2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நாங்கள் நான்கு பேர் ஒரே கூடுக்குள். சிவா, மணிகண்டன், தேவா மற்றும் நான். நாங்கள் மூவரும் வேலை பார்த்துக்கொண்டிருக்க மணிகண்டன் மட்டும் இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறான்.
காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் பறந்து விடுவோம். ராத்திரி ஏழு மணிக்கு மேல்தான் ஒவ்வொரு பறவையாக கூடுதேடி வருவோம்.
அன்றும் அப்படித்தான் ரூமிற்கு வந்து சேர்ந்தேன் நான். படத்துடன் ஓடிவந்த தேவா, ‘ மச்சி… மணி குடிச்சிப்புட்டு வாந்தி எடுத்துக்கிட்டிருக்கான்டா… ‘ என்றான்.
‘ அவனா… பாட்டிலையே தொடமாட்டானேடா…‘ என்று அதிசயித்தபடி ஓடிப்போய் பார்த்தால், படுக்கையில் அவன் கிரக்கத்தில் கிடக்க, அவன் எடுத்த வாந்தி கட்டில், தரை எல்லாம் சிதறி நாற்றமடித்தது..
‘ ஏமாத்திட்டாய்ங்கடா… ஏமாத்திட்டாய்ங்க… ‘ என்று சில கெட்டவார்த்தைகளும் சேர்த்து உளறிக்கொண்டு இருந்தான். எனக்கு செமக் கோபம். முதல் காரணம் அவன் படுத்திருந்த படுக்கை என்னுடையது. இரண்டாவது தேவையில்லாமல் காலையில் போலீஸ் ஸ்டேஷன் வரை எங்களை போகச்செய்தது.
xxxxxxx
ஒருநாள் ராத்திரி அவனது மொபைலில் கால் வந்திருக்கிறது. இவன் சிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அப்புறம்தான் தெரிந்தது எதிர்முனையில் ஒரு பெண் என்று. கிட்டத்தட்ட அரை மணிநேரம் கடலை போட்டுக்கொண்டிருந்துவிட்டு வந்தவன், ‘ மச்சி… ரொம்ப ஸ்வீட்டா பேசுது மச்சி… அவ குரலே இவ்ளோ ஸ்வீட்டா இருக்குதுன்னா ஆளைப் பார்த்தா எவ்ளோ சூப்பர் ஃபிகரா இருப்பா… எனக்கு அவளை எப்படியாவது பார்த்துடனும் மச்சி. பேர் ஷர்மிளியாம்…. மேற்கொண்டு விவரம் கேட்கறதுக்குள்ளே அவ போனை கட்பண்ணிட்டா மச்சி… ஏதோ ஒரு மெடிக்கல் கம்பெனியில வேலை பார்க்கறாளாம் மச்சி… ஆனா விவரமா சொல்லலை… ‘ என்றான்.
‘ பேசினது ரெக்கார்டிங் ஆகியிருக்குமில்லையா… போட்டுத்தான் கேளேன்டா… ‘ என்றபோதுதான் தெரிந்தது, அவள் பேசியது வாட்ஸப் கால் என்று. அதிலிருந்து அவன் தலை கால் புரியாமல் அலைய ஆரம்பித்தான். மொபைலை கீழே வைப்பதே இல்லை.
ஒருநாள் திடீரென்று பரபரப்புடன் என்னிடம் ஓடிவந்தான். ‘ மச்சி… அந்தப் பொண்ணும் அதோட அம்மாவும் ரோடுல போகும்போது ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்டாம்… அம்மாவ ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம். ஒரு ஆபரேஷன் பண்ணனுமாம்… இருபத்தஞ்சாயிரம் கட்டச் சொல்றாங்களாம்… எனக்கு ஒரே உதறல் மச்சி… நாம ஏதாவது பண்ணனும்… ‘ என்று துடித்தான்.
எனக்கு சந்தேகம். ஆளை முழுதாக பார்க்கக்கூட இல்லை. அதற்குள் பணமா… உடனே நான் மறுத்துவிட்டேன். ‘ மச்சி… வேணாம்டா… எனக்கு என்னவோ இது தப்பா படுது… அதோட அது உன் ஆளு… நாமனு சொல்லி என்னை ஏன்டா உள்ளுக்குள்ளே இழுக்கறே… ‘ என்று சொல்லி நைஸாக நழுவிக்கொண்டேன்.
பிறகு எங்கெங்கோ புரட்டி ஐயாயிரம் தயார் செய்துவிட்டு. எந்த ஆஸ்பத்திரியில் வந்து பணம் கட்டவேண்டுமென்ன்று இவன் கேட்திருக்கிறான். அவளோ ஆஸ்பத்திரிக்கெல்லாம் வரவேண்டாம்… ஜி.பே.பண்ணுங்க… நானே கட்டிக்கறேன் என்று சொல்லியிருக்கிறாள்… இவனும் வழிந்துகொண்டு பணத்தை ஜி.பே.யில் போட்டுவிட்டான்.
அந்த நிகழ்வு என்னை அடிக்கடி உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் அவள் வேலைசெய்யும் கம்பெனியின் பெயரை கேட்கச் சொன்னேன். வழிந்து வழிந்து பேசிவிட்டு வந்து ‘ குமரன் மெடிகல்ஸ்ஸாம் மச்சி… ‘ என்று வந்து பற்களைக் காட்டினான். நேரதியாக போய் விசாரிக்கச் சொன்னேன். போய்விட்டு சோர்வுடன் வந்து உதட்டைப் பிதுக்கினான், ‘ அப்படி யாரும் இல்லியாம் மச்சி… அங்கேயிருந்தே போன் போட்டதுக்கு ஆக்ஸிடென்ட் ஆனவுடனே வேலையை விட்டுட்டேன்கறா… ‘ என்றான். ‘ நம்பவும் முடியலை… நம்பாம இருக்கவும் முடியலை மச்சி… ‘ என்ரும் தவித்தான்.
பதினைந்து நாள் கழித்து மறுபடியும் போன் அவளிடமிருந்து. லைசன்ஸை எடுத்துக்கொள்ளாமல் ஸ்கூட்டியில் போய்விட்டாளாம். மொபைலில் இருக்கும் லைசென்சைக் காட்டியிருக்கிறாள். ஒரிஜினல்தான் வேண்டும் என்று போலீஸ் சலான் போட்டுவிட்டார்களாம். உடனே ஆயிரத்து ஐநூறு கட்டவேண்டுமாம். பணம் கேட்டிருக்கிறாள். தானாகவே ஜி.பே. செய்துவிட்டு பிறகுதான் எங்களிடமே சொன்னான்.
‘ மச்சி… இது ஏதோ கண்டிப்பா பணம் பறிக்கற பொண்ணு போல தெரியுது… வேண்டாம்… இதை இப்போவே கழற்றி விட்டுடு… ‘ என்றேன்… அவன் விடுவதாயில்லை. ‘ எவ்வளவு இனிமையா பேசுது மச்சி அது… அது பொய் சொல்றமாதிரி எனக்கும் தெரியலை…’ என்றான்.
தூரத்திலிருந்தே அவள் இவனுக்கு மை வைத்து மயக்கி விட்டாள் போல என்று புலம்பிக்கொண்டு அப்படியே விலகிவிட்டேன்.
xxxxxxx
திடீரென்று ஒருநாள் அவனது மொபைலுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கால் வந்திருக்கிறது. உடனே வந்து எஸ்.ஐ.யை பார்க்கச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். பயத்தில் அலறியடித்துக்கொண்டு என்னிடம் ஓடிவந்தான்.
‘ என்னனு தெரியலை மச்சி… உடனே வான்றாங்க… இப்போ என்னடா பண்றது… ‘ என்றான்.
‘ நீதான் தேனொழுக பேசிக்கிட்டிருப்பியே… அந்த சூப்பர் பிகருஃதான் உன்மேல கேஸு எதுவும் கொடுத்துட்டாளோ என்னவோ… என்டா உண்மையைச் சொல்லு… எங்களுக்குத் தெரியாம ரூம் எதுவும் போட்டுட்டியா… ‘ என்று நக்கல் விட்டேன். அவன் உண்மையிலேயே பயந்து போய்விட்டான். ‘ ஐயய்யோ… நான் அப்படிலாம் ஒன்னும் செய்யலை… ஜஸ்ட் போன்ல பேசுனது மட்டும்தான்… அதுக்கு நான் குடுத்த விலை இருபத்தேழாயிரம்… ‘ என்று அழுதான்.
அங்கே போனதும்தான் தெரிந்தது ஒரு ஆண்பிள்ளை நிறைய பேருக்கு பெண்குரலில் பேசி பணம் கறந்திருக்கிறான் என்றும் பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் கொடுக்க, கொக்கிப் போட்டு அந்தாளைப் பிடித்துவிட்டார்கள் என்றும் அவனது மொபைலை துலாவும்போதுதான் மணியின் நம்பரும் அதிலிருந்து கிடைத்திருக்கிறது என்றும் அவனை விசாரிக்கவே கூப்பிட்டிருக்கிறார்கள் என்றும் தெரியவந்தது. ஒரு ஓரமாய் மொட்டைத்தலையுடன் முகத்தில் ஆங்காங்கே வீக்கங்களுடனும் உட்கார்ந்தவனை, ‘ இந்த நாதாறிதான்… ‘ என்று கை காட்டினார் ஏட்டு.
‘ மணிகண்டா பார்த்துக்கோ உன் சூப்பர் பிகரை… ‘ என்று எனக்கு நக்கல் விடவேண்டும் போலிருந்தது. ஆனாலும் வாயை மூடிக்கொண்டு மவுனமாய் உட்கார்ந்திருந்தேன்.
எதிரே இருந்த எஸ்.ஐ. சொன்னார், ‘ இப்போலாம் நெறைய ஆப்ஸ் வந்துடுச்சாம்யா… ஒரு ஆப்ல ஆண்பிள்ளை பேசுனா… ஒரு பொண்ணு ஸ்வீட்டா பேசறமாதிரியே கேட்குமாம்… அந்த ஆப்பை வச்சுதான் இந்த நாதாறி நிறைய பேத்தை ஏமாத்தியிருக்கான். இதுல உன் பிரண்டு நம்பரும் இருக்கவும்தான் கூப்பிட்டனுப்பினோம்… இப்படி பேசியே ஏமாத்தியே பேங்க் கணக்குல முப்பது லட்சம் சொச்சம் வைச்சிருக்கான்… ‘ என்றவர் ‘ நீங்க ஒரு ரிப்போர்ட் கொடுங்க.. இவனை நுங்கு எடுத்துடுறோம்…. ’ என்று அவர் கேட்க, நாங்கள் புகார் கொடுக்கவேண்டாம் என்றுவிட்டு வேலைக்குத் திரும்பிவிட்டோம்.
வேலை முடித்து வந்து பார்த்தால் இப்படி வாந்தியெடுத்து நாறடித்துவிட்டிருக்கிறான். ரொம்பநேரம் உளறிக்கொண்டே கிடந்தான். ‘ என்னை ஏமாத்திட்டாய்ங்கடா மச்சி… ஏமாத்திட்டாய்ங்க…. ‘
நானும் தேவாவும் ஒரு பழைய விளக்குமாறும் பக்கெட்டுமாக ஓடியாடி சுத்தம் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது
xxxxxx.
அங்கே இங்கே என்று பேசி அவனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தோம். வேலைக்கு போக ஆரம்பித்தான். அப்படி ஒரு நாள் வேலைக்குப் போய்விட்டு திரும்பியவன் மொட்டை மாடியில் ரொம்ப நேரம் போனில் பேசிக்கொண்டிருந்துவிட்டு கீழே வரும்போதே, ‘ மச்சி… சூப்பர் ஃபிகரு மச்சி… இருபது நிமிஷம் சாட் பண்ணினோம்… ‘ என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவனே சொன்னான், ‘ திடீர்னு பேஸ்புக்ல ஒரு பிரண்டு ரிக்வெஸ்ட் வந்துது மச்சி. பேர் ராகிணி. ஆளும் வசீகரமா இருந்துச்சா. உடனே அக்ஸப்ட் பண்ணிட்டேன். உடனே மேசெஞ்சர்ல வந்துடுச்சு… நானே எதிர்பார்க்கல… ஹாய்னு மெசேஜ் போட்டுச்சு. நானும் போட்டேன்… அப்படியே பத்திக்குச்சு மச்சி… ரொம்ப நேரம் சாட்டிங் பண்ணிட்டே இருந்தோம். போட்டோவைப் பார் மச்சி… ‘ என்று மொபைலை நீட்டினான்.
பார்த்தேன். சந்தேகத்துடனே, ‘ இது ஏதோ மாடல் இல்லேனா நடிகை மாதிரி இருக்கே மாப்ள… ‘ என்றேன்.
‘ உங்களுக்கெல்லாம் பொறாமை மச்சி… ‘ என்றவன், ‘ இரு மச்சி… அதுதான் திரும்பவும் சாட்டிங்ல வருது… நான் மாடில போயி சாட் பண்ணிட்டு வர்றேன்… ‘ என்றபடி தலைதெறிக்க படிகளில் ஏறியோடினான்..
சிலநிமிடங்களிலேயே திரும்பி வந்தான். ‘ ஜி பேல இருக்கியான்னு கேட்டா மச்சி, ஆமாம்னேன். ஒரு நம்பரைக் கொடுத்து பத்தாயிரம் பணம் அனுப்பு, ஒரு வாரத்துல திருப்பித் தந்துடறேன்னு சொல்றா… ஏதாவது பண்ணனும் மச்சி… ‘ என்றான்.
கூகிளில் அந்தப் போட்டோவை தேடிவிட்டு கூவினான் தேவா , ‘ மாப்ள இந்த பொண்ணு ஒரு பெங்காளி மாடல். ரெண்டு மூணு படங்கள்ல கூட நடிச்சிருக்கு… ‘
நாங்கள் சிரி சிரியென்று சிரிக்க, மணிகண்டனின் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings