எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஆச்சு ஒரு மூணு மாசத்துல நான் படிச்ச என்ஜினியரிங்குக்கு சம்பந்தமில்லாத ஒரு கம்பெனில வேலை கிடைச்சது.ஏதோ
வாழ்க்கை ஓடினாலும் அந்த ஷர்மிளா நினைப்பு போகலை.
ஒரு ஞாயித்துக் கிழமை சோம்பலா படுக்கைல இருந்தப்ப பக்கத்து போர்ஷன் ஃபோன் (இவ்வளவு சத்தமா ஏன் இருக்கு இந்த டெலிபோன் மணி) அலறித்து.
“ஹலோ மிஸஸ்.பரமேஸ்வரன் பேசறேன்” மாமி குரல்.
“இருங்கோ கூப்பிடறேன், சரி அஞ்சு நிமிஷத்துல கூப்பிடுங்கோ”
மாமியே எங்க போர்ஷன் வெளில நின்னு,” டேய் அம்பி ஶ்ரீதரா
உனக்கு ஃபோன் வந்திருக்கு, சீக்கிரம் வா”
எனக்கு யாரு பண்ணுவா, ஆபீஸ்ல இன்னைக்கும் வேலைக்கு வரச் சொல்றானோ, யோசிச்சிண்டே போய் அவங்க வீட்டு போன் பக்கத்துல போட்டிருந்த ஸ்டூல்ல உக்காந்து காத்திருந்தேன். போன் அலறித்து
டப்னு தூக்கி “ஹலோ ஶ்ரீதர் ஹியர்”
“ஶ்ரீதர், நான் ஷர்மிளா” தேனாய் பாய்ந்தது குரல்.
கொஞ்ச நேரம் பேச்சு வரலை, “நீ நீ ஷர்மி எங்கே இருக்கே, ஏன் இத்தனை நாள் பேசலை” என் குரல் கம்மி கரகரத்தது.
“ஓகே ஓகே ரொம்ப டென்ஷன் ஆகாதே, நான் மெட்ராஸ் வந்திருக்கேன் ஒரு வாரத்துக்கு தனியா ஒரு டிரெயினிங் புரொக்ராமுக்காக வந்து பாக்க முடியுமா”
“எங்கே வரணும் சொல்லு இப்ப புறப்படறேன்”
“நாளைக்கு மத்யானம் 1 மணி மவுண்ட் ரோட் ஸ்பென்சர் பிளாசா
வாசல்ல நிக்கறேன்”
“சரி வரேன்”
அவ்வளவுதான் போன் கட். அதையே வெறிச்சுப் பாத்துண்டு உக்காந்திருந்தேன். என்னையறியாம கண்ல கண்ணீர்
கன்னத்தை நனைத்தது. லூஸ் மாதிரி குனிந்து அந்த கன்னங்கரிய கருவியை முத்தம் கொடுத்தேன். மாமி வர சத்தம் கேட்டது கண்களை தொடைச்சிண்டு “தேங்ஸ் மாமி” புறப்பட்டேன்.
அன்னிக்கு நைட் கே.பி. பஸ் விண்டோ சீட்,அம்மா அப்பா கிட்ட
ஏதோ பொய் ,காலைல ஆறு மணிக்கெல்லாம் எழும்பூர் ஸ்டேஷன்
எதிர்ல பஸ் நின்னது.எதிர்ல கென்னட் லேன்ல ஒரு லாட்ஜ் ரூம் எடுத்து அலுப்பு போக ஒரு குட்டித் தூக்கம். ஸ்டேஷனுக்கு எதுத்தாப்பல ஒரு ஹோட்டல், பேர் ஞாபகம் வரலை, பொங்கல் சட்ணி பிரமாதமாய் இருந்தது. 12 மணிக்கே இடம் விசாரிச்சு அந்த ஸ்பென்சர் பிளாசா
வந்துட்டேன். ஒரு மணிக்கு டாண்னு ஒரு ரிக்ஷால வந்து இறங்கினா ஷர்மிளா. இப்ப இன்னும் அழகா தெரிஞ்சா.
என்னை பார்த்ததும் ஒரு அடையாளப் புன்னகை அருகில் வந்ததும்
வலது கை பற்றிக் கொண்டேன். உள்ளே போனோம் கொஞ்ச நேரம் பேச்சே இல்லை.
அவளே கேட்டாள்,”இன்னும் என்னை விரும்பறயா”
“இதென்ன கேள்வி ஆபீஸ்ல கூட லீவு சொல்லாம நைட்டோட நைட்
பஸ் பிடிச்சு ஓடி வந்தது எதுக்காக.”
“ஓ வேலை கிடைச்சிடுத்தா,குட்”
“வேலை கிடைச்சாச்சு, இப்ப போகவும் போறது”
“ஏன்பா, பிடிக்கலையா இந்த வேலை”
“எனக்கு பிடிக்கறதா இல்லையானு யாரு கேக்கறா, ஏற்கனவே
முசுடு மேனேஜர், சொல்லாம கொள்ளாம ஒரு வாரம் ஓடி வந்தா
திரும்ப யாரு உள்ளே விடுவா?”
“ஒரு வாரம் இங்கே ஏதாவது வேலை இருக்கா என்ன”
“ஏய் என்ன, நீதானே ஒரு வாரத்துக்கு மெட்ராஸ் வந்திருக்கேன்னு சொன்னே”
“ஓ கதை அப்படிப் போகுதா, எனக்காக வேலையையே விட்டுடுவயா
அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு,சரி உன்னை நம்பி கல்யாணம் பண்ணிண்டா பூவாவுக்கு எங்கே போறது”
“அவ்வளவு பிடிக்குமாவா, இவ்வளவு பிடிக்கும்னு” ரெண்டு கையை அகலமா விரிச்சேன், சட்னு கை விரிச்சதுல இடது கை அந்தப்
பக்கமா வந்த ஒரு சர்தார்ஜியின் மார்பில் கொஞ்சம் பலமாவே பட
அவன் ஹிந்தியோ,பஞ்சாபியோ அதுல கத்திண்டே போனான்.
ஷர்மிளா கையால வாயைப் பொத்திண்டு சிரிச்சா.
“என்ன என்ன சொல்றான் அந்த தாடித் தலப்பாக் காரன்”
“அச்சோ அச்சோ அழகான பொண்ணை பக்கத்துல வச்சிட்டே ஆம்பள மேல கையைப் போடறானுக இந்த மத்ராசிப் பசங்கனு,
ஒரு ஆம்பளை அழகா இருந்தா பப்ளிக் ப்ளேஸ்ல நடமாட முடியலைனு”
“அய்யே தாடியும் மீசையும் பொம்பளை மாதிரி கண் மை,
இவனுக்கு தான் அழகுனு வேற நினைப்பு.தெரியாம கை பட்டுட்டா
என்ன ஒரு அலட்டல்”
ஷர்மிளா,“சரி எங்கேயாவது போய் சாப்டுட்டே பேசலாம்,
லன்ச் சாப்டலை இல்லை?”
“எனக்கு மெட்ராஸ் ஜாஸ்தி பழக்கமில்லை, ஆனா உட்லண்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன், அங்கே போலாமா”
“ஓ ஆனா அது எங்கே தூரமா இருக்கோ தெரியலையே”
“இந்த கடோசில சஃபையர்னு ஒரு தியேட்டர் காம்ப்ளக்ஸ்
இருக்கே அதுக்கு எதுத்தாப்பலதான் இருக்காம் வா மெல்ல
பேசிட்டே நடப்போம்.”
இப்ப இயல்பா எங்க கைகள் இணைந்தது, கால்கள் நடந்தது,
ஏதேதோ அர்த்தமில்லாத பேச்சுக்கள்.
அது ஒரு அழகான இடம்தான். விதவிதமான கார்கள் வழுக்கிக்கொண்டு உள்ளே வருவதும், உடனே ஒரு வெயிட்டர் ஜன்னல் கதவுகளில் ஒரு பிளேட்டை சொருகி வேண்டியதை ஆர்டர் எடுப்பதுமாக சுறுசுறுப்பாய் இருந்தது. இயற்கை கொஞ்சும் இடத்தில் வெளியே இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம்.என்ன சாப்பிட்டோம்ன்றது இங்கே முக்கியமில்லை,சேந்து சாப்பிட்டோம்ன்ற மகிழ்ச்சிதான் முக்கியம்.
இரண்டு மணி நேரம் போனது தெரியலை, ஷர்மிளா சொன்னாள், “சரி
இன்னிக்கு சாயந்தரம் வரை என் கூட இரு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போவோம், பீச் போவோம், சாயந்தரம் டிபன் சாப்பிடுவோம். அப்பறம் சமத்தா நைட் டிரெயின் பிடிச்சு திருச்சி போவயாம், வேலைக்கு ஒழுங்கா போவயாம் சரியா”
“நீ ஒரு வாரம் இங்கே இருக்கறப்ப என்னால எப்படி வேலை பாக்க முடியும், நானும் நீ திரும்பி போற வரை இருக்கேனே”
“சொன்னா கேக்கணும், நீ வேலை பாத்து சம்பாரிச்சாதானே என் பேரண்ட்ஸ் உன்னை மாப்பிள்ளையா ஏத்துக்குவாங்க.எனக்கும் நீ
கம்பீரமா வேலைக்கு கிளம்பணும், நான் வாசல் வரை வந்து….. போப்பா நான் உனக்கு விதவிதமா சமைச்சுப் போடணும்னுதான் ஆசை.
“ஏய் முழுசா சொல்லு வாசல் வரை வந்து…முத்..”சட்னு என் வாயைப் பொத்தினா”
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings