இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அம்மா அம்மா ..அதோ பாரு முழு நிலா எவ்வளவு அழகா இருக்கு” என ஜன்னல் வழியாக தெரிந்த வட்ட நிலாவை காண்பித்தாள் சங்கீதா …வளர்த்து விட்டாலும் சிறு குழந்தையாய் வெண்ணிலவை பார்த்து குதுக்கலிக்கும் மகளை வாஞ்சையாக பார்த்தாள் பார்வதி…
“இன்னைக்கு பௌர்ணமி இல்ல சங்கீதா.. அதான் முழு நிலா.”
“மேகத்தில் ஒளிந்து கொண்டு எட்டிப் பார்க்கும் வெண்ணிலா எவ்வளவு அழகா இருக்கும்மா .. நாம தோட்டத்துல மகிழ மரத்தடி பெஞ்சில் போய் உட்காருவோமா “
எப்போதுமே பௌர்ணமி நாளில் தோட்டத்து மகிழ மரத்து பெஞ்சில் அமர்ந்து தாயும் மகளும் கதை பேசுவது வழக்கம் என்பதால் தலையசைத்தாள் பார்வதி.
“அம்மா நான் ஒன்னு சொல்லுவேன் கேட்பியா” அந்த மகிழ மரத்தடியின் கீழே உள்ள பெஞ்சில் அம்மாவின் மடி மீது தலை வைத்து படுத்தபடியே கேட்டாள் சங்கீதா ..அம்மாவும் பொண்ணும் நண்பர்களாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடம் அந்த வீட்டின் தோட்டத்திலிருந்த அந்த பெஞ்ச் தான்.
“சொல்லுடி.. ஏதோ புதுசா பீடிகை போடுற… எந்தப் பையனையாவது லவ் பண்றியா ..அதான் சுத்தி வளைச்சு விஷயத்துக்கு வர்றியா? ..சொல்லு சொல்லு யாருன்னு சொல்லு… இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வா.. நான் என் எதிர்கால மருமகனை பாத்துக்கிறேன் “
எழுந்தவள் அப்படியே பெஞ்சின் பின்னாலே போய் அம்மாவின் கழுத்தை சுற்றி கைகளை மாலையாய் கோர்த்து போட்டுக் கொண்டாள்…அப்படியே கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்து பாசமாக முத்தமிட்டாள்.
“என்னடி ரொம்ப ஓவரா செல்லம் கொஞ்சற.. பாசம் மழையா கொட்டுது…நான் சொன்னது தானே..சொல்லுடி சீக்கிரம் .. யார் அந்த மாப்பிள்ளை? உன் மனசை கவர்ந்தவன் ..”
செல்லமாக அம்மாவின் முதுகில் ரெண்டு அடியை போட்டாள்…” ஏம்மா உனக்கு எப்ப பார்த்தாலும் என் கல்யாணம் தான் நினைப்பா …சீரியஸான விஷயத்தை கூட விளையாட்டாத் தான் பேசுவியா? நீ அப்படியெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது. எனக்கேத்த மாப்பிள்ளையை நீ தான் தேடி கண்டுபிடிக்கனும் .பாப்போம் உன் திறமையை ..சரி சரி விஷயத்தை டைவர்ட் பண்ணுற பாத்தியா நான் சொல்ல வந்தது வேற விஷயம் “
“எவ்வளவு நேரம் தான் பீடிக போடுவ… சொல்லுடி …”
“அம்மா நான் படிச்சு முடிச்சு வேலைக்கும் போக ஆரம்பிச்சிட்டேன்..நல்ல சம்பளம் வருது அதோட வயல் வரும்படியும் இருக்கு.. நம்ம செலவுக்கு இது போதாதா.. நீ இன்னும் வேலை பாக்கனுமா? நீ இவ்வளவு நாள் எனக்காக உழைச்சுட்ட ..இனிமேல கொஞ்சம் ஓய்வெடும்மா …எனக்கே ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு .என்னால தான் உனக்கு வாழ்க்கையில் இவ்வளவு சிரமமும் “
“அடச்சீசீசீ…அசடு கொடிக்கு காய் பாரமாகுமா..? என் வாழ்க்கையோட அர்த்தமே நீதாண்டி …நீ இல்லைனா எப்பவோ உங்கப்பா கூட நானும் போய் சேர்ந்திருப்பேன் ..என் வாழ்க்கைய நான் வாழ்றதே உனக்காகத்தான்டி .”
“சரி..சரி..சென்டிமெண்ட்ட டச் பண்ணாத… அப்ப ஹிந்தி கிளாஸ் மட்டும் எடுத்துட்டு டீச்சர் வேலைய விட்டுடு. உனக்கும் கொஞ்சம் ஓய்வு வேணாமா டீச்சரம்மா “
“ஓய்வு இப்ப எதுக்கு சங்கீதா .. நான் வேலைக்கு போறது ஒரு மன நிம்மதியத் தருது. மத்த தொழில் மாதிரி இல்ல டீச்சர் வேலை. இது ஒரு புனிதமான தொழில். இத சரியா செய்யும்போது நமக்கு கிடைக்கிற மனதிருப்தி அலாதியானது. அடுத்த தலைமுறைய உருவாக்கிற பொறுப்ப அப்பா, அம்மாக்கு அடுத்தபடியா ஆசிரியர்கள்கிட்ட தான் கொடுத்திருக்குது சமூகம். அதுமட்டுமில்லடி இன்னொரு சுயநலமும் இருக்கு. தினமும் ரோஜா கூட்டம் மாதிரி அந்த பிள்ளைகளுடைய முகத்தை பாக்கும் போது மனசுக்கு எவ்வளவு புத்துணர்ச்சி கிடைக்குது தெரியுமா?..வீட்ல சும்மா இருந்தா தேவையில்லாம ஏதாவது வேண்டாத நினைப்பு தான் வரும். முடியுற வரைக்கும் போறேன் முடியாத போது பாத்துக்கலாம் .”
“நீ சொல்றதும் சரிதான் ” என்றாள் சங்கீதா.. அம்மாவின் மனசு புரிய …அப்படியே முன்னே வந்து அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.
“சங்கீதா.. இன்னைக்கு பவுர்ணமி.. வானத்தில் பாரு முழு நிலவு ..இந்த மகிழ மரத்திலிருந்து வீசுற மகிழம்பூவின் மனச மயக்குற வாசனை…. எவ்வளவு ரம்யமா இருக்கு இந்த ராத்திரி….நாளைக்கு உனக்கு கல்யாணமாகி, பெண் குழந்த பிறந்தா…இந்த இரவு மாதிரி அவ வாழ்க்கையும் நிம்மதியா, சந்தோஷமா, ரம்யமாக இருக்கட்டும்… ரம்யா ன்னு பெயர் வைப்போம்” என்றாள்.
“அதுக்கு நீ முதல்ல எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கனும் ..” சங்கீதாவின் பேச்சில் சுயநினைவுக்கு வந்த பார்வதி விழுந்து விழுந்து சிரித்தாள். சங்கீதாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள் …
“சங்கீதா.. நீ வெண்ணிலான்னு ஒரு பாட்டு பாடுவியே.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அந்த பாட்டப் பாடேன்… மனசுக்கு நிம்மதியா இருக்கும் ..”
சங்கீதா பாட ஆரம்பித்தாள் …
“மேகக்கூடமேறி.. விளையாடும்
வெண்ணிலாவே …
விண்ணைத்தாண்டி என்னோடு..
விளையாட ஓடி வா வா ..
நீளும் இந்த இரவினில்..
நீயும் நானும் கலந்தாடவா வா …
நீண்ட நாள் கதை பேசி
சுகித்திருக்கலாம் வா வா …”
கண்ணை மூடி தன் இனிமையான குரலில் சங்கீதா பாட அந்த வெண்ணிலவே அவள் பாடலுக்கு இறக்கி கீழே வந்து விடுமோ என்று தோன்றியது பார்வதிக்கு.. மகளின் குரல் இனிமையில் மயங்கி …அந்த இரவு நீளாதா என்ற ஆசை அவளுக்குள்ளும் எழுந்தது.
எந்த இரவுக்கு ஒரு விடியல் உண்டல்லவா அவர்கள் இரவும் விடிந்தது …சங்கீதா கேலியாக சொன்னாலும் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற பொறுப்பு தனக்கு இருப்பதை நினைத்து …பார்வதி, சங்கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க தீவிரமாக இறங்கினாள்.
தன் சிநேகிதியின் மகன் செந்தில் சி.ஏ படித்து ஆடிட்டராக ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருந்தான். கண்ணுக்கும் அழகாக லட்சணமாக இருந்தான். சங்கீதாவுக்கு பொருத்தமானவனாக இருப்பான் என்று தோன்ற, உறவுகளைப் பற்றி கவலைப்படாமல் …சங்கீதா- செந்தில் திருமணத்தை சிறப்பாக நடத்தினாள் பார்வதி.
பார்வதி ஆசைப்பட்டபடி சங்கீதாவின் கணவன் செந்தில் மிகவும் பொறுப்பாக குடும்பத்தை பார்த்துக் கொள்ள.. கொஞ்சம் நிம்மதியாக வாழ்க்கை ஓடியது.
பல வருடங்களுக்குப் பிறகு பார்வதியின் மனமும் அமைதியடைந்தது. திருமணமான மறு வருடம் சங்கீதா கருவுற்றபோது ..பார்வதி அகமகிழ்ந்து போனாள். மகளை உள்ளங்கையில் வைத்து தாங்கினாள்.
பத்தாம் மாதம் பெண் குழந்தை பிறக்க … அவர்கள் ஆசைப்பட்டபடி “ரம்யா” என்று பெயர் சூட்டினர் …குழந்தை வந்த பிறகு அவர்கள் வாழ்க்கையே நந்தவனமாகியது.
மகள் கேட்டபோது முடியாது என்றவள், பேத்திக்காக வேலையை விட்டாள். ரம்யாவை பார்வதி கவனித்துக் கொள்ள, சங்கீதா நிம்மதியாக வேலைக்குப் போய் வந்தாள்.
வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக சந்தோஷமாக சுழல, ரம்யா 16வது பிறந்தநாளை கொண்டாடினாள்.
காலம் ஒரே மாதிரியாகவா சுழலும். விதி அவர்கள் வாழ்க்கையை நிம்மதியாக நீடிக்க விடவில்லை. திடீரென செந்தில் உடல் சரியில்லாமல் போனது. சங்கீதாவும் செந்திலை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக நடையாய் நடந்தாள்.
கடைசியில் எல்லா பரிசோதனை முடிவுகளும் வந்த போது அவள் தலையில் இடி இறங்கியது. மருத்துவர் செந்திலுக்கு வந்திருப்பது இரத்த புற்றுநோய் என்பதை சொன்னபோது சங்கீதாவும் பார்வதியும் கலங்கித் தான் போனார்கள்.
அவனை ஆட்கொண்ட நோய் மூன்று மாதத்தில் அவனை கொண்டு போன போது … கலங்கி நின்றது குடும்பம் .தன் வாழ்க்கையில் நடந்த அதே விஷயம் மகள் வாழ்க்கையிலும் நடக்க நிலைகுலைந்து போனாள் பார்வதி …
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings