in ,

திருட்டுப்பட்டம் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘ திகீர் என்றது சரோஜாவுக்கு. ‘ 
சாமி ஸ்டேண்டில் வைத்திருந்த பணத்தை திடீரென்று காணவில்லை. 
காலையில் வேலைக்குப் போகும்போதுதான் அவளது புருஷன் அந்தப் பணத்தைக் கொடுத்து வீட்டுக்காரர் வந்து பணம் கேட்கும்போது கொடுத்துவிடச் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அதை சாமி ஸ்டேண்டில் வைத்திருந்தாள். இப்போது அதை காணவில்லை.
சந்தேகம் வந்து தட்டு விளக்குகள் என்று ஒவ்வொன்றாய் நகர்த்தி நகர்த்தி தேடினாள்.  கிடைக்கவேயில்லை. 
இப்போது பயம் வந்து அவளைப் பற்றிக்கொண்டது. ‘ இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்காரர் வந்துவிடுவாரே, என்ன செய்வேன்… கடவுளே, ஏற்கனவே இரண்டு மாச வாடகை பாக்கியிருக்கிறதே. இப்போவும் கொடுக்கலைனா மூனுமாச பாக்கியாகிடுமே… ‘ வாடகை கொடுக்க முடியலைனா, வீட்டை காலி செஞ்சிட்டுப் போயிடுங்க… ‘ என்று போனமாசமே காறாராய் சொல்லிட்டுப் போனாரே. அதுவுமில்லாம சாயங்காலம் வந்து, வாடகை கொடுத்தாச்சானு இவர் கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்… கடவுளே… ‘ 
புலம்ப ஆரம்பித்துவிட்டாள். கொஞ்சநேரம் முன்பு, மொட்டை மாடியில் ராஜாவும் மணியும் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்திருந்தாள். ராஜா இவளது பையன். மணி பக்கத்து வீட்டுப் பையன். 
மாடியைப் பார்த்து குரல் கொடுத்தாள்.  ‘ ராஜா, ராஜா… மணியைக் கூட்டிக்கிட்டு கீழே வா…  ’
அவர்கள் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டே கீழே வந்ததும் கோபத்தை முகத்தில் காட்டி, வெடித்தாள் வார்த்தைகளால்.
‘ ஏன்டா, இங்கே சாமி ஸ்டேண்டுல வெச்சிருந்த பணத்தை யார்டா எடுத்தது… ’
பொதுவாகக் கேட்டாலும் அவளது பார்வை மணி மேல்தான் விழுந்திருந்தது.
ராஜா பதறினான்.  ‘ அம்மா நான் எடுக்கலைம்மா… ‘
மணி குறுக்கிட்டு, ‘ ஆன்ட்டி நானும் எடுக்கலை… அதுவுமில்லாம ஸ்டேன்ட் எனக்கு எட்டாது… ’ என்றுவிட்டு ராஜாவைப் பார்த்தான்.  மணியைவிட கொஞ்சம் உயரம்தான் ராஜாவும்.
‘ ஒழுங்கா சொல்லிடுங்கடா… யார் எடுத்ததுனு… இல்லை, முட்டை மந்திரிச்சு வைச்சிடுவேன்… வயிறு வீங்கிடும்… ’ 
இருவரும் பயத்தை பார்வைகளில் காட்டினர்.
 ‘ அது வாடகைப் பணம்டா… அவர் வந்து பணம் கேட்டா நான் என்ன பண்ணுவேன்… கடவுளே, கொஞ்சமா நஞ்சமா… சுளையா மூவாயிரமாச்சே… ’  புலம்பினாள் அவள். 
அவளுக்கு எப்போதுமே மணி மேல் ஒரு கண் இருக்கும். அவனது நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டுதான் இருப்பாள். அவனது முழியும் அப்படித்தான் இருக்கும்.  சட்டென எட்டி, அவனது காதைப் பிடித்து கிள்ளினாள்.    
‘ உன் முழியைப் பார்த்ததாலே உன் மேலத்தான்டா எனக்கு சந்தேகம் வருது… ’ என்றவள் இன்னும் அழுத்தமாக திருகினாள். வலி தாங்கமுடியாமல் அவளிடமிருந்து திமிறிக்கொண்டு ஓடினான் அவன்.  இப்போது ராஜாவின் பக்கம் வேகமாய் திரும்பினாள்.
எட்டி அவனது காதையும் பிடித்து திருகியபடி கேட்டாள். ‘ டேய், மரியாதையா சொல்லிடு… இங்கே வெச்சிருந்த பணம் எப்படிடா மாயமா மறைஞ்சுடும். நீங்க ரெண்டு பேர்தானே இங்கே விளயாடிட்டு இருந்தீங்க… உங்க ரெண்டு பேருல யாராவது ஒருத்தன்தான்டா கண்டிப்பா எடுத்திருக்கணும்… இல்லே ரெண்டு பெரும் சேர்ந்தா… சொல்லுடா… அப்பா பணம் கொடுத்தப்போ நீயும்தானே இருந்தே… பார்க்கவே இல்லைங்கறே… ? ‘

வலி தாங்க முடியாமல் கத்தினான் அவன். ‘ ஐயய்யோ… வலிக்குதும்மா… விட்டுடுமா…விட்டுடுமா… ’
பிடியை மெல்ல விடுவித்தாள்.  திடீரென்று மகன் மேல் பரிதாபம் பிறந்தது. அவன் எடுத்திருக்க மாட்டான் என்று மூளையின் ஒருபகுதி அவளுக்கு சொன்னது.

‘ அப்படினா, பணம் எப்படிடா மாயமா மறைஞ்சு போயிருக்கும்…’ யோசித்துக் கொண்டே நகர்ந்தாள். மறுபடியும் போய் சாமி ஸ்டேன்டில் தேடினாள். கிடைக்கவே இல்லை.

கைகளை பிசைந்தபடி கவலையுடன் உட்கார்ந்திருந்தவள் பிறகு சமையல் செய்ய போய்விட்டாள். திடீரென்று ராஜாவை நினைத்துக் கொண்டாள்.
‘ அவன் காதைப் பிடிச்சு திருகிவிட்டோமே, வலி பொறுக்காமல் துடிச்சானே…பாவம்… ‘
அவனை சமாதானப் படுத்த எண்ணி அவனைக் கூப்பிட்டாள்.  பதில் இல்லை.  ஹாலுக்கு வந்தாள்.  பின்பக்கம் போனாள், முன்பக்கம் போனாள். மறுபடியும் மாடிக்கே போய்விட்டானோ என்று யோசித்து மாடியைப் பார்த்தாள். கதவு சாத்தியிருந்தது. உற்றுக் கவனித்தபோது மாடியில் இருந்து ஏதோ ஒரு மியூஸிக் சத்தம்  போல கேட்டது.  

‘ என்ன அது சத்தம். கேம் ஆடறப்ப வர்றமாதிரி…  ‘
யோசித்தபடியே மாடிப்படிகளில் ஏறி கதவைத் தள்ளினாள். மறுபக்கம் தாழ் போட்டிருந்தது.  இப்போது அந்த இசை நன்றாகக் கேட்டது…
ஓங்கித் தட்டினாள். அந்த இசை இப்போது சட்டென நின்றுபோனது.  சத்தம் போட்டபடி மறுபடியும் வேகமாய்த் தட்டினாள்.

‘ டேய்…ராஜா… நீயாடா அந்தப்பக்கம்… கதவைத் திறடா… ’ சத்தம் போட்டபடி, தன் பலம் கொண்ட மட்டும் கதவைத்தள்ளினாள். இப்போது கதவு சட்டென திறந்து கொள்ள, தடுமாறி விழ இருந்தவள் சமாளித்துக் கொண்டாள். ராஜா முழித்தபடி எதிரே நின்றிருந்தான். கைகளை பின்பக்கமாய் வைத்திருந்தான்.
திகைத்தபடி ஓடிப்போய் ‘ என்னடா அது கையில… ‘ என்றபடி அவனது கையைப்பிடித்து இழுத்தாள். ஒரு மொபைல் கேம் செட் வைத்திருந்தான்.  அதைப் பிடுங்கினாள்.

‘ டேய் ஏதுடா இது, யாரோடதுடா இது…’ முறைத்தாள் இவள்.

 ‘ அ…ம்…மா…இது… வந்து…வந்து… ’
அதே நேரம்,  கைப்பிடி சுவர் ஓரமாய் புது அட்டைப்பெட்டி ஒன்று கிடப்பதையும் பார்த்துவிட்டாள். பார்த்ததுமே தெரிந்தது, அது மொபைல்கேம் பாக்ஸினுடைய அட்டைப் பெட்டி என்று. புத்தம் புதிதாக இருந்தது.

இந்த பணத்தில்தான் இதை வாங்கி இருக்கிறான் என்று நினைத்த மாத்திரத்தில் எட்டி பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்துவிட்டாள்.
‘ திருட்டு நாயே… நீ தானே பணத்தை எடுத்தே…? நாயே… உன்னால ஒரு நல்ல புள்ளையை தப்பா நினைச்சிட்டேனேடா… கதைப் பிடிச்சு திருகிபுட்டேனேடா… ’ என்று சொல்லி அவனது காதையும் பிடித்துத் திருகினாள்.  
ஆனாலும், அழாமல் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான் அவன்.

‘ திருட்டு நாயே… பணத்தைக் காணோம்னு சொன்னதுமே, நான்தான் எடுத்தேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாது… அமுக்குக் கள்ளனாட்டம் அப்படியே சாதிச்சிட்டியே, பார்க்கவே இல்லை, எடுக்கவே இல்லைன்னுக்கிட்டு…  ’
முதுகிலும் இரண்டு அடி கொடுத்துவிட்டு அந்த கேம் பாக்ஸுடன் பொங்கிவந்த அழுகையை அடக்கிக்கொண்டு கீழே வந்தாள்.
‘ ச்சே… வாடகைப் பணத்துல இதை வாங்கிப்புட்டானே… வீட்டுக்காரர் வந்தா நான் என்ன பதில் சொல்லுவேன்… உடனே வீட்டைக் காலி பண்ணுங்கன்னு கத்துவாரே மனுஷன்… ‘
அந்த கேம் சேட்டை ஒளியவைத்துவிட்டுத் திரும்பினாள்.
 
மணி அழுதுகொண்டே ஓடியது நினைவில் வந்தது. ‘ பாவம், அந்தப் புள்ளை, வலி பொறுக்காம கத்திக்கிட்டே ஓடினானே… திருட்டுப் புள்ளையை வீட்டிலேயே வெச்சிக்கிட்டு, அடுத்த வீட்டுப் புள்ளைக்கு திருப்பட்டம் கட்டப் பார்த்தோமே… ’
அவனைப் பார்த்து தப்பு நடந்துவிட்டதென்று சொல்லி அவனை சமாதனப் படுத்தவேண்டும் என்று எண்ணியபடி பக்கத்து வீட்டுக்கு ஓடினாள்.
அவனது அம்மா மீனாட்சி வந்து கதவைத் திறந்தாள்.  ‘ வா, சரோஜா… ஒரு நிமிஷம் உட்கார்… அடுப்புல பால் வச்சிருக்கேன்… வந்துடறேன்… ‘ என்றுவிட்டு உள்ளே திரும்பினாள்.
இவளைப் பார்த்ததும் மணியைப் பற்றி அவள் ஒன்றும் சொல்லாததால், நாம் காதைப் பிடித்து திருகியதைப் பற்றி அவள் இவளிடம் ஒன்றும் சொல்லவில்லையோ என்று நினைத்துக்கொண்டாள்.  பார்வையை வீடெங்கும் வீசினாள்.
 
‘ எங்கக்கா மணியைக் காணோம்…’ என்று ஒன்றுமறியாதது போலக் கேட்டாள்.
‘ தூங்கிட்டிருந்தானே… ’ என்று உள்ளேயிருந்தே பதில் சொன்னாள் மீனாட்சி. மெல்ல எட்டிப் பார்த்தாள் சரோஜா. கட்டிலில் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தான் அவன்.   சப்தமில்லாமல் நடந்து போய், போர்வையை விலக்கப் போனவள், சட்டென நின்றுவிட்டாள்.
 ‘ வேண்டாம்… சொல்லவே வேண்டாம்.  நம் பையன்தான் திருடிவிட்டான் என்று சொன்னால் நாளைக்கு நம்மை எப்படி இவன் மதிப்பான். பிறகு நம் புள்ளையையும் எப்படி மதிப்பான்… காணாமல் போனது காணாமல் போனதாகவே இருக்கட்டும்… ’
அப்படியே திரும்பினாள். மீனாட்சி கையில் இரண்டு டீ கப்புகளுடன் வந்தாள்.
 
‘ ஸாரிக்கா… இப்போதான் நான் டீ குடிச்சேன்… இன்னொரு டீ கண்டிப்பா முடியவே முடியாது… கடைக்குப் போற வேலை இருந்துச்சு. ராஜா தூங்கிட்டிருக்கறதால மணிக்கிட்டே சொல்லலாம்னு வந்தேன்… இவனும் அசந்து தூங்கிட்டிருக்கான்… சரிக்கா… நான் பார்த்துக்கறேன்  ‘ என்றுவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் வீட்டைப் பார்த்து மடமடவென நடக்க ஆரம்பித்தாள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஹிந்தி ராணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    நல்ல வே(ளை)லை (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு