எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நாம் புலம் பெயர்ந்து பணம் ஈட்டுவதற்காக தாய் மண்ணை விட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வந்து இம்மும்பை நகரில் அவசரங்களோடு வாழ்ந்திட்ட போதிலும், நம்முடைய கலாச்சாரம், நம் வாழ்க்கை முறை நம் இரத்தத்திலே கலந்து போனதால் தமிழக கலாச்சார வாழ்க்கை மேம்பாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நம் வாழ்க்கை முறையிலே மிகவும் உயர்ந்த ஒன்றான விருந்தோம்பல் என்னும் உயர்ந்த பண்பை இந்நாடகம் மூலம் சுட்டிக் காட்டி அதனால் ஏற்பட்ட நன்மைகள், எவ்வளவு நட்புறவுகள் உருவாகின்றன என்பதை ஒரு சிறிய கோடிட்டு காட்டிடவே இந்த உதய தாரகை நாடகம் உங்கள் முன்னால்.
குடி குடியைக் கெடுக்கும் என்பது பழமொழி. அதே குடிப்பழக்கத்தின் தீமைகளையும் அதனால் ஏற்பட்ட பலவகை கொடுமைகளையும் அதனால் அழிந்து போன பலருடைய வாழ்க்கையையும் கூட நாம் பல வேளைகளில் கண்கூடாக பார்த்திருக்கவும் செய்திருக்கிறோம்.
குடிப்பழக்கத்தினால் எவ்வாறு மக்கள் பலரின் குடும்பம் பாதிக்கப்படுகிறது. அதனால் எத்தனைக் குடும்பங்களின் அடிப்படை வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதையும் ஒரு கடலின் ஒரு துளியாக தொட்டுக் காட்டியுள்ளோம்.
வாழ்வில் விருந்தோம்பல் என்னும் பண்பு எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பதையும் மதுப்பழக்கம் எவ்வளவு கெடுதலானது என்பதையும் எமது உதய தாரகை நாடகம் மூலம் உணர்த்த முயன்றிருக்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ளங்களிலும் ‘உதய தாரகை’ ஒளிவீசிட எமது அன்பின் நல்வாழ்த்துக்கள்.
காட்சி-1
தேவாலய வளாகம்
பாத்திரங்கள்: சகாய நாதன், எழிலரசி, ரோட்ரிக்ஸ், எமல்டா
சகாய நாதன் : ஹாய் ரோட்ரிக்ஸ் குட்மார்னிங் வாங்க எமல்டா சர்ச்சுக்கு வந்தீங்களா?
எமல்டா: ஆமாம்…… ஆங் உங்க மனைவி எழிலரசி வரவில்லையா?
சகாய நாதன் : அதோ, வந்து கொண்டிருக்கிறாள். (என்றவாறு பின்னே கையை காட்டினார்)
ரோட்ரிக்ஸ்: அதானே பார்த்தேன். சகாய நாதன் எப்போதும் தனியாக வரமாட்டாரே! வணக்கங்க எழிலரசி
எழிலரசி: வணக்கங்க, என்ன இந்த நேரத்திலே இந்தப் பக்கம்?
எமல்டா: சும்மா……பாதரை பார்த்து விட்டு போகலாமென்று வந்தோம். அது சரி நீங்கள்…
சகாய நாதன் : சர்ச் மெயின்டனன்ஸ் பணம் கட்டணும். அப்படியே தேவாலயத்திற்குப் போய் விட்டு வரலாம் என்று நினைத்தோம். என்ன ரோட்ரிக்ஸ் இப்படி வியர்த்துக் கொட்டுகிறது? ஏதாவது பிரச்சனையா?
எமல்டா: அது…
ரோட்ரிக்ஸ் : கொஞ்சம் தலையை சுற்றுகிற மாதிரி இருக்கிறது. (கர்ச்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக் கொள்ள)
சகாய நாதன் : அய்யய்யோ. என்ன பிரச்சனை! எழில் கொஞ்சம் தண்ணீர் பாட்டிலை எடுத்து ரோட்ரிக்ஸ்க்கு கொடு. (எழிலரசி தன் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க வாங்கிக் குடித்தார் ரோட்ரிக்ஸ்)
ரோட்ரிக்ஸ் : சகாய நாதன் உங்களிடம் சொல்வதற்கு ஒன்றும் ரகசியமில்லை. ஆல்கஹாலிக் அனானிமஸ்…. அதான் குடியை நிறுத்துவதற்கு வாரந்தோறும் புதன்கிழமை மதியம் நம் தேவாலயத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதிலே கலந்துக்க வேண்டுமென்று என் மனைவியின் வற்புறுத்தல் தாங்காமல் வர வேண்டிய சூழ்நிலையாகி போய் விட்டது.
சகாய நாதன்: கொஞ்சம் அளவாகக் குடிக்க வேண்டியது தானே?
எமல்டா : என்னது… அளவாகக் குடிக்கிறதா? குடித்து குடித்து குடலில் பாதி வெந்து போச்சு. இன்னும் நிறுத்தவில்லை. என்றால் எனக்கு கணவரே கிடையாது என்ற நிலை. இவரிடம் சொல்லி சொல்லி சலித்துப் போய் விட்டது கேட்கிற மாதிரி தெரியவில்லை.
எழிலரசி : குடிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தானே.
எமல்டா : சின்னக் குழந்தையா? பின்னாலே திரிவதற்கு கொஞ்சம் சொல்லி விட்டு அந்தப் பக்கம் போய் விட்டு வருவதற்குள் எங்கேயாவது போய் குடித்து விட்டு வந்து விடுகிறார்.
சகாய நாதன் : நண்பர்களிடம் சொல்ல வேண்டியது தானே?
எமல்டா : எங்கே அவர்களிடம் சொல்வது அவர்கள் தானே வாங்கிக் கொடுக்கிறார்கள்.
சகாய நாதன் : ஆல்கஹாலிக் அனானிமஸ் ஃபுரோக்ராம் போனால் குடியை நிறுத்தி விடலாமா?
எமல்டா : அப்படித் தான் சொல்கிறார்கள். அதான் பாதரைப் பார்த்து ரோட்ரிக்ஸ்ஸையும் அந்தப் ஃபுரோகிராமில் சேர்த்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக குடியை நிறுத்தி விட்டு விடுவார் என்ற நம்பிக்கை தான்.
சகாய நாதன் : உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள் நாங்கள் வருகிறோம்.
எமல்டா : ஆங். எழிலரசி. இந்த ஞாயிறு உங்கள் வீட்டிற்கு வரலாமென்றிருக்கிறோம். அதிலே எந்தப் பிரச்சனை யுமில்லையே.
சகாய நாதன் : ஒரு பிரச்சனையும் இல்லை. தாராளமாக வாருங்கள்.
எழிலரசி : அதோ பாதர் வெளியே வருகிறார். அதற்குள் பணத்தை கட்டிவிட்டு வந்து விடலாம்.
எமல்டா : நீங்கள் முதலில் போய் பாருங்கள். அப்புறம் நாங்கள் வருகிறோம்.
காட்சி-2
இடம் : சகாயநாதன் வீடு
(எமல்டா, ரோட்ரிக்ஸ் உள்ளே வர சகாய நாதன் வரவேற்கிறார் உள்ளேயிருந்து எழிலரசி வருகிறார்.)
சகாய நாதன் : வாங்க ரோட்ரிக்ஸ்…வாங்க எமல்டா. எப்படி இருக்கீங்க? அப்புறம்…இப்போது எப்படி இருக்கிறார்? குடிப்பழக்கமெல்லாம் விட்டாச்சா?
எமல்டா : எங்கே நிறுத்துகிறார்? சொல்லிச் சொல்லி சலிச்சுப் போச்சு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருமுறை வீட்டிற்குள் விழுந்து விட்டார். பேச்சு மூச்சில்லாமல். அப்புறம் இனி குடிக்கவே கூடாதென்ற பிறகு தான் நிறுத்த முயற்சிக்கிறார்.
எழிலரசி : (உள்ளே இருந்து வந்தவாறு) ஹலோ வாங்க….வாங்க
சகாய நாதன் : குடிக்க தண்ணீர் கொடு.. அவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்.
எமல்டா: இப்போது சாப்பாடெல்லாம் வேண்டாம்.
சகாய நாதன் : இவ்வளவு தூரம் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் சாப்பிடாமல் போனால் எப்படி?
ரோட்ரிக்ஸ்: இல்லை சகாய நாதன். நாங்கள் உங்கள் வீட்டிற்கு பலமுறை வர வேண்டுமென்று நினைத்து வரமுடியவில்லை. நல்லவேளையாக இன்று வந்து விட்டுப் போக முடிந்தது. உணவெல்லாம் வேண்டாமே! தண்ணீர் கொடுங்கள் போதும்.
சகாய நாதன் : அதெல்லாம் ஒன்றுமில்லை. இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள்.
எழிலரசி : இதோ பாருங்க! கொஞ்சம் வந்து விட்டுப் போங்களேன்.
சகாய நாதன் : (உள்ளே போய்) என்ன விஷயம்?
எழிலரசி : நமக்குச் சமைப்பதற்கே அரிசி இல்லை. அவர்களைச் சாப்பிடச் சொல்லுகிறீர்கள். எப்படி முடியும்.
சகாய நாதன் : நான் போய் வாங்கி வருகிறேன்.
எழிலரசி : ஏற்கனவே அளவிற்திகமான கடன். நீங்கள் வேலையில்லாமல் இருக்கிறீர்கள் என்று கடைக்காரனுக்கு தெரிந்து விட்டது. அவனும் இனி கடன் கொடுக்க மாட்டான்.
சகாய நாதன்: பக்கத்து வீட்டு ஏக்நாத் வீட்டில் கேட்டுப் பாரேன்.
எழிலரசி : சும்மாவே நம்மைப் பற்றி ஏளனமாக பேசுகிறவர்கள். நான் கேட்கமாட்டேன்.
சகாய நாதன்: வந்திருக்கிறவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வேண்டாமா? நான் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கிறேன்.
(உள்ளே தென் மலர், சில்வியா, மெர்லின் மூவரும் வருகின்றார்கள்)
எமல்டா : வாங்க மெர்லின். ஹலோ சில்வியா சுகமாக இருக்கிறீர்களா? ஹாய் தேன்மலர் இப்போது உங்கள் வீட்டுக்காரருக்கு உடல் நலம் எப்படி இருக்கிறது.
தேன்மலர் : இப்போது அபாயக் கட்டத்தை தாண்டி விட்டார்கள். இன்னும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறார்கள்.
ரோட்ரிக்ஸ் : ஏன்.. என்னாச்சி?
எமல்டா : உங்களை மாதிரி தான்… இந்த ஆம்பளைங்களை குடிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்டால் தானே!
சில்வியா : ஆமாம்! எழிலரசி எங்கே காணோம்.
(சகாய நாதனும் எழிலரசியும் உள்ளே வர)
எழிலரசி : வாங்க சில்வியா…ஏயப்பா தேன்மலர், மெர்லின் எல்லோரும் வந்திருக்கிறார்களே என்ன விஷயம்!
மெர்லின் : நம்முடைய சபை திருவிழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுதான் எழிலரசிகிட்ட சொல்லி விட்டு போகலாம்னு வந்தோம்.
சகாய நாதன் : எழில் வந்தவர்களுக்கெல்லாம் காபி கொடு. அவர்களுக்கு சாப்பிட சாப்பாடு ஏற்பாடு செய்.
தேன்மலர் : சாப்பாடெல்லாம் வேண்டாங்க கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுங்கள்.
சகாய நாதன் : எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் சாப்பிடாமல் போனால் எப்படி? உணவருந்தி விட்டுச் செல்ல வேண்டும்.
எழிலரசி : (தனியாக) சும்மா வந்திருக்கிறவர்களையெல்லாம் சாப்பிட சொல்கிறீர்கள். நம்மிடம் தேவையான உணவுப் பொருள்கள் இருந்தாலாவது பரவாயில்லை.
சகாய நாதன் : நம்மை பார்ப்பதற்கு வந்திருக்கிறவர்களை பசியோடு அனுப்பலாமா? நான் பக்கத்து வீட்டு ஏக்நாத்திடம் தேவையான அரிசியை வாங்கி வருகிறேன் நீ சமையலுக்கு தயார் செய்.
எழிலரசி : உங்கள் விருப்பம்.
ழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings