எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தூக்கணாம்குருவி ஒன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. அது தனது கூட்டில் பதித்து வைப்பதற்காக நாலைந்து மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு போனது.
எங்களை விட்டுரு – மின்மினிகள் கெஞ்சின.
உங்களைக் கூட்டுல பதிச்சு வைச்சா இருட்டு நேரத்துல வெளிச்சம் கிடைக்கும், விட முடியாது – என்றது குருவி.
உனக்கு பின்னால எந்த விதத்திலயாவது உதவி செய்யுறோம் – என்றன மின்மினிகள்.
குருவி யோசித்தது. பெட்டைக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்த பின்புதான் கூட்டிற்கு வெளிச்சம் தேவைப்படும். அது மின்மினிகளை விடுவித்தது. மின்மினிகள் நன்றி சொல்லி மிகுந்த மகிழ்ச்சியுடன் பறந்து சென்றன.
இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும். மின்மினிகள் தாங்கள் வசித்த அத்திமரத்தைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு தூக்கணாம்குருவி மிகுந்த வருத்தத்துடன் மரத்தில் வந்தமர்ந்தது. மின்மினிகளை விடுவித்ததே? அதே குருவிதான்; மின்மினிகள் அடையாளம் கண்டு கொண்டன.
ஏன் சோகமா இருக்குற? – கேட்டன அவைகள்.
நான் கட்டுன கூடு பெட்டைக்குருவிக்குப் பிடிக்கலை! பாதுகாப்பா இல்லைனு சொல்லிருச்சு! அதான் வேற ஒரு கூட்டை கட்டுறதுக்காக பாதுகாப்பான இடம் தேடி அலைஞ்சிக்கிட்டிருக்கேன் – என்றது குருவி.
நீ ஒன்னும் கவலைப்படாத – என்ற மின்மினிகள் குருவியை ஒரு கண்மாய் பக்கம் அழைத்துச் சென்று காட்டின.
அதிக அரவமில்லாமல் இருந்த அந்த இடம் பெட்டைக் குருவிக்கும் பிடித்துப் போனது. அந்தக் கண்மாய் கரையில் இருந்த மரத்தின் ஒரு கிளையைத் தேர்வு செய்து ஆண் குருவி கூடு கட்டியது. அதில் பெட்டைக்குருவி வந்து தங்கி முட்டையிட்டு ஆறு குஞ்சுகள் பொறித்தது.
சின்னஞ்சிறு பூச்சிகளா இருக்கீங்க, உங்ககிட்ட இருந்து இவ்வளவு பெரிய உதவியை எதிர்பார்க்கலை மிக்க நன்றி – என்றது ஆண்குருவி.
பதிலுக்கு நன்றி சொன்ன மின்மினிகள் அதோடு நிற்கவில்லை. குஞ்சுகள் கண் திறந்தவுடன் தினமும் இரவுப் பொழுதில் அந்தக் கூட்டைச் சுற்றிப் பறந்து விளையாட்டுக் காட்டின. குஞ்சுகள் மின்மினியின் வெளிச்சத்தை வெகுவாக ரசித்தன.
குழந்தைகளே…! அந்தக் கண்மாய்கரைப் பக்கம் சென்றால் மின்மினிகள் அந்தத் தூக்கணாம்குருவிக் கூட்டைச் சுற்றிப் பறப்பதை நீங்களும் காண முடியும்.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings