எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடர்பயணங்கள் முடித்து அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்த ‘ஹரிகுமார்’ அவரின் அலைப்பேசி அழைத்தது.
“ஹலோ…”
“இது… 94439XXXXX…”
“ஆமா… நீங்க?”
“C-2 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறோம் …கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போங்க”
“எதுக்கு சார் …?”
“நேர்ல வாங்க …தெரிஞ்சிப்பீங்க”
குழப்பத்துடன் ஹரிகுமார் C-2 போலீஸ் ஸ்டேஷன் போய் அங்கு வெளியே இருந்த காவலரிடம், “சார் …கொஞ்ச நேரம் முன்னாடி எனக்கு இங்கே இருந்து போன் வந்தது …”
“உள்ளே போ ஐயாவைப் பாரு”
உள்ளே சென்ற ஹரிகுமார் …காவல் ஆய்வாளர் என்ற பெயர் பலகையைக் கொண்ட மேசை அருகே சென்று… “சார் …நான் ஹரிகுமார்…கொஞ்ச நேரம் முன்னாடி இங்கே இருந்து போன் வந்தது …”
“ஓ …நீதானா அது … ஒரு தற்கொலை கேஸ் …அந்த பெண்ணின் போனுக்குக் கடைசியா உன் போன்ல இருந்து தான் 15 நிமிஷம் கால் போயி இருக்கு …அதான் விசாரணைக்குக் கூப்பிட்டோம்”
பேரதிர்ச்சி தாக்க …. “என்ன சார் சொல்லறீங்க?”
“94439XXXXX…இது உன் நம்பர் தானே ?!”
“ஆமா சார் …”
“இந்தா…அந்த இறந்த பெண்ணின் கால் ஹிஸ்டரி …பாரு”
“சார்…இப்பதான் நினைவு வருது …நான் இரண்டு நாளுக்கு முன் செங்கல்பட்டு இரயில் நிலையம் போக பஸ்ல போனேன்…அப்ப பக்கத்துக்குச் சீட்டுல உட்கார்ந்திருந்த அம்மா …”
“தம்பி …கொஞ்சம் இந்த நெம்பருக்கு போன் பண்ணு”
“ஏம்மா…உங்ககிட்ட போன் இருக்கே”
“இருக்கு தம்பி…என் போன் போட்ட எடுக்கமாட்டா …அதான் கேக்குறேன்”
“யார் அது ?”
“அவ ஒரு பொம்பள….சீட்டு நடத்திட்டு வந்தா… என் மகன் இப்பதான் வேலைக்குப் போறான் …அவனைச் சீட்டுப் போட ஆசையைத் தூண்டி சீட்டு போட வச்சிட்டா …சில மாசம் நல்லா தான் போச்சு …திடீர்ன்னு அவ புருஷன் இறந்து போயிட்டான் …சீட்டுக் கட்டுனவங்களுக்குப் பணம் தரல …எல்லோரும் போய்த் தினமும் வீட்டு முன்னடி அசிங்கமா தீட்டியும் எதையும் கண்டுக்காம இருக்கா …நான் போன் பண்ணா எடுக்கல…அதான் உன் போன்ல போட்டு கொடுப்பா “
“ஏம்மா …என்னை வம்புல மாட்டி விட்டுடாத”
“அதெல்லாம் …ஒண்ணும் ஆகாது தம்பி”
அந்த அம்மா சொன்ன நெம்பரை போட்டு கொடுக்க …அந்த அம்மா பேசினார்…
“ஹலோ…சித்ரா…இது உனக்கே நல்லா இருக்கா…? போன் பண்ணா எடுக்க மாட்டேங்கிற …உன் புருஷன் இல்ல…வீட்டுக்கு வந்து அசிங்கம் பண்ண கூடாதுன்னு பார்த்தா …உனக்கே இது நல்லா இருக்கா? என் மகன் ஊட்டுல அழுவுறான்…”
“இப்ப என்கிட்ட எதுவும் இல்ல “
‘’என்ன சித்ரா இப்படிப் பேசுற ?”
“என்ன வெட்டிப்போட்டாலும் என்கிட்ட ஒண்ணும் இல்ல”
“ஏம்மா …உன்கிட்ட சீட்டுப் போட்டதுக்குத் தண்டனையா…? இதெல்லாம் சரியா வராது …நாளைக்குக் காலையில ஆம்பிளைங்கள கூட்டிட்டு உன் வீட்டுக்கு வந்தாதான் சரிப்படும்”
“யார் வந்தாலும் ஒண்ணும் கிடைக்காது” “
“என்னா திமிரா பேசுற….நாளைக்கு வரேன்டி” என்று கோபமாகப் பேசிட்டுப் போனை என்னிடம் கொடுத்துட்டாங்க
இன்ஸ்பெக்டர் பேசினார் …
“ஹரிகுமார்… அப்புறம் …அந்த சித்ரா என்ற பெண் தூக்கு மாட்டி செத்துட்டா… அவ போன் எடுத்த போதுதான் உங்க நம்பர் இருந்தது …எங்க விசாரணையில சீட்டுப் பணம் கொடுக்க முடியாம …அந்தப் பெண் தூக்கு போட்டுக்கிட்டது உறுதியாடுச்சு …இருந்தாலும் எங்க விசாரனை எல்லாப் பக்கமும் இருக்கனும்…அதான் உங்கள வரச் சொன்னோம் …நீங்க போகலாம் ….தேவைப்பட்டா நீதிமன்றம் வர வேண்டும்”
“நன்றி சார் …”
“என்னடா உலகமிது…உபத்திரமான உதவி” என்று எண்ணிக்கொண்டே நடந்த ஹரிகுமாரைத் தொடந்த வந்த ஒருவர் ….
“சார் … என் போன்ல பேலன்ஸ் இல்ல …கொஞ்சம் இந்த நம்பருக்கு ஒரு போன் போட்டு தர முடியுமா?” என்று கேட்டார்
ஹரிகுமாரரோ, “சாரி சார் … என்னிடம் போன் இல்ல”… என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடந்தார், தன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் செல்போனை இறுக்கிப் பிடித்தபடி.
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings