2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இரவு 11: 30 மணி!
மல்லிகா அபார்ட்மெண்டில் உள்ள அனைத்து வீடுகளும் இருட்டாயிருக்க, அந்த 7 – ஆம் நம்பர் வீட்டு ஹாலில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தீவிரமாக கம்பளித்துணியால் தொப்பித் தைத்துக்கொண்டிருந்தாள் ரஞ்சனா.
காலேஜில் நாளைக்கு ஏதோ கண்காட்சியாம்! அதில் தன் வகுப்பு மாணவர்கள் கைவினைப்பொருட்களை தாங்களே செய்து, அதை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார் அவளுடைய புரொபசர். இவளும் வீராப்பாய் ஒரு தொப்பி தைத்து வருகிறேன் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டாள். ஆனால் அவள் வாழ்நாளில் குண்டூசியை தொட்டுப்பார்த்ததுக்கூட இல்லை என்பது யாருக்கும் தெரியாது.
“ஏன்டா இதை செய்ய ஒப்புக்கொண்டோம்…” என்று அவளே நொந்துக்கொண்டு வேலை செய்துக்கொண்டிருக்க, அப்போது பாதி தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தாள் அவள் தாய் மீனாட்சி.
“இன்னுமாடி இதை தைச்சுகிட்டு இருக்க? மணி 11: 30- க்கு மேல ஆச்சு… வந்து தூங்குடி”
” முடிக்க போறேன்மா… நாளைக்கு இது இல்லாம போனா அந்த மோகன் சார் அட்வைஸ் பண்ணியே கொன்றுவாரு… என்னால அதெல்லாம் கேக்க முடியாது. நீ போய் தூங்கு… நா முடிச்சிட்டு வரேன்…”
சொன்னாலும் தன் மகள் கேட்க மாட்டாள் என்று மீனாட்சிக்கு தெரியும். அவளும் மேலே பேசாமல், போய் தூங்கி விட்டாள்.
ஒரு வழியாய் ரஞ்சனா தொப்பியைத் தைத்து முடித்தபோது, மணி 2:00. உண்மையைக் கூற வேண்டும் என்றால், அழகிய பச்சை நிறத்தில் அவள் செய்திருந்த அந்த தொப்பி அவ்வளவு அழகாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சில இடங்களில் தேவைக்கு அதிகமான இடைவெளி இருந்தது. சில இடங்களில் நூல் சரியாக வெட்டப்படமால், கூடுதலாக தொங்கியது.
இதை யாராவது வாங்கினால், அது உலகின் எட்டாம் அதிசயம் என்று அவளுக்கே தெரிந்தது. ஆனால், வேறு வழி இல்லை. கடையில் வாங்கி அதை தான் செய்ததாக சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை.
பக்கத்தில் அந்த ஷீலாவும் ரோகிணியும் மட்டும் இருந்துவிட கூடாது என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள். இந்த தொப்பி விற்கவில்லை என்றால், அதை வைத்தே காலேஜ் முடிக்கும் வரை கலாய்த்து தள்ளுவார்கள்.
இந்த சிந்தனைகளில் மூழ்கி, உட்கார்ந்தபடியே டேபிள் மேல் சாய்ந்து தூங்கி விட்டாள்.
மறுநாள் காலை!
அனைவரும் எங்கே நின்று விற்பனை செய்ய வேண்டும் என்று எல்லாருக்கும் கூறிக் கொண்டிருந்தார் மோகன் சார். ரஞ்சனா எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ, அதை கச்சிதமாய் செய்தார். ஷீலாவுக்கும் ரோஹிணிக்கும் நடுவில் ரஞ்சனா நிற்கவேண்டுமாம்!
” இதுவும் விக்க போறது இல்ல… இவளுக வாயும் மூட போறது இல்ல… ஆண்டவா என்ன எப்படியாவது காப்பாத்து!!!”, என்று கடவுளிடம் ஒரு அப்ளிகேஷன் போட்டு விட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றாள்.
தான் செய்த தொப்பியை எடுத்து வெளியே விற்பனைக்கு வைத்தாள். வாழ்நாள் முழுக்க அந்த நொடிக்காக காத்திருந்த மாதிரி பேச ஆரம்பித்தார்கள் அந்த இருபெண்களும்.
“ஏ ஷீலா! இங்க பாருடி… நம்ம ரஞ்சனாவோட தொப்பிய…”
“வர வழில ஏதாவது நாய் கடிச்சிருக்கும் போல ரோகிணி… டைம் ஆச்சுன்னு நாய்கிட்ட சண்ட போட்டு இந்த தொப்பிய வாங்கிட்டு வந்த போல…”, இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்.
ரஞ்சனா உள்ளே எரிமலையாய் வெடித்தாலும் எதையும் வெளிகாட்டிக்காமல், அவர்களுக்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாய் நின்றாள். அடுத்த ஒரு மணி நேரம் அப்படி தான் சென்றது. அவர்கள் செய்திருந்த சிறு பொம்மைகளெல்லாம் கடகடவென்று விற்றுவிட்டன. ரஞ்சனாவின் தொப்பியைப் பார்த்து பலர் சிரித்தபடி தான் சென்றனர். அவளும் அதை கவனிக்க தவறவில்லை.
என்ன செய்வது? கொஞ்சம் முன்னாடியே ஆரம்பித்திருந்தால் ஒழுங்காய் வந்திருக்கும். இப்போது புலம்பி என்ன பயன்… என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
இன்னும் அரை மணி நேரம் தான்! கண்காட்சி முடிந்து விடும். இனியும் அந்த தொப்பி விற்கும் என்று ரஞ்சனாவிற்கு நம்பிக்கை இல்லை. தன் உழைப்பு வீணாய் போவதாய் தோன்றியது.
“இதற்காகவா 2 மணி வரை கண் முழித்து தைத்தேன்… யாரும் வாங்கலானாலும் பரவாயில்ல… இப்படியா சிரித்து, நக்கலாய் பாத்துட்டு போறது? இது பத்தாதுன்னு இந்த ரெண்டு பேர் வேற..தொறந்த வாய மூடவே மாட்டேங்கிறாளுக…”
நினைக்க நினைக்க கண்ணீர் மெல்ல எட்டி பார்த்தது. நம்மை ஏளனமாய் பார்க்கும் இவர்கள் முன், அழ கூடாது என்று முடிவெடுத்து ரெஸ்ட்ரூமிற்கு விரைந்தாள்.
அழுது தீர்த்து, முகம் கழுவி பத்து நிமிடங்கள் கழித்து வந்தாள் ரஞ்சனா. விரைந்து தன் இடத்திற்கு சென்றவளுக்கு அதிர்ச்சி… அவள் செய்த தொப்பி அங்கே இல்லை!!!
“ஏ ஷீலா! எங்கடி இங்க இருந்த தொப்பி??”
“அதுவா… யாரோ ஒரு அம்மா வந்து உன் நாய் வாய் தொப்பிய வாங்கிட்டு போச்சு. இந்தா.. அந்தம்மா குடுத்த பணம்…” என்று ஐம்பது ரூபாயை அவள் கையில் திணித்துவிட்டு இடத்தை காலி செய்தாள் ஷீலா.
ரஞ்சனாவிற்கு கனவு லோகத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு. அந்த கடவுள் தான் காப்பாற்றி இருக்கிறார் என்று தீவிரமாக நம்பினாள். வீட்டுக்கு செல்லும் வழியில், அந்த ஐம்பது ரூபாயை ஒரு கோவில் உண்டியலில் காணிக்கையாய் கொடுத்து, தன நன்றியை அந்த கடவுளுக்கு தெரிவித்தாள்.
இரவு எட்டு மணி!
“ஏய் ரஞ்சனா… வீட்ட பாத்துக்கோடி. காய்கறி வாங்கிட்டு வரேன்…” என்று காய்கறி கூடையுடன் கிளம்பினாள் மீனாட்சி.
“ஒரே குளூரா இருக்கு மா… காலைல போயேன்…”
“காலைல சமைக்கவே ஒண்ணும் இல்லடி… சீக்கிரம் போயிடு வந்துருவேன்…” என்று சொல்லிவிட்டு மடமடவென்று இறங்கினாள்.
குளூரைப் பற்றி மீனாட்சிக்கு என்ன கவலை? அவள் தான் தன் மகள் கையால் செய்த பச்சை கம்பளி தொப்பியை வாங்கி, அந்த காய்கறி கூடையில் மறைத்து வைத்து எடுத்து வந்திருக்கிறாளே!!!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings