ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
‘வெளியிலிருந்து ஊட்டுவது கல்வியல்ல. உள்ளிருக்கும் சுயத்தை வெளிக் கொணர்வதே கல்வி’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். வெளியிலிருந்து ஏதோ ஒன்றைக் கொடுக்கும்போது, அது வெளிப்புறத்தை மட்டுமே அழகாக்கும்.
கோழியினுடைய முட்டை கூட வெளியில் உடைபடும் போது அதன் உள்ளே உள்ள கரு சிதையும். ஆனால் அதுவே அதன் உள்ளிருந்து உடைபடும் போது, பரிசுத்தமான உயிர் ஜனனிக்கும்.
எனவே வெளித்தோற்றத்தில் ஒன்றும் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். அகத்தில் உள்ள மனம் அழகாக வேண்டும். இந்த அக அழகை வெளிக்கொணர்வதே கல்வியாக அமைய வேண்டும்.
நம்முடைய வாழ்விற்கான கரு நம் அகத்துள்ளே உள்ளது. அந்தக் கருவே நம்மை இனம் காட்டும். இத்தகைய தூய அகத்துடன் ஒரு செயலைச் செய்யும் போது அது நிச்சயம் தோல்வியடையாது.
அதனையும் மீறித் தோல்வியடைந்தாலும் அத்தோல்வி நமக்கானதாகவோ, நம்மால் உண்டானதாகவோ இருக்காது. அத்தோல்விக்கு நாம் கலங்கவும் தேவையில்லை.
நாம் காரணமில்லாததாகவும், நமக்கானதாகவும் இல்லாத இத்தகைய தோல்வியைக் கண்டு நாம் ஏன் கலங்க வேண்டும்?
கலக்கம் என்பதற்குத் தெளிவற்ற தன்மை என்பது பொருள். நாம் மனத்தூய்மையோடு இருக்கின்றோம். இத்தூய்மையினால் மனத்தெளிவுடனும் இருக்கின்றோம். நம்முடைய அகம் ஒழுக்கத்துடன் உள்ளது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இதன் காரணமாகத் தான் அக வாழ்வினை அக ஒழுக்கம் என்று தமிழ்ச் சான்றோர்கள் வகுத்தார்கள். ஒழுக்கம் என்பதற்கு ஒழுகுதல் என்பது பொருள். உள்ளே இருப்பது வெளியே சிந்துவதே ஒழுகுதல்.
மனம் ஆற்றலுடன் இருக்கும் போது, அதனைத் துவண்டு விடச் செய்யும் முகமாகப் பல்வேறு தோல்விகள் வந்தடையத் தான் செய்யும். மிக ஆழமாக அவற்றை ஆராய்ந்துப் பார்த்தால், அத்தோல்விக்கு நாம் காரணமில்லை என்பது புலப்படும்.
இங்கு நமக்குள்ள பெரிய தொல்லை என்னவென்றால். நமக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஒன்றை எண்ணி நாம் துவண்டு விடுவது தான். தெளிவாக இருக்கும் நம்மை கலங்க வைக்க பல சக்திகள் உண்டு.
ஆனால், எந்தச் சூழலிலும் கலக்கம் அடையாமல் மனத்தெளிவினை அடைய, மனத்தூய்மையால் மட்டுமே முடியும். இதனை வெளியிலிருந்து யாராலும் வழங்க இயலாது. நமக்கு நாமே இதனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மனத்தூய்மை இருப்பவரிடம் மட்டுமே தோல்வி நெருங்காது. மீறி நெருங்கினாலும், அத்தோல்வியால் அவர்கள் மனம் கலங்காமல் தெளிவாக இருக்கும்.
சிதையா நெஞ்சு கொள்!
ஒவ்வொரு பகுதியும் ஒன்றிணையும் போது தான் அது முழுத் தொகுதியாகின்றது. முழுத்தொகுதியின் எந்தவொரு பகுதி சிதைந்தாலும் அது முழுமை பெறாது. முழுமை பெறாத எதுவும் முன்னேற்றம் அடையாது. இதே நிலையில் தான் நம்முடைய எண்ணத்தையும் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்
எண்ணத்தைத் துளியும் சிதற விடாமல் ஒன்றிணைத்து முழுமையாக்கினால் தான் முன்னேற்றமடைய முடியும். தினம் தோறும் பல்வேறு நிகழ்வுகளைக் கற்றுக் கொண்டே இருக்கும் நாம், பிறருக்குப் பாடமாகும் நிலையை அடைவதே முன்னேற்றம் என்பதாகும்.
இந்த முன்னேற்றம் ஓரிரு நாட்களில் ஏற்பட்டு விடாது. இந்த நிலையை அடைய சிதையா நெஞ்சம் வேண்டும். எண்ணங்களைத் தமக்கு அடங்கியிருக்கும்படி நன்கு கட்டமைத்துக் கொள்பவரால் மட்டுமே இந்த முன்னேற்றத்தினை அடைய இயலும்.
உண்மையானது எது என்று தெரிந்து கொண்டு, அவ்வுண்மையின்வழிப் பயணிக்க வேண்டும். போலியும் பல நேரங்களில் உண்மையைப் போலவே தோன்றி, சிந்தையைச் சிதைக்கும். தெளிவான நேர்க்கோட்டில் பயணிக்கும்போது மட்டுமே பயணம் முழுமை பெறும். உண்மையை உறுதியாக பற்றிக் கொண்டவரிடம் தோல்வியும் தோற்று விடும்.
எல்லாவிதமான தகுதிகளும் இருக்கப் பெற்றும், வெற்றியை ருசிக்காமல் தோல்வியில் மட்டுமே துவண்டு போவதற்கு எண்ணங்களைச் சிதைய விடுவதே காரணம். நம்மை இயக்குவது நாமாக இருக்க வேண்டும்.
மாறாக இன்று நம்மைப் பலரும் இயக்குகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஏற்றாற் போல் மாற வேண்டிய சூழலில் நாம் வாழ்கின்றோம். இவ்வாறு மாறிக் கொண்டேயிருந்தால் நம்மை நாம் இழந்து விடுவோம்.
தன்னை இழந்ததன் காரணத்தால் தான் பலரும் இன்று, பிறர் முகத்தில் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர். உண்மையான தன்னை வெளிப்படுத்த, போலி என்ற முகமூடியை அணிந்து அவதிப்படுகின்றனர்.
தான் யார் என்பதை முதலில் தெளிவாக உணர்ந்து, எனக்காக வகுக்கப்பட்டதெல்லாம், நிறைவாக வழங்கப்பட்டுள்ளது என்பதை மனதார உணர வேண்டும்.
எனக்குத் தேவைப்பட்டதெல்லாம் அந்தந்த நேரத்தில் என்னருகில் வந்தடையும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் என்னுடைய மனத்தெளிவால் நான் பெற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாக நிற்க வேண்டும்.
மேலும், என்னுடைய மனவலிமையை, என்னுடைய தெளிந்த எண்ண ஓட்டத்தை எந்தவொரு சக்தியாலும் எள்ளளவும் சிதைக்க முடியாது என்பதில் உறுதி கொள்ள வேண்டும். இந்த உறுதியே நம்மை உயர்த்தும் ஒப்பற்ற ஆயுதம்.
நமக்குத் தேவையானதையெல்லாம் இறை நிலையால் நமக்குக் கொடுக்க மட்டும் தான் முடியும். அவற்றை முறையாக அனுபவிப்பது என்பது நம்மால் மட்டுமே முடியும். கொடுப்பது கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றது.
உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாத காரணத்தினால், நாம் தான் நமக்கானதை எடுத்துக் கொள்ளத் தவறுகின்றோம். நெஞ்சில் ஒரு தெளிவு இல்லாத போது, ஓர் உண்மை இல்லாத போது நம் உடைமையை இனம் கண்டுகொள்வது கூட மிகச் சிரமம்.
நாம் படைக்கப்பட்ட போதே நமக்கான அனைத்தும் படைக்கப்பட்டு விட்டன. நம்மைச் சுற்றியிருக்கும் நமக்கானதை நாம் உணராமல் அதனை யார் யாரோ பயன்படுத்தும் நிலை ஏற்படும் போது, நமக்கான வெற்றி சிதைந்து போகும்.
எனவே, எண்ணங்களைச் சிதற விடாமல் தெளிவாக வைத்துக் கொண்டு, நமக்கானவற்றை முழுமையாகப் பெற்று, நம்மை வெற்றி கொள்ள யாரும் இல்லை என்பதை நாம் பெறும் வெற்றியின் மூலம் உலகிற்கு உணர்த்துவோம்.
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings