in ,

ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா 3 (த்ரியக தாடாசனம்) – பாலாஜி ராம்

இந்தத் தொடரின் மற்ற பாகங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

த்ரியக தாடாசனம்:

த்ரியக  தடாசனம் என்பது நின்று கொண்டு செய்யும் ஆசனங்களில் ஒன்று. இந்த ஆசனம் செய்யும்போது ஊசலாடும் பனைமரம் போல் காட்சி தரும். இது ஒரு நீட்சி ஆசனம் ஆகும். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க இந்த ஆசனம் உதவி செய்கிறது.

செய்முறை:

*நேராக நிற்க வேண்டும்.

*கைகள் இரண்டும் பக்கவாட்டில் உடலை ஒட்டியவாறு இருக்க வேண்டும்.

*பாதங்கள் இரண்டும் ஒட்டி வைக்க வேண்டும்.

*தலை, கழுத்து, முதுகு அனைத்தும் நேராக இருக்க வேண்டும்.

*மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியிடவும்.

*இதுவே த்ரியக தாடாசனம் செய்வதற்கான ஆரம்ப நிலையாகும்.

*நமது கால்களை தோள்பட்டை அளவில் அகட்டி வைக்க வேண்டும். நம் பார்வையை நம் எதிரே உள்ள சுவரின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் பதிக்கவும்.

*நமது இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து வெளிப்புறமாக திருப்பவும். அதாவது கோர்க்கப்பட்டு இரண்டு உள்ளங்கைகளும் வெளி நோக்கியவாறு இருத்தல் வேண்டும்.

*மெதுவாக  மூச்சை உள்ளிரழுத்துக் கொண்டே நமது கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு உயர்த்த வேண்டும். இப்போது மெதுவாக  மூச்சை வெளியேற்றிக் கொண்டே வலது பக்கமாக  உடலை வளைக்க வேண்டும். உடலை வலது பக்கமாக வளைக்கும் போது நம் இடுப்பிலிருந்து உடலை வளைக்க வேண்டும். நம் கால்களை நகர்த்தக் கூடாது, அதே நிலையில் தான் இருக்க வேண்டும்.

*நம் உடலை பின்புறமாகவோ அல்லது முன் புறமாகவோ வளைக்கக் கூடாது. இதே நிலையில் சில நொடிகளுக்கு நிற்கவும். பின்னர் மெதுவாக  மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே எழ வேண்டும்.

*பிறகு  மூச்சை வெளியேற்றிக் கொண்டே நம் உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும். இம்முறையும் இடுப்பிலிருந்து நம் உடலை வளைக்க வேண்டும். இதே நிலையில் சில நொடிகளுக்கு நிற்கவும். பின்னர்  மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே எழ வேண்டும்.

*மூச்சை வெளியேற்றி கொண்டே கோர்க்கப்பட்ட கைகளை  கீழே இறக்கி விடுவிக்கவும். உடலுக்கு பின்புறமாக கைகளை கட்டி, கண்களை மூடி மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும். இது ஒரு சுழற்சி ஆகும். இவ்வாறு பத்து முறை செய்யவும்.

சுவாச முறை:

*கைகளை உயர்த்தும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

*உடலை வலது அல்லது இடது பக்கமாக வளைக்கும் பொழுது மூச்சை வெளியிட வேண்டும்.

*வளைத்த உடலை நிமிர்த்தும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். *கைகளை விடுவிக்கும் பொழுது மூச்சை வெளியேற்ற வேண்டும்.

கவனம்:

உடல்ரீதியாக: நம் உடலை வளைக்கும் பொழுது நம் தலை முன் பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். தலை கீழே குனியவோ, திருப்பவோ கூடாது.

இந்த ஆசனம் செய்யும் பொழுது நம் முழு உடலின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உடலை வளைக்கும் பொழுது கீழே விழவும் வாய்ப்பு உண்டு.

ஆன்மீக ரீதியாக: மூலாதார சக்கரம் அல்லது மணிப்பூர சக்கரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பயன்கள்: 

இந்த ஆசனம் நமது இடுப்பை சுற்றி உள்ள தசைகளுக்கு மசாஜ் செய்த பலன் தருகிறது. இந்த ஆசனம் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்க ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும் இருக்கிறது.

இந்த ஆசனம் நம் இடுப்பு பகுதிக்கு பலத்தைக் கொடுக்கிறது.

யாரெல்லாம் செய்ய கூடாது:

*கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

*இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்களும், சியாடிக்கா பிரச்சனை உள்ளவர்களும் செய்யக்கூடாது.

*இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த த்ரியக தாடாசனம் செய்யக்கூடாது.

டோலாசனம்:

இந்த ஆசனம் நின்று கொண்டு செய்யும் ஆசனங்களில் ஒன்று.  இந்த ஆசனம் செய்யும் பொழுது ஊசலாடுவது போல் தோற்றமளிக்கும்.

செய்முறை:

*நேராக நின்று கொள்ள வேண்டும்.

*நமது இரண்டு கைகளும் பக்கவாட்டில் உடலை ஒட்டியவாறு வைக்க வேண்டும்.

*தலை, கழுத்து, முதுகு ஆகியவை நேராக இருக்க வேண்டும்.

*முதலில் நம் தோள்பட்டை அளவில் நமது இரண்டு கால்களையும் அகட்டி வைக்க வேண்டும்.

*இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்க்கவும். பிறகு, கைகளை மெல்ல உயர்த்தி தலைக்கு பின்னால் கொண்டு வரவும்.

*வலது காலை வலது பக்கமாக திருப்ப வேண்டும்.

*அதுவும் குதிகாலிலிருந்து திருப்புதல் வேண்டும். நமது வலது கால் விரல்கள் வலது புறமாக பார்த்தவாறு இருக்க வேண்டும்.

*மெதுவாக உடலை வலதுபுறமாக வளைக்கவும்.

*நமது தலையை வலது கால் முட்டி அருகே கொண்டு வர வேண்டும். நம் நெற்றி கால் முட்டியை தொட முயற்சி செய்யவும்.

*நமது தலையை வலது கால் முட்டி அருகே கொண்டு வருவும். நம் நெற்றியை கொண்டு கால் முட்டியை தொட முயற்சி செய்யவும். கடினமாக இருப்பின் எந்த அளவுக்கு நெற்றியை முட்டிக்கு அருகில் கொண்டு வர முடியுமோ அந்த நிலையிலே இருக்கலாம்.

*ஊஞ்சலாடுவது போல நம் உடலின் மேல் பகுதியை வலது முட்டியிலிருந்து  இடது முட்டிக்கும், இடது முட்டியிலிருந்து வலது முட்டிக்கும் தலையை கொண்டு செல்லவும்.  இவ்வாறு மூன்று முறை செய்த பின் நேராக நிற்கவும்.

*வலது காலை பழைய நிலைக்கு கொண்டு வரவும். இடது காலை, இடது புறமாக திருப்பி தலையை இடது கால் முட்டியை தொட வேண்டும். பிறகு மீண்டும் ஊஞ்சலாடுது போல் தலையை  இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு கொண்டு செல்லவும். இவ்வாறு மூன்று முறை செய்யவும். இதுவே ஒரு சுழற்சி முறை ஆகும்.

*இந்த ஆசனம் செய்து முடிக்கும் வரை நமது கால்கள் நேராக தான் இருக்க வேண்டும் முட்டியை மடக்க கூடாது.

சுவாச முறை: 

நேராக நிற்கும் பொழுது ஆழ்ந்த மூச்சு எடுக்க வேண்டும். நம் தலையை வலது அல்லது இடது கால் முட்டிக்கு அருகே கொண்டு செல்லும் பொழுது மூச்சை வெளி விட வேண்டும். மூச்சை வெளியிட்ட பின் மூச்சை உள்ளிழுக்கும் வலது முட்டிலிருந்து இடது முட்டிற்கு ஊஞ்சல் ஆடுவது போல் செய்யவும். எழும்பொழுது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.

கவனம்:

ஆன்மீக ரீதியாக: ஆசனம் செய்யும் போது சுவாதிஸ்டான சக்கரம் மீது கவனம் வைக்கவும்.

பயன்கள்;

நம் முகத்திற்கும் தலைக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தொடை எலும்பு வலுப்படும். தொடைக்குப் பின்புறம் உள்ள தசைகள் மற்றும் முதுகு தசைகள் ஆகிவை பலப்படுகிறது. முதுகு நரம்புகளை தூண்டுகிறது.

யாரெல்லாம் செய்ய கூடாத?

*வெர்ட்டிகோ

*உயர் இரத்த அழுத்தம்

*சியட்டிகா

*குடலிறக்கம் உள்ளவர்கள் செய்ய கூடாது.

இந்தத் தொடரின் மற்ற பாகங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆரோக்கியமான வாழ்விற்கு யோகா 2 – (தாடாசனம்) – பாலாஜி ராம்

    கண்கள் நீயே… காற்றும் நீயே… (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்