in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 7) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விஜயா அவர்கள் கிளினிக்கில் வேலை செய்யும் ஒரு டாக்டருடன் பேசிக் கொண்டிருந்தாள். அதற்குள் மேடையில் பேச அழைத்தவர்கள் எல்லோரும் கௌதமின் திறமையையும், கடின உழைப்பையும் பாராட்டினார்கள். வெளியில் டேபிள் மேல் அந்த புத்தகத்தின் சில நகல்கள் வைக்கப்பட்டிருந்தன.

பாராட்டு விழா முடிந்த பிறகு எல்லோரும் டின்னருக்கு அழைக்கப்பட்டனர். பெரிய மேஜை மேல் ஒரு பக்கம் வெஜிடேரியன் உணவுகளும், ஒரு பக்கம் நான் வெஜிடேரியன் உணவுகளும் வரிசையாக அழகாக அடுக்கப்பட்டிருந்தன.

பக்கத்தில் இன்னொரு சிறிய டேபிள் மேல் பெரிய பீங்கான் தட்டுகளும், சிறிய கண்ணாடிக் கோப்பைகளும் (ஸ்வீட் வைத்துக் கொள்ள) ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. அருகில் பேப்பர் டவல் வைக்கப்பட்டிருந்தது.

ஒரு மரப்பெட்டியில் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப் பட்டிருந்தன. சாப்பாடும் அருமையாக இருந்தது, அரேஞ்ஜ்மென்டும் அட்டகாசமாக இருந்தது.

கல்பனாவிற்கு அவ்வளவு பெரிய பணக்காரர்கள் எதிரில் சாப்பிடக் கூச்சமாக இருந்தது. அவள் சரியாக சாப்பிடாமல் கொஞ்சமாக கொறிப்பதைப் பாரத்துக் கொண்டிருந்த கௌதம், ஒரு தட்டில் கொஞ்சம் வெரைட்டி ரைஸ், கப்பில் குலோப் ஜாமுன், ஐஸ்கிரீம் எல்லாம் அடுக்கி அவளிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

“ஐயோ, எனக்கெதற்கு சார் இவ்வளவு புட்?” என்று அலறினாள் கல்பனா.

டின்னர் முடிந்தவுடன் விஜயா மற்றும் அவளுடைய அம்மா அப்பாவிடம் விடைபெற்று வெளியே சென்றாள். ஆட்டோ வரும் என்று வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தாள். அப்போது கௌதம் தன் ஆடி காரைக் கொண்டு வந்து அவளை உரசினாற் போல் நிறுத்தினான்.

“டிடெக்டிவ் மேடம், ப்ளீஸ் காரில் ஏறுங்கள்” என்று முன் கதவைத் திறந்து   என்றான்.

“சார்” என்று அதிர்ச்சியில் கத்தினாள்.

“ஏங்க, காரில் தானே ஏறச் சொன்னேன். அதற்கு ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?” என்றான் வியப்புடன்.

“வீட்டில் அவ்வளவு விருந்தினர்களும், உறவினர்களும் காத்திருக்கிறார்கள், நீங்கள் இங்கே கார் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றாள் வியப்புடன்.

“ஹலோ… இந்த இருட்டில் நீங்கள் தனியே ஆட்டோவில் போவது அவ்வளவு பாதுகாப்பு இல்லை, பொக்கிஷம் பாதுகாக்கப் படவேண்டும்” என்றான் கௌதம் உணர்ச்சி பொங்க.

“என்ன உளறுகிறீர்கள், பொக்கிஷம் என்று?”  என்றாள்.

“அதெல்லாம் உங்களுக்குப் புரியாது, ஏறுங்கள்” என்று அவசரப்படுத்தினான்.

இரவு வெகுநேரம் ஆகி விட்டதாலும், எந்த ஆட்டோவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாததாலும், வேறு வழியில்லாமல் அவன் காரில் ஏறிக் கொண்டாள் கல்பனா.

“வீட்டில் உன்னை இறக்கி விட்டு உடனே போக வேண்டும். வந்த விருந்தினர்களை வழியனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறி காரில் கொண்டு போய் வீட்டில் இறக்கினான்.

வந்த விருந்தினர்கள் எல்லாம் போன பிறகு கௌசிக், கீதா, சங்கீதா எல்லோரும் கௌதமை ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தொல்லைப்படுத்தினர்.

“நீ என்ன அவளுக்கு டிரைவரா?” என்று கேட்டான் கௌசிக்.

“கல்பனாவைப் பார்த்தால் கௌதம் ரொம்பத்தான் வழிகிறார். இவருடைய படிப்பு, அந்தஸ்து, பர்ஸனாலிட்டி எல்லாம் அவளால் ஏணி வைத்தால் கூட எட்ட முடியாது” என்றாள் கீதா.

“டாக்டர் சாருக்கு நல்ல குலத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் பிடிக்காது. ஒருத்தி வெள்ளைக்காரி. லண்டனில் பிறந்து அங்கேயே மறைந்தாள். இப்போது ஒரு சமையல்காரியின் மகள்” என்று கேலியாகப் பேசி விட்டு தன் முகவாய் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டாள் சங்கீதாவின் அம்மா.

இதைக் கேட்ட கௌதம், “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? உங்கள் யாருக்கும் என் பர்சனல் விஷயம் பேச உரிமையில்லை” என கர்ஜித்தான்.

“டிரைவரோடு அந்தப் பெண்ணை அனுப்பி இருக்கலாம் கௌதம். இந்த வீண் பேச்செல்லாம் தவிர்த்திருக்கலாம்” என்றாள் அவன் அம்மா.

“அம்மா, என் திருமண விஷயத்தில் இவர்கள் யார் மூக்கை நுழைப்பதற்கு? தேவையில்லாமல் மற்றவர்கள் அநாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதை நான் விரும்பவில்லை அம்மா” என்றான் கௌதம்.

“பேசுபவர்கள் மற்றவர்கள் இல்லை கண்ணா. உனக்கு சங்கீதாவை திருமணம் செய்து கொடுக்கப் போகும் அவள் பெற்றோர்”         

“இதென்ன புதுக் கதை! சங்கீதாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக யார் நிச்சயம் செய்தது?”

“நாங்கள் தான் பேச்சு வார்த்தையில் நிச்சயம் செய்திருக்கிறோம். வேறு யார் நிச்சயம் செய்ய முடியும்?”

“என் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது கல்பனாவுடன் தான். மற்றவர்கள் இதில் தலையிட வேண்டாம்” என்று கோபத்துடன் கூறிவிட்டு, மாடியில் உள்ள தன் அறைக்குச் சென்றான் கௌதம்.

அடுத்த நாள் பிற்பகல், வழக்கம் போல் அம்மாவிற்கு  வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து விட்டு விஜயாவின் ஆபீஸிற்கு கிளம்பினாள் கல்பனா. 

அங்கே சத்யாவும் விஜயாவும் இவளை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தார்கள். 

“என்ன?“ என்று கேட்டாள் கல்பனா.

“மருமகளே மணமகளே வா வா” என்று சத்யா பாடி, விஜயா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் எந்த காலத்துப் பாட்டுப் பாடுகிறாய்? அதுவும என்ன என்னைப் பார்த்து பாடுகிறாய்?” என்றாள் கல்பனா.

“சத்யா கரெக்ட்டாகத் தான் பேசுகிறாள். பணம், படிப்பு, அழகு எல்லாம் இருந்தும், என் கௌதம் மாமாவை எதுவுமே இல்லாத ஆப்டர் ஆல் ஒரு சமையல்காரியின் மகளான நீதானே கைக்குள் போட்டுக் கொண்டு இருக்கிறாய். கோடிக் கோடியாய் பணம், அழகு, ஒரு டிகிரி எல்லாம் இருந்தும் என் மாமா என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறார். எல்லாம் என் தலை எழுத்து. என்னை அழ வைத்து விட்டு நீ மட்டும் நல்லா இருப்பியா?” என்றவள் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு ‘ஓ’வென்று அழுதாள் சங்கீதா.

“மணந்தால் கல்பனா தான் என்று மாமாதான் சொன்னாரே. கூட இருந்தே குழி பறிப்பார்களே, அது போலத்தான். நீ இங்கே வந்து எல்லோருடனும் பழகி என் வாழ்க்கையில் நெருப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறாய். நீ நல்லாவே இருக்கு மாட்டாய், நாசமாகத்தான் போவாய்” என்று சபித்து விட்டு அழுதுகொண்டே உள்ளே ஓடி விட்டாள் சங்கீதா.

கல்பனாவிற்கு, அவள் ஏன் அழுகிறாள் என்று தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. சத்யாவும் விஜயாவும் போட்டிப் போட்டுக் கொண்டு முதல் நாள் நடந்த நிகழ்ச்சியை விவரித்தனர். கல்பனாவின் முகம் சுருங்கி விட்டது, சிரிப்பும் மறைந்து விட்டது.

“தப்பு என் மேல் தான், ரொம்பவும் சகஜமாகப் பழகிவிட்டேன் போல் இருக்கிறது. இனிமேல் என் போக்கை மாற்றிக் கொள்கிறேன், சாரி” என்றாள் கல்பனா.

“நீ ஒன்றும் சாரியெல்லாம் சொல்ல வேண்டாம், எங்களுக்கே யாருக்கும் அவளைப் பிடிக்காது. அக்காவும் தங்கையும் சரியான அராத்து, எங்கள் கௌதமிற்கு எப்படிப் பிடிக்கும்?” என்றாள் விஜயா.

“அக்கா, நான் டாக்டர் சாருடன் சகஜமாகப் பேசிச் சிரித்தது எல்லாம் தவறுதான். என் லிமிட் தெரியாமல், அந்தஸ்து நினைக்காமல் பழகியது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. அக்கா, நான் இனிமேல் இங்கே வேலை செய்வது உங்கள் குடும்பத்தில் குழப்பம்தான் உண்டாகும். நான் வேண்டுமானால் நாளையிலிருந்து நின்று விடுகிறேன்” என்றாள் கண்களில் கண்ணீரோடும், குரலில் கலக்கத்தோடும்.

“ஏய் இடியட், அப்படி முட்டாள்தனமாக ஏதும் செய்யாதே. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் நான் எதிர்ப்பார்த்த ஒரு நல்ல அசிஸ்டென்ட் எனக்கு கிடைத்திருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் நான் இழக்க மாட்டேன், புரிந்ததா?” என்றாள் விஜயா.

“ரொம்ப தேங்க்ஸ் அக்கா. எனக்குத்தான் இப்போது வெகேஷன் டைம் ஆயிற்றே. நான், டாக்டர் சார் வேலைக்குப் போன பிறகு வேலைக்கு வந்து, அவர் வருமுன் வீட்டிற்குள் திரும்பி விடட்டுமா?”

“ஏய் கல்பனா, அறிவிருக்கா உனக்கு? போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று வழக்கம் போலவே வா. நம்மிடத்தில் எந்த தவறும் இல்லாத போது நாம் ஏன் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்?” என்றாள் சத்யா.

ஒரு வாரம் எந்த வில்லங்கமும் அமைதியாக இருந்தது விஜயாவின் வீடு. ஆனால் அடிக்கடி உள்நாட்டு கலகம் இருக்கும் போல் இருந்தது.

கௌதம் வந்தாலும் இப்போதெல்லாம் கல்பனா முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவனும் அடிக்கடி வந்து கல்பனாவுடனோ அல்லது விஜயாவுடனோ வம்பிற்கு இழுத்துக் கொண்டிருந்தான், ஆனால் கல்பனா எதற்கும் வாயே திறப்பதில்லை.

ஒரு நாள் கல்பனா சத்யாவிடம், “ஏ சத்யா, பகல் முழுவதும் வெட்டியாகப் பொழுது போகிறது. ஏதாவது கோர்ஸில் சேரலாமென்று நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்டாள்.

“அப்பா கூட என்னை ‘லா’ என்ட்ரன்ஸிற்குத் படிக்க சொல்கிறார், ஆனால் நீ என்ன கோர்ஸில் சேரப் போகிறாய்?”

“எந்த கோர்ஸிலும் சேர்ந்து படிக்க என்னால் செலவு செய்ய முடியாது, அதனால் லைப்ரரியில் சேரந்து புத்தகங்களை ‘ரெபர்’ செய்து நம் பரீட்சை ரிஸல்ட் வந்த பிறகு ஐ.ஏ.எஸ். பிரிலிமினரி எக்ஸாம் எழுதலாமென்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?”  எனக் கேட்டாள் கல்பனா.

 ‘கொல்’லென்று சிரிக்கும் சப்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பாரத்தனர். வெளியே சங்கீதா தான் நின்று கொண்டிருந்தாள்.

”ஏன் சிரிக்கிறாய்?” எனக் கேட்டாள் சத்யா.

“சிரிக்காமல் என்ன செய்வது? ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தே நான் இரண்டு அட்டெம்ட்’டிலும் பிரிலிமினரி தேர்வில் கோட் அடித்து விட்டேன். எந்த கோச்சிங் சென்டரிலும் சேராமல் இவள் எப்படிப் படித்துக் கிழிக்கப் போகிறாள்? பார்க்லாம்” என்று கேலியாக சிரித்துக் கொண்டே உள்ளே போனாள் சங்கீதா.

விஜயாவும் கௌதமும் இவர்கள் பேசுவதைக் கேட்டு திகைத்து நின்றனர்.

“சின்ன அண்ணா, என்ன அப்படியே திகைத்து நின்று விட்டாய்?”

“சங்கீதா சொல்வது கரெக்ட்தான். ஐ.ஏ.எஸ். எக்ஸாம் எழுதுவது என்ன விளையாட்டா? கோச்சிங் சென்டரில் சேராமல் எக்ஸாம் எழுதுவது விளையாட்டு இல்லை. கல்பனா யோசித்து முடிவு செய். பரீட்சையில் தோற்றால் உன் மேல் நீயே நம்பிக்கை இழந்து விடுவாய்” என்று அறிவுறுத்தினான்.

வழக்கம் போல் டைனிங் ஹால் மகாநாட்டில் சங்கீதா கல்பனாவைப் பற்றி கிண்டல் செய்து பேசிக் கொண்டிருந்தாள். அது சத்யாவின் அப்பா சந்துருவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“மற்றவர்களுக்கு உதவி செய், முடியவில்லையானால் கேலி செய்யாதே” என்றார்.

”சாரி” என்று கூறி விட்டுப் பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.

கம்ப்யூட்டரில் உட்கார்ந்து ஐ.ஏ.எஸ். சம்பந்தமான விவரங்களைத் தேடிக் கொண்டிருந்தாள் கல்பனா.  அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக சந்துரு அவள் அருகே ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தார். கூடவே டாக்டர் கௌதமும வந்தான்.

“சார் நீங்களா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டவள், தன் இருக்கையிலிருந்து எழ முயற்சித்தாள். கல்பனாவின் தோள்களைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்தார் சந்துரு.

 “கல்பனா உட்காரம்மா. என் அருமை நண்பனின் மகள் நீ. அர்ஜுனுடய முகஜாடை மட்டுமல்ல, அவனுடைய குணாதிசையங்களும் உன்னிடம் அப்படியே பிரதிபலிக்கின்றன.  அதனாலோ என்னவோ எனக்கு உன் மேல் சத்யாவைப் போலவே பிரியம் அதிகம். அம்மாடி… உனக்கு ஐ.ஏ.எஸ். என்பது வாழ்நாள் கனவு என்று புரிந்து கொண்டேன். கோச்சிங் கிளாஸிற்கு நான் பணம் கட்டி உன்னை சேர்த்து விட்ட்டுமா அம்மா?”

“வேண்டாம் ஸார், யாரிடமும் பணம் வாங்கினால் அம்மாவிற்குப் பிடிக்காது”

“உன் பெரியப்பாவிடம் பணம் வாங்கி கிளாஸில் சேரலாமே?”

சிரித்தாள் கல்பனா. “உறவினர்கள் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வதற்கு மட்டும்தான் என்பாள் அம்மா. அவர்களிடம் எந்தப் பணப்போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் அம்மா மிகவும் கண்டிப்பாக இருப்பாள்”

“கல்பனா, நான் ஒன்று கேட்டால் தப்பாக நினைக்க மாட்டாயே?” என சந்துரு கேட்க

“கேளுங்கள் சார், தப்பாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்றாள் கல்பனா.

கேட்பதற்குத் தயங்கி சிறிது நேரம் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்துரு.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 6) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 8) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை