எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காரில் ஏறும்போது அதைக் கவனித்துவிட்டாள் கமலம். நம்முடைய காருக்குள் எப்படி அது. கணவனைப் பார்த்தாள். அவர் காரை ஒட்டிக் கொண்டிருந்தார். குனிந்து அதை எடுக்கலாமா என்று யோசித்தவள் மறுகணமே மனதை மாற்றிக் கொண்டாள். எரிச்சல் வந்தது. கணவனை மீண்டும் பார்த்தாள்.
‘ என்ன கமலா…ஏன் அப்படி பார்க்கறே…’
‘ நம்மக் காருக்குள்ளே இது எப்படி… ‘ என்றாள். அவருக்குப் புரியவில்லை. பிறகுதான் அவள் கை காட்டியப் பக்கம், அவளது காலுக்கு கீழே எட்டிப் பார்த்தார்.
மல்லிகைப் பூ… வாடி… கசங்கி…! திடுக்கிட்டார்… திகைத்தும் போனார்.
ஆனாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. கொஞ்சம் தடுமாறியவர், ‘ ஓ அதுவா… நம்ம மீனாட்சி இல்லே… ஸாரி… எங்க ஆபிஸ் ஸ்டெனோதான்… இன்னிக்கு வீக் என்டுக்கு ஊருக்கு போனாள். நான் கொஞ்சம் நிறைய வேலை கொடுத்துட்டதால ட்ரெயினுக்கு லேட்டாயிடுச்சு. பாத்தேன், உடனே ஆபிஸ் டிரைவர்கிட்ட சொல்லி நம்ம காருலேயே கொண்டுபோய் ட்ராப் பண்ணச் சொன்னேன். அப்போ அந்த பொண்ணு பூவை கீழே தவறி விட்டிருக்கும்போல…’ என்று சொன்னார். ஆரம்பத்தில் தடுமாறியவர், பின்னர் சரளமாய் சொன்னார்.
‘ பாவி… இப்படியா நம்மை கோர்த்துவிடப் பார்ப்பாள் ‘ என்று மனதுக்குள் திட்டியும் கொண்டார். அப்போவே நாம் எடுத்துப் போட்டிருக்க வேண்டுமோ.
கமலத்திற்குத் தாளவில்லை. ‘ அதுசரி… நீங்க ரொம்ப வேலை கொடுத்தீங்க, அதனால லேட்டாயிடுச்சு… அதுக்கு ஒரு டாக்ஸி புக் பண்ணிக் கொடுத்திருக்கவேண்டியதுதானே. ஆபீஸ் வேலை கொடுத்தா ஆபீஸ் செலவுலே டாக்ஸி போடவேண்டியதுதானே… நம்மக் கார்லே அவளை ஏன் ஏத்தி அனுப்பனும்… ’ முறைத்தாள்.
‘ கமலா இது ஒரு சாதாரண விஷயம். இதை என் பெரிசு படுத்தறே.. ஒரு ஆத்திர அவசரத்துக்குதானே அனுப்பினேன்… நான் தினமுமா பண்றேன்… கூல் கமலா, உன்னோட பிறந்த நாளுக்கு கோவிலுக்கு போயிட்டிருக்கோம்… சந்தோஷத்தை ஏன் கெடுத்துக்கறே… ‘ என்றவர் உடனே, ‘ உம்… சொல்லனும்னு நினைச்சேன்… நீ கோபப்படும்போது உன் அழகு குறைஞ்சு போகுதே… நீ கண்ணாடில அதையெல்லாம் கவனிக்கறதில்லையா… ‘ என்று சொல்லி கண்களையும் சிமிட்டினார்.
‘ போதும் ஐஸ் வைச்சது…’ கொஞ்சம் சாந்தமானாள்.
‘ அப்பாடா, தப்பிச்சேன் ‘ உள்ளுக்குள் நினைத்தபடி ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டார் அவர்.
xxxxxxxxxx
ஸ்டெனோ மீனாட்சிக்கு இன்று பிறந்த நாள். காலையில் வந்ததும் நேரே அவரிடம்தான் போய் டப்பாவை நீட்டினாள் அவள். அவருக்குத் தெரியாதா இன்று அவளுக்குப் பிறந்தநாள் என்று. நேற்றே அவளுக்கு ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். ஆர்டர் கொடுத்திருந்தார். அது அவளுக்கே தெரியாது. எம்.எம் என்று பெயர் போட்டு வாங்கியிருந்தார்.
ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு, ‘ என் டார்லிங்க்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…‘ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து கலர்பேப்பர் சுற்றிய டப்பாவை எடுத்து அவளது கையில் திணித்தார்.
‘ தாங்க்ஸ் டார்லிங்… ‘ என்றபடி அந்த மோதிரத்தை பார்த்துப் பூரித்துப் போனவ அப்படியே அவளது வலது மோதிர விரலை அவரிடம் காண்பித்தாள்.
புரிந்து போன அவர் மோதிரத்தை போட்டுவிட போனார். ஆனால் அதே விரலில் வேறொரு மோதிரமும் போட்டிருந்தாள். அதை அவளும் கவனித்துவிட்டு, ‘ ஸாரி இதோ கழற்றிடறேன்… ‘ என்றபடி அதைக் கழற்றிவிட்டு மறுபடியும் விரலை நீட்ட அவர் போட்டுவிட்டார்.
உடனே தனது மோதிரத்தை அவரது விரலில் போட்டுவிட்டு, ‘ இது ரொம்பப் பழசில்லை… ஆனாலும் உங்ககிட்டே இருக்கட்டும்… ‘ என்று சிரித்தாள்.
‘ இனிஸியல் பார்த்தியா… ‘ என்றார். ‘ மீனாட்ஷி முருகன்… ’ என்றாள். அவரது முகம் சட்டென வாடியது.
‘ ஸாரி… எனக்குத் தெரியாதா உங்கபேரும் என் பேரும்னு… எங்கப்பா பெயரை சும்மா சேர்த்து சொன்னேன்… ‘ என்று சிரித்தாள்.
சுதாரித்துக் கொண்டு, ‘ சரி… இன்னிக்கு லஞ்ச் ஹோட்டல் உட்லாண்ட்ஸ்ல … ஓ.கே…’ என்று கண் சிமிட்டினார். ‘ தாங்க்ஸ் ‘ என்றுவிட்டு நகர்ந்தாள்.
‘ கொஞ்சம் இரு… நான் கேட்டது எப்போ… ’ என்றார் குரலை தாழ்த்தி. சட்டென திரும்பியவள், ‘ உங்க சாய்ஸ்… ‘ கண் சிமிட்டியபடி நகர்ந்தாள்.
xxxxxxxx
இடது புற கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஏறி உட்கார்ந்தாள் மீனாக்ஷி.
‘ ஒன்னரைத்தான் ஆகுது… சீக்கிரம் கிளம்பிட்டோமோ… ‘
‘ பரவால்ல… பக்கத்துல பார்த்தசாரதி பெருமாள் கோவில் இருக்கு… அங்கே போயிட்டு போகலாமே… ‘
‘ லாமே… ‘
சட்டென அவளது ஜடையிலிருந்த பூச்சரம் அவளது பாதத்தில் விழுந்தது. சுதாரித்துக்கொண்டு குனியப் பார்த்தாள்.
‘ நோ… விட்டுடு… கோவிலுக்குத்தானே போறோம்… பிரெஷா வாங்கிட்டாப் போச்சு… ‘ என்றார்.
பச்சரிசி பற்கள் தெரிய சிரித்தாள்.
காரை நிறுத்திவிட்டு ஒரு அர்ச்சனை தட்டும் மல்லிப்பூவும் வாங்கிக்கொண்டனர். அர்ச்சனை முடித்து வெளியே வந்தார்கள். ஐஸ்க்ரீம்காரன் ஹாரன் அடித்தான். அவள் ஐஸ்க்ரீம் காரனை பார்த்தாள். புரிந்து கொண்டார்.
‘தொண்டை கரகரக்காதா…‘ என்றபடியே அவனருகில் போனார். இரண்டு கோன் வாங்கிக் கொண்டு வந்தார். கோன் காலியானதும் கிளம்பினார்கள்.
ஹோடேலில் சாப்பிட்டார்கள். மூன்று மணிக்கு ஆபீஸ் வந்து சேர்ந்தார்கள். அப்போது பார்த்து மொபைல் சிணுங்கியது.
கமலம் கூப்பிட்டாள். ‘ ஏங்க… இன்னிக்கு என்ன நாளு… ‘
‘ இன்னிக்கு புதன் கிழமை… அது கூட தெரியாதா… ‘
‘ அது சரி… ய‘ புரியேலை… ‘என்ன நாளு… ‘
‘ ஆச்சு போங்க… என்னோட பிறந்த நாளு… ‘
‘ உனக்குமா… ‘ என்றுவிட்டு சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டார்.
‘ என்னது உனக்குமாவா… ‘
‘ அய்யய்யோ. உனக்காங்கறதைத்தான் அப்படிச் சொல்லிட்டேன்… ஸாரி… சரி சரி, ஆறு மணிக்கு வந்துடறேன்… ‘
xxxxxxxxx
கார் மெரீனா நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
‘ஏங்க… ஒரு நிமிஷம்… காரை லெப்ட்ல விடுங்க… நாம பார்த்தசாரதி கோவிலுக்கு போகலாம்… ‘
திடுக்கிட்டார் அவர்.
‘ மத்தியானம்தானே அங்கே போனோம்… மறுபடியுமா… ‘
‘என்ன யோசிக்கறீங்க… அங்கேயே போலாம்… சண்டே கபாலீஸ்வரரர் கோவிலுக்குப் போய்க்கலாம்… ‘
அந்த நேரம் அவள் தனது மொபைலில் ஒரு போட்டோ எடுத்தாள். அவருக்கு உள்ளுக்குள் ஏற்கனவே அடித்துக்கொண்டிருந்தது.
காரை பார்க் செய்யும்போது அதே ஐஸ்காரன் ஹாரன் அடித்தான்.
‘ கடவுளே… அவன் நம்மைப் பார்த்து… ஏதும் கேட்டுடக் கூடாதே… ‘
‘ என்னங்க யோசிக்கறீங்க… பூ வாங்குங்க… ‘
அதே பூக்கடை. மறுபடியும் திக் திக்…
‘ கடவுளே பூக்காரம்மா ஏதும் கேட்டுடக் கூடாதே… ‘
‘என்னங்க யோசிச்சிட்டே நிக்கறீங்க… ஒரு தட்டு வாங்குங்க… ஏம்மா ரெண்டு முழம் மல்லிப்பூ தனியா கொடும்மா… ‘
எந்திரத்தனமாய் நடந்தார். ‘ அர்ச்சனை சீட்டு வாங்கலையா… ‘ என்று கமலா சொல்ல சுதாரித்துக்கொண்டு வாங்கினார்.
அதே அர்ச்சகர். மருதாச்சலத்தைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
‘ பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ… ‘
மறுபடியும் திக் திக்… அர்ச்சகர் ஏதும் கேட்டுவிடக் கூடாதே…
‘ கமலம்… உத்திராடம்… மகரம்… மருத்தாசலம்… பூசம் கடகம்… ‘ முந்திக்கொண்டாள் கமலம்.
இவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டால், நமக்கும் அர்ச்சனைதானே.
‘என்னங்க யோசனை… தொட்டு கும்பிடுங்க… ‘
அர்ச்சனை முடிந்து வெளியே போனார்கள்.
அந்த ஐஸ்க்ரீம்காரன் எதிரே நிற்க, இவர் சட்டென எதிர்திசையில் அவளை கூட்டிக்கொண்டு நடந்தார்.
ஒருவழியாக காரில் ஏறி… உட்காரும்போதுதான் கவனித்தார், ஒரு மணிக்கு அவர் வாங்கிய டோக்கன் மொபைல் வைக்கும் இடத்தில் கிடந்தது. மெல்ல கையை நீட்டி அதை எடுத்து லாவகமாய் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.
‘ நல்ல வேளை… கமலம் கவனித்து ஏற்கனவே இந்த கோவிலுக்கு வந்தீங்களா… ‘ என்று கேட்டுவிட்டால் என்ன ஆகும்… ‘
‘ என்னங்க… ஆரம்பத்துலேர்ந்தே ஏதோ யோசனயாவே இருக்கீங்க… என்னாச்சு… ‘
‘ ஒன்னுமில்லையே… வீடு வந்தாச்சு… இறங்கு… ‘
சாவியை இடது கையால் எடுத்தவர் திடுக்கிட்டார். ‘ மீனாக்ஷி போட்ட மோதிரத்தை அப்படியே போட்டிருக்கிறோமோ… கமலா பார்த்திருந்தால்…. ‘
மோதிரத்தை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.
காபி எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தவள் கேட்டாள், ‘ ஏங்க… உங்க கையை காட்டுங்க… ‘
காட்டினார்.
‘ ஏதோ மோதிரம் போட்டிருந்த மாதிரி இருந்தது… இப்போ காணோம்… ‘
சிரித்தார். ‘ உன் கண்ணை செக் பண்ணிக்கனும்னு நினைக்கறேன்… ‘
‘ இல்லை இல்லை… நான் பார்த்தேன்… நீங்க ஸ்டீயரிங் பிடிக்கும்போது பார்த்தேன்… கொஞ்சம் இருங்க… ‘ அவள் மொபைல் எடுப்பதைப் பார்த்துவிட்டு கேட்டார், ‘ என்ன பார்க்கறே… ‘
‘ நான் அப்போவே ஒரு போட்டோ எடுத்தேனே… அதுலே இருக்கும்ல… ‘
நடந்த தப்பை கமலத்திடமிருந்து மறைக்க இப்போது ஒரு காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.
தவிப்புடன்…
நீங்கள்தான் சொல்லுங்களேன்…
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings