் ஒரு விரலை ஆட்டிக் கொண்டு.
கண் முன்னால் ஆட்டிய அந்த பிஞ்சு விரலை வலிக்காமல் செல்லமாகப் பற்களால் கவ்விப் பிடித்துக் வலிக்காமல் கடித்தான். அதற்கே வலிப்பது போல் நடித்துக் கத்தினாள் மாதவி.
ஒரு நாள் மாதவியின் சித்தி லதா போனில் அழைத்தாள்.
“உன்னுடன் கொஞ்சம் பர்ஸனலாகப் பேச வேண்டும் மாதவி” என்றாள்.
மென்மையாகச் சிரித்த மாதவி, “என்னிடம் பேசுவதற்கு அப்பாயினட்மென்ட் வாங்க வேண்டுமா சித்தி? உங்களுக்கில்லாத உரிமையா? நீங்கள் உங்களுக்கு சௌகர்யமான நேரமும் இடமும் சொல்லுங்கள் சித்தி” என்றாள்.
“உங்கள் வீட்டைத் தவிர வேறெங்கே போய் பேச முடியும்? ஹோட்டலில் ரூம் போட்டா பேச முடியும்?” என்றாள் லதா.
“சித்தி, இன்று பிற்பகல் வகுப்பு இல்லை. நானே வீட்டிற்கு போனால் போர் அடிக்குமே என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விடுகின்றேன். அப்பா வீட்டிற்கு வர மாலை ஆறுமணி ஆகி விடும். உங்களுக்கு சௌகர்யமான நேரத்தில் நீங்கள் வாருங்கள். சவரும்போது கிரிஸ்பியாக, டேஸ்ட்டியாக ஏதாவது ஸ்நாக்ஸ் அல்லது ஸ்வீட் எடுத்துக் கொண்டு வருகிறீர்களா? முடியுமா?” எனக் கேட்டாள்.
“கட்டாயம் ராஜாத்தி, உனக்குப் பிடித்த நல்ல ஸ்வீட் ஸ்நாக்ஸ் எடுத்து வருகிறேன். நீ கேட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்டா கண்ணா” என போனை வைத்தாள்.
சொன்னது போலவே பிற்பகல் இரண்டு மணிக்கு மாதவி வீட்டிற்கு வந்தாள் லதா. இரண்டு எவர்ஸில்வர் டப்பாக்கள் வேறு கையில். மாதவியும் அவள் வந்த நேரத்தில் வீட்டில் இருந்தாள். லதாவைப் பார்த்தவுடன் ஆசையுடன் ஓடிப் போய் கட்டிக் கொண்டாள்.
லதா அவள் எடுத்து வந்த எவர்ஸில்வர் டப்பாக்களை டைனிங் டேபிள் மேல் வைக்க, “இது என்ன சித்தி?” என்று கேட்டாள் மாதவி.
“உனக்காக எடுத்து வந்தது தான். திறந்து பாரேன், தெரிகிறது”
மாதவி அதை ஆவலுடன் திறந்தாள். ஒன்றில் பூந்தி லட்டும் மற்றொன்றில் வெண்ணைய் முறுக்கும் இருந்தன. ஒவ்வொன்றும் அறுபது நம்பர் இருக்கும். ஒரு லட்டை எடுத்துக் கடித்தபடி, “எதற்கு சித்தி இவ்வளவு? ஒரு மாதத்திற்கு ஆகும் போல் இருக்கிறதே” என்றவள், “சித்தி, லட்டு ரொம்ப டேஸ்ட், கடையில் வாங்கினீர்களா? ஆனால் நீங்கள் இதெல்லாம் கடையில் வாங்க மாட்டீர்கள் இல்லையா? வீட்டிலேயே ஆள் வைத்து செய்தீர்களா?” என்றாள் ஒரு முறுக்கையும் கடித்தபடி.
“வீட்டில் செய்ததுதான் மாதவி. வீட்டில் நாம் சுத்தமான எண்ணையில் செய்வதை நீ ஒரு மாதம் கூட வைத்து சாப்பிடலாம். நம் வீட்டில் உன் சித்தப்பா, தாத்தா, பாட்டி குழந்தைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலிருந்து தான் உனக்கும் அண்ணாவிற்கும் கொஞ்சம் எடுத்து வந்தேன்” என்றாள் லதா.
“ஓ சரி சித்தி” என்றவள், சட்டென நினைவு வந்தவளாய், “சித்தி, என்னுடன் என்னவோ பர்சனலாகப் பேச வேண்டும் என்றீர்கள். ஆனால் பேசவே முடியாதபடி லட்டையும் முறுக்கையும் கொடுத்து என் வாய்க்கு புல்லாக வேலை கொடுத்து விட்டீர்களே” என்றாள் சிரித்தபடி.
“போடி அரட்டை. நான் கேட்க வந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இந்தக் காலத்தில் எல்லாம் வீட்டிற்கு வீடு நடக்கும் விஷயங்கள் தான்” என்றாள் லதா தயக்கத்துடன்.
“கேளுங்கள் சித்தி, என்னிடம் ஏன் தயங்குகிறீர்கள். நான் நீங்கள் தூக்கி வளர்த்த அதே மாதவிதான். மனதில் நினைப்பதை வெளிப்படையாகக் கேளுங்கள் சித்தி. நீங்கள் கேட்பதற்கு நான் உண்மையை மறைத்தோ, மழுப்பலாகவோ பதில் சொல்ல மாட்டேன்” என்றாள் மாதவி உணர்ச்சிப் பெருக்கோடு.
“உன்னுடைய பர்சனல் விஷயத்தில் நான் தலையிடக் கூடாது. இருந்தாலும் நீ என் மிகப் பிரியமான சரயு அக்காவின் பெண். அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு ஏமாற்றம் உன் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடாதென்று தான் எனக்கு மிகக் கவலையாக இருக்கிறது. அதனால் தான் என் தலையீடு“ என்று பீடிகையோடு தொடங்கியவள்…
”மாதவி, நீ மிகவும் நெருக்கமாக ராகுல் என்னும் பெரிய பணக்கார வீட்டுப் பையனோடு பழகுவதாகக் கேள்விப்பட்டேன். அவன் தான் உன்னை தினமும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாகவும், மாலையில் அவன் தான்கொண்டு வந்து வீட்டில் விடுவதாகவும் கேள்விப்பட்டேன். அது உண்மையா?” என்றாள் கவலையுடன்.
“ஆமாம் சித்தி, அது உண்மைதான். ஆனால் ராகுல் ரொம்ப நல்லவன், உண்மையானவன். அவன் வீட்டிற்கெல்லாம் அழைத்துச் சென்று அவன் அப்பா அம்மாவிடம் கூட என்னை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான் சித்தி“ என்றாள்.
“எனக்கு நீ வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்துடனும் சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும். உன் அம்மா வாழ்வில் நடந்த சோகம் உன் வாழ்க்கையில் வரக்கூடாதம்மா” என்றாள் கவலையுடன்.
“என் அப்பா எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார், சரியான சந்தேக புத்தி. அதனால்தான் அம்மாவின் வாழ்க்கை மட்டுமல்லாது எங்கள் வாழ்க்கையும் பாழானது. ஆனால் எல்லோரும் அதே போல் இருக்க மாட்டார்கள் இல்லையா சித்தி?”
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings