in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“சார், என்னை உங்கள் மகள் சத்யா போல் என்றீர்கள். பிறகு ஏன் தயங்குகிறீர்கள்?”

“உன் அப்பா, அவன் அண்ணாவின் கம்பெனியில் தானே ஆக்ஸிடென்டில் இறந்தான்?”

“ஆமாம் சார், ஏன் கேட்கிறீர்கள்?”

“முதலில் இந்த சார் என்பதை விட்டு ஒழி, அங்கிள் என்று கூப்பிடு” என்றார் கோபமாக.

“கோபித்துக் கொள்ளாதீர்கள் அங்கிள். ஆமாம் அப்பாவின் ஆக்ஸிடென்ட் பற்றி ஏன் கேட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?”

“ஆக்ஸிடென்டில் இறந்ததற்கு கம்பெனி உங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கவில்லையா? அதை நீங்கள் யாரிடமாவது கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? நஷ்டஈட்டுத் தொகையை வங்கியில் போட்டிருந்தால் கூட சுமாரான வட்டி வந்திருக்குமே, இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லையே”

“கம்பெனி லா படி எங்களுக்கு நல்ல தொகை தான் நஷ்ட ஈடாகக் கிடைத்தது. ஆனால் எங்கள் பெரியப்பா அந்தத் தொகையை அவர் கம்பெனியில் டெபாசிட் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அம்மாவிடம் பேசி வாங்கிக் கொண்டார். நான் கூட வங்கியில் தான் டெபாசிட் செய்ய வேண்டும் என்றேன், ஆனால் அவர் வங்கியில் டெபாஸிட் செய்தால் குறைந்த வட்டி தான் கிடைக்கும் என்றார். என்னை சின்னப் பெண் என்று அலட்சியப் படுத்தி விட்டார். அம்மா மொத்தத் தொகையையும் பெரியப்பா கம்பெனியில் தான் டெபாஸிட் செய்தார், ஆனால் இன்று வரை ஒரு வட்டியும் தரவில்லை.

நான் போய் கேட்டதற்கு கம்பெனி நஷ்டத்தில் ஓடுகிறது என்றும், அவர்களுக்கே ஏகப்பட்ட கடன் இருக்கிறதென்றும் அலட்சியமாக சொன்னார்கள். அம்மா அவர் எதிரில் கூட வர மாட்டார்கள்.  அப்பா இல்லாததால் பெரியப்பா தான் உங்களுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் செய்யவார் என்றார். இப்போது நாங்களே காட்சிப் பொருளாகி விட்டோம். போனது போகட்டும் சார், இதுதான் எங்கள் சோகக் கதை” என்று கூறி விட்டு வெறுப்பாக சிரித்தாள்.

“சரியம்மா போனது போகட்டும். இப்போது கோச்சிங் சென்டருக்கு நான் பணம் கட்டுகிறேன், நீ உன் ஐ.ஏ.எஸ். படிப்பில் ஸ்ட்ராங்காக இரு” என்றார் சந்துரு.

“வேண்டாம் சார், கோச்சிங் சென்டரில் சேர்ந்தவர்கள் மட்டும் முதல் அட்டெம்டில் ஒன்றும் தேர்ச்சி பெறுவதில்லை. அதனால் தான் எந்த கோச்சிங் சென்டரிலும் சேராமல் நான் என்னுடைய சொந்த முயற்சியிலேயே தேர்வு எழுத விரும்புகிறேன். இது ஒரு டிரையல் அண்ட் எரர் மெதட் தான். பாஸ் ஆனால் லாபம், பெயில் ஆனால் எந்த நஷ்டமும் இல்லை அங்கிள்” என்று சிரித்தாள் கல்பனா.

சந்துருவும் கூடச் சேர்ந்து சிரித்தார். இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் கைகட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்த கௌதம் “ஹும், ஏகலைவி” என்றான் கிண்டலாக.

“உன்னைக் கிண்டல் செய்கிறான் அம்மா” என்றார் சந்துரு கலகலவென்று சிரித்துக்கொண்டே.

“போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே” என்றாள் கல்பனாவும் சிரித்துக் கொண்டே கிண்டலாக. இருவரையும் உறுத்துப் பார்த்து ஒரு மாதிரி சிரித்தவாறு வெளியேறினார் சந்துரு.

“அப்பா தான் கோச்சிங் சென்டருக்குப் பணம் கட்டுகிறேன் என்றாரே, அதையாவது ஒத்துக் கொண்டிருக்கலாம்” எனக் கேட்டேன் கௌதம்.

“சார், நான் ‘தனி ஒருவன்’, போராடித்தான் பார்ப்போமே” என்றாள்.

“கல்பனா, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எப்போது அப்ளை செய்யப் போகிறீர்கள்? எந்த உதவியானாலும், தயங்காமல் என்னிடம் கேளுங்கள். எனி டைம், எனி டே, ய ஐயம் அட் யுவர் சர்வீஸ்” என்றவன் இடுப்பை வளைத்து அவளுக்கு சல்யூட் அடித்தான்.

“போதும் டாக்டர்! ரொம்பவும் கிண்டல் செய்யாதீர்கள். ரிசல்ட் வந்து, மதிப்பெண் பட்டியலும் வந்த பிறகு தான் அப்ளை செய்ய முடியும். அதற்குள் நான் பி.ஜி.க்கும் அப்ளை செய்ய வேண்டும்” என்றாள். 

கல்பனா ‌ வீட்டிலும் யாரிடமும் எதுவும் சொல்ல வில்லை. “முடவன் கொம்பு தேனிற்கு ஆசை பட்டது போல்” என்று எரிச்சல் படுவாள் அம்மா.

தங்கை காஞ்சனாவோ, “வீட்டு வேலை செய்ய சோம்பேறித்தனம், அதற்காக படிக்கப் போவதாகச் சொல்லி ஏமாற்றுகிறாள் அம்மா” என்பாள்.

தம்பி ரகு எப்போதும் அக்காவிற்கு தான் சப்போர்ட். “என் அக்கா என்ன வேண்டுமானாலும் படித்து பாஸ் செய்து விடுவாள்” என்பான். 

வழக்கமாக மதியம் மூன்று மணிக்கு வரும் கல்பனா, அன்று காலை பதினோரு மணிக்கு ஒரு கட்டைப் பை நிறைய ஏதேதோ புத்தகங்கள் எடுத்து வந்தாள். விஜயா கோர்ட்டிற்குப் போயிருந்தாள். சத்யா, சங்கீதா, கீதா எல்லோரும் ஹாலில் உட்காரந்து தொலைக்காட்சியை ரசித்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். சீனியர் வக்கீலும், அந்த குடும்பத்தின் ஒரே டாக்டரும் ஆப்ஸென்ட்.

“கழுதை பொதி சுமந்து கொண்டு வருகிறது” என்று சங்கீதா அவள் அக்காவிற்கு சைகையால் கூறினாள். அதைப் பார்த்த சத்யாவிற்குக் கோபம் வந்தது.

“கழுதையா பெண்புலியா என்று போகப் போகத் தெரியும். வீணாக தேவையில்லாத வார்த்தைகளைப் பேசாதீர்கள்” என்றவள் எழுந்து கல்பனாவின் அறைக்குள் சென்றாள்.

கல்பனாவைப் பார்த்து திகைத்து நின்றாள். புதிய கல்பனாவைப் பார்த்தாள். பிடரியை சிலிர்த்து நின்ற சிங்கம் போல் நின்ற புதிய கல்பனாவைப் பார்த்தாள்.

“ஏய் கல்பனா, என்னடி இவ்வளவு புக்ஸ் எடுத்து வந்திருக்கிறாய்?” என்றாள் ஆச்சர்யத்துடன்.

சில புத்தகங்களைப் பிரித்து மேலோட்டமாகப் பார்த்தாள். ஏதோ புரிந்தது போல் தலையசைத்தாள். காலை பத்து மணிக்கு வந்தது முதல் மதியம் இரண்டு மணி வரை எடுத்துக் கொண்டு வந்த புத்தகங்கள் படிப்பதும், அவற்றிலிருந்து நோட்ஸ் எடுப்பதுமாக இருந்தாள்.

மதியம் லஞ்ச் சாப்பிட்டு உடனே விஜயாவின் கிளார்க்காக அவதாரம் எடுப்பாள். சில புத்தகங்களை அவள் வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டாள். வீட்டிலும் அவள் எப்போது படிக்கிறாள் என்று அவள் வீட்டிலும் யாருக்கும் தெரியாது. அதைப் போல் அவள் நடந்து கொண்டாள். 

விஜயா அவளுக்கு எல்லாவித்த்திலும் ஒத்துப் போனாள். கல்பனா கேட்டுக் கொண்டதால் அவள் அலுவலக அறையை முழுநாளும் உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதித்தாள், ஆனால் எதற்கு என்று விஜயாவும் கேட்கவில்லை.

இறுதி ஆண்டு தேர்வின் முடிவும் வந்து விட்டது. கல்பனா பி.எஸ்.ஸி பிஸிக்ஸில் மாநிலத்தில் முதல் மாணவியாகத் தேறியிருந்தாள். சத்யாவும் பி.ஏ. பொருளாதாரத்தில் நல்ல மதிப்பெண்களோடு கல்லூரியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி அடைந்திருந்தாள். ‘லா’ என்ட்ரன்ஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.

கல்பனாவும் எம்.எஸ்.ஸி. வகுப்பில் சேர்ந்து விட்டாள். பி.எஸ்.ஸி. சான்றிதழ் வைத்து ஐ.ஏ.எஸ். என்ட்ரன்ஸ் தேர்விற்கும் பணம் கட்டி விட்டாள். கல்பனா பணத்திற்குத் தான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள்.

எம்.எஸ்.ஸி. கோர்ஸிற்குப் பணம் கட்டுவதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்குமே எக்கச்சக்கமாக பணம் தேவைப்பட்டது. ஐ.ஏ.எஸ். என்ட்ரன்ஸ் தேர்விற்கு கையில் பணம் இல்லாமல் விஜயாவிடம் தான் சம்பளத்தில் முன்பணம் வாங்கி கட்டினாள். பணம் வாங்கியதின் காரணம் இவளும் சொல்லவில்லை, அவளும் கேட்கவில்லை .

ஒரு நாள் கீதாவின் குரல் மிக பலமாக ஒலித்தது.  “எங்களுக்கு இங்கே மதிப்பில்லை. நாங்கள் ஏன் இந்த குடும்பத்தில் ஒன்றாக இருக்க வேண்டும்?” என்று கத்தினாள். கௌதம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“உன்னை மதிக்காமல் யார் என்ன செய்தார்கள்?” என்றாள் லக்ஷ்மி மெதுவாக.

“நான் என்ன வெறும் கையை வீசிக் கொண்டா வந்தேன்? இரண்டு கிலோ தங்கம், இரண்டு கிலோ வெள்ளி, புத்தம் புது கார் எல்லாம் தானே கொண்டு வந்தேன். என்னால் இந்த வீட்டில் ஏதாவது குழப்பம் உண்டா? நான் வந்த பிறகு இந்த வீட்டில் எல்லா செல்வமும் வளர்ச்சி தானே அடைந்துள்ளது” என்று ஆங்காரமாகக் கத்தினாள்.

“வாட் இஸ் ராங் வித் யூ?”  என்றார் எரிச்சலாக சந்துரு.

அவருடைய எரிச்சலான குரல் கேட்ட பிறகு தான் அடங்கினாள் கீதா.

“மாமா, நான் இங்கு வந்து யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை. என் தங்கை என்னை விட அழகு, டபுள் கிராஜுவேட். என் அப்பாவின் சொத்துக்கள் எங்கள் இருவருக்கு மட்டுமே. எனக்கு செய்த சீர் வரிசைகளை விட இன்னும் அதிகமாக செய்வார்கள். அப்படி இருந்தும் நீங்கள் ஏன் மாமா என் தங்கையை கௌதமிற்கு திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்? அதனால் தான் மாமா எனக்கு கோபம் வந்தது. என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள்.

“கீதா, உங்கள் திருமணம் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்ததில்லை. உன்னை ஒரு திருமணத்தில் பார்த்து கௌசிக் உன்னைத்தான் திருமணம் செய்வதென்று முடிவு செய்தான். நாங்கள் உன்னைப் பெண் பார்த்து முடிவு செய்தோம். எந்த தங்கமும் வெள்ளியும் நாங்கள் கேட்கவில்லை. உன் பெற்றோர் அவர்கள் திருப்திக்காகவும். தங்கள் செல்வாக்கை காட்டவும் அவர்களாக தன்னிச்சையாக செய்தது.

எங்கள் பிள்ளைக்குப் பெண் பிடிக்க வேண்டும். மற்றபடி வேறு எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை. அதனால் நீயாகக் கற்பனை செய்து எதையும் பேசாதே. எங்களுக்குத் தங்கமோ வெள்ளியோ தேவையில்லை. ஏழைப் பெண்ணாக இருந்தாலும் எங்கள் பிள்ளையின் விருப்பம் தான் எங்கள் விருப்பம். இதில் வேறு யாரும் தேவையில்லாமல் பேச வேண்டியதில்லை” என்று கோபத்துடன் கத்தி விட்டு பாதி சாப்பாட்டில் கை கழுவிக்கொண்டு போய் விட்டார்.

கீதா, சங்கீதா இருவரும் பயமும், அதிர்ச்சியும் கலந்த ஒருகலவையான உணர்ச்சியில் திகைத்து திறந்த வாய் மூடாமல் கையில் எடுத்த சாப்பாட்டை தட்டிலும் போடாமல், வாயிலும் போடாமல் திகைத்து நின்றனர். லட்சுமி அவர்கள் இருவரையும் முறைத்தாள்.

வீட்டிற்கு வெளியே இருந்த விஜயாவின் அலுவலகத்தில் படித்துக் கொண்டிருந்த கல்பனாவின் காதுகளில் ஒரு வார்த்தையும் விழவில்லை. மிகவும் தீவிரமாக நோட்ஸ் எடுப்பதும் படிப்பதுமாக இருந்தாள்.

எல்லா விவகாரங்களும் முடிந்த பிறகு, கௌதம் சாப்பிட்ட கையைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“ஊரே பற்றி எரியும் போது நீரோ மன்னன் வயலின் வாசித்தானாம். அது போல உள்ளே அவ்வளவு கலாட்டா நடக்கிறது, நீங்கள் என்னவோ பிஸியாக படிப்பதும் எழுதுவதுமாக இருக்கிறீர்கள்” என்றான் கௌதம்.

“ஸாரி, வீட்டில் கலாட்டா வா? ஒரு வீடென்றால் சந்தோஷம், கலாட்டா எல்லாம் தான் இருக்கும். ஆமாம், உங்கள் வீட்டிற்குள் நடக்கும் கலாட்டாவெல்லாம் எனக்குத் தெரிய வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்க்கிறீர்கள்? நான் தேவையில்லாத விஷயத்தில் தலையிடுவதில்லை” என்றாள் கல்பனா.

பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக இருந்தாள். மாலை நேரக் கல்லூரியில் படிப்பதால், விஜயாவின் ஆபீஸிற்குக் காலையில் வந்து மதியம் ஒரு மணிக்குக் கல்லூரிக்குப் போய் விடுகிறாள். அதனால் கௌதம் இப்போதெல்லாம் கல்பனாவை பார்ப்பற்கு முடிவதில்லை.   

