ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கார்கால மேகம் கருகருவென கருத்துத் திரண்டு எந்த நேரமும் பொழியலாம் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த, மதியமும் இல்லாத மாலையும் இல்லாத இடைப்பட்ட நேரத்தில் சிலுசிலுவென்ற வாடைக் காற்றின் குளிரில் கீதா அனுபவித்து நடந்து வந்து கொண்டிருந்தாள்.
கீதா… அழகும், அறிவும் ஒரு சேர வாய்த்த பேரழகி. இயல்பிலேயே புத்திசாலித்தனம் அதிகமிருந்ததால் கொஞ்சம்.. கொஞ்சமென்ன… நிறையவே திமிரும், கர்வமும் நிறைந்து தனது அப்பாவைத் தவிர ஏனையோரைத் திரும்பியும் பார்க்க மாட்டாள்.
அவள் தன்னிடம் பேச மாட்டாளா ! அட்லீஸ்ட் பார்க்க மாட்டாளா ! என்று அவளைப் பார்ப்பவர்களை ஏங்க விடுவாள். அவள் கேட்கும் அனைத்தையும் கேட்டு முடிக்கு முன் வாங்கிக் கொடுக்கும் capacity உள்ள அப்பா. தன் மகளின் அழகையும், புத்திசாலித்தனத்தையும் பார்த்து பெருமைப்பட்டாலும், நிறையக் கவலைப்படும் சராசரி பாசக்கார அம்மா.
தன்னுடன் படிக்கும் எவரையும் லட்சியம் செய்யாது, தான் உண்டு தன் படிப்புண்டு என்று ஓர் இளவரசியாய் வலம் வந்து கொண்டிருக்கும் கீதாவுக்கு மழையென்றால் மிகவும் ப்ரியம்.
அன்றைய கார்கால மழையை அனுபவிக்க தனது கல்லூரி வளாகத்தினுள் தனது காரை வேண்டுமென்றே கடைசியில் நிறுத்தி இப்போது மழையில் நனைந்து ஆனந்தப்படும் உத்தேசத்தோடு சிலுசிலுவென்ற காற்றில் சிலிர்த்தபடி மெல்ல நடந்து கொண்டிருந்தவள் கண்களில், தன்னைப் போன்றே மழையையும், காற்றையும் ரசிக்கும் விதமாக தனது இரு கைகளையும் விரித்தவாறு வானத்தையும், வானில் திரண்டிருந்த மேகத்தையும் பார்த்தவாறு உடம்பைச் சிலிர்த்து மழையை எதிர்நோக்கி கார் பார்க்கிங்கில் ஆனந்த நடை போட்டு சென்று கொண்டிருந்த வாலிபன் ஒரு வித்தியாச அழகில் அவளைக் கவர்ந்தான்.
பார்க்க வேண்டாமென்று வலுக்கட்டாயமாய் கீதா தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும், அவள் கட்டுப்பாட்டை மீறி அவள் கண்கள் அவனைப் பார்த்த அதே நேரம், கார்கால ஆனந்தமழை அவளையும், அவனையும், பூமியையும் ஆக்ரோஷமாய் ஆகர்ஷித்தது.
மழையின் வேகம் அதிகமாக அதிகமாக, கீதா அணிந்திருந்த ஆடை உடலில் முழுவதுமாக ஒட்டி அவளது அழகு பளிச்சிட ஆரம்பித்து அந்த வாலிபன் கண்களையும் உறுத்த ஆரம்பிக்க, அவன் பார்வையின் ஏதோ ஒன்று அவளை அவஸ்தைப்படுத்த நனைதலிருந்து வேகமாய் ஓடித் தன் காரை அடைந்தாள் கீதா.
வீடு திரும்பியும் அவன் மழையை வரவேற்ற ஸ்டைல் அவள் மனதில் திரும்பத் திரும்பத் தொல்லை பண்ணிக் கொண்டிருக்க, எப்போது தூங்கினாள் என்றே அறியாமல் தூங்கிப் போனாள்.
இரண்டு நாட்கள் சென்று அதே போன்றதொரு மழைக்கால மாலையில் காலேஜிலிருந்து வீடு வரும் வழியில் Landmark Book Martல் சில books வாங்குவதற்காகக் காரைப் park செய்து உள்ளே நுழையும் வேளையில், அவளை நாசூக்காக இடைமறித்தான் அந்த மழை நாயகன், ஆறடி ஆணழகன்.
“Excuse Me.., I just wanna appreciate your driving skill. ரொம்ப அழகா டிரைவ் பண்றீங்க, உங்க டிரைவிங் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணி யார்ட்டயும் அனாவசியமாப் பேசாத என்ன உங்ககிட்ட இப்ப வழி மறிச்சி பாராட்ட வச்சிருக்கு. I’m very sorry if you don’t like my interruption” என்றான்.
புகழ்ச்சிக்கு மயங்காத கீதா, அவன் வித்தியாசமாய்ப் புகழ்வது கண்டு திகைத்தாள். சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தையில் நகர்ந்தாலும் அவன் வசீகர முகமும், அணுகிய முறையும் மனதில் தங்கியது.
அடுத்தடுத்து அகஸ்மாத்தாகவும், ஒருவருக்கொருவர் தெரியாமல் திட்டமிட்டும் அவர்கள் சந்திப்பு… Yes நீங்க யூகித்த காதல்.
ரவி ஒரு Perfect Gentleman, கீதாவுக்கென்றே பிறந்தவன் போல் அவளது அத்தனை திமிர் தவிர்த்த நல்ல குணங்களும் நிரம்பப் பெற்று அனைவரையும் முதல் பார்வையிலேயே கவர்பவன். அனைவரின் பரிபூர்ண சம்மதத்துடனும், ஆசியுடனும் கீதா, ரவி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டவன் அருளால், திருமணமான இரண்டாம் மாதமே கருவுற்றாள் கீதா. எந்தப் பிரச்சனைகளுமில்லாமல் குழந்தை மாலினி சுகப்பிரசவம்.
விளையாட்டாய் கீதா அப்ளை பண்ணி வைத்திருந்த வேலை வாய்ப்பு இப்போது அவளுக்கு USல் சிவப்பு கம்பள வரவேற்பளிக்க, “வேண்டாம்.. வேண்டாம்” என்று அப்பா, அம்மா, ரவி அனைவரும் தடுக்கத் தடுக்கத் தன் புத்திசாலித்தனம் வீணாவதா என்ற பிடிவாதத்தால் பிறந்த குழந்தையையும் விட்டு விட்டு USல் Oak Parkல் Individual ஆக settle ஆனாள்.
ஆயிற்று. இன்றுடன் நீண்ட ஏழு வருஷங்கள். தன் காதல் கணவனையும், அருமைக் குழந்தையையும் பிரிந்து. நினைத்துப் பார்க்கும்போது எப்போதும் தன் மீது வரும் கோபமும், பச்சாதாபமும் இம்முறை கொஞ்சம் அதிக dosageல் வருவதாக அவளுக்கே தோன்றியது.
சிகாகோ ஏர்போர்ட்டில் check in செய்து விமானத்தில் தன் இருக்கையில் சாய்ந்து தன் கடந்த கால நிகழ்வுகளை rewind செய்து நினைவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்தாள் கீதா. தன் படிப்பறிவு என்ற மயக்கத்தில், கற்றது வீணாகக் கூடாது என்னும் கர்வத்தில் USல் organize ஆன வேலையில் ஏழு ஆண்டுகள்.
காண்ட்ராக்ட்டில் வேலையில் செலவிட்டு ஆரம்பத்தில் கர்வமாய்த் திரிந்தாலும், தன் குழந்தை, கணவன் ஞாபகம் வரும்போது தான், தன் குடும்பத்தை விட்டு வந்ததன் இழப்பும், தவிப்பும் புரிய வந்து தன் கணவனைத் தொடர்பு கொள்ள முயன்று அவனது தவிர்ப்பாலும், மறுத்தலிப்பாலும் தவித்துத் தான் போனாள் கீதா.
விமானம் தரையிறங்கியதும், வேக வேகமாய் வெளியில் வந்த கீதா, தன் தாயும், தந்தையும் மட்டும் தன்னை வரவேற்க வந்திருப்பதைப் பார்த்து, ரவியையும், மாலினியையும் தன் அலைபாயும் விழிகளால் தேடிப் பார்த்து, துக்கம் மேலிட கலங்கிய கண்களால் தந்தையின் அரவணைப்பில் விசும்பினாள்.
“அழாதம்மா… ரவியும், குழந்தையும் வெளியில் உனக்காகக் காத்திருக்காங்கம்மா” என பெற்றவர் கூற, பரபரவென்று வெளியே வந்த கீதா அவர்களைக் காணாமல் திகைத்து அப்பாவைக் கேள்விக் குறியுடன் நோக்கினாள்.
“கார்ல ஏறும்மா… நாங்க அவங்ககிட்ட அழைச்சிட்டுப் போறோம்” என பெற்றவர் கூறவும், பரிதவிப்புடன் கணவனிடம் மன்னிப்பு கேட்கத் தவித்தாள். USலிருந்தபோது குழந்தையும், அப்பா, அம்மாவும் தான் அவளிடம் வீடியோ காலில் பேசினர்களே தவிர, ரவி பேசவோ, பார்க்கவோ மறுத்து அவள் பிடிவாதத்துக்குத் தன் பிடிவாதம் கொஞ்சமும் குறைந்தது அல்லவென்று ஒதுங்கி, ஒதுக்கி இருந்தான்.
ஏர்போர்ட் விட்டு வெளியில் வந்ததும் மெயின் ரோட்டில் ஓர் இளநீர்க் கடையில் தன் குழந்தை மாலினி அழகாக இளநீர் குடித்துக் கொண்டிருப்பதையும், பக்கத்தில் ரவி எதையோ இழந்தவன் போல் பிரமை பிடித்து நின்றிருப்பதையும் பார்த்துக் காரை விட்டு இறங்கிய கீதா ஓடிப்போய் மாலினியை அள்ளி முத்தமிட்டாள்.
“அம்மா” என்று குழந்தை விசும்பியது.
“இந்தக் குழந்தையையும் கொஞ்சம் கவனிக்க மாட்டியா?”
ரவியின் பிரிவாற்றாமைக் குரலில் பொது இடத்தில் இருக்கிறோம் என்பதையும் மறந்து தாவி அவனைக் குழந்தையுடன் அணைத்தாள் கீதா. இந்தக் காட்சியைப் பார்த்து தாய், தந்தை, கார் ஒட்டி வந்த டிரைவர் அனைவரின் கண்களிலும் தானாய் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
அவர்களைக் கார்கால மழை ஆனந்தமாய் வரவேற்று ஆசீர்வதித்தது, அவர்களைப் போன்றே மாலினியும் மழையை ரசிப்பது கண்டு இருவர் முகமும் மலர்ந்தது.
குடும்பம் என்னும் பொறுப்புணர்ந்து தனது வாழ்க்கையின் அடுத்த இன்னிங்ஸை கணவன், அழகான குழந்தையுடன் தொடர்ந்தாள் கீதா.
ஆண் பெண் இருபாலருக்கும், வேலை முக்கியம் தான் என்றாலும், சுவர் இருந்தால் தானே சித்திரம். காற்றில் ஓவியம் வரைந்து காண இயலுமா? அது போலத்தான் புரிதல் உள்ள குடும்பத்தை துறந்து வேலை என செல்வதும். பொருளாதார ரீதியாக அவசியமெனில், அது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான். மற்றபடி, குடும்பமும் வேலையும் இரு கண்கள் என வாழ்வதே சாலச் சிறந்தது. ஒரு கண்ணுக்காக மற்றொரு கண்ணை குத்திக் கொள்வது நியாயமாகாது.
குறள் 78:
“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று”
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழக்கை வளமற்ற பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
குறள் 80:
“அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு”
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings