in , ,

உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 3) – தி.வள்ளி, திருநெல்வேலி. 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருந்த ‘இருதயா மருத்துவமனை’ நகரின் மிகப்பெரிய, பிரபலமான மருத்துவமனை. சகல வசதிகளையும் உள்ளடக்கியது. அதன் ஐ.சி.யு…வரும் விஐபியை எதிர்கொள்ள பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தது. 

சீப் டாக்டருக்கு தொலைபேசி அழைப்புகள் அடுத்தடுத்து வர, அவர் அவசரமாக ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தார் .உடனே எல்லாத் துறை மருத்துவர்களையும் தன் அறைக்கு வரச் சொல்லி செய்தி அனுப்பினார். .. அனைத்து துறையின் தலைமை மருத்துவர்களும் வந்து சேர, செய்ய வேண்டியவற்றை விளக்கினார் ..

“டாக்டர்ஸ்….’ ராகவ் மார்பிள்ஸ்’ எம்.டி. தொழிலதிபர் ராகவேந்தருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போயிடுச்சு. நம்ம மருத்துவமனையிலிருந்து தான் ஆம்புலன்ஸ் போயிருக்கு அவரை அழைச்சிட்டு வர..ஆம்புலன்ஸ் வருவதற்குள்ள ஐ.சி.யு.ல உள்ள மற்ற பேஷண்ட்களை வேறு இடத்துக்கு மாற்றுங்கள்…அவருக்கு இந்த பிளாக்கை ஒதுக்கி… ஒரு தடுப்பை வைத்து அடைச்சிடுங்க… பேஷண்ட் மட்டுமல்ல ,வேறு யாரையுமே இந்தப்பகுதிக்குள்ள அனுமதிக்க வேண்டாம்.இந்தப் பகுதியில் வேலை பாக்குற ஸ்டாப்கள், வார்ட்பாய் எல்லோருமே இந்த பகுதியை விட்டு வேற இடத்துக்கு போக கூடாது.வெளில உள்ள யாரும் இந்த பகுதிக்கு வரக்கூடாது. சீக்கிரம் ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள எல்லாம் ரெடியாகனும்..” என்று பரபரத்தார்.

சீப் டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்த டாக்டர் ரமேஷ் M.D. D.M. “என்னப்பா ஒரே பரபரப்பா இருக்கு. தொழிலதிபர் ராகவேந்தர் அவ்வளவு பெரிய புள்ளியா? சீஃப் டாக்டர் இவ்வளவு பரபரப்பா இருக்கிறாரே..அவர் அரசியல்வாதியோ மந்திரியோ கூட இல்லை தொழிலதிபர் தானே ..அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா? ” என்றார் சலிப்புடன் ..

வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் இப்படி ஒரு முக்கிய பொறுப்பு வந்தது எரிச்சலாக இருந்தது அவருக்கு.

அன்று மனைவியையும் பிள்ளைகளையும் வெளியே அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னது நினைவுக்கு வந்தது …இங்கே இருக்கும் கூத்தைப் பார்த்தால் வீட்டுக்கு எங்கே சீக்கிரம் போக …அவர் நினைவை கலைத்தது டாக்டர் அமலாவின் வார்த்தைகள் ..

“டாக்டர் ரமேஷ்! நமக்கெதுக்கு வீண்வம்பு ? மிஸ்டர் ராகவேந்தரை அவ்வளவு எளிதாக எடை போடாதீங்க.. அவர் தொழிலதிபர் மட்டுமல்ல .. .கோடீஸ்வரர் மட்டுமல்ல.., பல அரசியல்வாதிகளை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி.. ரொம்ப பவர்ஃபுல்.. கிங் மேக்கர்…” என்றாள் டாக்டர் அமலா.

“ஒரு மணி நேரமா நம்ம சீப் க்கு போன் மேல போன்… சென்ட்ரல் ,ஸ்டேட் ,ஆட்கள் நிறைய பிரஷர் போடுறாங்க… அதான் அவர் டென்ஷனாயிட்டாரு…வி.ஐ.பிகள் அட்மிட் ஆனாலே அவங்க டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் நமக்கு தலைவலி தான் ..பொறுப்பும் அதிகம் கவனமா வேலை பார்க்கனும் ..ஏதாவது பிரச்சனை வந்தால் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் …” என்றார் நியூரோ ஸ்பெஷலிஸ்ட் சரவணன் . 

வாட் பாய் கண்ணன் ஓடிவர,” என்ன கண்ணன்… எங்க ஓடிகிட்டிருக்க… இவ்வளவு பதட்டமா “

“சீப் டாக்டர்… வி.ஐ.பி கேட்டை திறந்து வைக்கச் சொன்னார். தொழிலதிபரையும்,அவர் குடும்பத்தை சேர்ந்தவங்களையும், வி.ஐ.பி கேட் வழியா அழைச்சிட்டு வரச் சொல்லியிருக்காரு…” என்று சொல்லிக் கொண்டே ஓடினான் கண்ணன் …

அவசர அவசரமாக, அந்த ஐ.சி.யு .வில் இருந்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட, ஐ.சி.யு மடமடவென பல மாற்றங்களை எதிர்கொண்டது. தொழிலதிபர் சிகிச்சை பெற தனி சூட் ரெடியானது. அவருடைய குடும்பத்தினர் தங்குவதற்கு தனியாக ஒரு அறை சகல வசதிகளுடன் ஒதுக்கப்பட்டது.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் ரமேஷ் மனதில் ஒரு கசப்புணர்வு பரவியது ‘ ஒரு பணக்கார வி.ஐ.பி… என்றால் எவ்வளவு சுலபமாக காரியங்கள் விரலசைவில் நடக்கின்றன. இதுவே ஒரு சாதாரண மனிதனுக்கு அட்மிஷன் போடுவதற்குள் தலை சுற்றிவிடும்.அத்தனை பார்ம்மையும் பில்லப் பண்ணி கொடுத்த பிறகு தான் அட்மிஷன்..அவன் உயிர் போகும் எமர்ஜென்சியில் இருந்தாலும் சரி.. நடைமுறை நடைமுறைதான்.ஆனால் பணக்காரர்களுக்கு இந்த நடைமுறை எல்லாம் கிடையாது .. மனதின் ஓரத்தில் ஒரு கோபம் எட்டிப்பார்த்தது. பணம் என்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கும், இது தான் உலகம்’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டார். 

அதற்குள் கிடுகிடுவென எல்லா துறையின் மருத்துவர்களும் வர, சீப் டாக்டர்… ராகவேந்தர் அட்மிட் ஆனதும் செய்ய வேண்டிய டெஸ்ட்களையும், சிகிச்சை முறைகளையும், அவர்களுக்கு விளக்கினார். அவர்களே நேரடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார்.

 நரம்பியல் நிபுணர் டாக்டர் சரவணன் சீப் டாக்டரிடம், “தொழிலதிபர் ராகவேந்தரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு, அந்தத் துறை மட்டும் அவரைப் பார்த்தா போதாதா?” என்றார். 

“டாக்டர் சரவணன்.. அவர் அட்மிஷன் ஆவதற்குள்ளேயே, சீப் மினிஸ்டரிலிருந்து சென்ட்ரல் மினிஸ்டர் வரை எல்லோரும் பேசியாச்சு… அவர் மிகப் பெரிய புள்ளி… அவருடைய ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது…அவரை நல்லபடியாக சிகிச்சை பண்ணி வீட்டுக்கு அனுப்பறவரை நமக்கு டென்ஷன்தான்.பெரிய புள்ளிகளோட பிரஷர் நமக்கு வரும்…’

” டாக்டர் ரமேஷ் முழுக்க முழுக்க நீங்கள் கூடவே இருந்து அவரை கவனிங்க… மற்ற அப்பாயின்ட்மெண்ட்கள் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுங்க.அதேபோல ஹாஸ்பிடலில் அவர் இருக்கும் வரை எமர்ஜென்சி ஆபரேஷன்கள் தவிர பிளாண்ட் (Planned) சர்ஜரிகள் எதுவும் வேண்டாம். உங்க எல்லோருடைய ஒத்துழைப்பும் எனக்கு தேவை… எந்தவித தப்பும் நடந்திடக் கூடாது…ப்ளீஸ் பீ கேர்ஃபுல் ” என்றார் சீப் .

அனைவரும் தலையசைத்தனர். “நாங்க பாத்துக்குறோம் சார் நீங்க கவலைப்பட பண்ண வேண்டாம் ” என்று உறுதி அளித்தார் சரவணன் ..எல்லோர் சார்பாகவும். 

அவர்கள் பேசி முடித்த அதே நேரத்தில் ..வலியில் துடித்துக் கொண்டிருந்த ராகவேந்தரை சுமந்தபடி உய்ங்…உய்ங்… என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைந்தது …

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தொடரும் …

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 2) – தி.வள்ளி, திருநெல்வேலி. 

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 4) – தி.வள்ளி, திருநெல்வேலி.