in , ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஆனால் கல்பனா மட்டும் அவ்வப்போது சத்யாவிடம் கௌதமின் உடல்நிலை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வாள். முதலில் சத்யாவும் கோபத்தோடு வெடித்தாள்.

“உனக்கு உன் ஈகோ தான் பெரிது, அவன் எக்கேடோ கெட்டுப் போனால் உனக்கென்ன?”  என்றாள் வெறுப்போடு.

சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்த கல்பனா, அவள் மருத்துவமனையில் ட்ரீட்மென்டில் இருக்கும் போது அவளுடைய பெற்றோர் இருவரும், அவளிடம் வாங்கிய சத்தியத்தைப் பற்றிக் கூறினாள்.

“என்னால் மட்டும் கௌதமைப் பிரிந்திருக்க முடியும் என்று நம்புகிறாயா? அவர்கள் பணத்தினால் இருக்கும் ஏற்றத்தாழ்வை மட்டும் கூறவில்லை. நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவள் என்றும், உறவினர் மத்தியில் என்னை மருமகள் என்று அறிமுகப்படுத்துவதே அவமானம் என்றும் கூறினர். ஆன்ட்டி மட்டும் அப்படிக் கூறியிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் ஆன்டியை விட அங்கிள் இன்னும் பிடிவாதமாகப் பேசி அந்த சத்தியத்தை என்னிடம் இருந்து வாங்கினார். அந்த நேரத்தில் எனக்கும், என்னை ஜாதியை வைத்து மட்டம் தட்டவும் தான் எனக்கு பயங்கரக் கோபமும், அவமானமுமாக இருந்து சத்தியம் செய்து கொடுத்தேன்” என்று பெருமூச்செறிந்தாள் கல்பனா.

“இதே போல் தான் ஜாதியைக் காட்டி, விஜயா அக்காவின் காதலையும் அழித்து அவளை நிரந்தரமாகத் தனியாக்கி விட்டார்கள். இந்த வீட்டிற்கு கண்ணீரோடு நிற்கும் ஒரு விஜயாவே போறும். இன்னொரு கண்ணீர் கதை வேண்டாம். கல்பனா, நான் சொல்வதை மனதில் வைத்துக் கொள். பிளாக்-மெயில் செய்து வாங்கிய சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை, அதனால் என் அண்ணா கௌதமோடு சீக்கிரம் சமாதானம் ஆக வேண்டும். என்ன உன் மரமண்டைக்கு நான் சொன்னது புரிந்ததா?” எனக் கேட்டாள் சத்யா.

இதற்குள் கல்பனாவை பங்களூரிலிருந்து ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்திற்கு மாற்றி இருந்தார்கள். படிக்காத மக்களும், போதிய மருத்துவ வசதியில்லாத அரசாங்க மருத்துவமனைகளும், பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இதற்கிடையில் கௌதம் ஆந்திராவில் உள்ள ஒரு பெரிய, புகழ்பெற்ற மருத்துவமனையில் பணியில் சேர்ந்து விட்டான். ஆனால் உண்மையில கௌதமிற்கு, கல்பனா அங்கு தான் பணி புரிகிறாள் என்று தெரியாது.

கௌதம் ஆந்தராவில் உள்ள பெரிய மருத்துவமனையில் வேலைக்கு சேரப் போவதைத் தெரிவித்தவுடன் வீட்டில் ஒரே கலாட்டா.

“எங்களை விட்டு நீ எப்படி தனியாகப் போகலாம்? தனியாகப் போனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்?  அப்படிப் போவதானால் சங்கீதாவைத் திருமணம் செய்து கொண்டுதான் போக வேண்டும்” என்று அவரவர் பாணியில் அடம் பிடித்தனர். அம்மாவோ அழுது அழுது அறற்றிக் கொண்டிருந்தாள்.

சங்கீதாவும், கீதாவும் மாடிப்படிக்கடியில் நின்று கொண்டு வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்தவுடன் உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்கள் அருகில் போய் நின்றான் கௌதம்.

“அண்ணி, சங்கீதா இருவரும் என்னைப் பாருங்கள். வராத கண்ணீருக்காக கண்களை அழுத்தித் தேய்ப்பதால் வீணாக்க் கண்கள் தான் வலிக்கும். ஜாலியாக ஒரு ‘பை’ சொல்லுங்கள்” என்று சிரித்தான்.

அவர்கள் எல்லோருக்குமாக ஒரு பதிலை அளித்தான் கௌதம்.

“எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சங்கீதா, நான் சொல்வதை உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். என் உடல் பொருள் எல்லாம் கல்பனாவிற்கு மட்டுமே சொந்தம், ஆதலால் வேறு யாராவது மனதிற்குப் பிடித்த நல்ல பையனாகப் பார்த்து மணம் செய்து கொள்ளுங்கள். இதை ஒரு நல்ல சகோதரனின் அட்வைஸாக தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு ஒரு ‘பேக் பேகை’ மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் சென்று ஆறு மாதங்கள் வேகமாக கடந்தது. புது இடம், அன்னிய மனிதர்கள், இத்தனை வருடங்கள் அவனுடைய சொந்த மருத்துவமனையில் பணிபுரிந்து விட்டு இப்போது வேறு ஒரு பெரிய, புகழ்பெற்ற மருத்துவமனையில் பணிபுரிந்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எல்லாமாக சேர்ந்து அவனுக்கு மூச்சு விடவே நேரமில்லை.

கல்பனாவின் நிலைமையும் இதுவே தான். புது மாநிலம், புது மொழி, புது மக்கள், அந்த மாநிலத்தில் உள்ள மக்களின் அடிப்படைக் கல்விக்கூட இல்லாத அறியாமை எல்லாம் சேர்ந்து அவளும் மிகவும் பிஸியாகி விட்டாள்.

ஒரு நாள் திடீரென்று அவளுக்கு விஜயாவின் ஞாபகம் வந்து நின்றது. ‘ஜாதியைக் காட்டி விஜயாவின் காதலை அழித்ததும் போதும். இந்த வீட்டிற்கு ஒரு விஜயாவின் கண்ணீர் கதையே போதும்; இன்னொரு கண்ணீர் கதை வேண்டாம்’ என்ற சத்யாவின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.

அப்படியானால் விஜயா அக்காவின் காதல் கதையும் கண்ணீர் கதை தானா? அக்காவின் மனதில் உள்ளவர் யார்? தன் துக்கத்தை மறைக்கத் தான் ‘லேடி ஹிட்லர்’ என்ற கடுமையான முகத்திரையை போட்டு தன்னைக் கடுமையானவளாகக் காட்டி யாரும் தன்னிடம் சுலபமாக நெருங்குவதைத் தவிர்க்கிறாரோ என்று தோன்றியது.

உடனே விஜயாவிடம் பேச வேண்டும் என்று மனது துடித்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. கொஞ்சமும் தயங்காமல் பியூனிடம் தனக்கு ஏதாவது டிபன் வாங்கி வரச் சொல்லி ஐநூறு ரூபாய் நோட்டொன்றைக் கொடுத்தாள்.

இவ்வளவு காலையில் அவனும் டீயைத் தவிர வேறு ஒன்றும் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று நினைத்து, “மாணிக்கம், நீயும் உனக்குப் பிடித்தது ஏதாவது சாப்பிட்டு விட்டு, எனக்கு டிபனும், பிளாஸ்கில் காபியும் வாங்கிக் கொண்டு வா” என்று கேட்டுக் கொண்டாள்.

அவனும், சந்தோஷமாகப் போன பிறகு, கல்பனா தன் செல் போனில் விஜயாவை அழைத்தாள்.

விஜயாவிடம் பேசப் பேச கல்பனாவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய தாயார் லட்சுமிக்கு திடீரென்று பக்கவாதத்தில், ஒரு கையும் காலும் வேலை செய்யவில்லை என்றும், வாயும் சரியாகப் பேச முடியவில்லை, குழறிக் குழறித் தான் பேசுகிறாள், படுத்த படுக்கையாய் இருப்பதாகவும் தெரிவித்தாள் விஜயா.

“இப்போதெல்லாம் பராலிஸிஸ் உடனே குணமாக்கி விடுகிறார்களே. கௌதமிற்கே இது சம்பந்தமாக நிறைய டாக்டர்கள் தெரியுமே” என்றாள் கல்பனா.

“கௌதம் தான் இங்கே இல்லையே, ஆந்திராவில் உள்ள பெரிய மருத்துவமனையில் தானே வேலை செய்கிறான். உனக்குத் தெரியாதா? அவனும் ஒரு மாதம் லீவ்போட்டு விட்டு வருவதாகத் தெரிவித்தான்” என்றாள் விஜயா ஆச்சர்யத்துடன்.

“கௌதம் இங்கே இருக்கிறாரா?  சத்தியமாய் எனக்குத் தெரியாது அக்கா. அப்படியானால் அம்மாவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? உங்கள் சகோதரர் கௌசிக்கும் கீதாவும் தான் பார்த்துக் கொள்கிறார்களா?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“நீ வேறே, கௌஷிக்கும் கீதாவும் இங்கே இல்லை கல்பனா. ஆந்திராவில் பணியில் சேரும்போது கௌதம் ஒரு சூளுரை உரைத்து விட்டுப் போனான். அப்போது வீட்டை விட்டுக் கிளம்பி தனிக்குடித்தனம் போனவர்கள் தான்.  அம்மாவிற்கு உடம்பு சரியில்லையென்று தெரிவித்தும் கூட வந்துப் பார்க்கவில்லை. இத்தனை நாள் வேலை செய்த சமையல்காரி, பெண்ணுக்குத் தலைப்பிரசவம் என்று பழனிக்குப் போய் விட்டாள். ஸ்விகி மூலம் தான் ஆர்டர் செய்து நானும், அப்பாவும் சாப்பிடுகிறோம். அம்மாவிற்குக் கஞ்சி போல் தான் தர முடிகிறது. அதை மட்டும் ‘யூ ட்யூப்’ பார்த்து தயாரித்துக் கொடுத்து விடுகின்றேன்” என வருந்தினாள் விஜயா.

“கௌதம் அப்படி என்ன சொல்லி விட்டுப் போனார்?” என கல்பனா கேட்க

“ம்… மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி என்ற சினிமா வசனம் போல், திருமணம் என்று ஒன்று நடந்தால் அது கல்பனாவுடன் தான். மனைவி என்று ஒருத்தி இருந்தால் அது கல்பனா மட்டும் தான் என்று உறுதியாகக் கூறி விட்டுப் போய் விட்டான்”

“சரி அவர் பேச்சை விடுங்கள் அக்கா, தினமும் ஓட்டலில் சாப்பிட்டால் அந்த எண்ணெய் பண்டம், காரம் எல்லாம் உங்களுக்கே ஒத்துக் கொள்ளாதே. நான் இப்போது பத்து நாட்கள்’ லீவ் எடுத்துக் கொண்டு வரட்டுமா? அங்கிள் ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்வாரா?”

“அப்பா உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீ இங்கு வந்தால் எனக்கு மிகவும் தைரியமாக இருக்கும்.  ஆனால் நீயும் எங்களோடு சேர்ந்து ஹோட்டல் சாப்பாடு தான் சாப்பிட வேண்டும், அதற்கு தைரியமிருந்தால் வா” என கலகலவென்று சிரித்தாள் விஜயா.

“அக்கா, நான் ஒரு சமையல்காரியின் மகள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். எனக்கு சமையல் தெரியாது என்பது உண்மைதான். அம்மாவும் இப்போது அந்த வேலை செய்வதில்லை, ஆனால் கொஞ்சம் ஆட்களின் உதவியோடு பெரிய ஆர்டராக எடுத்து செய்கிறார்கள். இதனால் சமையல் தொழில் செய்யும் பல பெண்கள் அம்மாவுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவர்களில் கொஞ்சம் உண்மையாக நன்றாக சமையல் செய்பவர்களை ஏற்பாடு செய்து விடலாம், உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீக்கி விடலாம். என்ன சொல்கிறீர்கள்? மேலும் அங்கிள் ஆன்ட்டியிடமும் சொல்லுங்கள், நான் அவர்களுக்குப் செய்து கொடுத்த சத்தியத்தை ஒரு காலும் மீற மாட்டேன். நான் என்றும் சத்யாவின் நல்ல சிநேகிதி தான் உங்கள் சிஷ்யை தான் என்று உறுதியளிப்பதாகவும் சொல்லுங்கள். இதன் பிறகு அங்கிள் வரச் சொன்னால் வருகிறேன். கேட்டு எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் ஒரு பத்து நாள் லீவ் எடுத்துக் கொண்டு வருகிறேன்” என முடித்தாள் கல்பனா.

விஜயா தன் தந்தையின் சம்மதத்துடன் அவளை வரச் சொன்னாள். கல்பனா பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தாள். வருவதற்கு முன்பே, அவள் அம்மாவிடம் சொல்லி, சமையலுக்கு ஒரு ஆளை வரவழைத்து விட்டாள்.

கல்பனா வருவதற்கு முன்பே சமையல் மாமி வந்துவிட, விஜயா அவளிடம் ‘இன்டர்வியூ’ நடத்தி வேலையிலும் சேர்த்துக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்தவுடனே, ஆன்ட்டியைப் பார்க்க வேண்டுமென கல்பனா கேட்க, அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள் விஜயா. 

அது அவர்களின் படுக்கை அறையே. உள்ளே  நுழைந்தவுடன் அண்டார்ட்டிக்காவில் இருப்பது போல் ஏ.சி புல்லாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு மின் விசிறியும் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னல்கள் எல்லாம் மூடி அறையே ஒரே இருட்டாக ‌இருந்தது.

நன்றாகப் பேசுபவர்கள் கூட அந்த அளவுக்கு மீறிய அமைதியில் பேசுவதை மறந்து அமைதியாகி விடுவார்கள். வெளிக்காற்றே உள்ளே வராமல் எல்லா ஜன்னல்களையும் மூடி வைத்தால் உயிர் கொல்லியான கார்பன் மோனாக்ஸைடு கூட உண்டாகி விடும். இதை எப்படி இரண்டு வக்கீல்களும் மறந்தார்கள் என்று தெரியவில்லை.

ஒரு கனமான போர்வையைப் போர்த்தி லட்சுமியை குளிராமல் காப்பாற்றி வைத்திருந்தனர். பக்கத்திலேயே ஒரு ஈஸி சேரில் வக்கீல் சந்துரு தூங்கிக் கொண்டிருந்தார். இருவரையும் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது.

ஆனால் படுக்கையில் கிடந்த லட்சுமியைப் பார்க்க கல்பனாவிற்கு உயிரே நின்றுவிடும் போல் இருந்தது. பட்டுப்புடவையும், வைரத்தோடுமாய் அந்த பங்களா முழுவதும் அன்பும், அதிகாரமுமாக ராணி போல் சுற்றி வந்தவள், இன்று படுத்த படுக்கையாய், கை கால் விளங்காமல், பேச வாய்வராமல், அதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் உடல் நொந்து எலும்பும் தோலுமாய் இருந்தாள்.

படுக்கையெல்லாம் கசங்கி, அதை அடிக்கடி மாற்றாமல் ஒரு வித வாடை அடித்தது. அவளுடைய படுக்கையின் அருகிலேயே வக்கீல் சந்துரு உட்கார்ந்திருந்தார்.

அவரைப் பார்த்தாலே பேஷன்ட் போலத்தான் இருந்தார். எவ்வளவு கம்பீரமாக அந்த வீட்டில் சிங்கம் போல் இருந்தவர், இன்று கசங்கிய சட்டையும், வாராத தலையும், இரண்டு நாள் லேசாக நரைத்த தாடியும் மீசையுமாக பரிதாபமாக இருந்தார்.

கல்பனாவிற்கு, கௌஷிக், கீதாவை விட கௌதம் மேல் தான் அதிகக் கோபம் வந்தது. பெற்றொருக்கும், தன் மேல் மிகப் பிரியம் கொண்ட அக்காவிற்கும் துணையாக இல்லாமல், வேறு எங்கோ போய் இருக்கிறானே… அவ்வளவு சுயநலம் பிடித்தவனா என்று உள்ளுக்குள் கொதித்தாள்.

இவர்கள் உள்ளே வந்தவுடன் தூங்கிக் கொண்டிருந்த இருவரும் விழித்துக் கொண்டனர்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதயமடி நீ எனக்கு (அத்தியாயம் 3) – பு.பிரேமலதா, சென்னை