2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஹும்… லவ் பண்ண ஆரம்பிச்ச ஒரே மாசத்துல அவனவன் டேட்டிங் கூட்டிட்டுப் போறானுக!… நானும் உன்னைய மூணு வருஷமா லவ் பண்ணிட்டிருக்கேன்!… உன்னை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறதுக்கே பெரும் பாடு பட வேண்டியிருக்கு!… இங்க பாரு ப்ரியா.. கடைசியாக் கேட்கறேன்.. இன்னிக்கு என் கூட சினிமாக்கு வருவியா?.. வர மாட்டியா?” பக்கத்தில் நிற்பவர்கள் தன்னை விநோதமாகப் பார்ப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவனாய் செல்போனில் கத்திப் பேசினான் வினோத்.
யோசித்துப் பார்த்தாள். “இவன் சொல்வதும் உண்மைதான்!… எனக்காகத்தானே இவ்வளவு பொறுமையா இருக்கான்… இந்த ஒரு முறை அவன் சினிமா ஆசையை நிறைவேத்தினால்தான் என்ன?”
“சரி… சரி… கத்தாதே.. வர்றேன்” மறுமுனையில் ப்ரியாவின் ஒப்புதல் கிடைத்ததும்,
போனிலேயே விஸிலடித்தவன், “த பாரு.. சரியா அஞ்சரை மணிக்கு சாமுண்டி தியேட்டருக்கு வந்துடு” என்றான்
அதைக் கேட்டதும் “திக்”கென்றானது ப்ரியாவிற்கு. “அய்யோ.. அங்க நான் வர மாட்டேன்பா.. அந்தத் தியேட்டர்ல பேய் உலாத்தறதா சொல்றாங்க” சொல்லும் போதே அவள் குரல் நடுங்கியது.
“ஹா… ஹா… ஹா…”வென்று வாய் விட்டுச் சிரித்தவன், “ஏய்.. அதெல்லாம் சும்மா… கப்ஸா.. நம்ம மாதிரி ஜோடிக மத்தவங்க தொந்தரவு இல்லாம ஜாலியா இருக்கணும்கறதுக்காக அப்படியொரு வதந்தியப் பரப்பி விட்டிருக்காங்க… நீ பயப்படாம கரெக்ட் டைமுக்கு வந்துடு… என்ன?” என்றான்.
“ஓ… அப்படியா விஷயம்?… நான் கூட உண்மையிலேயே அந்த தியேட்டர்ல பேய் இருக்குன்னுதான் இத்தனை நாளு நினைச்சிட்டிருந்தேன்!… ஆமா… நான் வர்றது இருக்கட்டும்… நீ கரெக்ட் டயத்துக்கு வந்துடுவியா?… அதைச் சொல்லு முதல்ல” ப்ரியா அவனைத் திருப்பிக் கேட்க,
“ம்ம்ம்….” சில விநாடிகள் யோசித்தவன்.. “வந்துடுவேன்.;. ஆனா… கொஞ்சம் லேட்டாகும்.. அவ்வளவுதான்” மழுப்பலாய் பதில் சொன்னான்.
“அப்படின்னா இன்னிக்கு ப்ரொக்ராமைக் கேன்சல் பண்ணிடலாமே” ஈஸியாய்ச் சொன்னாள் அவள்.
அரண்டு போனவன், “ம்ஹும்… அந்த வேலையே ஆகாது… நான் மதியமே உங்க ஆபீஸூக்கு வந்து உன்னோட டிக்கெட்டைக் குடுத்துடறேன்.. நீ தியேட்டருக்குப் போய்டு… அங்க எனக்காக வெய்ட் பண்ணு..” என்றான்.
அரை மனதுடன் சம்மதித்து போனை அணைத்தாள் ப்ரியா. “இவன் கரெக்ட் டைமுக்கு வந்திடுவானா?… இல்லை எப்பவும் பண்ற மாதிரி என்னை ரொம்ப நேரம் காக்க வெச்சிட்டு வருவானா?” அப்போதே அவள் மனத்தில் அந்தச் சந்தேகம் விழுந்தது.
மாலை. சாமுண்டி தியேட்டர் வாசலில் ஆறரை மணி வரை வினோத்துக்காக காத்திருந்த ப்ரியா அவன் வராமல் போக மொபைலுக்கு அழைத்தாள்.
“டேய்… நீ இப்ப வர்றியா?… இல்லை நான் இப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடவா?… ரொம்ப நேரமா நான் நிற்பதைப் பார்த்து சில விடலைப் பசங்க கண்ணடிக்கறானுக தெரியுமா?”
‘அய்யோ… அப்படியெல்லாம் திரும்பிப் போயிடாதே!… நான் ஆபீஸிலிருந்து கிளம்பிட்டேன்!… பத்து நிமிஷத்துல அங்க வந்திடுவேன்!… நீ வேணா ஒண்ணு செய்யி!.. தியேட்டருக்கு வெளிய நின்னால்தானே பசங்க டீஸ் பண்றானுக?… பேசாம தியேட்டருக்குள்ளார போயிடு… நான் வந்து உள்ளார ஜாயின் பண்ணிக்கறேன்… என்ன… ஓ.கே…வா?” கெஞ்சலாய்க் கேட்டவனின் குரலில் வழிந்த காதல் ஏக்கம் அவளை உருக்கி விட, சம்மதித்தாள்.
“ஹும்… இப்படித் தேன் மாதிரிப் பேசிப் பேசியே என்னை மயக்கிடறான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு தியேட்டருக்குள் நடந்தாள் ப்ரியா.
“நான் ரெடிதான் வரவா?… அத்தான் நான் இறங்கி வரவா?” என்று பாடியபடியே அவளை விகாரப் பார்வை பார்த்தவனை, முறைத்து விட்டுத் தன் இருக்கை நெம்பரைத் தேடிப் பிடித்து அமர்ந்தாள்.
சரியாக பத்தாவது நிமிடம் இருட்டில் தடுமாறிக் கொண்டு வந்து சேர்ந்தான் வினோத்.
“ஸாரி ப்ரியா… இன்னிக்கு ஆபீஸ்ல ஹெவி வொர்க்!… போதாக் குறைக்கு வர்ற வழில டிராபிக் வேற ஜாம் ஆயிடுச்சு… அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு” வழக்கமான வினோத்தின் குரல் லேசாய் மாறியிருந்தது
“தெரியுமே… இப்படி ஏதாவதொரு சாக்கு சொல்லுவேன்னு” பொய்க்கோபம் காட்டினாள் ப்ரியா. தொட வந்த அவன் கையைத் தட்டி விட்டாள்.
அவள் கோபத்தை மாற்றும் விதமாய் அவள் காதருகே சென்று “என்ன டியர்… கோபமா?” என்றான் ஹஸ்கி வாய்ஸில்.
வழக்கமாய் அவனிடமிருந்து வியர்வை வாசத்திற்கு பதிலாய் இன்று வித்தியாசமானதொரு நறுமணம் வீச, “என் கூட உட்கார்ந்து படம் பார்ப்பதெற்கென்றே பர்ஃப்யூம் போட்டுட்டு வந்திருக்கான்” என நினைத்துக் கொண்டவள், “ம்ம்.. இல்லை” கிறங்கிப் போய் பதில் சொன்னாள் அவள். தொடர்ந்து அவன் தன் அத்துமீறல்களைப் பிரயோகிக்க அவள் மறுப்பது போல் மறுத்து அந்தச் சுகத்தை அனுபவிக்கலானாள்.
நெஞ்சுக்குள் பெய்தது மாமழை, நீருக்குள் மூழ்கியது தாமரை. சட்டென மாறியது வானிலை.
ஒரு கட்டத்தில் அவன் உஷ்ண மூச்சு உக்கிரமாய் அவள் கழுத்தை எரிக்க “என்ன வினோத் உன்னோட மூச்சு இவ்வளவு சூடாயிருக்கு?… என் கழுத்தே வெந்திடும் போலிருக்கு!… என்ன?… அய்யாவுக்கு செம மூடா?” கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.
அவனிடமிருந்து பதிலில்லை.
ஆனால் செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்க, “என்ன மேன் பேச மாட்டேங்கறே?” என்றபடி அவன் கையை எடுத்து ஆள்காட்டி விரலை செல்லமாய்க் கடித்தாள்.
அடுத்த விநாடி.
அதிர்ச்சிக்குள்ளானாள்.
அந்த விரல் மட்டும் தனியே கழன்று அவள் வாயில் தொங்கியது.
“த்தூ” என்று அருவருப்பாய்த் துப்பியவள் “டேய்… வினோத்…உன் விரல்…”
அப்போதும் அவனிடமிருந்து பதிலில்லை.
மிரட்சியுடன் அவன் பக்கம் திரும்பி அவன் தாடையைத் தொட்டுத் திருப்பினாள்.
“சொத்” தென்று அவன் தலை கழன்று அவள் மடியில் விழுந்தது.
“வீல்”.
அவள் கத்தலில் படம் நிறுத்தப்பட்டு தியேட்டரில் லைட் போடப்பட்டது.
தன் இருக்கையில் பிணமாய்க் கிடந்த ப்ரியாவின் வாயோரம் ரத்தக் கோடு.
பக்கத்து இருக்கை காலியாயிருந்தது.
கூட்டம் மிரண்டோடியது.
அதே நேரம், தியேட்டருக்கு வெளியே பைக்கிலிருந்து இறங்கிய வினோத் தியேட்டரின் மெயின் கேட் சாத்தப்பட்டிருக்க வாட்ச்மேனைத் தேடி விட்டு, அவன் கண்ணில் படாது போக,
“ஹூம்..நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்.. கஷ்டப்பட்டு அவளைச் சம்மதிக்க வெச்சு சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்தும்…. பக்கத்துல உட்கார்ந்து படம் பார்க்க… லேசா சில்மிஷம் பண்ண முடியாமப் போச்சே” தாமதமாய் வந்ததற்காக தன்னைத்தானே நொந்து கொண்டு “சரி…அவளாவது நிம்மதியாப் படம் பார்த்திட்டு வீட்டுக்குப் போகட்டும்!… நாளைக்கு போன்ல பேசி சமாதானம் பண்ணிக்கலாம்!”
பைக்கைத் திருப்பினான்.
——–
மறுநாள்… செய்தித்தாளில்… “தியேட்டரில் இளம்பெண் மர்ம சாவு.. ஆவி வேலையா?.. பொது மக்கள் பீதி”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings