“பகல்ல பார்த்துப் பேசு!… அந்தில அதுவும் பேசாதே”ன்னு கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை சொல்லுவாங்க. அது ஏன் தெரியுமா?… சொல்லும் சொற்களுக்கும் சக்தி உண்டு என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளதால்.
சொற்களுக்கு நிகழ்வுகளை மாற்றும் சக்தி உண்டு. ஆம்!… ஒரு சொற்றொடர், ஒரு உற்சாகமான வார்த்தை, அல்லது கருணைச் செயல் இவையெல்லாம் ஒரு வாழ்க்கையையே மாற்றி விடும் சக்தி பெற்றவை.
அதே போல், ஒரு சொல்லின் பொருள், உச்சரிக்கும் தொனி, பேசும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.
சரி… இனி சொற்களின் சக்தி பற்றிய சில தகவல்களை அறிவோம்.
வெவ்வேறு வார்த்தைகள் வெவ்வேறு உணர்ச்சி மற்றும் உளவியல் பதில்களை உருவாக்குகின்றன.
பேராசை, ஆர்வம், ஊக்கம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் ஆற்றல் கொண்ட சொற்களை சக்தி வார்த்தைகள் (ENERGETIC WORDS )எனலாம்.
எந்த ஒரு வார்த்தையும் சரியான நேரத்தில், சரியான மனிதரிடம் சொல்லப்படும் போது அது அவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
நாம் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கும் நம்முடைய உணர்வுகளுக்கும் நிறைய தொடர்புண்டு. உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும்.
மனதை நேர்மறை எண்ணத்தை ஊட்டும் எந்த ஒரு வார்த்தையும் சக்தி வாய்ந்த வார்த்தை தான். உதாரணம்: “வாழ்க வளமுடன்” என்னும் சொற்றொடர்.
இணையத்தில் நான் வாசித்த ஒரு கதை இதற்கு பொருத்தமான பதிலாக அமையுமெறு நம்புகிறேன். உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, மத குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, “நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்” எனக் கூறி, மனமுருக அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு அந்த மத குரு, “இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டியிருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும்” எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் அவன் சிரிக்கத் தொடங்கினான். “வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக் கூறி நகைத்தான்.
அதற்கு அந்த மத குரு, “இந்தக் கூட்டத்திலேயே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள்தான்” எனச் சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் வெகுண்டு, “நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை அடித்து விடுவேன்” என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த மத குரு, “முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள்தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களைத் தூண்ட முடியுமென்றால், நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியுமல்லவா?” என்றார்.
இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குனிந்தான்.
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு
வார்த்தைகளுக்கு சக்தி உண்டு. சக்தி தரும் வார்த்தைகள் உண்டு. சக்தியை உறிஞ்சுவிடும் வார்த்தைகளும் உண்டு. யோசிப்பதில் இருந்து பேசுவது வரை வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்மறை வார்த்தைகள் அறவே பயன்படுத்தக்கூடாது. நம் சிந்தனையையும், ஆழ்மனது மற்றும் செல்ஸ் ஆகியவற்றை உத்வேகம் படுத்தும் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சக்தி தரும் வார்த்தைகள்
நான் தன்னம்பிக்கை உடையவன்
நான் சக்தி உடையவன்
நான் சாதனை புரிபவன்
நான் அன்பானவன்
என்னால் முடியும்
வெற்றி உறுதி
நான் எதிலும் முதல் இடம் பிடிப்பேன்
எல்லா நல்ல காரியங்களும் என்னிடமிருந்து தொடங்கும்.
நான் தொடுவது துலங்கும்.
என் அறிவு நாளுக்கு நாள் கூடுகிறது.
வெற்றி மேல் வெற்றி மேல் வந்து என்னை சேரும்.
இந்த நாள் இனிய நாள்
சக்தியை உறிந்துவிடும் வார்த்தைகள்
நான் தண்டம்
நான் தொடுவது துலங்காது
எனக்கு பேசத் தெரியாது
நாக்கிலே எனக்குச் சனி
என்னை யாரும் விரும்பவில்லை
தோல்விக்கென்றே பிறந்தவள்
காசு என்னிடம் தங்காது
என் தலை எழுத்தை ஆண்டவனாலும் மாற்ற முடியாது.
எனகு ஸ்திர புத்தி கிடையாது
எனக்குப் புத்திர பாக்கியம் கிடையாது
நான் ஏன் பிறந்தேன்
ஆக, சொற்களுக்கு எப்பொழுதும் மிகுந்த வலிமை உண்டு. எங்கள் ஊரில் பெரியவர்கள் சொல்லுவார்கள் “ஒரு சொல் வெல்லும் ; ஒரு சொல் கொல்லும் “.
சொற்களின் வலிமையை நிரூபிக்கும் இன்னொரு கதை.
ஒரு அரசன் ஒரு கனவு கண்டான். அதில் தன்னுடைய எல்லா பற்களும் போய் பொக்கை வாயுடன் இருப்பதாக வந்தது. அரசன் மிகவும் கவலைக் கொண்டான்.
முதல் வேலையாக ஒரு ஜோதிடரை வர வழைத்து தான் கண்ட பொக்கை வாய் கனவைப் பற்றி கூறினான். அவரும் ஒரு ஓலைச் சுவடியில் மன்னன் கண்ட கனவுக்கான அர்த்தம் இருப்பதை படித்துக் கூறினார்.
மன்னா ! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்தபந்தங்கள் எல்லோரும் உங்களுக்கு முன்னரே இறந்து விடுவார்கள் இது தான் தாங்கள் கண்ட கனவுக்கான பலன் என்று கூறினார். மன்னன் ஜோதிடர் மேல் மிகுந்த கோபம் கொண்டு ஜோதிடரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.
அதன் பிறகு இன்னோரு ஜோதிடரை அரசவைக்கு வர வழைத்தான். அவரிடம் தான் கண்ட பொக்கை வாய் கனவைப் பற்றிக் கூறினான்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரி ஓலை சுவடியைத் தான் வைத்து இருந்தார். அவரும் அதைப் படித்து விட்டு
“மன்னா! உங்கள் சொந்த பந்தங்களையெல்லாம் விட நீண்ட காலம் நீங்கள் நீடுழி வாழ்வீர்கள் இது தான் தாங்கள் கண்ட கனவுக்கான பலன் என்று கூறினார்.
மன்னன் மனம் குளிர்ந்து பல பரிசுகள் வழங்கி ஜோதிடரை வழியனுப்பினான்.
இருவரும் ஒரே ஓலை சுவடியை தான் படித்தார்கள். ஒரே பலனை தான் கூறவும் செய்தார்கள். ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார். இன்னோருவர் எல்லோரையும் தாண்டி நீங்கள் நெடுங்காலம் வாழ்வீர்கள் என்றார். இது தான் வித்தியாசம்.
ஒருவருக்கு கிடைத்தது சிறைச்சாலை இன்னோருவருக்கு கிடைத்தது பரிசுகள். இப்பொழுது சொற்களுக்கு உள்ள சக்தியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆகையால், தொண்டையருகில் ஒரு “தணிக்கை அதிகாரி”யை (CENSOR OFFICER) உட்கார வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளியிடப் போகும் ஒவ்வொரு சொல்லையும் அவன் தணிக்கை செய்து வெளியிடட்டும்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings