2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
மொபெட் சாவியை எங்கே வைத்தோம் என்று புரியாமல், டிவி ஸ்டாண்ட், டைனிங் டேபிள், சாமி ஸ்டாண்ட் என்று எல்லா இடங்களிலும் தேடிவிட்டு கடைசியில் உள்ளே போய் அலமாரிகளுக்குள்ளும் தேட ஆரம்பித்தார் ராமன். ஒரு அலமாரியில் கைவைத்தபோது அவரது கைபட்டு ஒரு தீப்பெட்டி கீழே விழுந்ததைப் பார்த்துவிட்டு திகைத்துப்போய் நின்றார் அவர்.
‘என்ன இது… சங்கரோட ஷெல்பாச்சி. இதுலேர்ந்து தீப்பெட்டி விழுது… ‘ என்று யோசித்தபடியே, ‘ என்ன… இவன் சிகரட் ஏதும் பிடிக்கறானா… ‘ என்று முனகியபடி குனிந்து தீப்பெட்டியை எடுத்தார்.
சாவியைத் தேடுவதை விட்டுவிட்டு, ‘ இதுமட்டும்தானா, இல்லை சிகரெட் பெட்டியும் கூட வைத்திருக்கிறானா… ‘ என்று சந்தேகித்து, புத்தகங்களை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் சாய்த்தும், டிராயரை இழுத்தும் பார்த்துவிட்டு… ‘ ராஸ்கல் சிகரெட்டை வெளியே பிடித்துவிட்டு தீப்பெட்டியை மட்டும் இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறானோ… ‘ என்று நினைத்து கோபத்துடன், ‘ டேய்… எங்கேடா இருக்கே… ‘ என்று கத்தினார்.
எதேச்சையாய் தீப்பெட்டியை திறந்து பார்த்தவர், மறுபடியும் திகைத்தார். கொஞ்ச குச்சிகள்தான் இருந்தன.
‘ எவ்ளோ காலமா பிடிக்கறான்னு தெரியலையே… நாயி…நாயி… கூப்பிட்டோமே, வந்தானா பார்… ‘ என்று கத்தினார்.
அதற்குள் அங்கே ஓடிவந்த மங்களம், ‘ என்னங்க… கூப்பிட்டீங்களா… ‘ என்றாள் கையில் கரண்டியுடன் நின்றிருந்தாள்.
‘ உன்னை யாரு கூப்பிட்டா… நான் உன் புள்ளையைத்தானே கூப்பிட்டேன்… கூப்பிட்டு அந்தக் கரண்டியாலேயே ரெண்டு போடு போடு அவனை… ‘ என்றவர், கையிலிருந்த தீப்பெட்டியை காட்டி, ‘ தோ பார்… உன் புள்ளையோட இலட்சணத்தை… ஒழுங்கா படிக்கறதுமில்லை. நல்ல பசங்களோட சேர்றதுமில்லை. இப்போ நல்ல பழக்கங்களும் இல்லை. அய்யா இப்போ சிகரெட்டு பிடிக்கறார் போலிருக்கு… எவ்ளோ நாளா பிடிக்கரான்னும் தெரியலை… நாலைஞ்சு குச்சிகள்தான் கிடக்கு… ‘ என்று தீப்பெட்டியை ஆட்டிக் காட்டி, சத்தம் போட்டார்.
திகைத்துப் போன மங்களம், ‘ சத்தம் போடாதீங்க… புள்ளை மாடில படிச்சிக்கிட்டிருக்கான்… அடுத்த வாரம் பரிச்சை… ‘ என்றவள், சற்றே சுதாரித்துக் கொண்டு, ‘ அதுசரி… இந்த தீப்பெட்டியைப் பார்த்துட்டா இந்த கத்து கத்தினீங்க… நாந்தாங்க நேத்திக்கே இந்த தீப்பெட்டியைக் கொடுத்து இதே கம்பெனி பெட்டியா பார்த்து ஒரு டஜன் வாங்கிட்டு வான்னு சொல்லியனுப்பிச்சேன்… மத்த கம்பெனி குச்சிங்க சரியா பிடிக்கறதே இல்லைங்க… ‘ என்றவள், சற்றே யோசித்துவிட்டு, ‘கடையில கிடைக்கலையோ என்னவோ… இல்லை ஒருவேளை அவன் இங்கே வச்சிட்டு வாங்கவே மறந்துட்டானோ என்னவோ… விடுங்க… அப்புறமா கீழே வருவான்… நான் பார்த்துக்கறேன்… ஒரு வேலையைக் கொடுத்தா ஒழுங்கா செய்யறதில்லை, இந்த நாயி… ‘ என்றவள், ‘ ஆமா நீங்க எங்கேயோ யாரையோ பார்க்கப் போகணும்னு கிளம்புனீங்க… இங்கே இன்னும் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க… ‘ என்றாள்.
‘உக்கும்… மொபெட் சாவியைத்தான் எங்கேயோ வைச்சிட்டு இப்போ வீடு பூராவும் தேடிக்கிட்டிருக்கேன்… ‘ என்றவர் பக்கத்தில் இருந்த மேஜையிலும் தேடினார்…
சற்றே யோசித்தவள், ‘ கொஞ்சம் இருங்க… கிச்சன் மேடையில ஒரு சாவி பாத்தா மாதிரி ஞாபகம்… ‘ என்று கிச்சனுக்குள் நகர்ந்தபடி, ‘ ஆங்… ஞாபகம் வந்திடுச்சு… அப்போவே வெளியே போயிட்டு வந்ததும் தலை வலிக்குது டீ கிடைக்குமான்னு கேட்டு உள்ளே வந்தீங்க இல்லையா… அப்போ அங்கே வைச்சிருப்பீங்க போல, பார்த்த ஞாபகம்… ‘ என்றபடி உள்ளே ஓடியவள், ‘ ஆங்… இதோ சாவி… ‘ என்று சாவியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு அவசரமாய் கிளம்பிவிட்டார் அவர்.
அவர் போனதும், கதவைச் சாத்திவிட்டு உள்ளே திரும்பியவள், சற்றே யோசித்துவிட்டு, ‘இப்போ கூப்பிடவேண்டாம்… படிக்கட்டும்… அப்புறமா கீழே வருவான்ல அப்போ வச்சிக்கறேன்… ‘ என்று திட்டஈகொண்டே தனது வேலைகளை கவனிக்கலானாள்.
கொஞ்ச நேரத்தில், ‘ அம்மா பசிக்குதுமா… ‘ என்றபடியே கிச்சனுக்குள் நுழைந்தான் சங்கர்.
சட்டென திரும்பியவள், அவன் எதிர்பாராத வகையில் ஓங்கி ஒரு அரை கொடுத்துவிட்டு, ‘நாயே… திருட்டு தம் அடிக்கறே… ‘ என்று சத்தம் போட்டாள்.
இதை சற்றும் எதிர்பார்த்திராத அவன், பதறிப் போய், ‘அம்மா என்னம்மா சொல்றே… சிகரெட்டா… கனவு ஏதும் கண்டியா… ‘ என்றான்.
‘நாயே… உன் புக் ஷெல்புல இருந்த தீப்பெட்டியைப் பார்த்தாச்சு… உங்கப்பாதான் பார்த்துட்டு கத்தினார்… நாந்தான் வேறவிதமா கதை விட்டு அவரை சமாதானம் செஞ்சு அனுப்பினேன்… மவனே… அவர்மட்டும் இந்நேரம் இங்கே இருந்திருந்தா தூக்கிப் போட்டு மிதிமிதின்னு மிதிச்சிருப்பார். ஒழுங்கா நடந்துக்கோ. இல்லே, தோலை உரிச்சிடுவேன்… உன் உதடு முன்னேயெல்லாம் இப்படி கருப்பா இருந்ததே இல்லை… எனக்கு அப்போவே லேசா ஒரு டவுட்டு இருந்துச்சு. இப்போ ஊர்ஜிதமாகிடுச்சு… ஒழுங்கா இருந்துக்க… ‘ என்று விட்டு டீயை கொதிக்க விட்டாள். அவளுக்குள்ளும்தான் கொதித்து கொண்டிருந்தது..
‘ஸாரிம்மா… ‘ என்றுவிட்டு கன்னத்தை தடவிக்கொண்டே போனவன், முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் உதட்டை பார்த்துவிட்டு, ‘ ச்சே… ‘ என்று முனகிக்கொண்டான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings