in , ,

திருமணம் தாண்டிய இருமனம் (குறுநாவல் – பாகம் 2) – ஜெயலக்ஷ்மி. A

இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பவித்ரா கீழே இறங்கி, ஓட்டுநர் உதவியுடன் அவனை தனது காரில் ஏற்றிக் கொண்டு, ஓட்டுநரை மாதேஷின் பைக்கை பழுது பார்க்க ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு, தானே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

பெரிதாக அடி இல்லையெனினும் இடது தோளில் மயிரிழை எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது இரு வாரங்களுக்கு ஓய்வு தேவையெனவும் மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.

அவன் மிகச் சோர்வாகக் காணப்பட்டதால், ‘இவனை இப்படியே எப்படி வீட்டிற்கு அனுப்புவது? பானு வேறு கவனிக்க மாட்டாள் என்று சொன்னானே’ என்று அவளது இளகிய மனதிற்குத் தோன்ற, தன் வீட்டிற்கு  அழைத்துச் சென்று, எலும்புமுறிவு தைலம் தடவி, கல் உப்பை துண்டில் சுற்றி, வெந்நீரில் முக்கி ஒத்தடம் கொடுத்து, எலும்பு சூப் செய்து கொடுத்து கவனித்துக் கொண்டாள்.

தன் வலக்கரத்தால் அவளுடைய வலக்கரம் பற்றி தன் நெஞ்சினில் வைத்துக் கொண்டான். விடுவிக்க முயற்சித்தாள். இறுகப் பற்றி புறங்கையில் மென்மையாக முத்தமிட்டான். சடாரென விடுவித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் பின்னாலே வந்து “சும்மா கைல தானடி கொடுத்தேன். சரி! தேங்க் யூ ஃபார் யுவர் லவ். நான் வரேன்”  என்று வெளியே கிளம்பினான்.

“எங்க போறீங்க?”

“வீட்டுக்கு!”

“அவ தான் கவனிச்சுக்க மாட்டான்னு சொன்னீங்கள்ள?”

“என்ன நானே பாத்துப்பேன். நோ ப்ராப்ளம்“ என்று கூறிவிட்டு வெளியேறினான்.

‘கோபப்பட்டு சென்று விட்டானோ, அங்கே போய்க் கஷ்டப்படுவானோ’ என்று தோன்ற, மனம் கலங்கி அமர்ந்தாள்.

தன் கரம் பற்றி அவன் நெஞ்சினில் வைத்துக் கொண்ட தருணமும், புறங்கை முத்தமிடலும் நினைவினிலாட, மயிர்க்கால்கள் கூச்செறிந்தன. ‘சே…! அவன் இன்னொருத்தி புருஷன். அவங்க வாழ்க்கைக்கு  நடுவுல நாம போகக்கூடாது; அவனை இனி பார்க்கவே கூடாது’ என அவள் அறிவு அவள் மனதுக்கு கட்டளையிட, கடவுள் சந்நிதி முன் நின்று கண்ணீர் மல்கினாள். அறிவு சொல்வதையெல்லாம் மனம் கேட்டு விட்டால் தான் பிரச்சினையே இல்லையே.

அவள் விலக்க நினைத்தாலும், கடலலை போல அவனின் நினைவே அவளை மீண்டும், மீண்டும் ஓயாமல் ஆக்ரமிக்க, அந்நினைவலைகளால் தத்தளித்தவள், கரையேற மாட்டாமல், அடுத்த நாள்… “எப்படி இருக்கீங்க? பெய்ன் பரவால்லயா? இங்க இருந்தா ஆயில் தடவி ஒத்தடமாவது கொடுத்திருப்பேன்“ என வாட்ஸப் செய்தி அனுப்பினாள்.

“நான் எப்பவுமே நல்லாதான் இருப்பேன். டோண்ட் வொர்ரி. நீ என்ன ஹஸ்பண்டா நெனச்சி தான கவனிச்சிகிட்ட, அது போதும்“ என்றான்.

“இல்ல… அது… வந்து… பானு…“

‘மீட்டிங்ல அவ்ளோ தெளிவா பொட்ல அடிச்ச மாதிரி பேசறவளா இவ? இந்த மாதிரி தடுமாறுறா? பாவம்… இப்பத்தான விழுந்திருக்கா… பாத்துக்கலாம்’ என்று நினைத்து தனக்குள் சிரித்தவன், “உம் மனசு எனக்கு நல்லாத் தெரியுண்டீ. குழம்பாம ஹேப்பியா இரு. பெய்ன் கொஞ்சம் சரியானவுடனே வர்றேன்“ என்றான்.

“இ…ல்ல, அதுக்குச் சொல்லல. இப்போ கஷ்டப்படுவீங்களேன்னு தான்“

“டோண்ட் வொர்ரி. ஐ வில் டேக் கேர்“

அடுத்த முறை வந்தவன் ஷோஃபாவில் அமர்ந்திருந்த இவள் மடியில் உரிமையாய்  வந்து படுத்துக் கொண்டு, “உன்கிட்டதான் என் அம்மாவ பார்க்கிறேன். தலை கோதி விடேன்“ என்றான்.

நாயைப் போல கைகளை நெஞ்சுக்கு நேரே தூக்கிக்கொண்டு ஒரு நிமிடம் திகைத்து அமர்ந்திருந்தவளுக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவள் கையை எடுத்து தன் தலையில் விட்டான்.

அம்மா செண்டிமெண்ட் வேலை செய்தது. பெண்மையில் தாய்மை பூக்க,  மறுப்பு சொல்ல இயலாமல் தலை கோதினாள். அப்படியே அவளது பழைய சோகக் கதைகளைக் கிளறி, அவளை அழச் செய்து, ஆறுதல் அளிப்பவனாய் சடாரென எழுந்து, கண்ணீர் துடைத்து, கண்களில் முத்தமிட்டு, தோள் சாய்த்து, “உனக்கு நானிருக்கேண்டி… எப்பவும்… என் உயிருள்ளவரை“ என்றான்.

அவனிடமிருந்து விலக நினைத்தாலும் விடவில்லை. ஏற்கெனவே, “சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும், என் கண்ணில் நீர் வேண்டும்… சுகமாக அழ வேண்டும்“ என்று உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த ஏக்கம் உயிர் பெற்றது.

அவனும்  அவளுக்கு மனரீதியான அழுத்தத்தைக் கொடுத்து… யோசிக்க சந்தர்ப்பமே கொடுக்காமல், அவளை பலவீனப்படுத்தினான். எல்லை மீறாமல் தடுத்தவளை, “முடியலடி… ப்ளீஸ் டீ“ என சாதித்தான்.

அவளும் அவனை கணவனாக சுவீகரித்தாள். ஆனால், போகப் போகத் தான் புரிந்தது. அவன்  பானுவின் மேல் வைத்திருந்த காதல். அவளுக்குப் பயந்து நேரத்துக்கு வீட்டிற்கு ஓடினான். அவள் கூப்பிட்டால், பவித்ரா அவனுக்கு மறந்து போவாள்.

‘ஒருத்தி இருக்கும் போதே இன்னொருத்திட்ட வந்தாலே அந்த காதல்ல உண்மை இருக்காதுங்கறத ஏன் மறந்தோம்?’ என்று வருந்தியவள், “அங்க எல்லாம் இருக்குன்னா, ஏன் என்ன ஏமாத்தினீங்க?“ என்று கேட்டாள்.

“ஏமாத்தல. விட்டுட்டும் ஓடல. நான் உன்னத்தான் லவ் பண்றேன். நீயும் எம் பொண்டாட்டி தான். அவ விஷயம் உனக்குப் புரியாது.“

என்னதான் புரிந்தாலும், அவனை விலக்கவோ, மறுக்கவோ அவளால் இயலவில்லை.

“நானும் பொண்டாட்டிதானே, அப்போ எனக்கும் கொழந்த குடுங்க“ என்றாள்.

“இப்போதைக்கு லீகலைஸ் பண்ண முடியாது. கொஞ்சம் பொறு“ என்றான்.

“பொறுத்தா மட்டும் என்ன பண்ணப் போறீங்க? ப்ரியாவையாது என் கண்ல காட்டுங்க“ என்றாள்.

அவன் உயிரான மகள் ப்ரியாவின் பேரைக் கேட்டதும், பற்றிக் கொண்டது, மாதேஷூக்கு. ராக்கெட்டில் எரிபொருள் பற்ற வைக்கப் பட்டதும், விண்ணில் சீறிப் பாய்வது போல. பவித்ராவின் மீது சீறிப் பாய்ந்தான். பவித்ராவை, “விஷம்“ என்று திட்டிவிட்டுப் போய் விட்டான்.

பவித்ராவுக்கு உலகமே உறைந்து போனது.  மூளை ஸ்தம்பித்தது. இமைகள் இயங்க மறந்து, விழிகள் விரித்தபடியே இருந்தது. சுவாசம் கூட தடைபட்டது. மூளை திரும்ப விழித்தபோதோ, கண்கள் நீரைச் சொரிந்தன. கைகள் நடுங்கின. நின்ற நேரத்திற்குப் பல மடங்காக, இதய வால்வுகள் ‘லப்டப்’பை  அதிகரித்தன.

“இவ்வளவு நாள் அமிர்தமாக இருந்தவள், இப்போ விஷமாய்ட்டேனா? உன் மேலுள்ள காதல் நிறைந்து, தளும்பித்தானே உன் உயிர்த்துளியான மகளின் மேல் பரவ ஆசைப்பட்டது? அதற்கு ஏன் என்னை விஷமென்றாய்? நீயாத் தானே என்னத் தேடி வந்த? உனக்காக இந்த உலகத்துல எவ்வளவு அவமானத்த சந்திச்சிருக்கேன்? நீ வந்து போறத பாத்த அக்கம் பக்கத்ல உள்ளவங்க, அவங்க எல்லாரும் உத்தமர்கள் மாதிரியும், நான் மட்டும் தான் நடத்த கெட்டவன்னு என்ன எவ்ளோ கேவலமா பாத்தாங்க? சொந்த பந்தங்கள் விலகி ஓடிட்டாங்க. ஆம்பளைங்க எல்லாம் ‘அவன்கிட்ட போறால்ல நம்மட்டயும் வருவா’ன்னு ட்ரை பண்ணிப் பாத்தாங்களே. அதப் பத்தியெல்லாம் கவலைப்படாம… நீ மட்டுந்தான் என் உலகம்னு வாழ்ந்திட்டிருந்தேனே… எவ்வளவு ஈஸியா விஷம்னு சொல்லிட்டுப் போய்ட்ட?“ என்று அங்கே இல்லாதவனிடம் புலம்பித் தவித்து, கதறித் துடித்தாள்.

பிறகு ஒரு வைராக்கியத்தோடு, சட்டென எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு, அலைபேசியில் அவன் எண்ணைத் தடை செய்தாள்.

இந்த தொடர்கதையின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திருமணம் தாண்டிய இருமனம் (குறுநாவல் – பாகம் 1) – ஜெயலக்ஷ்மி. A

    திருமணம் தாண்டிய இருமனம் (குறுநாவல் – பாகம் 3) – ஜெயலக்ஷ்மி. A