எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலை ஒன்பது மணி. வீட்டின் அழைப்பு மணி ஓசை கேட்டதும் எழுந்து போய் கதவைத் திறந்தார் கோபாலன்.
“வணக்கம் ஸார்” என்று கும்பிடு போட்டபடியே… “டீக் காசு ஏதாச்சும் கொடுங்க ஸார்..” எனக் கேட்டு தலையைச் சொறிந்து கொண்டு நின்றான் கார்ப்பரேஷன் தொழிலாளி.
அவனது வார்த்தைகளுக்கு முன்னால் வந்து விழுந்தது மதுவின் நெடி.
“நீங்க யாரு?” பதில் தெரிந்திருந்தும் தெரியாதது போல கேட்டார் கோபாலன்.
“கா(ல்)வா(ய்) வழிச்சேன் ஸார்.. டீக் காசு கொடுங்க ஸார்..” என்றான் அவன்.
‘நான் ஒன்னும் பிச்சை கேட்கவில்லை, வேலை செய்ததற்கு கூலி தான் கேட்கிறேன்’ என்று இப்போது கொஞ்சம் உரிமையோடு கேட்பது போலத் தெரிந்தது.
அவன் காவா என்று சொன்னது தெருவோர வாறுகாலைத் தான் எனப் புரிந்து கொள்ள ஒரு நிமிடம் ஆனது கோபாலனுக்கு.
ஆனாலும் ‘இவனுக்குத் தான் கார்ப்பரேஷன் சம்பளம் கொடுக்கிறதே, நாம் ஏன் காசு கொடுக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தோடு அவனைப் பார்த்தவர்..
“டீக்கு காசு கேட்கிற மாதிரி தெரியலையே..? காலையிலேயே தண்ணி அடிச்சிட்டு வந்த மாதிரியில தெரியுது..?” என்று கேட்டார், குரலில் இகழ்ச்சியுடனும், முகத்தில் வெறுப்புடனும்.
“காசு கொடுக்கிறதுனா கொடுங்க.. இல்லைனா இல்லைனு சொல்லுங்க.. உபதேசம் எல்லாம் எதுக்கு ஸார்?.. காலையில தண்ணியை போட்டா தான் இந்த நாத்தம் பிடிச்ச வேலையை பார்க்க முடியும்.. புரிஞ்சுக்குங்க..” என்று முணுமுணுத்துக் கொண்டே அப்பார்ட்மெண்ட்டில் அடுத்த வீட்டு காலிங் பெல்லை அடிக்க கடந்து போனான்.
கதவை சாத்தி விட்டு உள்ளே நுழைந்த கோபாலனை எதிர்கொண்ட மனைவி மாலதி, “ஏங்க.. அவனே ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை வர்றான்.. ஒரு பத்து ரூபாயை கொடுத்தா கும்பிடு போட்டு வாங்கிக்கப் போறான்.. உங்களுக்கு எதுக்கு இந்தப் பேச்சு?”என்றாள்.
‘ஒரு இடத்தில உபதேசம் பண்ணிட்டு, ரெண்டு இடத்தில வாங்கிக் கட்டிக்கிட்டேனே..?’ என மனதில் நொந்து கொண்டார் கோபாலன்.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings