in ,

உயிர் நாடி (சிறுகதை) – ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

பெரியசாமிக்கு இதுல உடன்பாடு இல்லனாலும் அவருக்கு வேற வழியில்ல, மவனும் மருமவனும் ஓத்தக்காலுல நிக்கையில அவரால தனியாள என்ன பண்ண முடியும். அதான் மனுசன் மனசு கேக்காம போய் சேர்ந்துட்டாரு என கருப்பன் புலம்ப

என்ன பண்ண நல்ல மனுசன் நிலத்த உசிரா பாத்த மனுசனாச்சே அதான் போய் சேந்துட்டாரு என்று கூறியபடியே எழுந்து சென்றார் மாடசாமி.

கனகு எதும் பேசாமல் தன் கணவனை முறைத்தபடி இருந்தாள்.

காசியப்பபுரம் ஊருக்குள்ள பெரியசாமினா தெரியாத ஆளுங்க கிடையாது. அங்க மட்டுமில்லை சுத்துபட்டு ஊருக்கும் அவர தெரியும் எப்ப எத விதைக்கனும், எப்படி உரம் போடனும்னு ஆரம்பிச்சு அவருக்கு விவசாயம் அத்துப்படி.

இரசாயண மருந்தையோ, உயர்ரக விதைகளையோ ஒருநாளும் வாங்கமாட்டாரு மனுசன். மாட்டுசானம், பஞ்சகாவியம்னு நம்மாழ்வார் வழி வந்த இயற்கை விவசாயி. ஆணு ஒன்னு பொண்ணு ஒன்னுனு ரெண்டு புள்ளைங்கள பெத்துபோட்டுட்டு பெரியசாமி பொஞ்சாதி போய் சேந்துட்டா. புள்ளங்களையும் வயக்காட்டையும் ரெண்டு கண்ணா பாத்த மனுசன். 

நல்லா படிக்க வச்சாரு ரெண்டு புள்ளைங்களயும். அம்மா இல்லாத புள்ளைங்கனு அதட்டக் கூட மாட்டாரு. மவள ஐடி கம்பெனியில வேல பாக்குற மாப்பிள்ளைக்கு சீரும்சிறப்புமா கட்டிக் குடுத்தாரு. கம்பியூட்டர் அடிக்கிற கை கலப்ப புடிக்க மாட்டேனு சொல்லவும் மவன அவன் போக்குல வேலைக்கு அனுப்பிட்டு தனியாள வயக்காட்ட பாத்துக்கிட்டாரு. 

அண்ணே….,

வாப்பா முத்து என்ன இந்த பக்கம் .

இல்லண்ண நம்ம ஊருக்குள்ள ஏதோ பைபாஸ் ரோடு வரப்போவுதாம்ல அதுக்கு நம்ம நிலத்த குடுத்த காசு குடுக்காங்களாம் அதான் அண்ணுக்கு விவரம் தெரியுமோ என்னமோனு சொல்ல வந்தேன்.

என்டா பேச்சு இது காசு தாராங்கங்குறதுக்காக சோறு போடுற நிலத்த குடுக்கிறதா. உங்களுக்கு கிறுக்குகிறுக்கு ஏதும் புடிச்சுபோச்சா மடப்பசங்களா. அவன் குடுக்குற காச வச்சு எம்புட்டு நாளுடா உக்காந்து திங்க முடியும்.

அண்ணே அதுக்காக மழதண்ணிய எதிர்பார்த்து எம்புட்டு நாளைக்கு ஓட்ட முடியும் சொல்லுங்க. ஓங்களுக்கு என்ன அண்ணே நீங்க புள்ளைய கட்டிகுடுத்துட்டிய, மவனையும் படிக்க வச்சு வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிட்டிய நாங்க அப்படியா எங்க புள்ள குட்டிய பாக்கவேண்டாமா.

அதெல்லாம் சரிப்பா அதுக்காக நிலத்த குடுத்தா மட்டும் எல்லாம் சரியாகிடுமா. 

சரிணே நா வாரேன் எனக்கு சோலிகிடக்கு.

முத்து சொல்லிட்டு போனதுல இருந்து பெரியசாமிக்கு மனசு கிடந்து தவிக்க ஆரம்பிச்சிட்டு. உழவுற நிலத்த இப்படி குடுக்கபோறேனு சொல்லுறானேனு வருத்தப் பட்டாரு. ஆனா அவருக்கு அப்ப தெரியல நமக்கும் இதுதான் கதினு.

அரசாங்கம் நிலத்த எடுத்துகிட்டு அதுக்கான காச குடுக்க போகுதுங்குற செய்தி காட்டுத்தீயா ஊரு பூராம் பரவுச்சு. பாத வர்ர வழில இருக்கு நிலத்துக்காரருக்குலாம் சந்தோஷம்.

பாதையவுட்டு தள்ளி இருக்குற நிலத்துக்காரவுகளுக்கு கொஞ்சம் வருத்தம். அந்த ஆண்டவன் நமக்கு மழத்தண்ணிய தான் காட்டலனு பாத்த இப்படி அரசாங்கம் எடுத்துகிற வாய்ப்பையும் குடுக்கலயேனு வாய்விட்டு புலம்புனாக. எல்லாரும் பணத்தபத்தி யோசிக்கைல பெரியசாமி நிலத்த பத்தி நினைச்சு வருத்தப்பட்டாரு. 

இரவு சாப்பாட்ட முடிச்சுட்டு படுக்கபோற சமயம் பெரியசாமி போனு அடிச்சது. 

ஹலோ யாரு…

ஐயா நா சரவணன் பேசுறேன்.

ஆங் சொல்லு சாமி எப்படி இருக்க?

நல்லாருக்கேன் ஐயா நீங்க எப்படி இருக்கிய?

இருக்கேன்யா, அத உடு மருமவ பேரப்புள்ளைங்க எப்புடி இருக்காங்க 

எல்லாம் நல்லாருக்காங்கயா. நாங்க அடுத்த வாரம் ஊருக்கு வாரேம்யா.

அப்படியாய்யா சந்தோஷம் .

சரிய்யா நீங்க தூங்குங்க நா போன வைக்கிறேன் என்று இணைப்பை துண்டித்தான் பெரியசாமியின் மகன்.

புள்ளைங்கள பாத்து வருஷக்கணக்காவுது இப்பவாது வரணும்னு தோனுச்சே அதுவே சந்தோஷம் என்று நினைத்தபடியே கயித்துக்கட்டிலில் கண் அயர்ந்தார்.

விடியற்காலை பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தார் பெரியசாமி. என்ன எங்கயோ விரசா போறாப்புல இருக்கு.

அது ஒன்னுமில்லடே மவன் ஊருல இருந்து அடுத்த வாரம் வரப்போறான் அதான் கொஞ்ச பேரப்புள்ளைங்களுக்கு திண்பண்டமும், விளையாட்டு சாமானும் வாங்கலாம்னு டவுணுக்கு போறேன். 

அதானா பாத்தேன் என்னடா நம்ம பெரியசாமியா இது இப்புடி வெள்ளையும் சுள்ளையுமா காலங்காத்தாலே போறானேனு .சங்கதி இதுதானக்கும். 

அட ஆமாப்பா நாலுவருஷத்துக்கு அப்பறம் அந்த பய குடும்பத்தோட வாரான் இல்லைன்ன தனியா வந்துட்டு தனியா போயிடுவான். அதான் பாத்து பாத்து வாங்கனும்ல. 

சரிசரி நீ பாத்து போயிட்டு வா நா போறேன்.

ம்ம்…

சீனிசேவு, காராச்சேவு, கருப்பட்டி மிட்டாய் என பேரப்புள்ளைங்களுக்கு திண்பண்டமும் பேரனுக்கு தள்ளுவண்டியும், பேத்திக்கு கண்ணாடிவளவியும், கலர் போட்டும் என பட்டியல் போட்டு அனைத்தையும் வாங்கிமுடித்து வீடு வந்து சேர்ந்தார் பெரியசாமி.

சொன்னது போல பெரியசாமியின் மகனும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான். அவன் வந்த மறுநாளே அவனின் தங்கை கனகவல்லியும் தன் குடும்பம் சகிதமாக வந்து இறங்கினா. 

பெரியசாமியின் மகிழ்ச்சிக்கு அளவில்லை கோவில் திருவிழா, குலதெய்வ வழிபாடு, உடல் நலக்குறைபாடு என எத்தனையோ தடவை அழைத்தும் வாராத மகனும் மகளும் கூப்பிடாமலே வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார் பெரியசாமி.

ஆத்துல குளிக்கறது, தோட்டத்துல சுத்துறதுனு வந்து ரெண்டுநாள பொழுத போக்குன சரவணன் மெதுவா பேச்ச ஆரம்பிச்சான் ஒரு நாளு.

ஐயா நம்ம வயக்காட்டலாம் அரசாங்கம் வாங்க போகுதாம்ல 

ஆமாப்ப நானே உங்கிட்ட சொல்லனும்னு இருந்தேன். சரி இப்ப தான வந்துருக்கு ஒரு வாரம் போகட்டுமேனு பாத்தேன். அதுக்குள்ள உங்கிட்டயும் சொல்லி புட்டானுங்களாக்கும் இந்தப்பயலுங்க. அது ஒன்னுமில்லப்பா ஏதோ நாலுவழிச்சாலைக்கு இடம் வேணுமாம் அதுக்காக வயக்காட்ட கேக்குறாங்க. நா முடியாதுன்னு சொல்லிப்புட்டேன். இந்த முத்து பய இருக்கானே மொத ஆளாப்போயி நிலத்த குடுத்துட்டு பணத்த வாங்கிட்டு வந்துட்டான். மடப்பய சொன்னாலும் கேக்கல.

ஐயா நம்மளும் குடுத்தா என்னய்யா, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கிடந்து கஷ்டப்பட போறீங்க. 

ஏலேய் என்ன வார்த்தை பேசுற. வெளிநாட்டுக்கு போயி நாலு காசு பாத்ததும் நமக்கு சோறு போட்ட நிலத்த கூறு போட பாக்கியளோ நடக்காதுடே பாத்துக்க.

பெரியசாமி குரல் உயரவும் அவரின் பேரன் ஓடி வந்து பார்க்க சுதாரித்த பெரியசாமி போய் படு காலைல பேசிக்கலாம் என்ற படி தன் கயித்துகட்டிலில் சரிந்தார்.

உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த பெரியசாமிக்கு மகனிடம் குரலை உயர்த்தியது அரிச்சலாகவே இருந்தது. விடிந்ததும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எண்ணியபடியே கண் அயர்ந்தார்.

மேலத்தெரு மாரிமுத்துவும் ஒரு தடவ நிலத்த குடுக்கசொல்லி கேட்டுப்பாத்தான், ஆனா மனுசன் விடாப்பிடியா நின்னுட்டாரு முடியாதுனு. நிறைய ஆபிசருங்க கூட வந்து கேட்டு பாத்தாங்க. ஆனா முடியாதுனா முடியாதுனு மறுத்துட்டாரு. ஏனா அவருக்கு இந்த நிலம் சோறு போடுற நிலம் மட்டும் இல்ல, அதுக்கும் மேல.

குடும்ப பெருமை. இந்த காசியப்பபுரத்துலயே ஐம்பதுஏக்கர் நிலம் வச்சுருக்குறவுக இவரு மட்டும் தான். கடலை, பயிறு, நெல்லு, கம்பு, சோளம்னு எல்லாமும் விதைப்பாக .பரம்பர பரம்பரயா விவசாயம் பண்ணுறவக யாரும் உதவினு கேட்டு வாசலுக்கு வந்த வெறும் கையோடு அனுப்ப மாட்டாங்க. 

பெரியசாமிக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து வீட்டுல இருந்த விட வயக்காட்டுல இருந்தது தான் அதிகம். கடலை போடுற சமயம் கடல ஓடைக்குறவங்க கூட உக்காந்து கடலை திண்ணே வயித்த நெறப்பாரு. அறுவடை முடிஞ்சு நெல்ல கொண்டாந்து அதுக்குன்னே இருக்குற பெரிய டிரம்ல போட்டு அவிக்கும் போது வருமே ஒருவாசம் அந்த வாசத்துக்காகவே அவிக்கிற இடத்துலயே கிடப்பாரு. 

அவிச்ச நெல்ல குத்தி அரிசியாக்கி, வீட்டு தேவைக்கு எடுத்தது போக மிச்ச எல்லாம் விக்க சந்தைக்கு அனுப்பிடுவாக. நெல்ல எடுத்ததுக்கு அப்பறம் இருக்குற வைக்கோலுல குதிச்சு சண்டை போட்டு திறிஞ்சதுலாம் ஒருகாலம்.இப்படி வயக்காடும் அது சார்ந்த வேலையும் கெதினு கிடந்த மனுசன்கிட்ட வயக்காட்ட குடு பணம்தாறோம்னா சரினு சொல்லுவாறாக்கும்

பொழுது விடிஞ்சதும் பெரியசாமி மவன தேடி போனாரு, ஆனா அவன் அந்த ரூம்ல இல்ல. சுத்திமுத்தி தேடிபாத்தாரு, தோட்டத்துல யாரு கூடயோ நின்னு பேசுறமாதிரி தெரிஞ்சது. 

யாருன்னு பாக்க பெரியசாமியும் கிட்ட போனாரு. அன்னைக்கு வீட்டுக்கு வந்து பணம் தாறேனு சொல்லி நிலத்த கேட்ட ஆபிஸர் மாதிரி இந்தது. கிட்ட நெருங்க நெருங்க அது ஊர்ஜிதம் ஆனது.

பெரியசாமிக்கு கோவம். ஏன் யா ஆபிஸரு நான் தான் அன்னைக்கே தெளிவா சொன்னேன்ல இப்படி மறுபடி மறுபடியும் வந்து தொல்லப்பண்ணுனா எப்படி.

ஐயா, கொஞ்சம் பொருங்க. அதான் நா பேசிட்டு இருக்கேன்ல.

இதுல பேச என்ன இருக்கு. முடியாதுன்னு சொல்லி அனுப்பு யா.

சரிப்பா நீங்க போங்க…

பெரியசாமி வீட்டுக்குள் சென்றதும் என்ன மிஸ்டர் நிலத்த தரேன்னு சொல்லி அட்வான்ஸ் வாங்கிட்டு இப்ப ஏமாத்தலாம்னு பாக்கிய தூக்கி உள்ள வச்சுடுவேன் பாத்துக்கோ.

அப்படிலாம் இல்ல சார் எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நா எப்படியாவது பேசி எங்க ஐயாவ வழிக்கு கொண்டு வாரேன்.

உனக்கு ஒரு வாரம் தான் டைம் அதுக்குள்ள பத்திரம் பதியனும் இல்ல உன்மேல கேஸ் போடுவேன் ஜாக்கிரதை.என எச்சரித்து விட்டு சென்றார் அதிகாரி.

கனகவல்லிக்கோ தன் அண்ணன் மீது கோவம் வந்தது .

நா எத்தன தடவ சொன்னேன். ஐயா இதுக்குலாம் ஒத்துக்க மாட்டாருனு நீ எம் பேச்சக் கேட்டியா. எல்லாம் சமாளிச்சிடலாம்னு சொன்ன இப்ப பாரு நிலத்த பத்தி பேசுனாலே ஐயா கோவப்படுறாரு இதுல எப்படி அவர சம்மதிக்க வைக்க.

நா என்னமோ எனக்காக மட்டும் இந்த முடிவ எடுத்த மாதிரி நீ பேசுற. நீயும் தான அன்னைக்கு சொன்ன நல்ல விலைக்கு நிலத்த குடுத்துட்டு ஐயாவ நா எங்கூட கூட்டு போறேன், பணத்த நாம ரெண்டுபேரும் பிரிச்சுக்கலாம். ஐயா இருக்குற வரைக்கும் நானே பார்த்துக்கிறேன்னு நீயும் தான சொன்ன. இப்ப நா மட்டும் தனிய முடிவு எடுத்த மாதிரி மாத்தி பேசுற.

அப்ப ஒரு வேகத்துல சொல்லிட்டேன். ஆனா இப்ப நினைச்சா பயமா இருக்கு ணா.

சரி பயப்படாத பாப்பா இராத்திரி சாப்பாட்டுக்கு அப்பறம் ஐயாக்கிட்ட பேசலாம் சரியா..,

ம் ம் .. 

ஐயா உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்று ஆரம்பித்தான் பெரியசாமி மகன் 

என்னய்யா சொல்லு. ஊருக்கு கிளம்ப போறீயளா..,

இல்லையா..,

அப்பறம்…,

அதுவந்து நம்ம நிலத்த குடுக்குறத பத்தி…,

மகன் சொல்லி முடிக்கும் முன்னமே ஆவேசமானார் பெரியசாமி.

காலைலயே உங்கிட்ட நா என்ன சொன்னேன் இந்த பேச்ச இத்தோட உட்டுட்டு வேற சோலி கிடந்த பாரு போ என்றார் காட்டமாக.

இல்லையா 

அதான் நா சொல்லிட்டேன்ல அப்பறம் என்ன .

ஐயா அதான் அண்ண பேசணும்னு சொல்லுதுல, அது என்ன தான் சொல்ல வருதுன்னு கேளுங்களேன்யா. 

பெரியசாமி மகனையும் மகளையும் பார்த்தார். இருவரும் ஏற்கனவே பேசிவைத்து முடிவை தன்னிடம் சொல்ல வந்திருப்பது நன்றாக புரிந்தது.அமைதியானார் பெரியசாமி.

கனகு தான் ஆரம்பித்தா. ஐயா இன்னும் எத்தன நாளைக்கு இப்படி கஷ்டப்பட போறீக. எங்களாலயும் அடிக்கடி இங்க வந்து உங்கள பாக்க முடியல. உங்கள அங்க வாங்கன்னு சொன்ன வயக்காட்டு சோலிய போட்டுட்டு எப்படி வாறதுனு சொல்லுறீங்க. 

பேசாம இது குடுத்துட்டு எங்களோட வந்துருங்கய்யா.  கடைசி காலத்துல பேரப் புள்ளைங்கள கொஞ்சிக்கிட்டு அதுங்களோட இருங்கய்யா .இதுக்குமே சம்பாதிச்சு யாருக்கு குடுக்கபோறீக.

நா என்ன செய்யனும் செய்யக்கூடாதுனு சொல்லுற அளவுக்கு வளந்துட்டிங்களோ ரெண்டுபேரும். நா பாடுபடுறது உங்களாட்டம் காசுக்காக கிடையாது அத தெரிஞ்சுக்குங்க  இது என் குலசாமி பரம்பரை பரம்பரையா நாங்க பாக்குற சோலிய பணத்துக்கு விக்க சொல்லுதியலோ.

ஐயா உங்க காலத்துக்கு அப்பறம் நாங்க இங்க வந்து விவசாயம் பண்ணப்போறதில்லை அப்பறம் எதுக்கு அத குடுக்க மாட்டேனு சொல்லுறீங்க. இதுவரை பேசிய எல்லா வார்த்தையும் காற்றில் பறந்தது. நாங்க இங்க வந்து விவசாயம் பண்ணபோறதில்லை என்ற வார்த்தை மட்டும் திரும்ப திரும்ப ஒலித்தது பெரியசாமியின் காதில்.

எதுவும் பேசாமல் சிலையானார் பெரியசாமி. பின்ன, முடிவு எடுத்துவிட்டு தகவல் சொல்பவர்களிடத்தில் என்ன பேச முடியும். 

இவ்வளவு நாள் வா வானு கூப்பிட்டுப் வராத பிள்ளைங்க வந்ததன் காரணம் புரிந்தது பெரியசாமிக்கு.  வழக்கம் போல கயித்துக்கட்டில்ல வந்து படுத்தாரு.

காலைல பேசிக்கலாம் பாப்பா இப்போ போனு சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான் .

என்ன சொல்லுறாரு உங்க அப்பா விக்க சம்மதிப்பாரா இல்லையா. இத வித்து வர்ற காச நம்பிதான் நாம புது பிளாட்டுக்கு அட்வான்ஸ் குடுத்துருக்கோம். அதனால இது வித்தே ஆகனும் புரிஞ்சுதா.

சரி சரி எல்லாம் எனக்கு தெரியும் நீ போ போய் படு.

ஆமா என் வாய அடக்க மட்டும் தான் முடியும் உங்களால 

கனகோ தன் கணவனை ஏகத்துக்கும் முறைத்தபடி இருந்தாள். 

என்னடி என ஏன் இப்படி முறைக்கிற.

முறைக்காம உங்கள கொஞ்சுவாங்களாக்கும். நா எவ்வளவு சொன்னேன். எங்க ஐயா நிலத்த விக்க சம்மதிக்க மாட்டாருனு. நீங்க நான் சொல்ல சொல்ல கேக்காம எங்கண்ணன வேற ஏத்தி விட்டிங்க இப்ப பாருங்க. அய்யா முடியாதுனு ஒத்தக்காலுல இருக்காரு.

அடியேய் நா என்ன வித்த காச எனக்கு மட்டுமா எடுத்துக்க போறேன். மச்சானுக்கும் சேத்து தானே யோசிச்சு சொன்னேன். அப்பம் சரி சரினு சொல்லிட்டு இப்ப வந்து பெளம்புறவ. 

அப்ப எப்படியாவது சமாளிச்சுடலாம்னு தோனுச்சு ஆனா இப்ப முடியாது மாமா.

அடி போடி எல்லாம் முடியும், உங்களுக்கு பேசி காரியம் சாதிக்கதெரிலனு சொல்லு.

தூக்கம் வராமல் தவித்த பெரியசாமி வீட்டுக்குள் வர இவர்கள் பேசுவது காதில் விலவும் மனமுடைந்தார். தன்னை பார்க்க வந்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தவருக்கு இது பெரிய வருத்தமாக இருந்தது.

பொழுது விடிந்தது வழக்கம்போல எழுந்து கன்றுக்கு பாலை காட்டிவிட்டு தொழுவத்தை சுத்தம் செய்யும் பெரியசாமி இன்னும் எந்திரிக்கவில்லை.

பதட்டத்துடன் அருகில்வந்த கனகு தன் அண்ணனை அழைத்தாள். உடம்பு முழுக்க குளிர் பரவி ஜில் என்று இருந்தது. நாடிபார்க்கும் கிழவன் ஒருவன் வந்து இறப்பை ஊர்ஜிதப்படுத்த. இருவரும் செய்வதறியாது நின்றனர். 

கோவில் போல இருந்த மனுசன் இப்படி சாஞ்சுபுட்டாரேனு ஊரே வருந்த, தன் தந்தை மரணத்திற்கு காரணம் தாங்கள் என்ற குற்ற உணர்ச்சியில் தவித்தனர் இருவரும்.

இன்றோடு பெரியசாமி மறைந்து ஏழு நாட்கள் கழிந்திருந்தது. அட்வான்ஸ் வாங்கிய படியால் ஒப்பந்தத்தை மீறாமல் நிலத்தை வித்துவிட்டு தங்கள் இடங்களுக்கு பயணப்பட்டனர்.

தங்களுக்கு என்று இருந்த ஒரு இடமும் இல்லாமல் போன சோகத்தோடு இறக்க முடியாத பாரத்தோடு பயணப்பட்டனர்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொல்லாமலே யார் பார்த்தது?! (அத்தியாயம் 2) – இரஜகை நிலவன்

    புத்தக பேய் (ஒரு பக்க கதை) – செந்தில் செழியன்