in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் கல்பனா?” என்று கௌதம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வரிசையாக இரண்டு மூன்று பல்லவன் பஸ்களும், லாங்ரூட் பஸ்களும் ஒன்றை ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன.

அதைப் பார்த்த கல்பனாவிற்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. பஸ் ஸ்ட்ரைக் என்றான், ஆனால் எல்லா பஸ்களும் ஓடுகின்றதே என்று அதிர்ச்சியடைந்தாள்.

தன்னை மறந்து அவன் தோளைத் தட்டி, “டேய், எல்லா பஸ்களும் ஓடுகின்றதே, என்னிடம் பொய் சொன்னாயா?” என்று உலுக்கினாள் கல்பனா.

சாலையிலிருந்து பார்வையைத் திரும்பி அவளைப் பார்த்து சிரித்தான் கௌதம்.

“கல்பனா, நீ இப்படிக் கூப்பிடுவது கூட அழகாகத்தான் இருக்கிறது” என்றான் கிண்டலாக. கல்பனா அப்போது தான் அவனை “டேய்” என்று கூப்பிட்டதை நினைவு கூர்ந்தாள்.

“ஸாரி, ஸாரி சார்” என்று பதறினாள். ஆனால் கொஞ்சம் தெளிவான பின், “நீங்கள் பொய் சொல்லி என்னை ஏமாற்றியது தவறுதானே சார்” என்றாள் கலங்கிய குரலில்.

“வெச்சா குடுமி, சரைச்சா மொட்டையா கல்பனா?” என்றான் கௌதம். அவன் சொல்வது புரியாமல் அவனைப் பார்த்து விழித்தாள் கல்பனா.

“கோபம் வந்தால் ‘டேய்’, கோபம் போனால் ‘சாரா?’. எதுவும் வேண்டாம், என்னை கௌதம் என்றே கூப்பிடுங்கள்” என்றான் கௌதம்.

“நான் ஏன் உங்களிடம் பஸ் ஸ்ட்ரைக் என்று பொய் சொன்னேன் தெரியுமா? நான்கு பையன்கள் உங்களை அருகி்ல் நின்று ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள் இல்லையா? நீங்களும் அங்கே நிற்கவே பிடிக்காதது போல் நின்றுக் கொண்டிருந்தீர்கள். காரில் வரும் போதே நான் அதை கவனித்தேன். உங்களை அந்த சூழ்நிலையில் அங்கே தனித்து விடப் பிடிக்கவில்லை. அதுவும் இல்லாமல், உங்கள் மேல் சூடான சூப் கொட்டி விட்டேன். கை இன்னமும் எரிகின்றதா? அதற்கு மன்னிப்பு கேட்கவும்தான்” என்றவன், காரின் ‘டேஷ் போர்டை’த் திறந்து ஒரு ஆயின்மென்ட் எடுத்துக் கொடுத்தான்.

“டாக்டர், இன்னும் எத்தனை முறை மன்னிப்பு கேட்பீர்கள்? நான் அதை மறந்தே விட்டேன். வலியும் இல்லை” என்றாள் லேசான சிரிப்புடன்.

“எங்கே கையைக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்றான் கௌதம் பிடிவாதமான குரலில்.

கல்பனா கையை நீட்டிக் காட்டினாள். பட்டாணி அளவில் கையி்ல் நான்கு ஐந்து இடங்களில் சிவந்து லேசான கொப்புளங்களாக இருந்தன. அதைப் பார்த்தவுடன் கௌதமின் முகம் அவமானத்தால் தாழ்ந்தது.

“என்னால் தானே இந்த காயம், எவ்வளவு வலித்திருக்கும்?” என்று நிஜமாகவே வருந்தினான் கௌதம்.

“ஒரு சின்ன வெளிக்காயத்திற்கே இப்படி வருத்தப்படுகிறீர்களே டாக்டர். உங்களை இவ்வளவு தூரம் படிக்க வைத்து, உங்கள் எதிர்காலத்தின் மேல் எவ்வளவோ நம்பிக்கை வைத்து கோட்டைக் கட்டி இருப்பார்களே, உங்கள் பெற்றோரும் உடன் பிறந்தோரும். அவர்களுக்கெல்லாம் நீங்கள் இப்படி இருப்பது எவ்வளவு மனவருத்தம் தந்திருக்கும். நீங்கள் எவ்வளவோ படித்திருக்கிறீர்கள். என்னால் அறிவிலும் வயதிலும் ஏணி வைத்தால் கூட உங்களை எட்ட முடியாது. இவள் என்ன சொல்வது என்று கோப்பப்படாதீர்கள். என் மனமும் வருந்தியதால் தான் இதைச் சொல்கிறேன், தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்றாள். உணர்ச்சிப் பெருக்கில் அவள் கண்களில் லேசாக கண்ணீர் முத்துக்கள்.

அவளை ஆச்சர்யத்துடன் உறுத்துப் பார்த்த கௌதம், “எனக்காக அழவும் சிரிக்கவும் ஒரு உயிர், இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது” என்றான் லேசான சிரிப்புடன்.

பேசிக் கொண்டிருக்கும் போதே கார் கல்லூரி வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி கௌதமிற்கு கை அசைத்து விடைபெற்றாள் கல்பனா. அவள் செல்வதையே சிறிது நேரம் பார்த்து விட்டு மெல்ல விசிலடித்துக் கொண்டு தன் காரை எடுத்துச் சென்றான் கௌதம்.

கல்பனா வழக்கம் போல் பிற்பகல் மூன்று மணிக்குத் தன் பார்ட்-டைம் வேலைக்கு விஜயாவின் ஆபீசிற்கு வந்து விட்டாள். அம்மா மதியம் சாப்பாட்டிற்காக்க் கட்டிக் கொடுத்த எலுமிச்சை சாதமும், உருளைக் கிழங்கு வறுவலும் அவளுடய லஞ்ச் பேக்கில் இருந்தாலும், எட்டுத் திக்கும் மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

அப்போது உள்ளே வந்த சத்யா, “ஏய் கல்பனா, லஞ்ச் சாப்பிடவில்லையா? உன் அம்மா கட்டிக் கொடுத்த எலுமிச்சை சாதம் வா வா என்றழைக்கிறதே” என்று கூறிக் கொண்டே அவள் லஞ்ச் பேகைப் பிரித்தாள். கொஞ்சம் கூட சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்தாள்.

“ஏய் கல்பனா, லஞ்ச் கூட சாப்பிடாமல் அப்படி என்னடி படிக்கிறாய்?” என்றாள் கோபமாக.

“ஆன்ஸிலரி கிளாஸ் கெமிஸ்ட்ரி லேபில் ரொம்ப நேரமாகி விட்டது, அதனால் தான் சாப்பிடவில்லை. இப்போது ஒரேயடியாக ஆறிப் போய் இருக்கிறது. நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றாள் கல்பனா.

“ஏய் லூஸு, அக்கா உன்னை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கி வீட்டிற்கு அனுப்பவே மணி இரவு எட்டாகி விடும். ஒரு நிமிடம் இரு. நான் இந்த சாப்பாட்டை மைக்ரோ அவனில் சூடு செய்து தருகிறேன்” என்றவள், சாப்பாட்டைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள்.

அந்த நேரத்தில் வெளியில் இருந்து உள்ளே வந்தான் கௌதம். சூடான சாப்பாடும், சில தட்டுகளும் எடுத்துக் கொண்டு அங்கு வந்தாள் சத்யா. சாப்பாட்டின் வாசனை வாயில் நீர் ஊற வைத்தது.

இரண்டு தட்டுகளிலும் எலுமிச்சை சாதமும், உருளைக்கிழங்கு வறுவலின் வாசனையும் மூக்கைத் துளைத்தது.

“ஏய் சத்யா, வாசனை மூக்கை துளைக்கிறதே… எனக்கும் கொஞ்சம் கொடு” என்றான் கௌதம் கெஞ்சும் குரலில்.

“டேய், இது ஒருத்தருக்கான சாப்பாடு. இது எங்கள் இருவருக்கே போதாது. கையை நீட்டு, ஒரே ஒரு உருண்டை. போனால் போகட்டும் என்று தருகிறேன்” என்றாள் சத்யா.

ஒரு பெரிய உருண்டையாகப் பிடித்து அவன் கையில் கொடுத்து விட்டு, மீதி சாப்பாட்டை தோழிகள் இருவருமாக சாப்பிட்டு முடித்தனர்.

அந்த நேரத்தில் மிகுந்த களைப்புடன் விஜயா கோர்ட்டில் இருந்து உள்ளே நுழைந்தாள்.

“என்ன கல்பனா இந்த நேரத்தில் லஞ்ச் பார்ட்டி?” என்றாள் விஜயா.

“பார்ட்டியும் இல்லை ஒன்றும் இல்லை அக்கா. மத்தியானம் அவளுக்கு கெமிஸ்ட்ரி லேபில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டிருக்கிறது, அதனால் அவள் சாப்பிடவில்லை. இங்கே வந்த பிறகு லஞ்ச் பாக்ஸில் இருந்த சாப்பாட்டின் வாசனை மூக்கைத் துளைத்தது. அதனால் அதை மைக்ரோஅவனில் சூடு பண்ணி நானும் இவளும் சாப்பிட்டோம். அப்போது கௌதம் அண்ணா கை நீட்ட அவனுக்கும் ஒரு உருண்டை கொடுத்தோம். இதற்காக நீ ஒன்றும் கல்பனாவைக் கோபித்துக் கொள்ளாதே” என்றாள் சத்யா.

“நான் ஏண்டி கோபித்துக் கொள்ளப் போகிறேன்? கல்பனா, சாப்பாட்டுக் கடை முடிந்து விட்டதா? சத்யா, கௌதம் இருவரும் கிளம்புங்கள்” என்றவள், அவர்கள் சென்ற பிறகு, “நேற்று ஒரு பைலைக் கொடுத்து யார் குற்றவாளியாக இருக்கலாம் என்று அனலைஸ் செய்து எழுதச் சொன்னேனே! எழுதினாயா?” என்று கேட்டாள்.

“என் கருத்தை எழுதியிருக்கிறேன் மேம், ஆனால் இது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை” என்றவாறு தன் கருத்துக்கள் எழுதிய ஒரு நோட்டுப் புத்தகத்தை நீட்டினாள்.

“குற்றவாளி, இறந்தவரின் இரண்டாம் மனைவியும் மகனுமாகத்தான் இருக்க வேண்டும். காரணம், முதல் மனைவியின் மகன் ரமேஷ் முழு நேரக் குடிகாரன். ஆளும் மிகவும் பலஹீனமாகத்தான் இருக்கிறான், அவனோ எப்போதும் மயக்கத்திலேயே இருக்கிறான். அவன் தந்தைக்கோ அதிகம் வயதில்லை. கெட்டப் பழக்கம் எதுவும் இல்லாததால் நல்ல பலமாக இருக்கிறார்.

இரண்டாவது மனைவியும் மகனும் வேறு அவர்கள் தேவைக்காக நன்றாகக் கவனித்து இருப்பார்கள். ஆதலால் ரமேஷால் அவரைத் தாக்கி இருக்க முடியாது.

வீடு பூட்டியிருந்தாலும், அந்த பூட்டை உள்ளேயிருந்தும் வெளியே இருந்தும் திறக்கலாம். அந்தத் தெருவில் கேமிரா எங்காவது பிக்ஸ் செய்திருந்தால் புதிதாக யார் அந்தத் தெருவிற்குள் நுழைந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.

ரமேஷின் தந்தை பூட்டிக் கொண்டு படுத்தாலும், வெளியே போன அவருடைய இரண்டாவது மனைவியும் மகனும் தான் மற்றொரு சாவியால் கதவைத் திறந்து கொண்டு அவர்களோ அல்லது அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்களோ உள்ளே நுழைந்து ரமேஷின் தந்தையைக் கொலை செய்திருக்கலாம்.  இது என்னுடைய யூகம் தான்” என்று முடித்திருந்தாள் கல்பனா.

அதைப் படித்த விஜயாவின் உதடுகளில் லேசான புன்னகை, ஆனால் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

இரவு டின்னர் முடிந்தபின் விஜயா தன் தந்தையுடன் கொஞ்ச தூரம் வாக்கிங் போவதை வழக்கமா‌கக் கொண்டிருந்தாள். அப்போது அவர்கள் இருவரும் ஏதாவது முக்கியமான கேசைப் பற்றி விவாதிப்பார்கள்.

             அதே போல் தான் அன்றும் விஜயா, கல்பனாவிடம் கொடுத்து படிக்கச் சொன்ன கேசைப் பற்றியும், கேஸின் முடிவு பற்றி கல்பனா எழுதிய கருத்துக்கள் பற்றியும் விவாதித்தார்கள். கல்பனாவின் கருத்துப் பற்றி கேட்ட விஜயாவின் தந்தை மிகவும் ஆச்சர்யப்பட்டார்.

“கல்பனாவோ அறிவியல் மாணவி. இவ்வளவு சிறிய வயதில் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, “அந்தப் பெண்ணை ஒரு நாள் என்னை வந்து பார்க்கச் சொல் அம்மா” என்றார்.

“ஏன்?” என்பது போல் அப்பாவை நிமிர்ந்து பார்த்தாள், ஆனால் ஒன்றும் கேட்கவில்லை.

அடுத்த சில நாட்களாக கௌதமைப் பார்க்க முடியவில்லை, கல்பனாவிற்கு ஏன் என்று மனம் தேடியது. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

சத்யாவே ஒரு நாள் கல்பனாவிடம், “ஏய் கல்பனா, உனக்கு ஒன்று தெரியுமா? என் அண்ணா கௌதம் எந்த போதி மரத்தடியில் ஞானம் பெற்றான் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் குடிப்பதில்லை, ஒழுங்காக ஆஸ்பத்திரிக்குப் போகிறான் என்கிறார் அப்பா” என்று கல்பனாவின் கேள்விக்கு பதில் சொன்னாள்.

“நிஜமாகவா? எப்படி இந்த மாற்றம்?” ஆச்சர்யத்துடன் கேட்டாள் கல்பனா.

“ஒரு வேளை மஷ்ரூம் சூப்பின் மகிமையோ” என்று கூறிச் சிரித்தாள் சத்யா.

“ஏய்… சூப்பில் நான் தானே குளித்தேன். எந்த மாற்றமும் எனக்குத்தானே ஏற்படவேண்டும்” என்றாள் யோசனையுடன்.

“ஆனால் அந்த சூட்டில் உனக்கு ஏற்பட்ட வலியை நான் அவன் கண்களில் பார்த்தேன். அவன் மிகவும் மென்மையானவன், மற்றவர்கள் வலியால் அவன் தான் மிகவும் பாதிக்கப்படுவான். அன்றிலிருந்தே அவன் குடிப்பதை நிறுத்தி விட்டான் என்று நினைக்கிறேன்” என்றாள் சத்யா.

“எப்படியோ என்னால் ஒரு நல்லது நடந்தால் நல்லது தான்” என்றாள் கல்பனா.

“ரொம்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளாதே, எல்லாப் பெருமையும் மஷ்ரூம் சூப்பிற்கே சேரும்” என்றவள் கலகலவென்று சிரித்தாள். கல்பனாவும் கூடசேர்ந்து சிரித்தாள். மனதில் சந்தோஷத்தில் பூ பூத்தது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    இருப்பதை விட்டு (சிறுகதை-முற்பகுதி) – நாமக்கல் எம்.வேலு