எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த அறையில் கனத்த அமைதி குடி கொண்டிருந்தது.
மின்விசிறி பிரசவித்த காற்று மேஜை மீதிருந்த காகிதங்களுடன் சல்லாபிக்க அதனால் உண்டாகும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
உதவியாளன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும் போது, கட்டிடத்தின் வாசலில் நின்று கோஷமிடும் மக்கள் கூட்டத்தின் ஓசை உள்ளே கேட்டது.
வாட்டர் பாட்டிலைத் திறந்து கொஞ்சமாய்க் குடித்து விட்டு, மேஜை மேல் வைத்த பேராசிரியர் வேணுகோபால் எம்.எல்.ஏ.பேச ஆரம்பித்தார்.
“எல்லோரும் இப்படியே அமைதியா இருந்தா எப்படி?… ஏதாவது முடிவு செய்ய வேண்டாமா? கீழே ஜனங்க ஆவேசம் அதிகமாயிட்டிருக்கு!” வேணுகோபால் எம்.எல்.ஏ. எதிரில் அமர்ந்திருக்கும் தன் ஆதரவாளர்களிடம் கேட்டார்.
“ஐயா… நாங்க எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்!.. “நம்ம ஐயா ஒண்ணும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ இல்ல… உடனுக்குடன் உங்க கோரிக்கைகளை முதல்வருக்கு அனுப்பி சாங்ஷன் வாங்கி, அதிகாரிகளை மிரட்டி வேலையை முடிக்க…! அவர் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ., அவரோட கோரிக்கைகளை முதல்வர் பார்வைக்கு கொண்டு போக்வே ரொம்ப நாளாகும். சரி… சட்டசபையிலாவது அதைப் பற்றிப் பேசலாம்ன்னா அங்கு ஆளுங்கட்சிக்காரர்களுக்கும்… எதிர்க்கட்சிக்காரர்களுக்கும்… சண்டை போடவே நேரம் பத்த மாட்டேங்குது!”ன்னு சொன்னாப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க!” அங்கு அமர்ந்திருந்தவர்களிலேயே கொஞ்சம் வாய்த் துடுக்காய்த் தென்பட்டவன் கூற.
“இங்க பாருங்கப்பா… நான் தேர்தலில் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற படாதபாடு பட்டுகிட்டுத்தான் இருக்கேன்!… இதே தொகுதியில் என்னை எதிர்த்து ஆளுங்கட்சி சார்பில் நின்னு தோத்தானே பசுபதிப்பயல் அவன் எப்படியோ அதிகாரிகளைச் சரிக்கட்டி என்னோட கோரிக்கை மனுவை மாயமாய் மறைய வச்சுடறான்!.. நானும் தளராமல் முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்!” நெற்றியைத் தேய்த்தபடி பேசினார் சுயேட்சை எம்.எல்.ஏ.வேணுகோபால்.
சட்டென்று ஏதோ தீர்மானம் செய்தவர் போல், “சரி… வாங்கப்பா… நானே என் ஜனங்க கிட்டச் சொல்லிப் புரிய வைக்கறேன்!” துண்டைத் தோளில் போட்டபடி எழுந்து அவர் நடக்க, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.
அவரது ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் அவர் கல்லூரி பேராசிரியராய் இருந்த போது அவரிடம் பயின்றவர்கள். பின்னர் அவரது சமூக சேவை, இலக்கிய பணி, போன்றவற்றால் கவரப்பட்டு அவரது சீடர்களாய் மாறி, அவரை மக்கள் மத்தியில் ஒரு தலைவராய் உருவாக்கி, தேர்தலில் நிற்க வைத்து ஜாம்பவான் கட்சி வேட்பாளர்களையெல்லாம் மண்ணைக் கவ்வ வைத்தவர்கள்.
ஆனால். இன்று தங்கள் தலைவரால் அவரது வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லையே… ஆளுங்கட்சிக்காரன் வேண்டுமென்றே அவரைச் செல்லாக் காசாக்கி விட்டானே… என்று மிகவும் மனம் நொந்து போயுள்ளனர்.
“என் அருமை மக்களே!… என் தொகுதியின் செல்வங்களே!… உங்களோடு மனம் விட்டு பேச வந்திருக்கேன்!” என்று அன்போடு ஆரம்பித்தவரை.
“யோவ்!… நீ இங்க பேசினதெல்லாம் போதும்!… சட்டசபைல எங்க குறைகளைப் பேசி… உனக்கு ஓட்டு போட்ட எங்களுக்கு நல்லது செய்ய முயற்சி பண்ணுய்யா!…”ஆவேசத்துடன் ஒருத்தன் கத்த, எம்.எல்.ஏ.வின் உதவியாளனொருவன் பதிலுக்கு ஆவேசப்பட, அவனை அடக்கினார் வேணுகோபால். எம். எல். ஏ.
“நீங்க கேட்டதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு!… வீதிக்கொரு போர்வெல் போடணும், ஸ்கூல் கட்டணும், இரண்டு பஸ் ஊருக்குள்ளார வர ஏற்பாடு பண்ணனும், தெருவிளக்குப் போடணும், கோயிலை புதுப்பிக்கணும், ரோடு போடணும், பொதுக் கழிப்பிடங்கள் கட்டணும்!”.எம்.எல்.ஏ.பேச,
“யோவ்… சும்மா திரும்பத் திரும்ப வாயால வடை சுடாதே!.. தேர்தலுக்கு முன்னாடி இதைத்தானே பத்தாயிரம் தடவை சொல்லிச் சொல்லி ஓட்டு வாங்கி ஜெயிச்சே?… இனி பேச்சை நிறுத்திட்டு… செய்முறையில காட்டுய்யா!”! இன்னொருவன் கத்தினான்.
“எங்க சிரமம் உனக்கு புரியாதுய்யா பொம்பளைங்க பொழுதானா வெளிய வரவே நடுங்குறாங்க!… ஒரே இருட்டு!… லைட்டே இல்லை!”. எகிறினான் ஒருவன்.
“யோவ்!… நீ ஓட்டுக்கு வந்தப்ப என்ன சொன்னே?… “என்னோட உயிரைக் கொடுத்தாவது உங்க கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றுவேன்!… அப்படி நான் நிறைவேற்ற முடியலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!”னு வீராப்பு பேசினியே… ஞாபகமிருக்கா?”
அந்தப் பேச்சு எம்.எல்.ஏ.வின் சகாக்களை கோபமடையச் செய்ய, சீறிப் பாய்ந்த ஒருவன், அப்படிப் பேசியவன் கழுத்தை பிடித்து கீழே தள்ளி விட்டான்.
அதைக் கண்ட பெண்கள் கூட்டம் சீற ஆரம்பித்தது. கீழே விழுந்தவன், படுத்தவாறே, “ஏமாற்றுக்கார எம்.எல்.ஏ.வே ஒழிந்து போ!” என்று கோஷமிட,
பெண்கள் கூட்டமும், “ஏமாற்றுக்கார எம்.எல்.ஏ.வே வாக்குறுதியை நிறைவேற்று… இல்லையேல் உயிரை விடு!” எல்லை மீறிக் கோஷமிட, வேகமாக உள்ளே சென்றார் எம்.எல்.ஏ. சகாக்களும் உடன் சென்றனர்.
சிறிது நேரம் கத்திக் கொண்டிருந்த கூட்டம் கற்களை எடுத்து வீச ஆரம்பித்தது. கண்ணாடி ஜன்னல்கள் உடைய, எம்.எல்.ஏ.வின் கார் காயலாங்கடை ஸ்டேஜுக்கு வந்தது.
கூட்டத்தில் யாரோ ஒருவன் “போலீஸ்… போலீஸ்” எனப் பொய்க் கூச்சல் கூட சிதறியோடியது கூட்டம்.
இரண்டாம் நிமிடம் அந்த இடம் காலியானது. ஆங்காங்கு அறுந்து போன செருப்புகளும், கிழிந்து போன வெள்ளை வேட்டி, சட்டைகளும் மட்டுமே கிடந்தன.
.
இரவு மணி 9:15 தன் ஆலோசகர்களை அனுப்பிவிட்டு தன்னுடன் நீண்டகாலம் சீடனாக இருக்கும் முருகனை மட்டும் அழைத்தார்.
“முருகா ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணு” சொல்லி விட்டு அறைக்குள் சென்றவர் ஒரு கவரை எடுத்த்கு வந்து முருகனிடம் கொடுத்து, “இதுக்குள்ள ஒரு முக்கியமான மேட்டர் இருக்கு!… நாளைக்குக் காலையில இந்த மேட்டரை போஸ்ட் அடிக்கச் சொல்லு!… நாளைக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு ஊருக்குள் இதை ஒட்டிடு” என்றார் எம்.எல்.ஏ.
“இதுல என்ன மேட்டர் இருக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
.
“அதை நீயுமே போஸ்டரில் படிச்சுத் தெரிஞ்சுக்க!”.
காலை 6:45 மணியாகியும் எம்.எல்.ஏ எழுந்து வெளியே வராததால், அவருக்கு பெட் காஃபி கொடுக்கும் வேலைக்காரக் கணவன் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.
அங்கே வேணுகோபால் எம்.எல்.ஏ.அலங்கோலமான நிலையில் தாறுமாறாக மெத்தையில் கிடந்தார்.
வாயிலிருந்து வடிந்த ரத்தம் உறைந்து போயிருந்தது.
ஏறி இறங்கும் நெஞ்சுக்கூடு அசையாதிருப்பதைக் கவனித்த கிழவன் சத்தம் போட, அதிகாலையிலேயே அவரைக் காண வந்திருந்தவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து அவரை நெருங்கிய போது சுத்தமாகவே செத்துப் போயிருந்தார்.
தரையில் உருண்டு கிடந்த பாட்டிலில் மீதி விஷம் ஒட்டியிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாய் விஷயம் பரவ எம்.எல்.ஏ. வீட்டு முன் கூட்டம் கூட ஆரம்பித்தது.
பிரஸ்ஸிலிருந்து முருகன் பதறியடித்து வர,
மற்ற சகாக்கள் தகவல் தெரிந்து நாலாப் பக்கமும் இருந்து ஓடி வர,
மாநில எம்.எல்.ஏ.க்கள் சிலரும், மந்திரிகள் சிலரும் நேரில் வர,
முதல்வர் இரங்கல் செய்தி அனுப்ப,
அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் அங்கே கூடியிருக்க,
பிரஸ்ஸில் நேற்றிரவு முருகன் கொடுத்த மேட்டர் போஸ்டராக பிரிண்ட் ஆகிக் கொண்டிருந்தது.
மாலை 6:00 மணிக்கு சவ ஊர்வலம் அந்த ஊரின் அந்தப் பிரதான சாலையில் செல்லும் போது மக்கள் அனைவரும் பார்வையிலும் அந்த போஸ்டர் பட்டது.
“நான்தான் உங்கள் எம்எல்ஏ வேணுகோபால் பேசுகிறேன்!.. என் அருமை மக்களே!… உயிரை கொடுத்தாவது நிறைவேற்றுவேன் என நான் கூறியவற்றை நிறைவேற்ற இப்ப உயிரைக் கொடுத்துள்ளேன்!… விரைவில் இங்கு இடைத்தேர்தல் வரும்… நம் நாட்டில் இடைத் தேர்தல் நடக்கும் தொகுதி சொர்க்க பூமியாக மாறும்… நீங்கள் கேட்ட வீதிக்கு வீதி போர்வெல்லும், பள்ளிக்கூடமும், தெரு விளக்கும், கோயிலும், பஸ்ஸும், உங்களுக்குக் கண்டிப்பாக கிடைக்க எனக்கு தெரிந்த உபாயம் என் சாவு! நன்றி மக்களே! வருகிறேன்!”
.
படித்த அனைவரும் உறைந்து போய் நிற்க, சவமாய்க் கிடந்த வேணுகோபால் முகத்தில் வெற்றிச் சிரிப்பு..
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings