in , ,

சொல்லாமலே யார் பார்த்தது?! (அத்தியாயம் 4) – இரஜகை நிலவன்

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மறுநாள் காலையில் அலுவலகம் வந்ததும் காஷியர் அவனைக் கூப்பிட்டு இரண்டு மூன்று வவுச்சர்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இரண்டு பத்து ரூபாய் கட்டுகளைக் கொடுத்தான்.

தினேஷ் தான் கொண்டு வந்த பையில் பணத்தை வைத்துக் கொள்ள உள்ளே நுழைந்த ராஜன் லால் “ரெடியா தினேஷ். கிளம்பலாமா? என்று கேட்டார்.

“எஸ் சார்”

“கமான்” என்று சொல்லி விட்டு ராஜன் லால் முன்னால் போக தினேஷ் வெளியே வந்தான்.

டாடாசுமோவில் மதன் லாலும் ஒரு வக்கீலும் அமர்ந்திருந்தார்கள். முன்னால் ராஜன் லால் ஏறிக்கொள்ள பின்னால் தினேஷ் ஏறிக் கொண்டதும் ஜீப் கிளம்பியது.

“எந்த ஸ்டுடியோவில் சார் இன்றைக்கு ஷூட்டிங்?”

“ஹைகோர்ட் பக்கத்திலே தினேஷ்.”

“கேமராமேன் மற்ற நடிகர்கள் எல்லாம்….?”

“அவர்களெல்லாம் முன்னாலே போயாச்சு.”

“டைரக்டர் வந்து விவரமாக காட்சியை விளக்குவார் என்று சொன்னீர்கள். அவர் நேற்று லாட்ஜிக்கு வரவேயில்லை.”

“இன்றைக்கு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்.”

ஜீப் அந்த கோர்ட் வளாகத்தில் வந்து நிற்க நான்கு பேரும் வந்து இறங்கினார்கள்.

“பையனுக்கு விவரம் எதுவும் சொல்லாமல் அழைத்து வருகிறீர்கள். பிறகு ஏடாகூடமாக நடந்து கொள்ள மாட்டானே” என்று இந்தியில் வக்கீல் கேட்டது கொஞ்சம் கூட தினேஷுக்குப் புரியவில்லை.

“நீங்கள் கவலையேபடாதீர்கள். மதராசிக்கு ஒன்றும் தெரியாது. நான் சொல்கிற மாதிரி ஆடுவான்” என்று இந்தியில் சொல்லி விட்டு, “தினேஷ் நீங்கள் நம் காரக்டருக்கு தகுந்தாற் போல் உடை அணிய வேண்டும். வாருங்கள் இந்த டிரஸ்ஸை போட்டுக் கொள்ளலாம்” என்று கோர்ட்டின் ஒரு கோடி அறையில் அவனை சுரேஷ் தேவின் உடையை போட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள்.

வக்கீல் உள்ளே போய் விட்டு வந்து “ஜட்ஜ் அரை மணி நேரம் கழித்து வரச் சொல்லியிருக்கிறார்” என்றார் மதன் லாலிடம்.

“ஓ.கே. ஜட்ஜ் எதுவும் கேள்வி கேட்க மாட்டாரே.”

“நான் சொல்லி விட்டுத்தான் வந்திருக்கிறேன். சுரேஷ் தேவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று.”

“அப்படீன்னா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமே என்றார். இல்லை சார் இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது. அவருக்கு கொஞ்சம் சளி பிடித்து தொண்டை கரகரப்பாகி இருக்கிறது என்றேன். சரி நான் சுரேஷ் தேவைப் பார்த்தால் போதும். அதிகமாக கேள்வி கேட்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்” என்றார் வக்கீல்.

“வெரி குட். ராஜன் லால் எங்கே?” என்று கேட்ட போது “போகலாமா?” என்றவாறு வந்தார் ராஜன் லால்.

அருகில் சுரேஷ் தேவின் உடையில் தினேஷ் நின்று கொண்டிருந்தான்.

உள்ளேயிருந்து வந்த கோர்ட் குமஸ்தா வக்கீலிடம் வந்து, “சுரேஷ் தேவைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்கிறார் ஜட்ஜ்” என்றார்.

நான்கு பேரும் உள்ளே வர “இவர்கள் இருவரும் யார்?” என்று சுரேஷ் தேவ் உடையில் இருந்த தினேஷிடம் கேட்டார் ஜட்ஜ் இந்தியில்.

அவன் வக்கீலைத் திரும்பிப் பார்க்க “மை லார்ட் அவர்கள் இருவரும் சுரேஷ் தேவின் கார்டியன்கள். மிஸ்டர் ராஜன் லால். மிஸ்டர் மதன் லால்” என்று வக்கீல் பதில் சொன்னார்.

ஜட்ஜ் வக்கீலை முறைத்துப் பார்த்துக் கொண்டு “எப்படிக் கொண்டு போகப் போகிறீர்கள். இரண்டு பெரிய சூட்கேஸ்களில் போட்டு வைத்திருக்கிறேன்.” என்றார் ஜட்ஜ்.

‘ரெடி. டேக். ஷாட் ரெடி. கேமிராமேன் யாரையும் காணவில்லையே. இவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள். காலையிலே சந்தேகப்பட்டதும் நேற்று இரண்டு விதமாக விமான டிக்கட் வாங்கியது கூட நல்லதுதான்.’ என்று எண்ண ஆரம்பிப்பதற்குள் “நாங்கள் ஜீப்பில் வந்திருக்கிறோம். பத்திரமாக சுரேஷ் தேவ் பங்களாவிற்கு திரும்பிப் போய் விடுவோம்” என்றார் ராஜன் லால் இந்தியில்.

“ஓ.கே. சுரேஷ் தேவ். கையெழுத்திடுங்கள். இவையெல்லாம் என் சுயஉணர்வோடும் யாருடைய வற்புறுத்தலில்லாமலும் பெற்றுக் கொண்டேன் என்று எழுதியிருக்கிறேன். வாசித்துக் கொண்டு கையெழுத்திடுங்கள்” என்றார் ஜட்ஜ்.

“நோ பிராப்ளம் சார். நீங்கள் எல்லாம் சரியாகத்தான் எழுதியிருப்பீர்கள்” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார் வக்கீல்.

“ஆமாம்” என்று தலையாட்டினான் தினேஷ்.

“தினேஷ் நான் காலையிலே சொல்லித் தந்த மாதிரி கையெழுத்திடுங்கள்.” என்றார் ராஜன் லால் கிசுகிசுப்பாக.

“என்ன எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். சுரேஷ் தேவிற்கு ஆங்கிலம் புரியாத பாஷையாயிற்றே” என்றார் ஜட்ஜ் குழப்பத்துடன்.

“அது… வந்து… இப்போது கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் பழகிக் கொண்டிருக்கிறார் அது தான் அவருக்கும் தொடர்ந்து ஆங்கிலத்திலே பேசக் கற்றுக்கொடுக்கிறோம்” என்றார் வக்கீல்.

“சரி.. சரி.. சுரேஷ் தேவ் இங்கே கையெழுத்துப் போடுங்கள்” என்றார் ஜட்ஜ் ஹிந்தியில்.

அவர் சொன்னது புரியவில்லை என்றாலும் ’கையெழுத்துப் போடச் சொல்கிறார்’ என்று உணர்ந்த தினேஷ் ராஜன், லால் சொல்லித் தந்த மாதிரி ‘சுரேஷ் தேவ்’ என்று கையெழுத்திட்டான்.

ஜட்ஜ் எழுந்து தினேஷின் கையைக் குலுக்கிக் கொண்டு குமாஸ்தாவிடம் “இவரை அழைத்துச் சென்று பணத்தைக் கொடுங்கள்” என்றார்.

குமஸ்தாவுடன் உள்ளே சென்ற தினேஷ் பணம் நிறைந்த இரண்டு சூட் கேஸ்களையும் எடுத்துக் கொண்டு வேறு வழியாக வெளியே வந்து ஒரு டாக்ஸியில் ஏறி “சி.எஸ்.டி. ஸ்டேஷனுக்கு போப்பா” என்றான்.

டிரைவர் சி.எஸ்.டி. என்பதை புரிந்து கொண்டு “கியா” என்றவாறே வண்டியை எடுத்தான்.

உள்ளே போன தினேஷ் திரும்பி வராமல் குமஸ்தா மட்டும் திரும்பி வர திகைத்துப் போன ராஜன் லால், மதன் லால், வக்கீல் மூவரும் கும்ஸ்தாவிடம் “சுரேஷ் தேவ் எங்கே?” என்று கேட்டனர்.

“அவர் அப்போதே அடுத்த வழியாக போய் விட்டாரே” என்றார் குமாஸ்தா.

“சாலா மதராஸி. நம்மை ஏமாற்றி விட்டானே. சும்மா விடக் கூடாது. இன்று சாயங்காலம் மும்பை-சென்னை டிக்கட் எடுத்திருக்கிறான். ஏதோ ஜெட் ஏர்வேஸ் டிக்கட் என்றான். வா விடாமல் பிடித்து விடலாம்” என்று ராஜன் லால் கத்த, மதன் லாலும் வக்கீலும் அவர் பின்னால் ஏறக் குறைய ஓடினார்கள்.

மூவரும் ஜீப்பில் ஏறியதும் “டிரைவர் நேற்று அந்தேரியிலே அந்த தினேஷ் மதராஸியை இறக்கி விட்ட டிராவல்ஸ் ஆபீஸிற்கு போ” என்றார் மதன் லால்.

***** ******* ******

சி.எஸ்.டி. ஸ்டேஷனில் இறங்கிய தினேஷ் மறுநாள் புறப்படும் மும்பை–நாகர்கோவிலுக்கு ஒரு ரயில் டிக்கட் எடுத்தான்.

இரண்டு பணம் நிரம்பிய சூட்கேஸ்களுக்கும் பூட்டுகள் போட்டு டிக்கெட்டைக் காட்டி லாக்கர் அறையில் போட்டு விட்டு வெளியே வந்து ஹோட்டல் சிட்டி லாட்ஜில் அறை எடுத்தான். இரவு மட்டும் தங்கிக் கொள்வதற்கு..

இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொல்லாமலே யார் பார்த்தது?! (அத்தியாயம் 3) – இரஜகை நிலவன்

    எது உண்மையான ஆபரணம்? (சிறுவர் கதை) – பிரபாகரன்.M