“கல்பனா, மதியம் லஞ்ச் சாப்பிடவில்லையா? மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே” என்று கேட்டான்.  அவன் குரலில் கவலை தெரிந்தது. கல்பனா அவளுக்கிருந்த அவசரத்தில் எதையும் கவனிக்கவில்லை.

“டாக்டர் சார்… எனக்கு காலேஜிற்கு நேரமாகி விட்டது, நாளை பதில் சொல்லுகிறேன்” என்று அவசரமாக புத்தகங்களை அள்ளி பைக்குள் அழுத்தியவாறு பஸ் பிடிக்க ஓடினாள்.

நான்கு மாதம் வேகமாக ஓடியது. சங்கீதா சென்னையிலேயே ஒரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக சேர்ந்து, பெண்கள் விடுதியிலும் சேர்ந்து விட்டாள். எப்போதும் கௌதமின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. சனி, ஞாயிறு மட்டும் விடுமுறையில் தன் அக்கா கீதாவின் வீட்டிற்கு வருவாள்.

கல்பனா ஒரு வாரம் வேலைக்கு வரவில்லை. உடம்பிற்கு ஏதோ என்று யோசித்தான் கௌதம். விஜயாவிடம் மட்டும் அனுமதி பெற்றிருந்தாள். அவளும் என்ன காரணம் என்று கேட்கவில்லை, இவளும் காரணத்தை சொல்லவில்லை. சத்யா ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.

“அந்த பெண்ணுடைய அம்மா சமையல்காரி தானே! அதனால் அவள் அம்மாவிற்கு உதவி செய்ய வேலைக்கு மட்டம் அடித்திருப்பாள். அவள் ஒரு நாள் வரவில்லை என்றால் உலகமே நின்று விடுமா?” என்றாள் கீதா.

“யாரையும் மட்டமாகப் பேசக் கூடாது கீதா. கல்பனாவின் அம்மா ஒன்றும் பிறக்கும் போதே சமையல்காரர் இல்லை. அவர் கணவர் ஒரு நல்ல பில்டிங் கான்ட்ராக்டராக இருந்தார். ஆனால் விதி வலியது. யாருடைய வாழ்க்கை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. அப்படியே சமையல்காரராக இருந்தாலும் அது ஒன்றும் தப்பான தொழில் இல்லை” என்றார் சந்துரு காட்டமாக.

“நான் என்ன சொல்லி விட்டேன்? அந்தப் பெண்ணைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டால் கூட இவருக்குக் கோபம் வந்து விடுகிறது” என்று முணுமுணுத்தாள் கீதா.

“டாடி, அது என்னவோ தெரியவில்லை. புத்தகத்தின் பக்கம் தலையே வைத்துப் படுக்காத நம் சத்யா கூட எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கிறாள். கேட்டால் மழுப்புகிறாள், இவளும் கல்பனாவும் சேர்ந்து ஏதோ போட்டிக்காகப் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றான் கௌதம்.

“எப்படியோ பொழுது நல்ல விதமாகக் கழிந்தால் சரி” என்று முடித்தார் சந்துரு.

ஒரு நாள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் சத்யா அவளே காரை எடுத்துக் கொண்டு காலையிலே கிளம்பி விட்டாள். லட்சுமியைத் தவிர வேறு யாரும் கவலைப்படவில்லை.

அடுத்த நாள் கல்பனாவும் வேலையில் வந்து சேர்ந்தாள். விஜயா தான் இருவரையும் பார்த்து சிரித்தாள்.

“நீங்கள் இருவரும் என்ன ரொம்ப மர்மமாக நடந்து கொள்கிறீர்கள்? நீ ஒரு வாரம் வேலைக்கு வரவில்லை. உன் தோழி சத்யாவோ ஒரு வாரம் விழுந்து விழுந்து படித்தாள். உங்கள் இருவருக்கும் என்ன ஆயிற்று?” எனக் கேட்க கல்பனாவோ சத்யாவோ சரியான பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் அவர்களின் மர்மமான நடவடிக்கைகளின் விடை கிடைத்தது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    விசித்திர உலகம் (பகுதி 9) – சுஶ்ரீ