“எதையும் வாங்கவே கூடாது!” என்று வாழ்வது கருமித்தனம். அத்தகைய வாழ்க்கை சாத்தியமுமில்லை, ஒருவேளை சாத்தியப்பட்டு விட்டால், அங்கு சந்தோஷத்திற்கு வாய்ப்பும் இல்லை. அதே போல், எதைப் பார்த்தாலும், அது தேவையோ… தேவையில்லையோ, நமக்கு உபயோகப்படுமோ… படாதோ, என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் உடனே வாங்கித் தள்ளி விடுவது, ஊதாரித்தனம்.
ஒரு விதத்தில் ஆபத்தானதும் கூட. சிலர், “வாழ்க்கையே அனுபவிப்பதற்குத்தானே?… இருக்கும் வரை “என்ஜாய்” செய்ய வேண்டாமா?” என்று கூறிக் கொண்டு ஆடம்பரங்களை வாங்கிக் குவித்து, ஆர்ப்பாட்டமாக வாழ்வர். இவர்களை “பாவம்.. பரிதாபம்” என்று தைரியமாகக் கூறலாம். ஏனென்றால், இவர்களைப் போன்றவர்கள்தான் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது, அதிர்ச்சி வாங்கி, அதைரியமடைந்து, மன ஸ்திரம் குறைந்து மன நோயாளியாக மாறி விடுகின்றனர்.
நம்மிடம் இல்லாத பொருட்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு, அவற்றை வாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு, பெருமூச்சோடு ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருப்பதை விட, நம்மிடம் ஏற்கனவே உள்ள பொருட்களைப் பார்த்து மன நிறைவு கொண்டு வாழ்வதே மேலானது. ஒரு மாபெரும் உண்மையை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும், இன்றைய சமுதாயத்தில் மனிதன் மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துத்தான் தனக்கான பொருட்களையே வாங்குகிறான். அதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால்…போலி கௌரவம்!.
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தை, பெரியவர்கள்தாம் இளையோர்க்குக் கற்றுத் தருதல் வேண்டும். அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குச் சொல்லித் தரவும் வேண்டும். ஆனால், இன்றைய சமுதாயத்தில் பல குடும்பங்களில் பெரியோர்களே ஆடம்பரத்திற்கும், வீண் டாம்பீகத்திற்கும் அடிமைப்பட்டுக் கிடப்பதுதான் வேதனையான விஷயமாயுள்ளது.
உதாரணமாக, கல்லூரியில் பயிலும் தம் பிள்ளைகள் அதிக விலை மதிப்புள்ள மொபைல் போன்தான் தனக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில், தம் குடும்ப…மற்றும்… பொருளாதார சூழ்நிலையை எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் புரிந்து கொண்ட, பின் தகவல் தொடர்புக்காக மட்டும் ஒரு எளிய மொபைலை வாங்கிக் கொடுக்கும் போது, அவர்கள் ஆடம்பரத்திற்கும், அத்தியாவசியத்திற்கும் உள்ள வேறுபாட்டினைத் தெரிந்து கொண்டு, தம் எதிர்கால வாழ்க்கையில் கூடிய மட்டும் ஆடம்பரத்தைத் தவிர்ப்பர். அவ்வாறில்லாமல், உடன் பயிலும் வசதியான குடும்ப பிள்ளைகள் முன் தம் பிள்ளை தாழ்ந்து விடக் கூடாது, என்கிற எண்ணத்தில் அவன் கேட்டது போலவே விலை உயர்ந்த மொபைலை கடன் வாங்கியோ, அல்லது தவணை முறையிலோ வாங்கிக் கொடுத்து விட்டால், அது மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாக பாதிப்பதோடு, வீண் மன உளைச்சலையும் நிச்சயம் தந்து விடும்.
உண்ண உணவும், உடுக்க உடையும், குடியிருக்க இல்லமும், மனிதனது அத்தியாவசியங்கள். அவற்றில் கூட சிலர் ஆடம்பரத்தைக் காட்டும் விதத்தில்…மற்றவர்கள் நம்மை உயர்வாய் எண்ண வேண்டும்…. என்கிற ஆசையில் படோடோபம் காட்டுவர். இரண்டு பேரே உள்ள குடும்பத்திற்கு பத்து அறைகள் கொண்ட பங்களாவைக் கட்டி, பெருமை கொள்வர். இன்னும் சிலர் தங்கள் போலி கௌரவத்தைத் தங்கள் வீட்டில் நிகழும் திருமணம், அல்லது வேறு சுப காரியங்களில் காட்டுவர். ஆடம்பரமான அழைப்பிதழில் ஆரம்பித்து, ஆர்ப்பாட்டமான விருந்து, அளவிலா அலங்காரப் பொருட்கள், என்று ஓவ்வொரு அசைவிலும் பணத்தைக் கொட்டி கம்பீரம் காட்டுவர். இவை அனைத்துமே திருமணம் முடிந்த சில மணித்துளிகளிலேயே அனாவசியங்களாக மாறிப் போவதை ஏனோ உணாராமலே இருப்பர்.
மனிதன் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எது அவசியம்?…எது ஆடம்பரம்? என்பதை உணர்ந்து வாழ்ந்தால், வாழ்க்கை அழகாக, சுவையாக, ரசிக்கத்தக்க விதத்தில் அமையும். எந்தச் சூழ்நிலையிலும் செலவுக்கணக்கு வருவாய்க்கணக்கை கடந்து செல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும், இனிய வாழ்க்கை இயல்பாகிவிடும்.
கோவையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. சென்னை, பெங்களூரு, மைசூர், மும்பை போன்ற ஊர்களுக்கு வியாபார விஷயமாகச் செல்லும் போது, விமானத்தில் போய் இறங்கினாலும், அங்கு உள்ளூர் பயன்பாட்டுக்கு ஆட்டோ…மற்றும் கால் டாக்ஸிகளைத்தான் உபயோகித்துக் கொள்வாராம். “என்ன சார்…நீங்கள் தங்கும் ஹோட்டலியே சொல்லி நல்ல டிராவல்ஸ் மூலம் பெரிய கார் ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?” என்று நான் கேட்க,
“அது எதற்கு அனாவசிய செலவு?” என்று சாதாரணமாய்ச் சொன்னார், கோவையைச் சேர்ந்த மூன்று பிரபல கம்பெனிகளின் இயக்குனரும், கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுடன் ஏற்றுமதி வியாபாரம் செய்பவரும், மூன்று நிறுவனங்களிலும் சேர்த்து வருடத்திற்கு 300 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் செய்பவருமான அந்த தொழிலதிபர்.
இதில் தெரிய வரும் உண்மை என்னவென்றால், அத்தியாவசியத்திற்கும், அனாவசியத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உணர்ந்திருந்ததினால்தான் அவர் உயரத்தை எளிதில் தொட்டிருக்கின்றார், என்பதுதான்.
சில வருடங்களுக்கு முன்பெல்லாம், குடும்ப மாதாந்திர மளிகைக் கொள்முதலுக்கு, ஒரு பட்டியல் எழுதிக் கொண்டு செல்வர், அதை மளிகைக்காரனிடம் கொடுத்து அதன்படி வாங்கிக் கொண்டு வருவர். ஆனால், சமீப காலங்களில் அந்தப் பழக்கம் என்பது அறவே மாறிப் போனது. பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்குச் சென்று, அங்குள்ள ஒரு தள்ளுவண்டியை தாமே உருட்டிக் கொண்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று, பொருட்களை வாரி அந்த தள்ளுவண்டியை நிரப்பிக் கொண்டு, அதற்கான பில்லை கம்ப்யூட்டரில் அடித்து அவன் தர, அதற்கான தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்திக் கொண்டு வருவது நடைமுறையாகிவிட்டது. இந்தச் செயல்பாட்டைச் சற்று கூர்ந்து கவனிக்கும் போதுதான் இதன் பின் புலத்தில் உள்ள சில அபாயங்கள் புரிய வரும். பொதுவாக, ஒரு மளிகைப் பொருள் பட்டியல் நிதானமாக யோசித்து எழுதப்படும் போது, அதில் அநாவசியப் பொருட்களோ…ஆடம்பர வஸ்துக்களோ இடம் பெற வாய்ப்பில்லை. ஆனால், தள்ளு வண்டியை உருட்டிக் கொண்டு தேடும் போது எதிரே தெரியும் பல்வேறு பொருட்களையும் மனம் நாடும்…. கை எடுத்துப் போடும். பிற்பாடுதான் தெரியும், அத்தியாவசியங்கள் தாண்டி பல ஆடம்பரப் பொருட்களும் உள்ளே சேர்ந்திருப்பது.
பொதுவாகவே, ஆடம்பரங்களைத் தவிர்த்து வாழப் பழகிக் கொண்டால், நம்மிடம் இருக்கும் செல்வம் நிலையாய்த் தங்கும், மேலும் விருத்தியடையக் கூட வாய்ப்புண்டு. மேலும், ஆடம்பரங்களைத் தவிர்ப்பதன் மூலம் செலவீனம் குறையும், கடன் என்ற பேச்சிற்கே இடமிருக்காது.
ஆகவே, பந்தாவாய்ப் பர்ஸைத் திறந்து, கர்வத்துடன் பணத்தை எடுத்து, பகட்டுப் பொருட்களை வாங்கும் முன், சில நிமிடங்கள் மேற் சொன்னவற்றை யோசித்துப் பாருங்கள். பிறகு, தேவைக்கு மட்டும் பர்ஸைத் திறங்க!…
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings