in , ,

உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 7) – தி.வள்ளி, திருநெல்வேலி.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மருத்துவமனை ஐ.சி.யூ.வில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர். தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்றாலும், அவ்வப்போது உள்ளே வரும் வருணை அனுமதி மறுக்கக் கூடிய தைரியம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு இல்லை.

அதனால் நாளில் ஓரிருமுறை அவன் உள்ளே வந்து அப்பாவின் அருகே ஒரு அரைமணி நேரம் அமர்ந்து விட்டுச் செல்வான்… அந்த சமயம் மேனேஜர் வர, வருண் அவரை உள்ளே கூப்பிட்டனுப்பினான்.

அதேநேரம் தூக்கத்திலிருந்து கண் விழித்த ராகவேந்தர் மகனைப் பார்த்ததும்… அவனிடம் பேச கூப்பிட நினைத்த போது வருண் அப்பாவை கவனிக்கவில்லை.

மேனேஜரை உள்ளே அழைத்தவன், “மேனேஜர்.. நம்முடைய ராகவ் மார்பிள்ஸ்ல எத்தனை பேர் வேலை பாக்குறாங்க…. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேல இருக்கும் இல்லையா… அவர்களுடைய தனிப்பட்ட விவரங்கள் எல்லாவற்றையும் நாம வாங்கி வைச்சிருக்கோம். அந்த விபரங்களை செக் பண்ணுங்க. ஒவ்வொருவருடைய பைலையும் நல்லா கவனிச்சு அவர்களுடைய ரத்த வகை என்ன என்பதை கவனமா பாருங்க… அதிலிருந்து அப்பாவுக்கு தேவைப்படும் ‘O’ நெகட்டிவ் குரூப் இரத்தம் உள்ளவங்க யார் யாரென்று பாருங்க… இதை வெளியில தெரியாம சத்தமில்லாம செய்யுங்கள்” என்று கூற, மேனேஜர் பெரிதாக தலையாட்டினார்.

ராகவேந்தருக்கு சரியாக புரியவில்லை, எதற்காக மகன் அவர்களுடைய பைலில் உள்ள தொழிலாளர்கள்  இரத்த குரூப் பற்றிய விபரங்களை பார்க்கச் சொல்கிறான் என்று தெரியவில்லை …திரும்பத் தூங்க தொடங்கினார்.

வருண் ஐ.சி.யு.வை விட்டு யோசனையோடு வெளியே வந்தான். தான் நினைப்பது நடக்கும் பட்சத்தில்.. அப்பாவுக்கு எளிதாக கிட்னி கொடுக்கக்கூடிய டோனரை கண்டுபிடித்து விடலாம்  அப்பாவையும்   ஆபரேஷன் பண்ணி காப்பாத்திடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

மறுநாள் அதே நேரத்துக்கு வருண் அப்பாவின் அருகில் அமர்ந்திருக்கும் போது மேனேஜர் வந்தார். வந்தவர் கையில் பெரிய பைல் இருந்தது …வருண் மேனேஜருடன் பேசும் முன் நர்சை ஏறிட்டுப் பார்க்க… அவள் குறிப்பறிந்து  வெளியே கிளம்பிப் போனாள். அப்பாவை ஏறிட்டுப் பார்த்தான் அவர் கண் மூடி தூங்குவது தெரிந்தது.

திருப்தியுடன் தலையசைத்தவன், “என்ன மூர்த்தி சார்…. வேலை காயா பழமா. .நான் சொன்ன வேலைய முடிச்சிட்டீங்களா?” 

“ஆமா தம்பி… நைட் புல்லா நான் ஆபீஸ்ல தான் இருந்தேன்..”

“நம்ம ஆபீஸ் சிஸ்டத்தில் அவ்வளவு பேருடைய முக்கிய தகவல்களும் பதிவாகியிருக்கு .எல்லாத்தையும் பாத்துட்டு வந்தேன். ஆனா ரொம்ப குறைவா ரெண்டு மூணு பேர் தவிர யாருக்கும் இந்த வகை ரத்தம் இல்லை ..”

“ஒருத்தன் அசோக்குமார் நாம கூட அன்னைக்கு  கோடௌன்ல …”

“சரி சரி அவனப் பத்தி இப்ப இங்க  பேச வேண்டாம்..அது முடிஞ்சு போன கதை ..இனி அவனால நமக்கு பிரயோஜனம் கிடையாது …”

“இன்னொருத்தன்…வடநாட்டுக்காரன்….இப்ப இங்க இல்ல …ஒரு மாசம் லீவு போட்டுட்டு பீகாருக்கு போயிட்டான்…”

அவன் அட்ரஸ் நம்மகிட்ட இருக்கு ஆனால் அது உண்மையான அட்ரஸ் தானான்னு தெரியவில்லை சார்..எப்படி இருந்தாலும் அவனை தொடர்பு கொண்டு வரவழைக்க கொஞ்ச நாள் ஆயிடும் ..அவசரத்துக்கு அவன் பிரயோஜனப்பட மாட்டான் ..”

“என்ன மேனேஜர் இப்படி சொல்றீங்க… நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன் …இவ்வளவு பெரிய கம்பெனியில அப்பாவோட  பிளட் குரூப் உள்ளவங்க இவ்வளவு கொஞ்சம் பேர் தானா? ..வேற யாரும் இந்த பிளட் குரூப் இல்லையா? “

மேனேஜர் சற்று தயக்கத்துடன்… “நம்ம முத்து இருக்கான் இல்ல சார்… அவன் இந்த பிளட் குரூப் தான்”

சட்டென்று நிமிர்ந்த வருண்  துள்ளி குதித்தான்.

“என்ன மேனேஜர்  சொல்றீங்க…. கையில வெண்ணெய வைச்சுகிட்டு நெய்க்கு அலஞ்சுகிட்டிருக்கோம்.. முத்துவுக்கு அப்பாவோட பிளட் குரூப்ன்னா  ரொம்ப சௌகர்யமாக போச்சு ..நல்ல செக் பண்ணுனீங்களா?” 

“ஆமாம் தம்பி  அவனுக்கும்’ O ‘ நெகட்டிவ் வகை ரத்தம்…நம்ம ஐயாவுக்கு பொருந்தும் ..”

“வெல்டன் மேனேஜர்… ரொம்ப நல்ல செய்தி சொன்னீங்க…இப்படி லட்டு மாதிரி ஒரு நியூஸ் வச்சுக்கிட்டு எதுக்கு இத்தனை இழுத்து அடிச்சுகிட்டு தயங்கிட்டு இருந்தீங்க .. அப்ப்ப்பா ரெண்டு மூணு நாள் கவலை, டென்ஷனெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது. நாம கேட்கவே வேண்டாம்… தெரிஞ்ச அளுதான்…ரொம்ப நாளா நம்ம கம்பெனில வேலை பாக்குறவன். அப்பா பெயரில் உயிரா  இருக்கிறவன். அவங்க… அப்பா காலத்திலிருந்து நம்ம கம்பெனில வேலை பாக்குறவங்க. முத்து பெரிய ஐயான்னா உயிரை விடுவான்.. கண்டிப்பா அவன் நமக்கு கிட்னி கொடுக்க ஒத்துக்குவான்…நாமளும் பதிலுக்கு அவனுக்கு நல்லா செஞ்சிடுவோம் அவன் பிள்ளைகளுக்கு ஒரு பெரிய தொகையை டெப்பாசிட் போட்டுக் கொடுத்துடுவோம்”

“ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு  தம்பி..நான் முத்துகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன் அவன் பெரியய்யாவுக்கு செய்யணும்னு நினைச்சாலும்  கொஞ்சம் யோசிக்கிறான்.”

“ஆபரேஷனுக்கு பயப்படுறானா? ஒரு கிட்னி தானே அவன் அப்பாவுக்கு கொடுக்கப் போறான் .இன்னொரு கிட்னிய வைச்சுகிட்டுத்தான் வாழ்க்கையை ஓட்டிடலாமே.. அதோட இல்லாம எத்தனை லட்சம் கேக்கிறானோ அத்தனை லட்சம் நான் கொடுக்க தயார்..”

“அது இல்ல தம்பி பிரச்சனை .. அவன் பணத்தையெல்லாம் எதிர்பார்க்கல..ஐயாவுக்கு  கொடுக்க ரெடியா தான் இருக்கான்”

“அப்புறம் என்ன மேனேஜர் யோசனை… முத்துவை கூட்டிட்டு வாங்க, டாக்டர்கள் பரிசோதனை பண்ணி பார்க்கட்டும்… அவனுடைய சிறுநீரகம் சரியாக மேட்ச் ஆனா அப்பாக்கு உடனே ஆபரேஷன் பண்ணிடலாம்”.

“அதுல ஒரு சிக்கல் இருக்கு தம்பி…அவனுக்கு பிறவியிலேயே ஒரு கிட்னிதான் இருக்கு… அத கொடுத்துட்டா உங்களுக்கே தெரியும்  விளைவு… அவன் இறந்துட்டா குழந்தைங்க என்ன செய்யும்னு  நினைச்சு பயப்படுறான். டாக்டர்களும் இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க”

வருணுக்கு கோபம் தலைக்கேறியது ..”முத்து என்ன மாட்டேன் சொல்றது ..டாக்டர்கள் சம்மதிக்க மாட்டாங்களா… எப்படி சம்மதிக்க வைக்கனும்னு எனக்கு தெரியும் .முத்துகிட்ட எப்படி அவனோட சிறுநீரகத்தை வாங்கனும்னு எனக்குத் தெரியும். அவன் உயிரோட இருந்தா தானே, அவன் சம்மதம் வேணும்”

தூக்கிவாரிப்போட்டது மேனேஜருக்கு மட்டுமல்ல… விழித்துக் கொண்டு கண்மூடியபடி அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராகவேந்தருக்கும் தான்… அதிர்ந்து போனார்கள் இருவரும் ..எப்பேர்ப்பட்ட தப்பான விஷயத்தை யோசிக்கிறான் வருண். ஏசியின் குளிரிலும் ராகவேந்தருக்கு வியர்த்தது, மேனேஜர் வெலவெலத்துப் போனார்.

“தம்பி இன்னும் ஒன்னு ரெண்டு நாள் எடுத்துக்குவோம் வேற யாராவது கிடைக்கிறார்களான்னு  பார்க்கிறேன்”

“உமக்கு மூளை இருக்காய்யா… இப்படி கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க.. என்ன பேச வைக்கிறீங்க.. அப்பா இப்ப இருக்கிற நிலைமைல  நாளை கடத்திக்கிட்டு இருக்கிறது சரியா? ..லட்டு மாதிரி ஒரு கையில கிடைச்சிருக்கான் முத்து.  அவன விட்டுட்டு நீங்க இன்னொருத்தனை தேட போறீங்களா இவ்வளவு சொல்லிட்டீங்கள்ள…இது போதும் .. இனி இந்த விஷயத்தை என்கிட்ட விட்ருங்க.. இதை எப்படி முடிக்கனும்னு எனக்கு தெரியும் நீங்க போகலாம் மேனேஜர் …

எதற்கோ திட்டம் போடுகிறான் வரும் என்பது புரிய மேனேஜர் மன குழப்பத்தோடும்..மனக்கஷ்டத்தோடும் வெளியேறினார். 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 6) – தி.வள்ளி, திருநெல்வேலி.

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 19) – ஜெயலக்ஷ்மி