இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அய்யோ, எனக்கு வலி தாங்க முடிலியே!“ என ராணி கத்த, “இப்போதைக்கு பெய்ன் கில்லர் இன்ஜெக்ஷன் போடறேன். உன் ஹஸ்பெண்ட் வந்து பணத்த கட்னதும் ஆப்பரேஷன் ஆரம்பிச்சிடலாம்“ என்று ஊசியைப் போட்டார்கள்.
ராணி அப்படியே கண்ணயர, ‘பணம் வாங்கிட்டு வந்துர்றேன்னு போன அப்பாவ ஆளக் காணோமே, பசி வயிற்றைக் கிள்ளுதே’ என்றெண்ணிய குழந்தை வெளியே போய் நின்று அப்பாவைத் தேடியது.
வயிற்றை தடவிக் கொண்டு, பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்த அம்மருத்துவமனைப் பாதுகாவலர் (செக்யூரிட்டி), “என்ன பாப்பா, யாரத் தேட்ற? பசிக்குதா?“ என்றார்.
“ம்… அம்மாவோட ஆப்பரேஷனுக்கு பணம் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போன அப்பாவ இன்னும் ஆளக் காணோம். அதான் பாக்க வந்தேன், அங்கிள்“ என்றாள்.
“அப்பா ஃபோன் நம்பர் தெரியுமா? வா ஃபோன் போட்டுக் கேப்போம்“ என்றவாறே ஒரு கையால் குழந்தையை அணைத்து ஜெனரேட்டர் ரூமுக்கு அழைத்துச் சென்ற பாதுகாவல(!)னின் காமப் பசிக்கு, வயிற்றுப் பசியோடிருந்த குழந்தை பலியானது.
ஊசி மருந்தின் வீரியம் குறைந்ததும் கண்விழித்த ராணி குழந்தையையும், பணம் வாங்கச் சென்ற கணவனையும் காணாது பதறினாள். அவனது எண்ணை அழைக்க, காவல் நிலைய எழுத்தர் எடுத்து, அவன் கைது செய்யப்பட்ட தகவலைத் தெரிவித்தார். குடல்வால் வெடிப்பதற்கு முன்னால் இதயநாளம் வெடிக்க மயங்கிச் சரிந்தாள் ராணி.
“வேலைக்கு வரலையே என்னாச்சு ராணி? திரும்பயும் ஒனக்கு வயித்த வலி வந்திருச்சா?“ என்று அவளது அலைபேசியில் கேட்ட அவளது எஜமானியின் குரலுக்கு நடந்த விவரங்களை செவிலிதான் கூற வேண்டியிருந்தது.
வேலைக்கு வரவில்லையே என்ற வெறுப்புடன் அழைத்தவர், இரக்கம் மேலிட, கணவனுடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, அவள் மறுத்தும் “முதல்ல உனக்கு ஆப்பரேஷன் நடக்கட்டும். உன் புருஷன ஜாமீன்ல எடுக்றதையும், குழந்தைய தேட்றதையும் நாங்க பாத்துக்கறோம்“ என்றார்.
சொன்னதோடு நில்லாமல் அவளது அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் ஏற்பாடும், குழந்தையைத் தேட காவல் நிலையத்தில் புகாரும், ராமை பிணையில் எடுக்க வழக்கறிஞர் ஏற்பாடும் செய்தனர்.
அடுத்த நாள் குழந்தை, அம்மருத்துவமனையின் கழிவு நீர்த் தொட்டியில், கொடிய காயங்களுடன், உப்பி மிதந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
‘தலை வலி போய் திருகுவலி வந்தது போல‘ என்பார்கள். ராணிக்கோ வயிறு வலி போய் உயிர் வலி கொண்டது. கதறித் துடித்தாள். மயங்கிச் சரிந்தாள். இந்தக் காரணங்களை வைத்தே ராமிற்கு பிணை பெறப்பட்டது.
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, காவல் துறை தனக்கே உரிய பாணியில் விசாரணை நடத்த, பாதுகாவல(!)ர் நடந்தவற்றை மீண்டும் நடித்துக் காட்ட வேண்டியதாயிற்று.
இந்த பங்களா உரிமையாளர்கள் வெளிநாடு சென்றதால், பங்களாவை பராமரிக்கும் பொறுப்பை இவர்களிடமே விட்டுச் சென்றனர். ராமை சிறைக்கனுப்பிய மாதேஷை பழி வாங்க ராம் திட்டமிட்டான்.
அந்த நிகழ்வுக்கப்புறம், “நீ என்னத்தக் காட்னயோ? அதான் அவன் பாய்ஞ்சிருக்கான்“ என்று வசை பாடிய தேவியின் புருஷன், அவளை வேலைக்கனுப்பாததால், மாதேஷ் மீண்டும் சமையலாள் தேடுவதை அறிந்து கொண்ட ராம், மாதேஷின் அலுவலக உதவியாளருக்கு பணம் கொடுத்து ராணியை அவனது தங்கை என்று கூறி மாதேஷ் வீட்டு சமையலாளாக சேர்த்து விடச் சொன்னான், காலம் கனியும் போது ப்ரியாவைக் கடத்தி வரவேண்டும் என்ற பயிற்சியோடு.
“இவள முடிச்சிட்டு ஜெயிலுக்குப் போய்ட்டேன்னா, என்ன ஜெயிலுக்கனுப்பின இவ அப்பன பலி வாங்கின மாதிரியும் ஆச்சு, உள்ள இருக்க்க்ற, எந்தங்கத்தக் கொன்ன அந்ந்ந்தக்க் கெழவன கொல்ல வழி கெடச்ச மாதிரியும் ஆச்சு“ என்ற ராம், கண்கள் சிவக்க, பல்லை கடித்துக் கொண்டு ப்ரியாவை நோக்கிப் பாய, அவன் கதை சொல்வதில் லயித்திருந்த நேரத்தில் செடிகளைக் கத்தரிக்கும் கத்தரிக் கோலின் உதவியால் கட்டுகளை அறுத்திருந்த பவித்ரா சடாரென எழுந்து, அதே கத்தரியால் அவனை குத்த முயல, ராணி குறுக்கே பாய, கத்தரி அவள் வயிற்றில் சொருகியது.
அதிர்ந்து போன ராம் கடப்பாறையால் பவித்ராவைக் குத்த, அவள் நிலை குலைந்து சரிய, இவன் பொய்க் குற்றம் சாற்றி மாதேஷால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதாக நம்பியிருந்த ராணி, ராம் சொன்ன திருத்தப்பட்ட உண்மைக் கதையை கேட்டுத் திகைத்த சில நொடிகளில், ப்ரியாவின் கட்டுகளை அவிழ்த்திருந்ததால், ராம் பவித்ராவைத் தாக்கியதும், ப்ரியா சடாரென எழுந்து சம்மட்டியை எடுத்து ராமின் பின் மண்டையில் தாக்கினாள்.
மீண்டும் ஓவெனக் கதறினாள் ப்ரியா.
“அழாத செல்லம். எல்லாம் சரியாய்டுச்சு. ஒண்ணும் இல்ல. கூல் டவுன்“ என்றவாறே அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான் மாதேஷ்.
உள்ளுக்குள்ளோ பவித்ரா பழி வாங்குவாள் என்ற ரீதியிலேயே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு, பழி வாங்கப்படவிருந்த தன் மகளுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த அவள் அன்பையும், தனது புத்தி போன போக்கையும் ஒப்பு நோக்கி நாணினான்.
“சரி… ஹாஸ்பிடல்ல சேத்தவங்க நெலம என்னாச்சுனு பாக்கணும் நாங்க கௌம்பறோம்“ என்ற இன்ஸ்பெக்டரிடம், “நாங்களும் வர்றோம் ஸர்“ என்று மகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான் மாதேஷ்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த பவித்ராவின் நிலையைப் பற்றி தற்போது ஒன்றும் கூற இயலாது என்றனர்.
ராணியும், ராமும் ஓரளவு தேறியிருக்க, இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் செய்து விட்ட பவித்ராவின் அன்பில் நனைந்து, ‘அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்‘ என்றுணர்ந்த மாதேஷ், “உங்க குழந்தைக்கு நடந்ததுக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன். ஸாரி!“ என்றான்.
“நீங்க காரணமில்ல ஸார். எங்காதல முழுசா அனுபவிச்சும், ஒரு பெண் பிள்ளைய பெத்தவரா இருந்தும், இன்னொரு பெண்பிள்ளையப் பாத்து சபலப்பட்டு தொடத் துணிஞ்ச ஆம்பளயும், அறுவது வயசானாலும் பெத்த புள்ள, பேத்தி, தன்னோட மாணவின்னு எந்தப் பாகுபாடும் இல்லாம, அவ ஒடம்ப மட்டுமே பாத்து, பிஞ்சுக் கொழந்தைகளையும், மிருகம் மாதிரி… இல்ல… மிருகங்க கூட குட்டிகள கற்பழிச்சதா சரித்திரம் இல்ல… வெறிபிடிச்சி கொதர்ற அரக்கனுங்க தான் காரணம். எம் பிள்ளையும் போச்சு, என் காதலுக்கும் அர்த்தமில்லாமப் போச்சுன்னு தான் சாகத் துணிஞ்சி குறுக்கப் போனேன்“ என்றாள் ராணி.
“என்ன மன்னிச்சிடுங்க, தாய்களே! இனி எந்தப் பொண்ண பாத்தாலும் எந்தாயாவும், பிள்ளையாவுந்தான் பாப்பேன் சாமிகளா!“ என்று ப்ரியாவின் காலிலும், ராணியின் காலிலும் விழுந்தான் ராம்.
“இன்ஸ்பெக்டர், இவங்க மேல நான் எந்தக் கம்ப்ளெய்ண்ட்டும் கொடுக்கல, தயவுசெஞ்சு இவங்கள விட்டுடுங்க“ என்றான் மாதேஷ்.
கண்ணாடி வழியே பவித்ராவை எட்டிப் பார்க்க, சிறிது உணர்வு பெற்ற அவள் கண்களாலேயே இவனை அழைத்தாள்.
“எக்ஸ்ட்ராமரைட்டல் ரிலேஷன்ஷிப் (திருமணம் தாண்டிய உறவு) எப்பவுமே வலியையும், அவமானத்தையுந்தான் தரும்னு தெரிஞ்சும், அதுல விழறது தப்புதான? என்னிக்கிருந்தாலும், நான் வாடக வீடுதான். காலி பண்ணிதான் ஆகணும், பானுவ நீங்க லவ் பண்ணித் தான கல்யாணம் பண்ணிங்க. அவ எப்டி இருக்காளோ அப்டியே ஏத்துக்கிட்டு, கடைசிவர அவள மட்டுந்தான் நீங்க லவ் பண்ணணும். இந்த சமத்துக் குட்டிய வேற பெத்துக் கொடுத்திருக்காளே… இனியாவது லைஃபுக்கு ஒருத்தி, லவ்வுக்கு ஒருத்தின்னு தேடாதீங்க. ஒருவனுக்கு ஒருத்திதான்“ என்று அர்த்தப் புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டே, ப்ரியாவை இழுத்து முத்தமிட்டவளுக்கு நெஞ்சு, கழுத்து, தாடை என எல்லாம் பிடித்து இழுப்பது போல் வலிக்க, அப்படியே சரிந்தாள்.
“டாக்டர்! டாக்டர்!” என்று மாதேஷ் அலறியதும், வந்து சோதித்த மருத்துவர் “ஸாரி!“ என்று தலையைத் துலுக்கினார்.
“திருமணம் தாண்டினாலும், உம் மனசு உம் பேரப்போலவே பவித்ரம் தாண்டி. எம் மனசு தான் எல்லாத்துக்கும் காரணம்… உம் மனச கெடுத்ததுக்கு என்ன மன்னிச்சிடு!“ என்று மானசீகமாக ஒரு மனம், மறு மனதிடம் மன்னிப்பு கோரியது!
இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings