தோல்வி என்பது முற்றுப் பெறாத முயற்சி…வெற்றிக்கான பயிற்சி. ஆம்!.. வெற்றி என்பது இங்கு நிரூபணம்!… படிப்பினை அல்ல. ஆனால், தோல்வி என்பது பல சமயங்களில் நமக்கு படிப்பினை.
ஒருவன் வெற்றி அடைவதும், அதற்காக மகிழ்வதும், கொண்டாடுவதும் பெரிதல்ல, தோல்வியின் போது அவன் மனநிலை எப்படி? என்பதுதான் முக்கியம். எவனொருவனும் தோல்வியை ஒரு சறுக்கலாக எண்ணாமல் ஒரு படிக்கட்டாக எண்ணினானால் வெற்றிக் கோபுரம் அவனுக்கு வெகு அருகில் அதுவாகவே வந்து விடும் என்பதுதான் நிதர்சனம். ஆம்!.. தோல்வியின் கசப்பு வியாதியைக் குணமாக்கும் மருந்தின் கசப்பு போன்றதாகும்.
விழாமலே ஓடும் குழந்தையை விட, விழுந்து விழுந்து அதே வேகத்தில் எழுந்து எழுந்து ஓடும் குழந்தைகள்தாம் நம்மை வெகுவாக கவரும். நடந்து முடிந்தவைகளை ஒரு சோதனை என்றோ, பயிற்சியென்றோ, நினைத்துக் கொண்டு தொடர்ந்தோமென்றால் இனி நடக்க வேண்டியவற்றை அப்பயிற்சியின் அடிப்படையில் தெளிவாகத் திட்டமிட முடியும்.
உண்மையில், தோல்வி என்பது ஒரு விஷயத்தைப் பரிசீலனை செய்யக் கிடைத்த வாய்ப்பு. எங்கு தவறினோம்?… எப்படித் தவறினோம்? என்பதியெல்லாம் தெளிவு படுத்தும் சோதனை. அதைத்தான் ஜூலியோ மெலரா “கடந்த காலங்களை விட்டுவிடுங்கள், நிகழ்காலத்தில் வாழுங்கள், எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்று அழகுறக் கூறுகிறார்.
பொதுவாகவே, தோல்வியடைந்தவர்களிடம் நிச்சயமாக இருக்கும் குறைபாடுகள் என்னென்னவென்று ஆராய்ந்து பார்த்தால், முதலில் அவர்களிடம் சாதிக்க வேண்டும் என்கிற ஒரு அக்கினிக்குணம் இல்லாமலிருப்பது தெரிய வரும்.
வெறுமனே ஒரு குறிக்கோளை எந்தவித முன்னேற்பாடுமின்றி எடுத்துக் கொண்டு, அவ்வாறு எடுத்த குறிக்கோளை ஒரு வெறியோடு செயல்படுத்தும் வேகமின்றி வெகு அலட்சியமாக செயல்பட்டிருப்பதும் புரிய வரும்.
அடுத்து, தங்கள் செயல் பாட்டிலும் ஒரு சீரான ஈடுபாடின்றி…தொடர்ச்சியான உழைப்பின்றி… அடிக்கடி செயல் முறையிலும் மாற்றங்களை செய்து கொண்டிருந்ததும் தெரியவரும்.
முன்னேற்றம் அடைந்தவர்களிடத்தில் காணப்படும் ஒரு பொதுவான குணம் யாதெனில் தோல்வியை எளிதாக எதிர்கொள்வதுதான். வெறும் சுய பச்சாதாபமும், சுய ஆறுதலும், எந்தவிதத்திலும் உதவாதவை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். நமக்கு நாமே பரிதாபப் பட்டுக் கொள்வது அசிங்கமான முறை.
“என்னது… தோல்வியா?…ஹா…ஹா..நோ பிராப்ளம்.!… வெற்றியை ஏற்றுக் கொள்வது போல், தோல்வியையும் ஏற்றுக் கொள்வோம்” என்பதே அவர்களது மேலான தத்துவமாக இருக்கும். சொல்லப் போனால், தோல்வியையும், பெரும் சோதனைகளையும் எதிர் கொண்டவன்தான் மிக அதிக கவனத்துடன் செயல்படுவான், முன்னேறுவான்.
நமது தோல்வியின் போது மற்றவர்கள் நம்மைப் பற்றிச் சொல்லும் விமர்சனங்களையும், ஏளனங்களையும், ஏகடியங்களையும் அப்படியே நம்பி, சோம்பி விடக்கூடாது. நமது பலமும், பலவீனமும் நமக்குத்தோனே தெரியும்.
நமது பாணி ஜெயிக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெற்றி பெற வேண்டும், அல்லது வெற்றிக்கான பாணியை தோல்விகளின் அடிச்சுவட்டில் இருந்து கண்டெடுத்து வெற்றியை எட்டிப் பிடிக்க வேண்டும்.
ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை ஆறு மாத காலமாக இரவு, பகலென்று பாராமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்ததும் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். எவரும் இவருடைய கட்டுரையைப் படித்துப் பார்க்க விரும்பவில்லை. அந்தப் பத்திரிக்கை ஆசிரியர்,
“இடியட், இந்தப் பத்திரிக்கைக்கு உன் கட்டுரையைக் கொடுக்க வந்துவிட்டாய், உன் கட்டுரை இடம் பெறவேண்டிய இடம் எது தெரியுமா?’ என்று கூறிக்கொண்டே, கட்டுரையைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.
லூயிஸ் கோபம் கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானம், சோதனைகளைத் தாங்கிக் கொண்டார். இவரது பொறுமையும், சகிப்புத் தன்மையும், விடாமுயற்சியும் வெற்றிப் பாதைக்கு இவரை அழைத்துச் சென்றது. இவர் எழுதிய “மெயின் ஸ்டிரீட்’ என்ற நாவல் உலகத்திலேயே எந்தப் புத்தகமும் விற்காத அளவுக்கு விற்பனையாயிற்று. இவரைக் கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. லூயிஸ் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தார். தன் திறமையைப் பிறர் கேவலப்படுத்தும்போது அதன் காரணமாக அவர் மனத்தளர்ச்சியடைய வில்லை. முயற்சி, உழைப்பு ஆகியவைகளைத் தன் வாழ்க்கையில் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.
வெற்றி நிலைத்திருக்க:-
“வெற்றி என்பது எப்போது நிலையாக இருக்கும்?” என்று கேட்டுவிட்டு தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் பதில் கூறுகிறார்.
“வெற்றியடைந்ததும் வெற்றி பெற்றுவிட்டோம் இனி கவலைப் பட வேண்டியதில்லை… எல்லாம் தானே ஓடும்!..” என்ற இறுமாப்பு வராமல் சதா சர்வ நேரமும் “அடுத்து என்ன செய்யலாம்?” என்று கவனமுடன் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிடில் வீழ்ச்சியின் வித்து அங்கே முளை விடும்” என்கிறார்.
இது உண்மைதானே?… மிக எளிமையான நிலையிலிருந்து, இரவு பகல் பராது கடுமையாக உழைத்து, முன்னேறியிருக்கும் ஒருவர், “ஒன்றுமே இல்லாதிருந்தேன், ஏதோ இந்த நிலைக்கு வந்து விட்டேன், போதும்… இதற்கு மேல் ஆசைப்படக் கூடாது!” என்று நினைத்தாரானால் அது மாபெரும் தவறு. அது அவருடைய வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உதவாது.
கடும் உழைப்பும், ஓரளவிற்கான அதிர்ஷ்டமும்தான் அவருக்கு அந்த வெற்றியை அளித்திருக்கின்றது. அதை அவர் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து அதிகம் உழைத்து தன் வெற்றியின் தரத்தை நிலை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் தொடர் வெற்றிகளை அவர் குவிப்பது சாத்தியப்படும்.
“அதான் வெற்றியடைந்து விட்டோமே… இனி என்ன வேண்டும்?” எனச் சோம்பி உட்கார்ந்து விட்டால் ஆரம்பத்திலிருந்து அவரோடு போட்டி போட்டுத் தோற்றவர்கள் அவருக்குப் பின்னால் வந்து கொண்டேயிருப்பர். அவரது அயர்வுக்காக காத்திருந்து சமயம் பார்த்து அவரை முந்தி விடவும் செய்வர்.
அது மட்டுமல்ல, புதிதாக போட்டிக்குள் நுழைந்து புத்துணர்ச்சியோடு செயல்படும் பலரும் அவரது அந்த ஓய்வு நிலையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பின்னுக்கு மிகவும் எளிதாக தள்ளிவிடுவர்.
பொதுவாகவே, வெற்றியின் உச்சியில் இருப்பவர்கள் அவருக்கும் இளைப்பாரும் குணம் இருக்குமென்பது சாத்தியமில்லாதவொன்று. ஏனெனில், அவர்களது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும், “நான் என்றும் அசட்டையாகவே இருப்பதில்ல!..
ஏனென்றால், இதுவரையில் நான் தெரிந்து கொண்டவை, அவற்றின் மூலம் நான் செய்து முடித்துள்ளவை, எல்லாமே மிக மிகக் குறைவானவையே… இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவை… அதன் மூலம் செய்து முடிக்க வேண்டியவை ஏராளமாய் உள்ளன” என்கிற வகையிலேயேதான் இருக்கும்.
தோல்விகளே இல்லாத குறிக்கோள் ஆக்கப்பூர்வமான…மேம்பட்ட அனுபவங்களைக் கொடுக்காது என்பதுதான் அப்பட்டமான உண்மை. தோல்விகள்தான் பெரும்பாலும் ஒருவனை நெருக்கடியான காலங்களில் எப்படி உறுதியுடனும், தெளிவாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும் என்பதைக் கற்றுத் தரும் ஆசான்களாக இருக்கின்றன.
ஒரு வெற்றியின் முழுமையை நாம் அனுபவிக்க பல தோல்விகளைக் கண்டே ஆக வேண்டும். ஏனெனில், தோல்விகள் மூலமாக நாம் கற்றுக் கொள்ளும் பாடங்களை நிச்சயமாக எந்தவொரு புத்தகத்திலும் கற்றிருக்க முடியாது.
இந்த உண்மையானது அப்போது புரியாவிட்டாலும், பிற்பாடு நிச்சயம் புரியவரும். தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிகச் சரிவுகள்தாம். அதை நேர்மறை மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் மிகச் சிறந்த சூத்திரங்கள்.
வெற்றிகளாய் மாறிய தோல்விகள்:-
டாக்டர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதைக் கேட்க வைக்க ஒரு கருவியைத் தேடினார். தேடித் தேடித் தோல்வியடைந்தாலும் இறுதியில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.
இனி கல்வியே கற்க முடியாது, என்று பாடசாலையிலிருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வி, தாமஸ் ஆல்வா எடிசனை பெரும் கண்டுபிடிப்பாளராக்கியது.
சிறு வயதிலிருந்தே ஏராளமான தோல்விகளைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அமெரிக்க அதிபரானார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றிக்கான வித்தானது. ஏனெனில், அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையிலிருந்து விடுபடச் செய்து இன்றைய நிலைக்கு உயர்த்தியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings