2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தாமரைக்கு காலையில் எழும் போதே மனமெல்லாம் கசந்து வழிந்தது. உடலும் மனமும் ஒருசேர சோர்ந்து துவண்டு கிடந்தன.
எழுந்து என்ன செய்யப் போகிறோம். இன்று ஞாயிற்றறுக்கிழமை ஒவ்வொருவர் ஒவ்வொரு நேரத்துக்கு எழுந்து பொறுமையாக வருவார்கள்.
சாப்பிடுவார்களா மாட்டார்களா என்றுகூடத் தெரியாது.எந்த நாளிலும் குடும்பம் மொத்தமாக சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதாகவோ, ஒரே விதமான உணவை அனைவரும் சாப்பிட்டதாகவோ சரித்திரமே கிடையாது.
தானாகவே, பிரட் ஜாம் என்றோ அல்லது ஏதாவது பழம் மட்டும் போதும் என்றோ ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சாப்பிட்டு விட்டுப் போய்விடுவார்கள்.
இதே அம்மா வீட்டில் இருக்கும் போது இந்த மார்கழி மாதத்தில் என்றாவது ஒரு நாளாவது இப்படித் தூங்கி இருக்கிறோமா என நினைத்து நீண்ட பெருமூச்சை வெளியிட்டாள் தாமரை.
ஆம் அவள் நினைப்பது சரிதான். எல்லார் வீட்டிலும் ஒரே தாள கதியில் வாசல் தெளிக்கும் சத்தம் இருட்டுப் பிரியாத விடிகாலை பொழுதே கேட்கும்.
பலபலவென பொழுது விடியும் போது வீட்டு வாசலில் பெரிய பெரிய வண்ணக்கோலங்கள் கண்ணைப் பறிக்கும்படி காட்சி அளிக்கும்.
நடுவில் பூசணி, பரங்கிப் பூக்களின் அலங்காரம் வேறு. பூ இல்லாதவருக்கு முதல் நாளே பரங்கிப் பூவின் மொட்டு கொடுத்து விடுவார்கள் அக்கம் பக்கத்தினர்.
வீட்டு முற்றத்தில் பனியில் அந்த மொட்டுக்கள் போட்டு வைக்கப்படும். காலையில் கண்விழித்துப் பார்க்கும் போது அவைகளும் கண்விழித்து மலர்ந்து சிரிக்கும்.
தனுர் மாசமென்று அந்த வெடவெடக்கும் குளிரில் கூட எல்லாப் பெண்களுமாக சேர்ந்து கோபிகா ஸ்தீரிகளைப்போல் ஒன்றாக கோயில் குளத்தில் குளித்துவிட்டு, அப்படியே பெருமாள் கோவிலில் பாடும் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை ரசித்தபடி சுடச்சுட அர்ச்சகர் தரும் வெண்பொங்கலை வாங்கி கையும் வாயும் சுட சுவைத்தபடி.. ஹூம் எல்லாம் கனவில் கண்டது போல ஆகி விட்டது தாமரைக்கு.
அம்மா வீட்டைப்பற்றி நினைப்பதற்கு இது மட்டுமா உள்ளது. மனசு முழுக்க இனிக்க இனிக்க எத்தனை எத்தனை சம்பவங்கள். அண்ணன் தம்பி அக்காக்கள் என்ற பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தாமரை கொஞ்சம் வசதி குறைந்த வீடானாலும் மனதளவில் ராணி போல வாழ்ந்தவள்.
அம்மா தோசைக்கல்லை அடுப்பில் போட்டதுமே எல்லோரும் அவரவர் தட்டை எடுத்துக் கொண்டு அடுப்பங்கரையில் வந்து அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து விடுவார்கள்.
அலுப்பு சலிப்பின்றி அம்மா எல்லாருக்கும் மாற்றி மாற்றி ஊற்றி போட்டுக் கொண்டே இருப்பார். யாருடைய வாயும் மூடாது. ஏதாவது ஒரு கதை ஓடிக் கொண்டே இருக்கும்.
அரட்டை அடித்துக் கொண்டு கூடி உட்கார்ந்தே சாப்பிட்டுப் பழகிய தாமரை கணவர் வீட்டுக்கு வந்த புதிதில் மிகவும் தவித்துப் போனாள்.
இதுவும் பெரிய குடும்பம்தான். ஆனால் தனிதனி சாப்பாடு தனித்தனி நேரத்தில். தாமரையின் கணவர், மைத்துனர்கள், நாத்தனார் எல்லோரின் கையிலும் எப்போதும் ஃபோன் இருக்கும். அதில் எதையாவது பார்த்துக் கொண்டே தானாக சிரித்து தானாக ரசித்து என்ன சாப்பிடுகிறோம் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் சாப்பிட்டு எழுந்து போய்விடுவார்கள்.
சாப்பாட்டையே ரசிக்க நேரமில்லாமல் வாழ்பவர்கள் வாசலில் போடும் கோலத்தை பார்க்க மட்டும் நேரம் ஒதுக்குவார்களா என்ன.
அம்மா வீட்டில் இன்னொரு சந்தோஷ தருணம் மறக்க முடியாதது தாமரையால். தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பதென்றால் அதிலும் விசேஷ தினங்களில் நிகழும் பட்டி மன்றங்கள், புதுப்படங்கள், ஏதாவது புது அம்சங்கள் கொண்ட நிகழ்வுகள் எல்லாவற்றையும் முன் ஹாலில் டிவி முன் குடும்பம் மொத்தமும் கூடி உட்கார்ந்து பார்ப்பதும் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்வதுமாக மிகமிக இனிமையான தருணங்கள் அவை.
அண்ணன்கள் வேலைக்குப் போய் அக்காக்கள் திருமணமாகிப் போய் தனியாக கொஞ்சகாலம் திருமணம் முடியும் வரை அம்மா வீட்டில் இருந்த போதுகூட இப்படி ஒரு தனிமையை அவள் உணர்ந்ததில்லை அங்கே.
அப்பாவும் அம்மாவுமே இவளுக்கு நல்ல நண்பர்கள் போல்தான் இருந்தார்கள். எந்த விஷயம் பற்றியும் அது சினிமாவோ அரசியலோ அல்லது படித்து முடித்த ஒரு நாவலோ மூவருமாக அதுபற்றி மணிக்கணக்கில் வாதப் பிரதிவாதங்களை சுவை பட அலசிக் கொண்டிருப்பார்கள்.
தாமரைக்கு பிடிக்கும் என்பதற்காகவே கவியரங்கம் நடக்கும் போதெல்லாம் அப்பா அவளை அழைத்து அருகில் தானும் அமர்ந்து கொண்டு, பார்த்து ரசிப்பார். அதில் கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு நீ ஒரு கவிதை எழுது என்று சொல்லி எழுத வைத்து படித்துப் படித்து பரவசமடைவார்.
அவர்கள் வாசித்ததைவிட உன்னுடையதுதான் சிறப்பாக இருந்தது என்று வேறு சாதிப்பார். ஒரு நேரத்தில் தாமரைக்குத் தெரியும், அவளை கேட்டுச் செய்யலாம் என்ற நிலை மாறி தாமரைக்குத்தான் தெரியும் அவளை கேட்காமல் செய்யக்கூடாது என்ற அளவில் அவளின் அறிவு தீட்சண்யம் அங்கீகாரம் பெற்றுவிட்டது அவளது அம்மாவீட்டில்.
இங்கு எல்லாமே எதிர்மறைதான். தாமரைக்கு என்ன தெரியும் தெரியாது என யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ளும் விருப்பமும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை தேவையும் இல்லை.
அவரவர் அறைகளில் தனித்தனி தொலைக்காட்சி, தனித்தனி மடிக்கணினிகள், ஸ்மார்ட் ஃபோன்கள். போதுமே மனிதர்களோடு பேச என்ன இருக்கிறது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப் பூ போல பன்னிரெண்டு மாதங்களுக்கு ஒருமுறை அம்மா வீட்டிற்கு சென்று பத்து பதினைந்து நாட்கள் உடன் பிறப்புகளுடன் கூடி, பழைய குதூகலங்களை நிரப்பிக் கொண்டு வருவதோடு சரி.
அந்த அழகிய நினைவுகளை அசை போட்டபடி அடுத்த பன்னிரெண்டு மாதங்களை நகர்த்தப் பழகிக் கொண்டாள் தாமரை.
இங்கு யாரும் இவளை அடிமைப்படுத்தவில்லை. இவளுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தனியாக எதையும் பார்த்து ரசிக்கலாம்.
ஆனால் இவளுக்குத்தான் அம்மா வீட்டின் சின்ன ஹாலும், அது நிறைய உறவுகளுமாக கூடிக் களித்த தருணங்கள் கண்முன் வந்து வந்து போவதில் இங்கே எதையும் ரசிக்க இயலவில்லை.
எல்லோருக்கும் அம்மாவீடும் அதன் நினைவுகளும் தேனில் விழுந்த பலாச்சுளைபோல் இனிக்கத்தானே செய்யும். தாமரை மட்டும் விதிவிலக்கா என்ன.
பார்க்கலாம் கால ஓட்டத்தில் இதுவும் பழகிப்போகும் தானே. காலகாலமாக பெண்கள் சந்திக்கும் சரித்திர சம்பவமல்லவா இவைகள்.தாமரையும் மாறுவாள் மாற்றிக் கொள்வாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமையான கதை. கதையில் தாமரையின் அழகிய மன உணர்வு
அழகாக வெளிப்படுகிறது. கதையின் கடைசி முடிவும் வரிகளும் எந்தவொரு முகப்பூச்சும் இல்லாத படு எதார்த்தம். மொத்தத்தில் மிகச்சிறந்த கதை.👌👌👌👌👌