இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஆபீஸிலே போனில் பேசிக் கொண்டிருந்த பிரபு வேகமாக அருணுக்கு அருகில் வந்து “என்னிடமே மறைச்சுட்டே இல்லை?” என்றான்.
“என்னடா என்ன விஷயம்?” என்று கேட்டான் அருண்.
“அதை அப்புறம் சொல்கிறேன்” என்றவன், “திரவியம், பாலு, கென்னடி, வாங்கடா… இன்றைக்கு நம்ம அருண் சார் நமக்கு பார்ட்டி வைக்கப் போகிறார்” என்றான்.
மூவரும் வந்து அருணைச் சூழ்ந்து கொள்ள, “என்ன விஷயம் என்று சொல்லித் தொலையேன்?” என்றான் அருண் பிரபுவிடம்.
“உங்க அம்மா போனிலே சொன்னாங்க…. உனக்கு பொண்ணு பார்த்திருக்கிறார்களாம். நிச்சயம் பண்ணப் போகிறார்களாம். பொண்ணு ஏர் இந்தியாவிலே செய்கிறதாம்” என்றான் பிரபு.
“டேய் ஏண்டா எங்களிடம் மறைத்தாய். படுபாவி. நாங்க என்ன? உன் வருங்கால் மனைவியைப் பார்த்து கடித்து தின்று விடுவோம்னு நினைச்சியா” என்றான் பாலு.
“அது இல்லேடா……..”
“என்னது, இருக்கோ இல்லையோ இன்றைக்கு சயான் ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கின்ற ‘பாவ்னா’ பீர் பாரிலே பார்ட்டி இருக்கிறது இல்லையா அருண்” என்றான் கென்னடி.
“ஓ.கே….. பாபா….. ஆனால் நான் இன்னும் பெண்ணையே பார்க்கவில்லையடா”
“நாங்க மட்டும் உன் பொண்டாட்டியை பார்த்தாச்சாக்கும். முதல்லே பார்ட்டி வையுடா” என்றான் திரவியம்.
“எப்படா போகலாம்?” என்றான் பிரபு.
“ஒன்பது மணிக்குப் பிறகு போனால் தாண்டா ரெக்கார்ட் டான்ஸ் சூடு பிடிக்கும்’’ என்றான் கென்னடி.
“ஓ.கே. பாபா. ஒன்பது மணிக்குப் போகலாம். இப்போது என்னைக் கொஞ்சம் வேலை செய்ய விடுகிறீர்களா?’’ என்றான் அருண்.
“பெரிய வேலை செய்றதுக்கு வந்துட்டான் பாரு” என்று அருணின் தலையைத் தட்டி விட்டுப் போனான்.
இரவில் எல்லோரும் ‘பாவனா’ பாருக்குள் நுழைந்து ஒரு வெளிச்சமில்லாத மேஜையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து ஆளாளுக்கு விரும்பின ”மக்” பெனி பீர் ஆர்டர் கொடுத்தார்கள்.
மேடையில் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பெண்களும் பாட்டு முடிந்த உடன் இறங்கிப் போக, “அருண் ஒரு அட்டகாசமான பொண்ணு ஆட வரும் பாரு. சே! அந்த இடுப்பையே இன்றைக்கு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்” என்று பிரபு சொல்ல …எங்கோ மூலையிலிருந்து மெலிதாக ஆரம்பித்த இசை வெள்ளம் அதிரத் தொடங்கி “மைனே பியார் கியா” என்ற பாடலை பிரசவித்து மேடைக்கு வந்தவள் குனிந்து “அஸ்லாம் அலேக்கும்” ஸ்டைலில் குனிந்து விட்டு ஆடத் தொடங்கியதும் அதிர்ந்து போனான் அருண்.
“இந்தப் பெண்.. இன்று காலையிலே ஸ்டேஷனில் எனக்குப் பயந்து போய் கூட்டத்திலே ஒதுங்கியவள்., என்னிடம் வீடியோ கேஸட்டைப் போட்டு விட்டு ஓடியவள்., ஒரு ரிக்கார்ட் டேன்சரா. இவள் என்ன கேஸட் கொடுத்தாள் என்று கூடத் திறந்து பார்க்கவில்லை. சூட்கேஸில் போட்டது அப்படியே கிடக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
பாரில் இருந்தவர்கள் கையில் ஐந்து ரூபாய் நோட்டைத் தூக்கிக் காட்ட நடனத்தின் இடையே இறங்கி அவர்கள் கன்னத்தில் தட்டி விட்டு ரூபாயை வாங்கி மார்பின் மென்மையான பகுதிகளுக்குள் அடைத்துக் கொண்டு திரும்பவும் மேடையேறி ஆட ஆரம்பித்தாள்.
அருண் பாக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து உயர்த்திக் காட்ட, “பாருப்பா கல்யாணம் முடிக்கப் போறவன் பண்ணுகிற வேலையா இது” என்றான் கென்னடி.
மேடையிலிருந்து இறங்கி வந்தவள் அருணைப் பார்த்ததும் ஒருமுறைத் தடுமாறியவள் பணத்தை வாங்கிக் கொண்டு அவன் கன்னத்தில் தட்டிவிட்டுப் போனாள்.
பாடல் முடிந்ததும் மேடையிலிருந்து இறங்கி உள்ளே போய் விட்டாள். நண்பர்கள் அளவிற்கதிகமாக பீரை ருசித்து விட்டு பரிமாறிக் கொண்டிருந்த பெண் சர்வர்களிடம் தொடக்கூடாத இடங்களில் இடித்துக் கொண்டு கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அருண் ’அந்தப் பெண் எப்படியும் தன்னைத் தேடி வருவாள்’. அல்லது ’எப்படியாவது தனக்கு ஏதாவது மெஸெஜ் வரும்’ என்று எண்ணியவாறு அடுத்தமுறை அவள் ‘ஹவ ஹவாய்’ பாடலுக்கு நடனமாட வந்த போது ஐந்து ரூபாய் எடுத்து உயர்த்திக் காட்டினான்.
அவள் இறங்கி வந்து அவன் கன்னத்தைத் தட்டி விட்டு திரும்பிப் பார்க்காமல் மேடைக்குத் திரும்பினாள். பாரின் இன்னொரு மேஜையில் அமர்ந்திருந்த சுகுமாரும் வஸந்தும் அவளைக் கவனித்துக் கொண்டே பீர் சப்பிக் கொண்டிருந்தார்கள்.
“என்ன சுகு கோழியை இங்கேயே மடக்கி கேட்டிருவோமா… இல்லேன்னா..”
“வேண்டாம் வஸந்த். வீணாகப் பிரச்சினை வரும். அவள் எப்படியும் இங்கே ஆட வருவாள் என்று தெரியுமென்று நமக்கு நன்றாக தெரிந்தது தானே. போகும் போது எப்படியும் பிடித்து விடலாம். பாரிலிருந்து வெளியே போவதற்கு இந்தக் கதவைத் தவிர வேறு வழியே கிடையாது” என்றான்.
“சரிப்பா. ஆனால் இனி தவற விட்டு விடக் கூடாது” என்றான் சுகுமார்.
“என்ன வினிதா அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து தப்பி விடுவாளா?” என்றான் சுகுமார்.
பாடல் முடிந்ததும் உடைமாற்ற வந்த வினிதா பணத்தை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஐந்து ரூபாய் நோட்டில் “உன்னை யார் ஆடச் சொன்னது?” என்று எழுதியிருப்பதை திருப்பிப் பார்த்தாள். “வினி தப்பி விடு. நானும் வஸந்தும் மாறுவேடத்தில் வந்திருக்கிறோம். உன் சுகு” என்று எழுதியிருந்தது.
அந்த ஏ.ஸி.அறையிலும் அவளுக்கு மெதுவாக வியர்க்க ஆரம்பித்தது. மெதுவாக பாத்ரூமிற்குள் நுழைந்தவள் வென்டிலேட்டரில் வைத்திருந்த கண்ணாடிகளை எடுத்து விட்டு மறுபக்கம் ஏறிச் சாடி வேகமாக மெயின் ரோட்டிற்கு வந்து ஒரு ஆட்டோவில் ஏறி “ஜுகு போப்பா” என்றாள்.
****** ******** *********
“அடுத்த பாடலுக்கு வினிதா ஆட வருவாள் என்று எதிர்பார்த்த வஸந்திற்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னடா சுகு வினிதா கொஞ்ச நேரமா ஆட வரவில்லை. எங்கேயாவது போய் விட்டாளா?” என்றான் வஸந்த் பதட்டத்தோடு.
“அதைத்தான் நானும் கவனிக்கிறேன்” என்றான் சுகுமார் போலியான பதட்டத்தை உருவாக்கிக் கொண்டு.
“சரி வா. உள்ளே போய் பார்க்கலாம்” என்ற வஸந்த் வேகமாக மேக்கப் ரூமிற்குள் வந்தான். அங்கே உடை மாற்றிக் கொண்டிருந்த ஒரு பெண் வாரி சுருட்டிக் கொண்டு நின்றாள்.
“வினிதா எங்கே?” என்றான் பின்னால் வந்த சுகுமார்.
“அவளுக்கு உடம்பிற்குச் சரியில்லை என்று சொல்லி விட்டுப் போய் விட்டாளே” என்றான் அந்தப் பெண்.
தலையிலடித்துக் கொண்ட வஸந்த் “சுகு கேப்டனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்” என்று கேட்டான்.
“எனக்கும் அது தான் புரியவில்லை” என்றான் உள்ளுக்குள்ளெ சிரித்துக் கொண்டு.
இந்த தொடரின் மற்ற அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings